Headlines News :
முகப்பு » , , , » ஒல்கொட்டுக்கு நேர்ந்த கதி (1915 கண்டி கலகம் –12) - என்.சரவணன்

ஒல்கொட்டுக்கு நேர்ந்த கதி (1915 கண்டி கலகம் –12) - என்.சரவணன்


1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் பௌத்த மறுமலர்ச்சியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கொட்டாஞ்சேனைக் கலவரம் பற்றிய ஆணைகுழு அறிக்கை பௌத்தர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டு தரப்பிலும் எவருக்கும் தண்டனை விதிக்கப்படவுமில்லை. தீபதுத்தாரம விகாரைக்கு ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு கோரி கத்தோலிக்க தரப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியடைந்தது. இந்த பின்னணியில் ஒல்கொட் இலங்கைக்கு மீண்டும் 27.01.1884 இல் வந்து சேர்ந்தார். பௌத்தத் தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து கலந்துரையாடியதன் விளைவாக ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரரின் தலைமையில் “பௌத்த பாதுகாப்பு சபை” உருவாக்கப்பட்டது. கேணல் ஒல்கொட், குணானந்த தேரர், அநகாரிக தர்மபால உள்ளடங்கிய 10 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு அமைக்கப்பட்டது.

பௌத்தர்களின் உரிமைகள் குறித்து ஒல்கொட் அன்றைய ஆளுநர் சேர் ஆதர் ஹெமில்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இனிமேலும் இதனை தொடர விடக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தனர். 1815கண்டி ஒப்பந்தத்தில் ஆங்கிலேய தரப்பு உடன்பட்டவற்றை நினைவூட்டினார். குறிப்பாக அந்த ஒப்பந்தத்தில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பது தொடர்பிலான 5வது சரத்தை மீள நினைவூட்டினார். இதன் விளைவாக பௌத்த பாதுகாப்பு சபை முக்கிய 6 அம்ச கோரிக்கை உள்ளிட்ட முறைப்பாடுகள் குறித்து காலனித்துவ செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒல்கொட் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒல்கொட் 10.02.1884 இல் இங்கிலாந்தை நோக்கி புறப்பட்டார். அந்த 6 முக்கியம்ச கோரிக்கைகள் இவை தான்.

 1. கொட்டாஞ்சேனை கலவரத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
 2. சிங்கள பௌத்தர்களின் மத உரிமைகள், சலுகைகளை உறுதிசெய்ய வேண்டும்.
 3. அரசாட்சி காலத்திலிருந்து புத்தர் பிறந்த வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக அனுஷ்டித்து வந்தார்கள். மீண்டும் அந்த நாளை அரச விடுமுறை நாளாக்க வேண்டும்.
 4. மத ஊர்வலத்தின்போது இசைக்குழு வாத்தியமிசைப்பது குறித்த தடையை நீக்கி, பௌத்தர்களின் பெரஹர ஊர்வலங்களுக்கு இடமளிக்கவேண்டும்
 5. பௌத்தர்களின் விவாகப் பதிவுக்காக பௌத்த விவாகப் பதிவாளர்களை நியமிக்க வேண்டும்.
 6. 1856ஆம் ஆண்டின் 10 வது இலக்க விகாரைகளை பதிவுசெய்யும் சட்டத்தில் உள்ள இடைஞ்சல்களை நீக்குவதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்கு நியாயமான பதிலை அளிக்க வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டார் காலனித்துவ செயலாளர் டேர்பி துரை.

இறுதியில் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒல்கொட்டின் இந்த வெற்றிச் செய்தி சுமங்கல தேரருக்கு அனுப்பப்பட்டது. இந்த வெற்றியை ஒல்கொட் அன்றி வேறெவராலும் அன்றைய நிலையில் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது.

வெசாக் தினத்தின் தோற்றம்
இந்த வெசாக் தினத்தை பொது விடுமுறையாக்குவதற்கான யோசனையை அரசசபையில் ஆளுநர் கோர்டன் முன்வைத்தார். ஆனால் கரையோர சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.எல்.அல்விஸ் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. வெசாக் விடுமுறைக்கு ஆதரவாக உரையாடிவர்களில் பொன்னம்பலம் இராமநாதனும் குறிப்பிடத்தக்கவர். பௌத்தர்களுக்காக மட்டும் இப்படி விடுமுறை அளித்தது நியாயமல்ல என்றும் இந்துக்களுக்கும் விடுமுறை நாளொன்றை வழங்காதது ஒரு குறை என்றும அன்றைய Times of ceylon (11.08.1885) பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் 15.01.1886 அன்று சட்டசபையிலும் ஒலித்தது. அந்த காரசாரமான விவாதத்தின் விளைவாக தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினமும் உருவானது. இந்துக்களுக்கு விடுமுறை வேண்டும் என்று உறுதியாக குரல் கொடுத்தவர்கள் பலர் அன்றைய ஆங்கில பிரதிநிதிகளே.

கோட்டை புகையிரத நிலையத்தின் முன் ஒல்கொட் மாவத்தையில் நீண்ட காலமாக இருக்கும் ஒல்கொட்டின் சிலை. 
28.04.1885 அன்றிலிருந்து வெசாக் பௌர்ணமி தினம் அரச பொது விடுமுறையாக ஆனது. அது உத்தியோகபூர்வமான சட்டமாக 1886 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. வெசாக் தினத்தன்று பௌத்த கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்றும் அதற்கான ஒரு கொடியை உருவாக்குவது என்றும் பௌத்த பாதுகாப்பு சபை தீர்மானித்தது. பௌத்த கொடியை உருவாக்கும் குழுவில் சுமங்கல தேரர், குணானந்த தேரர், கரோலிஸ் ஹேவவிதாரன (அநகாரிக்க தர்மபால) போன்றோரும் உள்ளடக்கம். ஒல்கொட்டின் வழிகாட்டுதலில் கரோலிஸ் குணவர்தன என்பவரால் பௌத்த கொடி தயாரிக்கப்பட்டது. பிற்காலங்களில் இந்த கொடியின் உருவாக்கத்தில் ஒல்கொட்டின் பங்களிப்பு குறித்து பலர் குறிப்பிட்டபோதும், ஒல்கொட் அதனை மறுத்து அதன் உருவாக்கத்தின் முழு உழைப்பும் பங்களிப்பும், பாராட்டும் பிரம்மஞான சங்கத்தை சேர்ந்தவர்களையே சாரும் என்றார்.

பாதையில் மத ஊர்வலங்கள் (பெரஹர) நடத்துவதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டதால் வெகு விமரிசையாக நாடெங்கிலும் வெசாக் ஊர்வலங்கள் நிகழ்ந்தன. பெரஹர ஊர்வலம் கொட்டாஞ்சேனை கலவரத்துடன் தொடர்புடைய தீபதுத்தாராம விகாரைக்கு மீண்டும் பொரல்லையிலிருந்து சென்றது. ஊர்வலத்தில் முதலாவது தடவையாக “பக்தி கீ” எனப்படும் பௌத்த பாடல்கள் இசைத்தபடி நகர்ந்தது. தீபதுத்தாராமய விகாரையில் முதலாவது தடவையாக பௌத்த கொடி குணானந்த தேரரால் ஏற்றப்பட்டது. களனி விகாரை உள்ளிட்ட இன்னும் சில பெரிய விகாரைகளில் அன்றைய தினம் இக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியே 1952 இலிருந்து உலக பௌத்த கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.

பிற்காலத்தில் ஒல்கொட்டுக்கு எதிரான தாக்குதலின் போது அவர் ஒரு சதிகாரர், துரோகி, என்றெல்லாம் இகழ்ந்தவர்கள் இந்த “பக்தி கீ” யையும் ஆதாரம் காட்டினர். கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் ஊர்வல, வீதி அலங்காரங்களையும், “கெரோல்” பாணியில் பௌத்த பாடல்கள் பாடுகின்ற மரபுகளையும் அறிமுகப்படுத்தி பௌத்த மதத்தின் உண்மை அடையாளத்தை குழப்பினார் என்று குற்றம் சாட்டினார்கள். கத்தோலிக்க மரபுகளை மறுதலித்து தோன்றிய புரட்டஸ்தாந்து மதத்தில் நிகழ்ந்த மாற்றங்களைப்போல “பௌத்த புரட்டஸ்தாந்தை” இலங்கை பௌத்தர்களுக்கு ஒல்கொட் திணித்தார் என்றனர் அவர்கள். ஞாயிறு தினங்களில் தொடங்கப்பட்ட பௌத்த பாடசாலை கூட (தாஹம் பாசல) கிறிஸ்தவ கல்வி முறையைத் தழுவியது என்று ஒல்கொட்டை விமர்சித்தார்கள்.

பௌத்த பாடசாலைகள் தொடக்கப்பட்டபோது அதன் அதிபர்களாக வெள்ளை இனத்தவர்களை நியமித்தார் என்றார்கள். அது மட்டுமன்றி ஒல்கொட் இலங்கையில் வந்து பௌத்தராக ஆனது போல இந்தியாவில் பணிபுரிந்தபோது இந்துவாக மாறினார் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தியாவில் இந்து மதம் புறந்தள்ளிய தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஆதரவாக அவர்களின் இழி நிலைக்கு எதிராக இயங்கிய அயோத்திதாசர் போன்ற சக்திகளுடனேயே அவர் கைகோர்த்து பணியாற்றினார். அதுமட்டுமன்றி அவர்களை இலங்கை அழைத்து வந்து பௌத்த தீட்சையளித்து பௌத்தர்களாக ஆக்கினார் ஒல்கொட். உள்நாட்டில் சிங்கள பௌத்தர்களுக்கு தலைமை தாங்க ஒரு வெள்ளையினத்து வெளிநாட்டவர் எப்படி உருவெடுத்தார் என்பதன் நீட்சியையும் தொடர்ச்சியையும் சிங்கள பௌத்த தலைவர்கள் மறந்தார்கள். சிங்கள சஞ்சிகைகளின் மூலம் தாக்கவும் செய்தார்கள். அன்றைய “லக்மினிபாஹன” பத்திரிகையின் ஆசிரியர் பண்டிதர் எம்.தர்மரத்ன 11.02.1888 இல் இப்படி எழுதுகிறார்.

“பிரம்மஞானவாதிகளை நாட்டை விடத் துரத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. அதை செய்யாவிட்டால் புத்தர் மீண்டும் ஒல்கொட் பேரில் பிறந்திருக்கிறார் என்று சொல்வார்கள். அப்போது புத்தம் சரணம் கச்சாமி என்பதற்குப் பதிலாக “ஒல்கொட் சரணம் கச்சாமி” என்று பணிந்து வணங்க வேண்டிவரும்.”

சாதிய வேறுபாடுகளால் தேக்கமுற்றிருந்த பௌத்த மறுமலர்ச்சி சாதியத்துடன் தொடர்பில்லாத ஒல்கொட்டின் தலைமையினாலேயே மீள புத்துணர்ச்சி கண்டது. குணானந்த தேரர், அநகாரிக தர்மபால போன்றோர் பிற்காலத்தில் ஒல்கொட்டோடு முரண்பட்டு அவரை மன ரீதியில் காயப்படுத்தினார்கள். அவரது மத நேர்மை குறித்து சந்தேகம் எழுப்பினார்கள்.
18.02.1887 இல் கொட்டாஞ்சேனை தீபதுத்தாராமயவில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக இந்த சர்ச்சை வெளிக்கிளம்பியது. பலரும் கூடியிருந்த இந்த கூட்டத்தில் வைத்து குணானந்த தேரர் பௌத்த பாடசாலை நிதியம் குறித்து ஒல்கொட்டை மீது விமர்சித்தார். வழமைபோல அவரது பேச்சுக்கு வந்திருந்த கூட்டமும் கைதட்டி ஆரவாரித்தனர். அங்கேயே பதிலளிக்கும்படி ஒல்கொட்டுக்கு சவாலும் இட்டார். திகைத்துப்போன ஒல்கொட்; தான் அதற்கான பதிலை அடுத்தநாள் தருவதாக பதிலளித்தார். அன்று இரவே சுமங்கல தேரரை சந்தித்து உரையாடியபோதும் அவர் அளித்த பதிலால் கலங்கி நின்றார் ஒல்கொட். சுமங்கல தேரருடன் கடுமையாக அன்று விவாதித்துவிட்டு சென்றார். அடுத்த நாள் கொட்டாஞ்சேனைக் கூட்டத்தில் அவருக்காக பலர் காத்திருந்தார்கள் அவர் மட்டும் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை. முன் தினமே எவரிடமும் சொல்லிகொல்லாமல் அவர் கப்பல் ஏறி சென்று விட்டார் என்கிற தகவல் மட்டுமே அவர்களின் கை வந்து சேர்ந்தது.

“உண்மையை விட உயர்ந்த மதமொன்றில்லை” என்கிற சுலோகத்துடன் உண்மையைத்தேடி பயணித்த ஒல்கொட்டின் பயணம் இலங்கையோடு நிற்கவில்லை. இனம், மதம், ஜாதி கடந்து அவர் ஆற்றிய பங்கு சாதாரணமானதல்ல. இலங்கையின் சுதந்திரத்துக்கு வித்திட்ட இலங்கை தேசிய காங்கிரசின் உருவாக்கத்தின் பின்னணியில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்கு முக்கியமானது. அத்தகைய மறுமலர்ச்சியில் ஒல்கொட்டின் பங்கு எத்தகையது என்பதை விபரிக்கின்றன அவர் குறித்த ஆவணங்கள். அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட பௌத்த சக்திகளே பௌத்த மறுமலர்ச்சியில் தலையாய பாத்திரத்தை வகித்தனர். அதுபோலவே சென்னையிலும் அவரால் வழிகாட்டப்பட்ட சக்திகள் அறிவார்ந்த தளங்களில் செயல்பட்டார்கள். இறுதிக்காலத்தில் சென்னையில் தீண்டாமைக்கு எதிரான இயக்கங்களுடன் பணியாற்றி தலித் விடுதலைக்காக கணிசமான பாத்திரத்தை வகித்தார். தலித்துகளுக்கான பாடசாலைகளை அமைத்து நடத்தினார். 17.02.1907 அன்று சென்னை அடையாரில் அவர் மறைந்தார். அவரது பணிகள் இலங்கையிலும், இந்தியாவிலும் இன்றும் பெரிதாக நினைவு கூறப்படுகிறது.

எந்த பௌத்தத்தை வளர்ப்பதற்காக இலங்கையில் அவர் உழைத்தாரோ அந்த பௌத்த தரப்பு சிங்கள பௌத்த தரப்பாக காலப்போக்கில் மாறி, தூய சிங்கள பௌத்தமாக உருமாற்றிக்கொண்டு “தாம் அல்லாதவர்களின்” மீது பாய்ந்தது. அதன் முதல் பலி அவர்களின் அன்றைய ஞானத்தந்தையாகிய ஒல்கொட். அது இனி எந்த திசைவழியில் பயணித்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்..


உசாத்துணையாக பயன்பட்டவை :

 1. The Kotahena Riots – Commission report (Frank Luker Government printer, Ceylon - 1883)
 2. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 3. ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
 4. අනගාරික ධර්මපාල සත්‍ය සහ මිථ්‍යාව - එස්.පී.ලංකාපුර රත්නකුමාර (Nuwanee publication - 2014)
 5. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
 6. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
 7. இலங்கையின் முதலாவது கலவரத்தின் சுவட்டைத் தேடிய பயணம் – என்.சரவணன் (நமது மலையகம் இணையத்தளம்)
 8. වෙසක් උත්සව පුරාණය, ඈත අතීතයේ සිට වර්තමානය දක්වා - දිසානායන, සමන්තිකා සජීවනී (Godage publication, 2008)
 9. මෛත‍්‍රීට වැරදුණේ කොතැනද? - වික්ටර් අයිවන් (Rawaya – 12.07.2015)Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates