மலையக சமூகப் பண்பாட்டு ஆய்வுக்கும் அவர்களின் சந்ததியினர் இருப்புக்கும் மலையகப் பல்கலைக்கழகம் அவசியம்
நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்கப்படக் கூடிய பல்கலைக்கழக கல்லூரி எதிர்வரும் காலத்தில் மலையகப்பல்கலைக்கழ கல்லூரியாக விரிவாகும் வாய்ப்பு உள்ளது. இதனை முன்னெடுப்பதற்கு கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கொத்மலை பிரதேச செயலகப்பிரிவிலே ஐந்து ஏக்கர் காணியை பெற்றுக்கொண்டுள்ளார். காணியும் தயாராக உள்ள நிலையில் அதனைப் பெற்றுக்கொண்டவர் ராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில், அதனை வழங்கி வைத்தவர் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியயெல்ல என்ற வகையில் கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக மலையக மக்களின் கோரிக்கையாக இருந்துவரும் ‘மலையகப் பல்கலைக்கழகத்திற்கான கோரிக்கை’ செயல்வடிவம் பெறக்கூடிய உத்தம காலம் இதுவென நான் கருதுகின்றேன் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு , உயர் கல்வி அமைச்சு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்களது தமிழ் முற்போக்குக் கூட்டணி கடந்த பொதுத்தேர்தலில் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டு இந்த ஆளும் தேசிய அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தது.
குறிப்பாக கண்டி, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் எமது முன்னணி பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொண்டபோதும் இரத்திரனபுரி மாவட்டத்தில் 30ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தும் எங்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்nகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எங்கது தமிழ் முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் சந்திரகுமார் 30ஆயிரம் வாக்குகளைப்பெற்றுக்கொடுத்தும் அங்கு தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாததன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் வாழுகின்ற் தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துச் சொல்லுகின்ற வாய்ப்பில்லாத நிலையில் தான் அம்மாவட்டத்தில் இருந்து தெரிவாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதாரண இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலையொன்றை உருவாக்குவதற்கான முயற்சியை இந்த சபையிலேயே அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்மொழிவு செய்திருந்தார். அவருக்கு வாய்ப்பை வழங்கும் வகையிலே எனது உரையின் நேரத்தினையும் நான் வழங்கியிருந்தேன். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது நேரத்தின் விட்டுக்கொடுப்பின் மூலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் வாழுகின்ற மலையக மாணவர்களுக்கு உயர் தரத்துடன் கூடியதான பாடசாலையினை அமைப்பதற்கு முன்வந்திருப்பதற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த முறை வரவு செலவுத் திட்டத்திலே கல்வியமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. எம்மைப் பொறுத்தவரை தோட்டப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை அபவிருத்தி செய்வதற்கென குறிப்பிட்டு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம். இது பற்றி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நான் பிரஸ்தாபித்திருந்தேன்.
எனவே இன்று உயர் கல்வி அமைச்சு எமது மக்களுக்காக ஆற்றக்கூடிய பணிகள் குறித்து சில விடயங்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.
பல்கலைக்கழகம் ஒன்றின் பண்புகளாக பட்டப்படிப்புகளை, பின்பட்டப்படிப்புகளை வழங்கும் அதேநேரம் சுயாதீன கல்விச்சுதந்திரம் உள்ள ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன.
இந்த நாட்டிலே பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவை தேசிய பல்கலைக்கழகங்களானபோதும் அவை அமைந்திருக்கும் இடங்களைப் பொறுத்து அந்த பிரதேச வாழ் மக்களின் கலை, கலாசார பண்பாட்டு நிலை சார்ந்த ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
யுhழ். பல்கலைக்கழகம் வடக்குத் தமிழ் மக்களின் காலாசார பண்பாட்டு விழுமியங்களையும், கிழக்கு பல்கலைக்கழகம் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை தென் கிழக்கு பல்கலைக்கழகம் சார்ந்து தமது இயக்கத்தை செய்து வருகின்றது. அதுபோல கொழும்பு, களனி, பேராதனை போன்ற ஏனைய பல்கலைக்கழகங்களில் சிங்கள மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அமங்சங்கள் ஆய்வுக்கு உள்ளாகின்றன.
ஆனாலும் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக அவர்களின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தக்கூடியதும் அவர்களின் சந்ததியினர் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளவும் ஒரு பல்கலைக்கழகத்தின் தேவை நிலவி வருகின்றது.
இந்த பல்கலைக்கழகத்திற்கான தேவை குறித்து 2000 ஆம் ஆண்டு முதல் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. கொள்கையளவில் இவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோதும் கூட அவை நடைமுறைச் சாத்தியமாகவில்லை.
எனக்கு நினைவு இருக்கிறது 2005 ஆம் ஆண்டு அமைச்சர் டிலான் பெரேரா தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக சிறிது காலம் பணியாற்றியபோது ஒரு அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த சந்தரப்பத்தில் எமது கல்விச் சமூகத்தினர் முன்வைத்த அறிக்கையை நான் இந்த சந்தர்ப்பத்தில்; ஹன்சாட் பதிவுகளுக்காக இந்த உச்ச சபைக்கு சமரப்பிக்கின்றேன்.
அப்போதைய அமைச்சர் டிலான் பேராரா எடுத்த முயற்சிகள் ஆட்சி மாற்றத்தினால் கைநழுவிப்போனது. 2014 ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்கு விடுத்த வேண்டுகோள் கடிதமும் என்வசம் உள்ளது . இவற்றை நான் இந்த சபையில் ஹன்சாட் பதிவுகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இந்த முயற்சி எந்த விதத்திலும் சாத்தியமாகவில்லை.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டில் நல்லாட்சி மலர்ந்திருக்கிறது. இந்த நல்லாட்சிக்கா முதல் வரவு செலவுத்திட்டத்திலே பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்கலைக்கழக கல்லூரி ஒன்றினை புதிதாக அமைக்கவும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் பட்டனகல எனும் இடத்தில் இது அமைக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்றது.
அதேபோல கிளிநொச்சியில் பொறியில் பீடம் ஒன்றை அமைக்கவும் வவுனியாவில் விவசாய பீடம் ஒன்றை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்திலும், சப்ரகமுவ மாகாணத்திலும் ஏற்கனவே பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில் அவற்றை மேம்படுத்த எடுத்துள்ள முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். அதேநேரம் பல்கலைக்கழக கலாசாரம் ஒன்றினை அறிந்திரா நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த பட்சம் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை தாபிப்பதற்கேனும் உயர்கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என நான் கோரிக்கை வைக்கின்றேன்.
நான் கொழும்பு பல்கலைகழக பட்டதாரி என்றவகையில் எனக்கு அந்த வரலாறு தெரியும். 1921 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட University College of Ceylon எனும் இலங்கைப்பல்கலைக்கழக கல்லூரிதான் 1942 ஆம் கொழும்பு பல்கலைக்கழகமாகவும் பேராதனைப் பலகைலக்கழகமாகவும் விரிவு பெற்றன.
அதுபோல நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்கப்படக் கூடிய பல்கலைக்கழக கல்லூரி எதிர்வரும் காலத்தில் மலையகப்பல்கலைக்கழ கல்லூரியாக விவரிவாகும் வாய்ப்பு உள்ளது. இதனை முன்னெடுப்பதற்கு கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கொத்மலை பிரதேச செயலகப்பிரிவிலே 5 ஏக்கர் காணியை பெற்றுக்கொணடுள்ளார். அதுவும் தாங்கள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவிருந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் என நினைக்கிறேன்.
எனவே காணியும் தயாராக உள்ள நிலையில் அதனைப் பெற்றுக்கொண்டவர் ராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில், அதனை வழங்கி வைத்தவர் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியயெல்ல என்ற வகையில் கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக மலையக மக்களின் கோரிக்கையாக இருந்துவரும் ‘மலையகப் பல்கலைக்கழகத்திற்கான கோரிக்கை’ செயல்வடிவம் பெறக்கூடிய உத்தம காலம் இதுவென நான் கருதுகின்றேன். அந்த நம்பிக்கையோடு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெற்றுகின்றேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...