மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்றுறுப்பினர் எம்திலகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவருக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முதல்கட்டமாக 1134 வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு 50000 வீடுகளை நன்கொடை அடிப்படையில் வழங்கியது. அவற்றில் 90% க்கு மேற்பட்ட வேலைகள் முடிவுற்ற நிலையில் மலையக தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு என இந்திய அரசாங்கம் வழங்கிய 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணி இது குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததோடு, அமைச்சர் திகாம்பரம் பணிகளை ஆரம்பிப்பதற்கு தடையாக இருந்த பல்வேறு விடயங்களையும் தனது அமைச்சின் பொறுப்பில் முன்னெடுப்பதற்கு முன்வந்ததை அடுத்து தற்போது 1134 வீடுகளை நிர்மாணிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இடத்தெரிவு மற்றும் நிலத்தயாரிப்பு மற்றும் உட்கட்டுமானப் பணிகளை அமைச்சு நிதியீட்டத்தில் மேற்கொள்ளவுள்ள நிலையில் வீடமைப்பு நிர்மாணப்பணிகளுக்கு தேவையான முழுமையான நிதியும் இந்திய அரசின் பூரண நன்கொடையாக அமையவுள்ளது. 7 பேர்ச் காணியில் 550 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வீடுகள் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 5 தோட்டங்களில் 9 டிவிஷன்களில் அமையவுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரத்தில் இடம்பெற்ற இச்ச்ந்திப்பில் பிரதி உயர்ஸ்தாணிகர் மற்றும் அதிகாரிகளும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சார்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி. ரஞ்சனி நடராஜபிள்ளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...