'பெருந்தோட்டங்களில் உற்பத்தியை அதிகரிப்போம். அங்கு தொழிலாளர்களின் நலன்களையும் மேம்படுத்துவோம் என்ற கோஷங்களை பகிரங்கப்படுத்தி பெருந்தோட்டங்களை கையகப்படுத்திய (1992இல்) கம்பனிகள் தமது கோஷங்களில் எதையேனும் நிறைவு செய்யாத நிலையில் இப்போது தொழிலாளர்களின் அடித்தளத்தையே அதிர வைத்தது போல் நடந்து கொள்கின்றன. நாளாந்த வேதனமாக வழங்கப்படும் 450ரூபாவுக்கு மேல் ஒரு சதத்தையேனும் உயர்த்த முடியாது என்று கடும்போக்கை பின்பற்றி வருகின்றனர் தோட்டங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதென்று கடந்த ஒரு தசாப்த காலமாக அறிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கம்பனிகளால் நடத்த முடியாத தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் யோசனைக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வாறான பின்னணியில் 1992 இல் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்ட தேயிலை பெருந்தோட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது பற்றியும் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றல் தொடர்பான வரலாற்று அனுபவங்கள் என்ன என்பது பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம். முதலாவது கம்பனிகள் கடந்த 22 வருடங்களாக பெருந்தோட்டங்களை நடத்தியுள்ளன. கிடைக்கப்பெறுகின்ற புள்ளி விபரங்களை அவதானிக்கும்போது தேயிலையை உற்பத்தி செய்து சர்வதேச சந்தையில் பெற்றுக்கொண்ட விலையில் ஏற்படுத்திக்கொண்ட அதிகரிப்பினை ஏனைய துறைகளில் காணக்கூடியதாக இல்லை. உதாரணமாக 1992 இல் கம்பனிகளிடம் சுமார் 100,000 ஹெக்டேயர் பராமரிப்பில் உள்ள தேயிலைக் காணிகள் வழங்கப்பட்டன. இதன் அளவு 2000ஆம் ஆண்டில் 99,500 ஹெக்டேயராகவுள்ளது.
ஆனால் 2013ஆம் ஆண்டில் இதன் அளவு சுமார் 85,400 ஹெக்டேயராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி கடந்த 22 வருடங்களில் சுமார் 15,000 ஹெக்டேயர் தேயிலைக்காணிகளை பெருந்தொட்ட கம்பனிகள் தமது பராமரிப்பில் இருந்து விலக்கி வைத்து விட்டன என்பது தெளிவாகிறது.
இங்கு இன்னுமொரு விடயத்தை கூற வேண்டியுள்ளது. தேயிலைக்காணிகளின் பரப்பளவு பற்றி திட்டவட்டமான புள்ளிவிபரங்கள் எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை. வருடா வருடம் பெருந்தோட்ட அமைச்சினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. மொத்தமாக தேயிலைப்பராமரிப்பின் பரப்பு 212, 000 ஹெக்டேயர் என்று குறிப்பிடும் அமைச்சின் புள்ளிவிபரவியல் தொகுப்பு, இதில் சிறு உரிமையானர்களிடம் 130,000 ஹெக்டேயர் காணிகள் உள்ளன என்று கூறும் அதேவேளை கம்பனிகளிடமிருந்து சுமார் 118,000 ஹெக்டேயர் பரப்பளவான காணி இருப்பதாகவும் அதில் 84,400 ஹெக்டேயர் மட்டுமே பயிர்ச்செய்கைக்காக பராமரிக்கப்படும் காணிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய முரண்பாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள உடனடியாக தேயிலை பயிரிடப்படும் நிலம் முழுமையாக மீளவும் அளவிடப்படவேண்டும். இத்தகைய முயற்சி 1994 இல் மேற்கொள்ளப்பட்டது. இப்புள்ளிவிபரப்படி இப்போதைய மதிப்பீட்டுக்கு பயனுள்ளதாக அமையாது.
இதுபோன்று கம்பனிகளின் உற்பத்தி மட்டத்தை எடுத்து நோக்குவோமாயின் 1992 இல் கம்பனிகள் சுமார் 148 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்தன. இது 2000ஆம் ஆண்டில் 121 மில்லியன் கி.கிராமாக வீழ்ச்சியடைந்ததுடன் 2013 இல் 98 மில்லியன் கி.கிராமாக இருந்து கடந்த 22 வருடங்களில் தமது உற்பத்தியானது சுமார் 33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் தமது உற்பத்தியை விற்பனை செய்யும்போது கம்பனிகள் 1992 இல் ஒரு கிலோ கிராமுக்கு 58 ரூபாவை உள்ளூர் ஏல விற்பனையின்போது பெற்றுக்கொண்ட அதேவேளை அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஒரு கி.கிராமிற்கு 84 ரூபா பெற்றுக்கொண்டது.
தேயிலையின் விற்பனை விலை பல மடங்கு அதிகரித்தது. 2000ஆம் ஆண்டில் ஏல விற்பனையின்போது 128 ரூபாவாகும். இதன் விலை 2013இல் 341 ரூபாவாகவும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் முறையே 184 ரூபா மற்றும் 500 ரூபாவாகவும் விலைகள் கிடைக்கப்பெற்றமையையும் காணலாம்.
தேயிலை உற்பத்தி செய்யப்படும் பரப்பளவிலும், உற்பத்தியிலும் வீழ்ச்சி காணப்பட்டாலும் கம்பனிகள் தாம் உற்பத்தி செய்த தேயிலையை நல்ல விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளமையை காணலாம்.
இருப்பினும் இவற்றினை உற்பத்தி செய்வதற்கான செலவும் அதிகரித்து வந்துள்ளமையையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உதாரணமாக 2000 ஆம் ஆண்டு 128 ரூபாவிற்கு ஒரு கிலோ தேயிலை ஏல விற்பனையின் போது பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் உற்பத்தி செலவு 118 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ கிராமிற்கு சுமார் 10 ரூபா இலாபம் கிடைத்துள்ளதை காணலாம். அதேபோல் 2013 விபரப்படி பார்க்கும்போது உற்பத்தி செலவு ஒரு கிலோ கிராமுக்கு 374 ரூபாவாகும். ஆனால் ஏல விற்பனையின் போது விலை 341 ரூபாவாக ஒவ்வொரு கிலோவுக்கும் சுமார் 30ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறது அதேபோல் ஏற்றுமதியின் போது 500 ரூபாவாக விற்பனை செய்த கிலோ தேயிலையை சுமார் 125 ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். தேயிலைக்கான உற்பத்தி செலவு என்பதை கம்பனிகளே வெளிப்படுத்துகின்றன. இது பற்றி தனி நபர்கள் அல்லது ஏனைய ஏற்றுக்கொண்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. இந்நிலையில் உற்பத்தி செலவு பற்றிய கணிப்பீட்டினை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேதனம் மற்றும் சலுகைகள் என்பன 60வீதத்திற்கு அதிகமாக காணப்படுகிறது என்றும் திரும்ப திரும்ப கூறுகின்றனர். எனவே சுதந்திரமானதும் நம்பத்தகுந்ததுமான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் வரையில் கம்பனிகள் தருகின்ற உற்பத்தி செலவுக்கான கணிப்பீடுகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கமாட்டாது.
இதற்கு இன்னுமொரு கணிப்பீட்டையும் உற்பத்தி செலவு தொடர்பாக அறியத்தரலாம். சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி சுமார் 18 கிலோ கொழுந்து கொய்கின்றார். இதில் இருந்து ஏறக்குறைய 4 கிலோ தேயிலை விற்பனைக்காக தயார் செய்யலாம். இதனை (4x500= 2000) என்றவாறு சுமார் 2000 ரூபாவாக சந்தைப்படுத்தலாம். இக் கொழுந்து செய்பவர்களுக்கு அடிப்படை வேதனம் மற்றும் இதர கொடுப்பனவு என்று 1500 ரூபா செலவாகும். ஒவ்வொரு தொழிலாளியும் நாளாந்த உழைப்பில் 500 ரூபா மேலதிகமாக கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
1992 இல் கம்பனிகள் JEDS, SLSPC, மற்றும் ஏனைய கம்பனிகளின் கீழ் பொறுப்பேற்றுக்கொண்ட தோட்டங்கள் பரப்பளவு உற்பத்தி சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட விலைகள் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை பின்வரும் அட்வணையில் காணலாம்.
இவை யாவும் ஒரு பக்கத்தில் இருக்கும் போது கம்பனிகள் தமது தோட்டங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் கடுமையாக குறைத்துக் காட்டலாம். 1992இல் தோட்டங்களை பொறுப்பேற்கும்போது தேயிலை தோட்டத்தில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 400 000 ஆக காணப்பட்டது. அது இப்போது 2,32,000 சுமார் 42 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தேயிலை பயரிடப்படும் 4 பரப்பளவு எவ்வளவு குறைத்துக் கொண்டார்களோ அதே வீதத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொண்டனர்.
இந்நிலையில்தான் கம்பனிகள் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றன. ஏறக்குறைய இவ்வாறான இக்கட்டான நிலை 1978 முதல் 1992 வரையில் தோட்டங்களை நிர்வகித்த JEDS, SLSPC, க்கும் உருவாகியிருக்கின்றது. அக்காலத்தில் தோட்டங்களை புனரமைக்கவென ஆசிய அபிவிருத்தி வங்கியில் பெற்றுக்கொண்ட சுமார் 600 மில்லியன் ரூபாவையும் மேற்படி JEDS, SLSPC திருப்பி கொடுக்க முடியாத நிலை உருவாகியிருந்தது. இந்நிலையிலேயே 1992 இல் தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் தோட்டங்களை நிர்வகித்த STERLING மற்றும் RUPPEES கம்பனிகளை வெளியேற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் பிரயத்தனத்தின் போது தோட்டங்களை பராமரித்து மேற்படி பிரித்தானிய கம்பனிகள் தேயிலைச் செய்கையில் முதலீடு மேற்கொள்ள முடியாதவர்களாயினர். பெருந்தோட்டங்கள் பராமரிக்கப்படாத நிலையில் 1972 75 காலப்பகுதியில் அரசாங்கம் அதனை பிரித்தானிய கம்பனியிடம் இருந்து தேசியமயமாக்கல் திட்டத்தில் கீழ் அரசு உடமையாக்கியது. இந்த அரசு உடமையை நிர்வகிக்கவே மேற்குறிப்பிட்டது போல JEDS, SLSPC கையளிக்கப்படன. இந்நிறுவனங்களின் இயலாமையை கம்பனிகளிடம் இன்று மீண்டும் அரச உடமையாக்குவதாக அறிவிக்கப்படுகின்றது.
பல்வேறு நிலையில் பாராமரிக்கப்பட முடியாது போன பெருந்தோட்ட கம்பனிகளை அரசாங்கம் மீளவும் பொறுப்பேற்றல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆகவே அதனை முன்னர் ஏற்பாடு செய்தது போல JEDS, SLSPC,என்றவாறு இலங்கையில் தேயிலையை நல்ல முறையில் பராமரித்தால் தேயிலை சிற்றுமையாளர்களை உதாரணமாகக் கொண்ட அந்த ' மாதிரியை' மலையகத்திலும் விஸ்தரிப்பது பயனுள்ளதாக இருக்கும்.ஒப்படைக்காமல்
பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தேயிலைத்தொழிலில் மூன்று நான்கு பரம்பரையினராகப் பக்குவப்பட்டவர்கள். தேயிலைச் செடி, தேயிலை தொடர்பான தொழில் அந்த தேயிலை வளரும் அந்த மண்ணை தம் உயிர் போல நேசிப்பவர்கள். 1983 இல் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தேயினை தொழிலை கைவிடவில்லை. அதனை பாதுகாத்தனர். அந்த வருடம் என்றுமில்லாத அளவில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன் உலக சந்தையில் நல்ல விலையும் கிடைத்தது. அதன் காரணமாகவே 1984 இல் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்பட்டது அடிப்படை சம்பளத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
எனவே அரசாங்கம் பொறுப்பேற்குமாயின் தேயிலைக்காணிகல் சிறுதோட்டங்களின் ' மாதிரியில்' உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கு தகுதியான மக்கள் இருக்கின்றார்கள். இம் முயற்சி இலங்கையில் வெற்றிகரமான முயற்சியாக இருப்பதால் இது பற்றிய கலந்துரையாடல்கள் அவசிய மானதாகும் இப்படி ஒரு நிலைமை வருமாயின் தோட்டத் தொழிலாளர்கள் வறுமை குறைந்த வருமானம் என்ற நிலையில் மாற்றம் காணப்பட்டு இவர்களின் சராசரியாக வருமானம் பெறும் சமூகமாக மாற்றம் அடைவர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...