இப்போதெல்லாம் சிங்கள பேரினவாத சக்திகள் களத்தில் வெளிப்படையாக இயங்குவதைவிட அமைதியாக மிக சூட்சுமமாக சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வீச்சுடன் இயங்கி வருகின்றன.
சிங்கள பௌத்த பேரினவாதம் காலத்துக்கு காலம் எடுக்கும் எடுக்கும் மறு வடிவமும், புது வடிவமும் அந்தந்த அரசியல் சமூக சூழலுக்கேற்றபடி தம்மை தகவமைத்துக்கொண்டே வெளிப்படுகின்றது. அதன் தந்திரோபாயங்களும்கூட அப்படித்தான் தேவையான இடங்களில் பின்வாங்கி தேவைப்படுகின்ற இடங்களில் காத்திரமாக இயங்குகிறது.
காலத்துக்கு காலம் பேரினவாதம் எடுக்கும் நவ வடிவங்களுக்கு அரச அனுசரணையுடன் அரசாங்கத்தின் அனுசரணையும் கிடைத்துவிடுகிறது. ஆனால் இன்றைய புதிய அரசியல் சூழல் அரசாங்கத்தின் நேரடி ஆதரவு அதற்கு இன்னமும் வந்து சேரவில்லை என்றே கூறவேண்டும்.
இந்த இடைவெளிக்குள் அதன் தந்திரோபாய நகர்வுகளை தீர்மானித்துக்கொள்கிறது. நிறுவனமயப்பட்ட பேரினவாத சித்தாந்தத்துக்கு நேரடி தலைமை தேவையில்லை. அது தன்னியல்பாக பல வடிவங்களில், பல முனைகளில், பல அளவுகளில், பல பண்புகளில் தொழிற்புரியும். இவ்வாறு நிறுவனமயப்பட்ட பேரினவாதத்துக்கு எவரையும் நேரடியாக பொறுப்பாளிகளாக (தலைமையாக) ஆக்கிவிட முடிவதில்லை. ஏனென்றால் அதற்கு தலை மை தாங்கும் சக்தி ஒன்றல்ல பல. இவற்றுக்கெல்லாம் தலைமை தாங்குவது உறுதியாக நிறுவனமயப்பட்டு நிலைபெற்றுவிட்ட பேரினவாத சித்தாந்தமே.
சமூக வெகுஜன ஊடகங்களை இன்று பேரினவாதத் தரப்பு பெருமளவு பயன்படுத்திவருகிறது. தமது சித்தாந்த பரப்புரைக்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆயுதமாக அவர்கள் இன்று சமூக ஊடகங்களையே நம்புகிறார்கள். இன்று பட்டிதொட்டியெல்லாம் சமூக ஊடகங்கள் வியாபித்துவிட்ட நிலையில் தமது இனவாத பிரசாரங்களுக்கு சிறந்த தளம் அது என்று திடமாக நம்பி இயங்கி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான முகநூல் பக்கங்கள், வலைத்தளங்கள், அவற்றுக்கான லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் அவர்கள் வென்றெடுத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த பிரசாரங்களை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.
இவர்களின் போக்கை எதிர்த்து எதிர்வினையாற்றும் சிங்கள தரப்பும் இல்லாமலில்லை. சிங்கள் முற்போக்கு - ஜனநாயக தரப்பு போதிய அளவு தமது எதிர்ப்புகளையும், பதிலடியையும் கொடுத்தே வருகிறார்கள். ஆனால் அது போதுமானதல்ல. மேலும் ஒவ்வொருமுறையும் சிங்கள பேரினவாதம் பௌத்த மதத்தையும் சேர்த்துக்கொண்டே தான் கிளம்புகிறது. பௌத்த காவியுடை தரித்த பிக்குமாரின் தலைமையிலேயோ அல்லது அவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டோ கிளம்புகிறார்கள். பொலிசாரும், அதிகாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள். இந்த இனவாத குழுக்களும் இந்த பிக்குமார் மீது எப்போது இவர்கள் கைவைப்பார்கள் அதனை சாட்டாக வைத்து பிரச்சினையை கிளப்பி விடலாம் என்று காத்திருக்கிறார்கள். அந்த தைரியத்தில் பிக்குமார் சண்டியர்கள் போல நடந்துகொள்ளும் காட்சிகளை செய்திகளில் கவனித்தே வருகிறோம். ஏனையோர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலை தொடர்கிறது.
சிங்கள ரத்தம்
இப்பேர் பட்ட நிலையில் தான் “சிங்க” “லே” என்கிற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தொடங்கப்பட்ட முகநூல் கணக்கில் விருப்புக் குறியிட்டுக் கொண்டு போபவர்களின் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. நாடளாவிய ரீதியில் ஸ்டிக்கர்களை அச்சு செய்து விநியோகித்து வருகிறார்கள். கவரக் கூடிய வாசகங்களையும், வர்ணங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டிக்கர்கள் பல இடங்களில் இப்போது விற்பனை செய்யப்படுகிறன. இலவசமாகவும் விநியோகிக்கப்படுகின்றன. பாதையில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு பலாத்காரமாக ஒட்டப்படுகின்றன.
மேலோட்டமாக பார்த்தால் அதில் என்ன இருக்கிறது என்று தோன்றும். ஆனால் சிங்கள பௌத்த உணர்வை நிலைநாட்டுவதற்கான ஒரு உளவியல் உத்தி தான் இது. இவர்கள் உருவாக்கியுள்ள டீ சேர்ட் ஒன்றின் ரூபா 3500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை அணிந்தபடி செல்பி படம் எடுத்து போடுவது பேஷனாக ஆகிவருகிறது. அதே வடிவத்தை உடலில் பச்சை குத்துவது பேஷனாகிவருகிறது. இதனை எதிர்த்து கட்டுரைகள் கவிதைகள், செய்திகள் வெளிவரும் அதேவேளை இதனை ஆதரித்தும் பதிலடி கொடுத்தும் அதேயளவு வெளிவருகின்றன.
இலங்கையில் பல முஸ்லிம் கடைகளிலும், வாகனங்களிலும் அரபி எழுத்தில் ஒரு வாளுடன் “லாஹிலாஹா இல்லல்லா” குர் ஆன் வாசகம் உள்ள ஸ்டிக்கர்கள் ஓட்டியபோது நீங்கள் எங்கே போனீர்கள் என்று வாதிடுகிறார்கள் இவர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட முஸ்லிம்களின் முச்சக்கர வண்டிகளை மறித்து பலாத்காரமாக அந்த ஸ்டிக்கர்களை கழற்றி வம்பிழுத்த சம்பவங்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. சவூதியில் இந்த சிங்க லே ஸ்டிக்கரை தனது காரின் இலக்கத் தகட்ட்டில் ஒட்டி பெருமிதத்துடன் அந்த புகைப்படத்தை இணையங்களில் பதிந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. “சிங்க லே” என்பது அலை அல்ல புரட்சி என்கிறது ஒரு ஸ்டிக்கர்.
சிங்கள இனத்தின் தோற்றம், சிங்களம் என்பதன் அர்த்தம் குறித்து பல்வேறு வரலாற்றுக் கதைகளும், புனைகதைகளும் நிலவுகின்றன. ஆளுக்கொரு கதையையோ பல்வேறு கதைகளையோ காவித் திரிபவர்களை கண்டிருக்கிறோம். 10000 வருடத்திற்கு முந்திய பாரம்பரியத்தையும் கூறிக்கொள்கிறார்கள். சமீப காலமாக இராமாயணத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். இராமாயண உபகதைகளை தமது வரலாற்றோடு பொருத்தி பெருமளவு நூல்கள் சமீபகாலமாக வருவதை காண முடிகிறது. விஜயன் இலங்கை அடைந்தபோது யக்க்ஷ, நாக, ராக்க்ஷ, தேவ எனும் என்கிற நான்வகை ஆதிக்குடிகள் இருந்ததாகவும் விஜயன் இவர்கள் எல்லோரையும் இணைத்ததாகவும் அவர்களே சிங்களவர் என்றும் பெரும்பாலான சிங்கள வரலாற்று இலக்கியங்களில் முன்வைக்கப்படுகின்றன.
இப்படி பலதரப்பட்ட கதைகளில் வலுவானதாக கருதப்படுவது இலங்கையின் முதலாவது சிங்கள மன்னனாக ஆன விஜயனின் பூர்வீகக் கதை. விஜயனின் தகப்பன் சிங்கபாகுவும், விஜயனின் தாயார் சிங்கவல்லியும் சிங்கத்துக்கும் பிறந்த உடன்பிறப்புக்கள் என்கிறது மகாவம்சம். மகாவம்சம் சிங்கள பௌத்தர்களின் வரலாற்றுப் புனித நூல். இது புனைகதை என்று நிராகரிக்கும் சிங்கள பௌத்தர்கள் மகாவம்சம் வெளிப்படுத்தும் ஏனைய இனவாத கதைகளை நிராகரிப்பதில்லை. ஆக சிங்கத்தின் வழித்தோன்றல் என்பதை சுட்டும் பெயரே “சிங்க” “லே”. சிங்களத்தில் “லே’ என்பது இரத்தம். ஆக சிங்கள இரத்த வழிவந்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் தேசியக் கொடியில் தமிழ் முஸ்லிம் இனங்களைக் குறிக்கின்ற செம்மஞ்சள், பச்சை கோடுகளை நீக்கிவிட்டு வாளை ஏந்திய சிங்கத்தை மட்டும் கொண்ட கொடியை சிங்கள இனவாதிகள் தமது கூட்டங்களில், ஊர்வலங்களில் பயன்படுத்தி சர்ச்சைக்குள்ளானது தெரிந்ததே. கோத்தபாய ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நடந்த ஊர்வலத்தில் அந்த கொடியை அமைச்சர்களும் இனவாதிகளும் ஏந்தியிருந்தனர். அது சர்ச்சைக்குள்ளானதும் சிலர் அதற்காக மன்னிப்பு கோரினர் பலர் அதனை நியாயப்படுத்தினர். அது தொடர்பில் பாடகர் மதுமாதவவுக்கு எதிரான வழக்கும் இன்னமும் தொடர்கிறது. தேசியக்கொடியை விகாரப்படுத்தினர் என்பதே அந்த குற்றச்சாட்டு. ராவண பலய இயக்கம் இன்னமும் பகிரங்கமாக அந்த தனிச்சிங்க கொடியைப் பயன்படுத்தி வருகிறது. சிதைக்கப்பட்ட தேசியக்கொடியின் இன்னொரு வடிவமே இப்போதைய “சிங்க லே” கொடியும். வாளேந்திய சிங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதி இடத்தில் “சிங்க லே” என்று பொறித்திருக்கிறார்கள். அதில் “லே” (இரத்தம்) என்பது மாத்திரம் தனித்து சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஷ்யமான பதிலடிகள் இவர்களுக்கு சிங்கள தரப்பிலிருந்தே கொடுக்கப்பட்டன. அதில் ஒன்று ஒன்று இப்படி கூறுகிறது.
“சைனீஸ் டெனிம் அணிந்துகொண்டு, பிரான்ஸ் நாட்டு “சன் கிளாஸ்” போட்டுக்கொண்டு KFC யில் மத்தியானம் சாப்பிட்டு விட்டு இந்திய வாகனத்தின் பின்பக்கத்தில் (முச்சக்கர வண்டி) “சிங்க லே” (சிங்க இரத்தம்) என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமையுடன் ஒருவன் போகிறான் விமான நிலையத்திற்கு, மனைவியை சவூதிக்கு அனுப்ப...”
“இனவாதத்தை புதுப்பிக்கும் இந்த “சிங்க லே” சமூக வலைத்தள நடவடிக்கையை மேற்கொள்பவர்கள் சிறை செல்ல நேரிடும் காத்திருங்கள்” என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் 23 அன்று கடும்தொணியில் எச்சரித்திருந்தார்.
பின்னணியில் யார்?
இந்த “சிங்க லே” நடவைக்கையின் பின்னணியில் பொதுபல சேனா இருப்பது உறுதியாகியிருக்கிற போதும் அது பகிரங்கமாக தமது நடவடிக்கையாக அறிவித்துக்கொள்ளவில்லை. பொது பல சேனாவின் செயலாளர் டிலந்த பெரேரா சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.“கடந்த மூன்று வருடங்களுக்குள் நான் செய்தவை எவ்வாறிருந்த போதும், “சிங்கலே” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன”. கடந்த வருடம் செப்டம்பர் 27 பொது பல சேனா கொழும்பு சுகததாச உள்ளரங்கில் பிரமாண்டமாக நடத்தி முடித்த மாநாட்டில் உரையாற்றிய டிலந்த பெரேரா இப்படி கூறியிருந்தார்.
“இதுவரை ஆட்சி செய்த சிங்கள அரசியல் தலைவர்களால் இந்த நாட்டின் பெயரை மீண்டும் “சிங்களே” என்று மாற்ற முடியாமல் போயிருக்கிறது. நாமெல்லோரும் சேர்ந்து ஆதனை சாத்தியப்படுத்த வேண்டும்”பொது பல சேனாவின் முகநூல் பக்கங்களில் ஒன்றான “சிங்க லே எகமுத்துவ - SinhaleUnity” (சிங்கள ஐக்கியம்) பக்கமும் தமது முகப்பு படமாக இதனையே வெளியிட்டுள்ளது. அந்த பக்கத்தில் இதனை ஒரு அரசியல் கட்சி என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் “சிங்களவர்களே முதுகெலும்பிருந்தால் உங்கள் வாகனத்தில் இதனை ஒட்டுங்கள்” என்று வினவுகிறது. அதேவேளை அந்த டீ சேர்ட்டுகளை தாம் விற்கவில்லை என்றும் அப்படி அறிவித்தவர்களை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது பொது பல சேனா. அவர்கள் இந்த நாட்களில் மீண்டும் பழையபடி மாநாடுகளை நடத்தித் திரியும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இம்முறை இரண்டாம் மட்ட பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து தமது அணிதிரட்டலை தொடங்கியிருப்பதாக ஞானசார தேரர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
தமக்கு பேரினவாதமின்றி இருப்பில்லை என்கிற ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. தமக்கு தலைமை தந்த சக்திகள் பின்வாங்கினாலோ, பலவீனமுற்றாலோ கூட தாம் ஏதோ ஒருவகையில் இயங்கியே ஆவது என்கிற ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. வீதிகளில் பிச்சை எடுப்பவர்கள், வயோதிபர்கள் போன்றோரை சீண்டி உசுப்பேத்தி அதனை ரசிக்கும் மனம் பிறழ்ந்தவர்களை கண்டிருப்போம். இன்று சாதாரண சிங்கள மக்களை அப்படித்தான் இவர்கள் உசுப்பேத்தி வேடிக்கை பார்க்க கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் இதன் விளைவு விபரீதமானது.
இன்று தொடங்கப்பட்டுள்ள “சிங்க லே” பிரச்சாரம் அலட்சியபடுத்தக்கூடியதல்ல. அவதானமாக எதிர்கொள்ளவேண்டிய எச்சரிக்கை. சிங்கள பௌத்தர்களை பேரினவாதநோக்கில் அணிதிரட்டும் ஒரு கண்மூடித்தனமான நடவடிக்கை. சிங்கள நாடு, சிங்கள தேசம், சிங்களத்தனம், சிங்கள பூர்விகம், என்கின்ற சித்தாந்தங்களை பரப்பும் ஒரு உளவியல் நடவடிக்கை.
தூய சிங்கள பௌத்தம், சிங்கள பௌத்த புனிதம் போன்றவற்றுக்கூடாக ஏனைய சமூகங்களை புறமொதுக்கும் மனநிலையை உருவாக்கும் அலை. இந்த புதிய வடிவத்தில் தொடங்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சாதாரணர்களை மீண்டும் உசுப்பேத்தி, புதியவர்களை பேரினவாத சித்தாந்தத்துக்குள் இழுத்து அணிதிரட்டும் இன்னொரு கைங்கரியம். இந்த வடிவங்கள் நீளும். இன்று இது... நாளை எது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...