Headlines News :
முகப்பு » » கடனின்றி வாழ பழக்க வேண்டும் - எஸ். வடிவழகி

கடனின்றி வாழ பழக்க வேண்டும் - எஸ். வடிவழகி


தீபாவளி முற்பணம் கிடைத்தால் தான் தீபாவளி என்ற பாரம்பரியத்தை மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால், இம் முறை தீபாவளி முற்பணம் என்பது கடைசிவரை முழுமையாக தீர்க்கப்படாத விடயமாக இருந்தது. கடனில் வாழ்வது எமது மக்களின் இரத்தத்தில் ஊறிப்போன விடயமாகியிருக்கிறது. மக்களை தொடர்ந்து கடன்காரர்களாக வைத்திருப்பதற்கே எல்லோரும் முயற்சிக்கிறார்கள்.

தீபாவளி கொண்டாட கடன், மரணசடங்குகளுக்கு கடன், பூப்புனித விழாக் கடன், திருமணக் கடன் என இப்போது வீடுகளுக்கு பொருட்கள் வாங்கக் கடன் என்று எல்லாவற்றிலுமே கடன் கலாசாரத்தையே காண்கிறோம். குடும்ப வரவு–செலவை திட்டமிடும் அறிவு போதாமை, சிக்கனமாக வாழ்வதன் அவசியம் குறித்த அறிவின்மை, தேவை எது, ஆசை எது என்பதை பகுத்தறிந்துகொள்ள முடியாத தன்மை என்பன மக்கள் கடன்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

கடன் இல்லாமல் வாழ முடியாது என மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடனில்லாமல் வாழமுடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தும் பிரசாரத்தையோ , செயற்பாட்டையோ மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எவராலும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நமது மக்களிடம் இருக்கும் கடன் கலாசாரம் என்னும் பலவீனத்தை நன்கு அறிந்து கொண்டிருக்கும் கம்பனிக்காரர்கள் தொலைக்காட்சிப்பெட்டி முதல், ஹோம் தியேட்டர் வரை தேவையற்ற பொருட்களை வீட்டுவாசல்களுக்கே வாகனங்களில் கொண்டு வந்து கடன் அடிப்படையில் மக்கள் தலையில் கட்டும் வியாபாரத்தை கச்சிதமாக செய்துவருகின்றனர். வெறும் ஆசையில் அநாவசிய ஆடம்பர பொருட்களை வாங்கி தவணைப்பணம் கட்ட முடியாமல் பணத்தையும் பொருளையும் பலர் இழந்து வருகிறார்கள். பலர் தவணைப்பணம் கேட்டு வரும் வியாபாரிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடி ஒளிகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களின் தன்மானத்திற்கே கேடு வருவதை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது கவலை தருகிறது.

இதைவிட பல்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு “கஷ்டப்படாமலேயே “ சம்பாதிக்க முடியும். முதலில் எழுபதாயிரம், எண்பதாயிரம் முதலீடு செய்யுங்கள். இந்த வியாபாரத்தில் உங்கள் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிரமமின்றி இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிரசாரம் செய்யும் மோசடிக் கும்பல்கள் மலையகத்தில் அதிகரித்து விட்டன. இவற்றில் தங்கள் பணத்தை போட்டு ஏமாந்த பலர் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பற்றாக்குறைக்கு முச்சக்கரவண்டி லீசிங் வியாபாரமும் தோட்ட மக்களை குறிவைத்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களில் பெரும்பான்மையானோர் கடன் கலாசாரத்தில் மூழ்கி மாதாந்தம் உழைத்த தமது சம்பளத்தைக் கையில் வாங்குமுன்னரே இவ்வாறான கம்பனிகளுக்கும் மற்றைய கடன்காரர்களுக்கும் கடனை செலுத்திவிட்டுத்தான் மிகுதி சம்பளத்தையே வாங்குகிறார்கள். நமது உழைப்பை கையில் வாங்கமுன்னர் கடன் கட்டுவது நமது உழைப்பை கேவலப்படுத்தும் விடயம் என்பது மக்களுக்கு புரியவில்லை. கடன் கலாசாரத்தில் இருந்து மக்களை மீட்க எவரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை.

கடன் என்பது நமது கௌரவமான உழைப்பை, சில வேளைகளில் வாழ்க்கையையே அடகு வைத்து அல்லது ஈடு வைத்து பெறப்படும் பணம் என்பதை மக்கள் மனதில் ஆழமாக பதியப்பண்ண வேண்டும். இந்த கருத்து கடந்த வருடத்தில் பல வழிகளில் மக்கள் மத்தியில் சொல்லப்பட்டது. இதன் பலனாக இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட சிலர், தீபாவளி முற்பணம் வாங்குவதற்கு பதிலாக வருட ஆரம்பத்திலேயே தோட்ட அதிகாரிகளிடம் தமது தீபாவளி செலவுக்காக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அறவிட்டு சேமித்து வைத்து தீபாவளிக் காலத்தில் தாம் சேகரித்தை பணத்தை பெற்றுக்கொண்டு தீபாவளி முற்பணம் என்ற கடனில்லாமல் தீபாவளியை கொண்டாடியிருக்கிறார்கள்.

இவ்வாறு கடன் வாங்கி தீபாவளி கொண்டாடும் இந்த பாரம்பரிய வழக்கத்தை சிலர் இம்முறை தகர்த்திருக்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. கடன் வாங்காமல் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை சிலரால் நடைமுறைப்படுத்த முடியுமானால் மற்றவர்களால் ஏன் முடியாது? தீபாவளி முற்பணம் என்ற கடனிலிருந்து மட்டுமல்ல, பொதுவாக எதற்காகவும் கடன் வாங்கும் கடன் கலாசாரத்தில் நமது மக்கள் விடுதலை பெறவேண்டும். ஒரு பண்டிகையைக் கடன் வாங்கிக் கொண்டாடும் அளவுக்கு நாம் நமது கௌரவத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என்ற கருத்தை மக்கள் மத்தியில் கொண்டுவர மலையக புத்திஜீவிகளும், ஆசிரியர் சமூகமும், சமய அமைப்புக்களும் முன்வர வேண்டும்.

கடன்வாங்கி தீபாவளி கொண்டாடும் சாபக்கேடான வழக்கத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டும். பொருள் வாங்கவும் திருமணங்களுக்காகவும் கடன் வாங்கும் வழக்கத்தில் இருந்து மக்களை மீட்கவேண்டும். கடனின்றி வாழும் புதிய சகாப்தத்தை தொடங்க மக்களை ஊக்குவிக்கவேண்டும். சிக்கனமும் , திட்டமிடுதலும் இருந்தால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates