பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் பெரிதும் பின்தங்கிய நிலையில் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆங்கிலேயக் காலனித்து ஆட்சியில் இலங்கைக்கு எவ்வாறு அழைந்துவரப்பட்டு பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்களோ அந்நிலையிலிருந்து இன்னமும் இந்தச் சமூகம் எழுச்சிப் பெற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றமை நிதர்சனம்.
2011ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கீட்டின் படி பெருந்தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 88 சதவீதமாகும். பெருந்தோட்ட இந்தியத் தமிழர்களுக்கு மலையகமே தாயக பூமியாகும். 10 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழும் மலையகம் இந்த நாட்டின் பின்தள்ளப்பட்ட சமூகங்கள் வாழும் ஓர் தூரத்து தேசமாகவே பார்க்கப்படுகிறது, வர்ணிக்கப்படுகிறது.
மூன்றில் இரண்டு வீத இந்திய வம்சாவளி தமிழர்கள் பெருந்தோட்டத்துறையிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் கிராம புறங்களிலும், நகர்புறங்களிலும் வாழ்கின்றனர். மாவட்ட அடிப்படையில் நுவரெலியவில் 70சதவீதமாகவும், ஏனையவர்கள் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, குருணாகல, களுத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பரந்து வாழ்கின்றனர்.
சுதந்திர இலங்கையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதன் தாக்கம் தெற்கிலும், வடக்கிலும் மாத்திரமே காணப்படுகிறது. இன்றைய சூழலில் பெருந்தோட்ட மக்கள் சனத்தொகை, கல்வி, வீடமைப்பு, வீட்டுரிமை, சுகாதார நிலை, தொழில் நிலை, சமூக பாதுகாப்பு, மனிதவுரிமைகள், உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்தும், பொது நிர்வாகம், உள்ளூராட்சி சேவை வழங்கள் போன்ற நிலைகளில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் சொல்லன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றமையை எவரும் மறுக்க முடியாது.
பிரித்தானியக் காலனித்து ஆட்சியிலிருந்து 1972 ஆம் ஆண்டு அரச பொது நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட மலையக மக்கள் மீண்டும் அந்நிய ஆட்சியாளர்களிடம் தாரைவார்த்துக் கொடுப்பது போல் 1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கல்வி
பெருந்தோட்டத்துறைக் கல்வித்துறையை நோக்குமிடத்து அவர்கள் கடந்த தசாப்தத்தை விட இந்தத் தசாப்தத்தில் தேசியக் கல்விமுறைக்கு 95 வீதம் உள்வாங்கப்பட்டுள்ளனர். என்றாலும், வருமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மலையக சமூகத்திற்கு உயர்தரம் வரை தமது பிள்ளைகளைக் கற்பிக்க வைப்பது ஒரு மைல் கல்லைத் தாண்டுவது போன்றே பொருளாதாரச் சுமைகள் வாட்டியெடுக்கின்றன.
1970களில் பெருந்தோட்டப் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டன. அன்றுமுதல் கல்வித்துறையில் மலையக சமூகம் எழுச்சி கண்டு வருகின்றமையை மறுக்க முடியாது. 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையின் கல்வி அறிவு வீதம் 92.2வீதமாகக் காணப்படும் அதேவேளை பெருந்தோட்டங்களின் கல்வி வீதம் 81 வீதமாகக் காணப்படுகிறது.
குடியுரிமை
குடியுரிமை என்பது ஒரு நாட்டின் அரசு தமது நாட்டின் பிரஜைக்கு வழங்கும் அதியுயர் அந்தஸ்தாகும். 1948ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்ல என்ற நாம்ம சூட்டப்பட்டு சுமார் 55 வருடங்களுக்குப் பின்னர் அதாவது 2003 ஆம் ஆண்டே மீண்டும் முழுமையாக வழங்கப்பட்டது. 1949இந்திய, பாகிஸ்தானிச் சட்டம், 1964 சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், 1967 சிறிமாசாஸ்திரி அமுலாக்கச் சட்டம், 1986 நாடற்டோர் சட்டம், 2000 குடியுரிமைச் சட்டம், 2003 பிரஜாவுரிமைச் சட்டம். எனப் பல்வேறுச் சட்டங்கள் மலையக மக்களை நாடு கடத்துவதற்கும், நாடற்றவர்களாக மாற்றுவதற்கும் இலங்கையை ஆட்சிசெய்த பேரினவாதிகளால் கொண்டுவரப்பட்டு அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளன.
2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலமே மலையக மக்களுக்கு முழுமையான குடியுரிமை கிடைக்கப் பெற்றது. என்றாலும், மலையகத்தைப் பொறுத்தமட்டில் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாக 10 தொடக்கம் 15 வீதமானவர்கள் காணப்படுகின்றனர். காரணம் இவர்கள் முகவரி அற்றச் சமூகம் என்ற முத்திரைக் குற்றப்பட்டிருப்பதால் இவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் முறையாகப் பதியப்படவில்லை.
வீடமைப்புத் திட்டம்
இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவை பெரும்பாலும் பெரும்பான்மைச் சமூகத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன. 1984ஆம் ஆண்டு 10 இலட்சம் வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதில் மலையகம் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகள் உள்வாங்கப்படவில்லை. 1995 , 2001 ஆம் ஆண்டுகளுக்கிடையில் அமரர் சந்திர சேகரரின் காலத்தில் சந்திரிக குமாரத்துங்கவின் ஆட்சிக்காலத்தில் சில வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வீடுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக இதுவரை 25ஆயிரம் தனிவீடுகள் மலையக மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 2 1/2இலட்சம் வீடுகள் பெருந்தோட்டங்களுக்குத் தேவைப்படுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் திகாம்பரத்தின் கீழ் மலையக மக்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 200 வருட லயன் வாழ்கையில் புரையோடிப்போன இவர்களின் வாழ்வு இன்னமும் எத்தனை ஆண்டுகள் தொடரப் போகிறது என்பதை ஆரூடம் கூற முடியாதுள்ளது. தற்போது பசுமை பூமித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் 7 பேர்சசில் வழங்கப்பட்டு வருகின்றன.
7 பேர்சச் என்பது பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்குத் தமது உயிரை பனயம் வைத்து உழைத்தமைக்காக வழங்கப்படும் அற்ப கூலியாகவே எண்ணத் தோன்றுகிறது. அத்துடன், பதுமை பூமித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளின் உரிமப் பத்திரம் கூட ஒரு நிலையான அரசின் அங்கீகா ரம் பெற்ற உரிமப் பத்திரமாக இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தற்போதைய அரசியல் தலைமைகளும் சுட்டிக்காட்டுகின்றன.
நாடாளுமன்ற, உள்ளூராட்சிமன்ற, மாகாணசபை நிலைகள்
மலையகத்தைப் பொருத்தமட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்திற்குப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாது நாடாளுமன்றத் தேர்தலின் போது 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதில் 7 மலையகத் தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இம்முறை(2015)நடைபெற்ற நாடாளுமனறத் தேர்தலில் 225 உறுப்பினர்களில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டள்ளனர். இது பாரிய அநீதியாக கருத்தப்படுகிறது.
உள்ளூராட்சிமன்றங்களிலும், மாகாணசபைகளிலும் அவ்வாறுதான் விகிதாசாரத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவம் இல்லை. அவற்றையும் தாண்டி உள்ளூராட்சிமன்றங்களில் பாரியச் சட்டசிக்கல்களும் காணப்படுகின்றன. குறிப்பாக 1930 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிலாளர் சட்டம் இன்னமும் இவர்களுக்கு இந்தியர்கள் என்ற நாமமே சூட்டப்பட்டுள்ளது. 1987ஆம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15 இலக்கச் சட்டத்தின் படி தோட்டங்கள் யாவும் முகாமைத்துவத்திற்கு உட்பட்டே செயற்பட வேண்டும். என்பதுடன் இலங்கை அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டள்ளனர்.
அதேபோல், 33 இலக்க பிரதேச சபை சட்டமும் பெருந்தோட்ட மக்களுக்குப் பாரிய சில்கலாகக் காணப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் பெருந்தோட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அவர் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச சபை சார்ந்த பெருதோட்ட மக்களுக்குச் சேவைகளை முன்னெடுக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் இலங்கை வாழ் மக்களில் வறுமைக் கோட்டின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரே சமூகமாக பொருந்தோட்ட மக்கள் காணப்படுகின்றனர். பெருந்தோட்ட மக்களில் 50வீதமான மக்கள் நங்களது அன்றாட சம்பளத்தை நம்பி வாழ வேண்டிய ஒரு துன்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் கைசாத்திடப்படவில்லை. 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருதோட்டங்கள் முøறாயாகப் பராமரிக்காத காரணத்தால் தோட்டங்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றன. இவ்வாறு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள இவர்கள் தமது பொருளாதாரச் செலவுகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
இவை போன்றே மனிதவுரிமைகள், சமூக பாதுகாப்பு, சுதாதாரம், பொது நிர்வாகம், சேவை வழங்கள் போன்ற பல்வேறு அடிப்படை சமூக கட்டுமானங்களில் பெருந்தோட்ட மக்கள் பின்தள்ளப்பட்டும், அநீதியிழைக்கப்பட்டும் வாழ்கின்றமையை எம் கண்முன்னே காணக்கூடியதாகவுள்ளது. எனவே, இந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பாதுகாப்பு விடயங்கள் 200 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படாமல் இருக்கின்றமை தீராப் பெருவலியாகும். இவர்களின் வாழ்வு மேலோங்க இந்தப் புதிய அரசும், மலையகத் தலைமைகளும் ஒன்றுப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...