பலாங்கொடை நன்பேரியல் தோட்ட நெங்ரெக் பிரிவு கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
பலாங்கொடையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் 158 ஆம் மைக்கல்லின் இடது பக்கத்திலிருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் நன்பேரியல் தோட்ட நெங்ரெக் பிரிவு அமைந்துள்ளது.
நாட்டின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நன்பேரியல் தோட்ட நெங்ரெக் பிரிவில் 40 குடும்பங்களை கொண்ட சுமார் 200 பேர் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தோட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் மேற்படி தோட்டப்பகுதியை அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. குறிப்பாக மலையக தமிழ் தலைவர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இந்த மக்களை கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களாக ஒரு தனியான தீவிலுள்ள மனிதர்களைப்போலவே இவர்கள் வாழ்ந்து வந்தனர்.
மேற்படி தோட்டத்திலுள்ள 40 மாணவர்கள் 12 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள விவேகானந்த வித்தியாலயத்திற்கு தினமும் நடந்து சென்று கல்வி கற்று வருகின்றனர். ஒன்று தொடக்கம் ஐந்தாம் ஆண்டுவரை உள்ள இப்பாடசாலையில் 100க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். பாடசாலையில் அதிபரும் ஒரு ஆசிரியர் மட்டுமே சேவையில் இருந்தார்கள்.
நெங்ரெக் பிரிவு மக்களின் துன்பங்களும் கஷ்டங்களும் 2013 ஆம் ஆண்டு வீரகேசரி குறிஞ்சியில் வெளியாகியிருந்தது.
இதனை அறிந்து கொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி மேற்படி தோட்டத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் துன்பங்களை நேரில் பார்வையிட்டார்.
அம்மக்களுக்கு உதவி செய்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு திட்டமிட்டார். அதற்கமைய நன்பேரியல் தோட்ட நெங்ரெக் பிரிவை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கென 2013 ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண சபை வரவு செலவு திட்டத்தின் மூலம் 250 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்நிதியின் மூலம் மேற்படி தோட்டப்பிரிவின் வீதிகள், வைத்திய சிகிச்சை நிலையம், இந்து ஆலயம், விவேகானந்த தமிழ் வித்தியாலயம், மாணவர் விடுதி, சுகாதார வைத்தியருக்கு உத்தியோகபூர்வ விடுதி, சிறுவர் நிலையம் என்பன அமைப்பதற்கான அபிவிருத்திப்பணிகள் யாவும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.
நன்பேரியல் தோட்ட வீதி அபிவிருத்தி செய்வதற்கு 13,120,000 ரூபாவும் நன்பேரியல் தோட்ட வைத்திய சிகிச்சை நிலையம் அமைப்பதற்கு 1,404,000 ரூபாவும் நன்பேரியல் ஆலயம் அபிவிருத்திக்கு 24,09,000 ரூபாவும் நன்பேரியல் விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்கு 27,15,000 ரூபாவும் விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் விடுதி அமைப்பதற்கு 26,90,000 ரூபாவும் நன்பேரியல் சுகாதார வைத்தியருக்கு உத்தியோகபூர்வ இல்லம் அமைப்பதற்கு 10,30,000 ரூபாவும் சிறுவர் நிலையம் என்பவற்றுக்கு முறையே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வருடமும் 11 மாதத்திற்குள் மேற்படி அபிவிருத்தி பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டன.
மேற்படி தோட்டப்பிரிவில் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள், வைத்திய சிகிச்சை நிலையம், இந்து ஆலயம், விவேகானந்தா தமிழ் வித்தியாலயம், மாணவர் விடுதி, சுகாதார வைத்தியருக்கு உத்தியோகபூர்வ இல்லம், சிறுவர் நிலையம் என்பன 2015 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
அதிபர் மற்றும் ஒரு ஆசிரியருடன் இயங்கி வந்த நன்பேரியல் விவேகானந்த வித்தியாலயத்திற்கு தற்போது 11 ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டு பாடசாலைக்கு சகல வளங்களும் பெற்று கொடுக்கப்பட்டுள்ளன.
100க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வரும் இப்பாடசாலையின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெங்ரெக் தோட்டப்பிரிவு மக்களின் கனவு நனவாகியதையடுத்து தோட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தமது கருத்துக்களை தெரிவிக்கையில், நன்பேரியல் நெங்ரெக் பிரிவை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் நடவடிக்கை எடுத்தமை எம்மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் கொண்ட நெங்ரெக் பிரிவு மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி கொடுப்பதற்கு எந்த ஒரு அரசியல்வாதிகளும் இதுவரை முன் வந்தது கிடையாது.
எங்களது துன்பங்களை அறிந்து எமது கண்ணீரைத் துடைப்பதற்காக எமது தோட்டத்துக்கு வந்து எமக்கு விடிவை ஏற்படுத்தி கொடுத்துள்ள சப்ரகமுவ மாகாண முதலைமைச்சருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நாம் என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
எங்களது வாக்குகளை பெறுவதற்கு மட்டுமே தமிழ் அரசியல்வாதிகள் வருகின்றனர். அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்கு எவரும் வருவதில்லை. ஆனால் மனித நேயத்தோடு எமது தோட்டத்திற்கு வந்து எமது குறைகள் பிரச்சினைகளை தீர்த்துக்கொடுத்த சப்ரகமுவ மாகாண முதலமைச்சருக்கு நாம் மிகவும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம் என்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கஷ்ட பிரதேசத்தில் வாழும் தோட்ட மக்கள் நாட்டுக்காக பாடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறு பாடுபட்டு வரும் நெங்ரெக் பிரிவு மக்களின் கஷ்டங்களை உலகறியச் செய்த வீரகேசரி வார வெளியீடு பத்திரிகை மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நாட்டில் வாழும் நாம் அனைவரும் ஒரே மக்கள் எமது மத்தியில் வேறுபாடுகள் வேண்டாம். நான் தோட்ட மக்களை ஒருபோதும் ஒதுக்கியது கிடையாது. நான் அவர்களுடன் நெருங்கி பழகுபவன். தோட்ட மக்களுக்கு தேவையான அபிவிருத்திப்பணிகளை செய்து கொடுப்பதற்கு நான் ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்.
2013 ஆம் ஆண்டு நான் நன்பேரியல் தோட்ட நெங்ரெக் பிரிவுக்கு வந்து மக்களின் பிரச்சினைகள் கேட்டறிந்து அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தேன். நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தற்போது நிறைவேற்றி கொடுத்துள்ளேன்.
அத்தோடு நன்பேரியல் விவேகானந்த வித்தியாலயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதோடு மாணவர்கள் 12 கிலோ மீற்றர் தூரம் நடந்து பாடசாலைக்கு செல்வதால் பாடலையில் மாணவர் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் மாணவர் விடுதியுடன் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாக நன்பேரியல் விவேகானந்தா வித்தியாலயம் அமைகின்றது.
12 கிலோ மீற்றது தூரத்திலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களின் நலன் கருதி மேற்படி பாடசாலையில் மாணவர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தோடு பாடசாலை விடுமுறை தினங்களில் பாடசாலை விடுதியில் தங்கும் மாணவர்கள் அவர்களது இல்லங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கான போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நெங்ரெக் பிரிவு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் சப்ரகமுவ மாகாணம்தான் 40 குடும்பங்களை கொண்ட 200 பேருக்காக இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு நெங்ரெக் பிரிவில் மேலும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் செய்து கொடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய, மாகாண சபை உறுப்பினர் அகில எல்லாவல, பிரதான செயலாளா எச்.பி.குலரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகமன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, தோட்ட அதிகாரி ரொமேஷ் த சில்வா மற்றும் பலாங்கொடை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உறுப்பினர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...