தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை முடிவின்றி நீண்டு செல்கின்றது. சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. வேறு சில தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கின்றன .மற்றும் சில சங்கங்கள் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேரத்தை ஒதுக்கித்தருமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றன.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி (2013– 2015) தற்போது 9 மாதங்களாகி விட்டன. கூட்டு ஒப்பந்தம் மூலமே தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 9 மாதங்களாக புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாததால் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு இதுவரை கிடைக்காமலுள்ளது. உண்மையில் இது தோட்டத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
வாழ்க்கைச்செலவு எப்போதும் ஒரே மையத்தில் நிற்பதல்ல. நாளுக்கு நாள் அது உயர்ந்து கொண்டே செல்லும். அந்த வகையில் தற்போது உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்துமே விலை அதிகரித்துக்காணப்படுகின்றன எனவே இந்த விலையுயர்வுக்கேற்ப தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்.
அரச துறை மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளம் காலத்துக்குக்காலம் உயர்த்தப்படுகிறது. அதேவேளை, வரவு செலவுத்திட்டத்தினூடாகவும் சம்பளம் உயர்த்தப்படுகிறது. ஆனால் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் தீர்மானிக்கிறது.
இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை மட்டுமன்றி அவர்களில் தங்கியிருக்கும் அவர்களது பல இலட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களினதும் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகவே வருமானம் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பிரச்சினையின்றி கொண்டு செல்லும் வகையில் அவர்களுக்கான வருமானம் அமைந்திருக்க வேண்டும். இது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையுமாகும்.
இந்த விடயத்தில் மனிதாபிமானமும் புறந்தள்ளப்பட்டிருப்பதையே காண முடிகிறது. மனிதாபிமான ரீதியிலாவது நடைமுறைப்பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து சம்பள உயர்வை வழங்கியிருக்கலாம். தங்களது இலாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் தரப்பினரிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பதும் பிழையானதென்பதையே தற்போதைய செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் விடாப்பிடியாகவே இருக்கின்றன.
விடாப்பிடியாக இருக்கின்றன என்பதை விட 'புலி வாலைப்பிடித்த கதையாகவே' இருக்கிறது. ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்த தொழிற்சங்கங்களால் அதிலிருந்து பின்வாங்க முடியாமலும் அதேவேளை பின்வாங்க வேண்டிய நிலையிலும் இருக்கின்றன.
இதற்கு காரணம் 1000 ரூபா கோரிக்கையிலிருந்து பின்வாங்கினால் ஏனைய தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்படும். மட்டுமன்றி தொழிலாளர்கள் முன்னிலையில் நிற்க முடியாது. தொடர்ந்து தொழிற்சங்கமும் நடத்த முடியாத நிலைமை ஏற்படும் என்பதே காரணமாகும்.
முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தற்போது அந்த சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதையே விட்டு விட்டன. ஆனால் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதிலும் தொழிலாளர்களை ஏமாற்றுவதிலும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட ஏனைய நலன்புரி விடயங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்தப் பொறுப்பிலிருந்து அவை இலகுவாக விடுபடவோ அல்லது ஒதுக்கித்தள்ளி விடவோ முடியாது.
தங்களால் முடியா விட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறி ஏனைய சங்கங்களுக்கு அந்தப் பொறுப்பை வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் செய்யாமல் கூட்டு ஒப்பந்தத்தைப் பற்றியே வாய்திறக்காமல் இருப்பதால் தொழிலாளருக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை.
தொழிலாளரின் சம்பள உயர்வுக்காக அவர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவதோ வேலை நிறுத்தங்களில் ஈடுபடச் செய்வதிலோ அல்லது மெதுவாகப் பணி செய்யுமாறு வலியுறுத்துவதிலோ எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு செய்வதானால் தொழிற்சங்கம், அதற்குரிய தலைவர், செயலாளர் போன்றவர்கள் தேவையில்லை. தொழிலாளர்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள்.
தொழிலாளரின் உரிமைகள், சம்பள உயர்வு, நலன்புரி விடயங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தொழிற்சங்கங்கள் தேவை.
அதை விடுத்து அவர்களது உரிமைகளை பறிப்பதற்கும் அவர்களை கஷ்டத்தில் தள்ளுவதற்கும் தொழிற்சங்கங்கள் அவசியமில்லை. . இதனை மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இனிமேலும் காலத்தைக் கடத்தாமல் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...