தோட்டத்தொழிலாளரின் சம்பளம் குறித்து தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத்தொழிலாளரின் நாளாந்த சம்பளத்தை 620 ரூபாவிலிருந்து 770 ரூபாவாக அதிகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தேன்.
எனது வேண்டுகோளின்படி கூட்டு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என நம்புகிறேன் என்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அவரது செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.
கேள்வி: தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இது தொடர்பாக தொழில் அமைச்சர் என்ற ரீதியில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பதில்: மார்ச் மாதத்துடன் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் முதலாளிமார் சம்மேளனத்தையும் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இரு தரப்பினரும் தமது பக்க நியாயங்களை முன்வைத்தனர். தொழிலாளர் சார்பில் பங்குபற்றிய தொழிற்சங்க பிரதிநிதிகள் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் ஆயிரம் ரூபாவை விட்டு இப்போது வழங்கும் சம்பளத்தைக் கூட வழங்க முடியாதுள்ளதாகத் தெரிவித்தனர். இப்போதுள்ள சர்வதேச தேயிலை, இறப்பர் விலையை கருத்திற்கொண்டு பார்த்தால் சம்பள அதிகரிப்பு குறித்து யோசித்துப் பார்க்கக்கூட முடியாதென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தோட்டத்தொழிலாளர் சம்பளம் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது வழங்கப்படும் 620 ரூபாவை அதிகரித்து 770 ரூபா வழங்கும்படி நான் இரு தரப்பினருக்கும் தெரிவித்தேன்.
770 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தையும் தொழிற்சங்க கூட்டு கமிட்டியையும் கேட்டுக்கொண்டேன். இன்னும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது நல்லதென்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி: 770 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்கும் உங்கள் ஆலோசனையை தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளதா ?
பதில்: அவர்கள் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவைக் கோருகின்றனர். அவர்கள் ஆயிரம் ரூபா கிடைக்கும் வரை இணக்கப்பாட்டுக்கு வராமலிருக்கலாம்.அவர்கள் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். எனவே, அவர்கள் இத்தொகைக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி: தேயிலை, றப்பர் தோட்டங்கள் அதிகமுள்ள இரத்தினபுரி மாவட்டத்தை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள். தோட்டத்தொழிலாளர்கள் வாழும் லயன் அறைகள் மிக மோசமாக இருக்கின்றன. இந்த லயன் அறைகளின் கூரைத்தகடுகளைக்கூட மாற்றிக் கொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வருவதில்லையே?
பதில்: வீடமைப்பு குறித்து இப்போது அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. ஏழு பேர்ச்சர்ஸ் காணியில் வீடமைத்துக்கொடுக்கும் திட்டம் இப்போது நடை முறைப்படுத்தப்படவுள்ளது. இந்தத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். தோட்டக் கம்பனிகள் லயன் அறைகளின் கூரைத்தகடுகளைக் கூட மாற்றுவதற்கு முன் வருவதில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். கம்பனிகள் தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை அரசாங்கத்திடம் விட்டு விட்டன. தொழிலாளர்களிடம் வேலை வாங்குகின்றன. ஆனால், அவர்களுக்கு குறைந்த பட்ச வசதிகளைக்கூட செய்து கொடுப்பதில்லை. மலசலகூட வசதிகள் கூட இல்லை.
இவர்கள் இவற்றை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
கேள்வி: தோட்ட கம்பனிகள் இலாபமீட்டுகின்றன. அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பு இருக்கின்றதல்லவா?
பதில்: தோட்டத்தொழிலாளர்களும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களுக்கான குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமையும் பொறுப்புமாகும். தொழிலாளர்கள் திருப்தியுடன் வாழும் பட்சத்தில் அவர்கள் தகுந்த உழைப்பை வழங்குவார்கள். ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வீடுகளை அமைத்துக்கொண்டு மின்சார இணைப்பு பெற்று முறையாக வாழ்கின்றனர். இந்த நிலை எல்லாத் தோட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். பல தோட்டங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகவுள்ளது. மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள் கூட இல்லை. பிரதேச அரசியல்வாதிகள் இந்த வசதிகளை செய்து கொடுப்பர் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கேள்வி: தனியார் துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது. அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா ?
பதில்: தனியார் துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு வழங்க இப்போது அதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: வரவு–செலவுத் திட்டத்தில் இந்த தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதா ?
பதில்: இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் வரவு–செலவுத்திட்ட உரையில் அறிவித்துள்ளார்.
கேள்வி: ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் ஒன்றிணைக்கும் திட்டமொன்றை அரசு அறிவித்தது. ஆனால், இத்திட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: மேற்படி நிதியங்களுக்கு பாதிப்பு எதுவும் இடம்பெறாத வகையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் இந்த நிதியங்களை மத்திய வங்கியில் தொடர்ந்து வைக்கும்படியே கோரிக்கை விடுக்கின்றன. இந்த கோரிக்கையை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இது பிரதமரின் ஆலோசனையாகும். பிரதமரின் இணக்கப்பாட்டின்படி அவர் ஒரு அறிவிப்பை விடுத்தார்.
தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தால் இந்த நிதியங்களில் உள்ள நிதியை தொடர்ந்தும் மத்திய வங்கியில் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கேள்வி: அப்படியானால், இந்த இரு நிதியங்களை ஒன்றிணைக்கும் திட்டம் அரசால் கைவிடப்பட்டு விட்டதா?
பதில்: இல்லை. கைவிடப்படவில்லை. இந்த இரண்டு நிதியங்களையும் இணைத்தால் 1.7 டிரில்லியன் ரூபா இருக்கும். இந்த நிதியை வருமானம் பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும். இதுவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணமாகும்.
இத்திட்டத்தை எதிர்க்கும் தொழிற்சங்கங்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...