2016ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டங்களை விட இந்த வரவு செலவுத்திட்டம் சிறுபான்மை மக்களுக்கு ஓரளவு நன்மையளிப்பதாகவே உள்ளதென்று சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
கடந்த கால வரவு செலவுத்திட்டங்கள் பொதுவான முறையில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதே தவிர அபிவிருத்தியில் பின் தங்கியுள்ள சிறுபான்மை மக்களின் அபிவிருத்தி மற்றும் நலனோம்புத்திட்டங்கள் முன்மொழியப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக இந்திய வம்சாவளி மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தை குறிப்பிடலாம்.
வரவு –செலவுத்திட்டங்களில் தோட்டத்தொழிலாளரின் வீடமைப்பு, கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஆனால் இம்முறை தோட்டத்தொழிலாளரின் வீடமைப்புக்கென வரவு –செலவுத்திட்டத்தில்1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுப் பதிவாகும்..
அதேபோன்று பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென்று தனியாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடக்கூடியதாகும்.
இது பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குப் போதுமான தொகையல்ல. எனினும் இதனை ஆரம்ப முயற்சியாகவும் முன்னோடி நடவடிக்கையாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் அமைச்சர்களாலும் அரசாங்கத்தினாலும் தோட்டத்தொழிலாளருக்கான வீடமைப்பு பற்றி மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டன ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த நல்லாட்சி அரசில் வீடமைப்புக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இந்திய வம்சாவளி மக்கள் மீது இந்த அரசாங்கத்துக்கு உள்ள கரிசனையைக் காட்டுவதாக உள்ளது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணியில் தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுமென்று தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி இந்த அரசு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அவ்வமைச்சு ஊடாக தோட்டங்களில் புதிய கிராமங்களை உருவாக்குதல், வீடமைப்பு, உட்கட்டமைப்பு, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவற்றை முன்னெடுக்கக் கூடியதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரவு –செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினூடாக வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று சாமிமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ப. திகாம்பரம் கூறியிருக்கிறார். இது வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும்.
கடந்த காலங்களில் மலையகத்தில் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படாமல் அல்லது அதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் திறைசேரிக்கு நிதி திரும்பிய சம்பவங்கள் இடம்பெற்றதுண்டு. எனவே, குறித்த காலப்பகுதிக்குள் குறித்த நிதியின் மூலம் வீடுகளை அமைத்துக்கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளன. கூரைத்தகடுகள் மாற்றப்படாமலும் குடிநீர் வசதியின்றியும் பாதை வசதிகளின்றியும் பெரும் சிரமங்களுக்குள்ளான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான தோட்டங்களை இனங்கண்டு அங்கு அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அதேபோன்று பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை மலையக கல்வி வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த நிதியின் மூலம் பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளையும் அபிவிருத்தி செய்ய கல்வியமைச்சு முன்வர வேண்டும். கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை,புதிய வரவு –செலவுத்திட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் கோதுமை மா மற்றும் அரிசி என்பன அவர்களின் அன்றாட உணவில் முக்கிய இடத்தினை பெறுகின்றன ஆனால் கோதுமை மாவின் விலையும் அரிசியின் விலையும் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இரண்டு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை முக்கியமானதாகும். வரவு –செலவுத்திட்டத்தில் தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு 8 மாதங்களாகியும் கூட இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பையும் வரவு –செலவுத்திட்டத்தினூடாக அறிவிக்க வேண்டும். அப்படிச்செய்தால் மட்டுமே அது தோட்டத்தொழிலாளருக்கு நன்மை தருவதாக அமையும்.
இது தொடர்பில் தோட்டத்தொழிற்சங்கங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் தொழிற்சங்கங்கள் இது பற்றி கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. மலையகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் அரசில் இருக்கின்றனர். அவர்களில் இருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்.
தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனூடாக சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க ஆவன செய்திருக்கலாமல்லவா ? இனியாவது அதனைச் செய்வதற்கு முன்வருவார்களா?
பொதுவாக நோக்கும்போது கடந்த கால வரவு –செலவுத் திட்டங்களை விட இம்முறை வரவு –செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் பாடசாலைகள் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கவனத்திற்கொள்ளக் கூடிய விடயமாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...