Headlines News :
முகப்பு » » இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றைக்கூறும் ஆவணம் - சிலாபம் திண்ணநூரான்

இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றைக்கூறும் ஆவணம் - சிலாபம் திண்ணநூரான்


இலங்கைக்கு இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகை பற்றிய தகவல்களை பல தமிழ், ஆங்கில, சிங்கள நூல்கள் தெரிவிக்கின்றன. 'தெனும மினும' என்ற சிங்கள நூல் கி.மு. 543 இல் விஜயன் இந்தியாவிலிருந்து இந்நாட்டின் வடமேல் கரையோரமான புத்தளம் தம்பபன்னியில் கால்பதித்தது முதல் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஒன்பது இந்திய தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தையும் கண்டியை ஆண்ட மதுரை நாயக்கர் வம்சத்து தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தையும் விவரிக்கின்றது. இவர்களில் எல்லாளனே 44 வருட காலம் ஆட்சியை மேற்கொண்ட தமிழனாவான் என்ற தகவலையும் வழங்குகின்றது.

இவ்வாறான பல நூல்கள் வெளிவந்துள்ள நிலையில் 1930 இல் கொழும்பு கொமர்சல் கம்பனி வெளியிட்ட Fergusons ceylon directory – 1930 என்ற நூலானது அன்றும் இன்றும் மிகப்பிரசித்தி பெற்ற நூலாகும்.1796 முதல் 1929 வரையிலான காலகட்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் பின்னர் ஏற்பட்ட சமுதாய, அரசியல் சீர்திருத்தங்கள், போக்குவரத்துச் சாதனங்களின் வருகையால் உருவான வீதி விஸ்தரிப்பு என்பன பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டதனால் ஏற்பட்ட பலனே என்பதை தெளிவாக ஆய்வு செய்யும் வகையில் இந்நூல் தகவல்களை வழங்கியுள்ளது.

கண்டியை ஆண்ட மதுரைத்தமிழனான கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கன் பௌத்த மத பிக்குகளை வைத்து ஆதிகாலம் முதல் மகாசேனன் காலம் வரையிலும் பின்னர் ஸ்ரீ கீர்த்தி வரையிலுமுள்ள ஆட்சி வரையிலான வரலாற்றை கூறும் மகாவம்சம் நூல், இன்று இந்நாட்டின் சரித்திர ஆராய்ச்சிக்கு இன்றியமையாததொரு சாதனமாய் விளங்குகிறது. இந்நூலைப்போன்றே இந்நாட்டு இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரலாற்றை அடையாளம் காட்ட பெர்கியுசன்ஸ் டயறி பெரும் பங்களிப்பை இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் வழங்கும் என்பதில் ஐயமில்லை.

இந்நூல் 1595 பக்கங்களில் 48 விடயங்களை விபரமாக கொண்டுள்ளது. இப்பக்கங்களுக்கு மேலதிகமாக 500 பக்கங்களில் ஏனைய விடயங்களை உள்வாங்கியுள்ள ஆங்கில நூலாகும். இந்நாட்டின் இந்தியத்தமிழர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாகும்.

பெர்கியூசன் யார்?

இவர் பெர்கியூசன் சிலோன் டிரக்டரி ஆரம்ப கர்த்தா. அத்துடன் ஒரு எழுத்தாளர். இலங்கையில் ஆங்கிலேயர் கால்பதித்தது முதல் அனைத்து விபரங்களையும் சேகரித்தவர்.

1834 ஆம் ஆண்டு வாரப்பத்திரிகையாக வெளிவந்த ஒப்சேவர் வார இதழை 1836 ஆம் ஆண்டு 120 பவுண்களுக்கு டாக்டர் கிறிஸ்டோபர் எலியட் வாங்கினார். கொழும்பு ஒப்சேவர் என மாறிய இப்பத்திரிகையில் 24 ஆண்டுகள் அதன் அதிபராக விளங்கிய அவர், பின்னர் 1846 இல் தனது உதவி ஆசிரியராக கடமையாற்றிய அலிஸ்டர் மெக்கன்ஸி பெர்கியூசனுக்கு விற்றார். 1867 இல் கொழும்பு ஒப்சேர்வர் சிலோன் ஒப்சேவராக மாறியது. 1876 வரை பெர்கியுசன் இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இதன் மூலம் இலங்கை அச்சு ஊடகத்தில் ஐம்பது ஆண்டுகள் பத்திரிகை ஆசிரியராகவும் பத்திராதிபராகவும் இருந்த சிறப்பை பெர்கியூசன் பெறுகிறார்.

இவர் 01.06.1881 இல், த ட்ரொபிகல் அக்ரிகல்சரிஸ்ட் என்ற மாதாந்த சஞ்சிகையையும் வெளியிட்டவர். 55வருடங்களுக்கு அதிகமாக எழுதி வந்த ஏ.எம். பெர்கியூசன் 1815 இல் பிறந்தவர். தனது 77 ஆவது வயதில் 1892 இல் இயற்கை எய்தினார். இவரின் மரணத்தின் பின்னர் பெர்கியூசன் டயறியை இவரின் மகனான ஜே.டப்ளியூவ் பெர்கியூசன் தொகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெர்கியூசன் பெயரில் கொழும்பு மட்டக்குளியில் பிரதான வீதி ஒன்றுக்கு பெர்க்கியூசன் வீதி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

1929 இல் பெருந்தோட்டங்கள்

1929 இல் ஜுன் மாதம் பெருந்தோட்டங்களில் மொத்தமாக 7 இலட்சத்து 39 ஆயிரத்து 316 பேர் வாழ்ந்துள்ளனர். இதில் ஆண்கள் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 603 பேரும், பெண்கள் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 304 பேரும், சிறுவர்கள் 2 இலட்சத்து 58 ஆயிரத்து 409 பேருமாக பதிவாகி உள்ளனர்.

கொழும்பு (அவிசாவளை தொகுதி), கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம் (1011), சிலாபம் (1096), அநுராதபுரம் (90), பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய பிரதேச தேயிலை தென்னை, றப்பர் பெருந்தோட்டங்களில் இந்தியத்தமிழர்கள் பணி புரிந்துள்ளார்கள். நுவரெலியா மாவட்டத்தில் 295 தேயிலை தோட்டங்கள் இருந்துள்ளன.

1929 இல் 4 இலட்சத்து 25 ஆயிரத்து 626 ஏக்கரில் தேயிலையும், 3 இலட்சத்து 25 ஆயிரத்து 845 ஏக்கரில் இறப்பரும், 8 ஆயிரத்து 741 ஏக்கரில் கொக்கோவும், 3 ஆயிரத்து 784 ஏக்கர் நிலத்தில் ஏலக்காய் பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பில்–1911 இல் கொழும்பில் இந்தியத் தமிழர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 558 ஆக இருந்துள்ளது. 1921 இல் இத்தொகை 39 ஆயிரத்து 560 ஆக வளர்ச்சி பெற்றுள்ளது.

அரசியல் தகவல்– 27.09.1924 இல் இடம்பெற்ற முதலாவது சட்ட சபைக்கான தேர்தலில் 29ஆவது தொகுதியான இந்தியா தொகுதியில் இக்னேஷயஸ் சேவியர் பெரெய்ரா 5141 வாக்குகளைப்பெற்று சட்ட சபைக்கு தெரிவானார். இவரின் பெயரில் ஐ.எக்ஸ்.பெரெய்ரா வீதி கொழும்பு  11 இல் இன்றும் உள்ளது. இவரே சட்ட சபைக்கு தெரிவான முதலாவது இந்தியத்தமிழராவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த பரதர் குலத்தவராவார்.

சட்ட சபைக்கு 08.12.1925 இல் தஞ்சாவூரைச் சேர்ந்த கோதண்டராம் நடேசய்யர் தெரிவானார்.

முதலாவது சட்ட சபைக்குத் தெரிவான இரண்டாவது இந்தியத்தமிழரே கோ. நடேசய்யர் ஆவார். இவரின் பெயரை பெர்கியூசன் Natesa Aiyer எனக் குறிப்பிட்டுள்ளது. மற்றுமொரு ஆங்கில நூல் இவரின் பெயரை Natesa iyer என தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா மெத்திவரன பிரதிபல சங்கராவய போன்ற சகோதர சிங்கள மொழி நூல்கள் என். ஐயர் என தெரிவிக்கின்றன. இவ்வாறான சிதைவுகள் ஒரு தேசிய இனத்தின் அரசியல் தலைமையை சேதாரப்படுத்தலாகும்.

சமாதான நீதவான்கள்– நுவரெலியா, ஹட்டன் பிரதேசத்துக்கு 1929 இல் இருவர் சமாதான நீதவான்களாக ஆங்கிலேயரால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். ஜே. ஏ.ஐயாதுரை (ஹட்டன் உள்ளூராட்சி சபை உறுப்பினர்) எஸ்.டப்ளியூவ்.ஸ்ரீ குணநாயகம் (உள்ளூராட்சி சுகாதார சீர்படுத்தல் சபை உறுப்பினர்) ஆகிய இருவருமேயாவர்.

பாடசாலைகள்– மத்திய மாகாணத்தில் 1929 இல் 610 பாடசாலைகள் பிரிட்டிஷ் ஆட்சியினரால் நிறுவப்பட்டிருந்தன. இப்பாடசாலைகளில் 65 ஆயிரத்து 814 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.

தபால் நிலையங்கள்

இந்தியாவின் தமிழ் கிராமங்களில் இருந்து இங்கு தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு சொந்தக்கிராமங்களிலிருந்து உறவினர்களால் அனுப்பப்படும் கடிதங்கள் விரைவாக அவர்களிடம் சென்றடையும் வகையில் பல தோட்டங்களிலும் மொத்தமாக 802 தபால் நிலையங்கள் (Post Station) ஆங்கிலேயரால் ஸ்தாபிக்கப்பட்டன.

தபால் (Post office) அலுவலகங்களிலிருந்து தோட்டக்கம்பனிகளால் தோட்ட தபால் நிலையங்களுக்கு எடுத்துவரப்பட்ட கடிதங்களை தபால் கங்காணி உரியவர்களுக்கு பாரம் கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் இலங்கையில் வாழும் உறவுகளுடன் தமிழக கிராமங்களில் உள்ளோர் கடிதம், தந்திகள் மூலமாக தகவல்களை பரிமாற்றம் மேற்கொள்ள இலகுவாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சென்னை, மதுரை, மலபார் (கேரளா), நீலகிரி கிழக்கு, ஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், தென்னாற்காடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாங்கூர், திருச்சிராபள்ளி ஆகிய மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தபால் நிலையங்களை ஸ்தாபித்ததாக தகவல்களை வழங்கியுள்ளார் பெர்கியூசன்.

வங்கிகள்

தோட்டக்கம்பெனிகள் தங்களின் உள்நாட்டு வெளிநாட்டு பண பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டங்கள் அதிகம் உள்வாங்கப்பட்ட பிரதேசத்தின் பிரதான நகரங்களில் ஆங்கிலேயர் வங்கிகளை ஸ்தாபித்தனர். இதில் இந்திய வங்கிகள் பிரதான இடத்தைப் பெற்றன.

கண்டியில் தமெர்ச்சன்டைல் பேங் ஒப் இந்தியா லிமிடெட், நெஷனல் பேங் ஒப் இந்தியா, நுவரெலியாவில் பேங் ஒப் இந்தியா லிமிடெட், நெஷனல் பேங் ஒப் இந்தியா, ஹட்டனில் ஹட்டன் பேங் அன்ட் ஏஜென்சிகம்பனி, பதுளையில் பதுளை பேங் ஒப் ஊவா லிமிடெட் ஆகிய வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டன.

சட்டங்கள்

இந்திய தொழிலாளர்களின் வருகை பெருக்கத்தின் காரணமாக பல புதிய சட்டங்களை ஆங்கிலேயர் இந்நாட்டில் அறிமுகம் செய்தனர். புதிய தொழிலாளர் சட்டம் இலக்கம் 01.–1923கொண்டு வரப்பட்டது. இந்திய தொழிலாளர்கள் குடியேற்றச்சட்டம், தலைமன்னார் பியர் பிரிவு–  25 என பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

இறுதியில் இச்சட்ட மூலங்களே 1948 இல் ஐ.தே.கட்சி அரசினால் நிறைவேற்றப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 18 ஆவது இலக்க பிரஜாவுரிமைச்சட்டம், 1948 இல் 20 ஆவது இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம், 1949 இன் 03 ஆம் இலக்க இந்திய–பாகிஸ்தான் சட்டம், 30.10.1964 சிறிமாவோ– சாஸ்திரி ஒப்பந்தம், 27.01.1974 இன் சிறிமாவோ – இந்தியா ஒப்பந்தம் என்பன இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரஜா உரிமையை பறிக்கவும் இந்நாட்டின் பேரினவாதிகளுக்கு கை கொடுத்தன.

ரயில் போக்குவரத்து 

பெருந்தோட்ட தொழிலாளர்களான தென்னிந்தியர்களின் வருகையின் காரணமாகவும் தேயிலை கைத்தொழிலின் வளர்ச்சியின் காராணமாகவும் இந்நாட்டில் ஆங்கிலேயரால் ரயில் பாதைகள் ஸ்தாபிக்கப்பட்டன. 02.10.1865 இல் கோட்டை அம்பேபுஸ்ச வரைவிலான ரயில் சேவை 01.11.1866 இல் பொல்காவல வரை நீடிக்கப்பட்டது. பின்னர் 01.08.1867 இல் கண்டி வரையும் பின்னர் 04.06.1884 இல் ஹற்றன் வரையும் வளர்ந்தது. இச்சேவை 03.08.1894 இல் பண்டாரவளை வரையும் பின்னர் 05.04.1924 இல் பதுளை வரையும் நீடித்தது. கண்டி மாத்தளை ரயில் சேவை 04.10.1889 இல் ஆரம்பிக்கப்பட்டது.

பொல்காவலை  தலைமன்னார் பியர் வரையிலான ரயில் சேவை 24.02.1914 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதை INDO CEYLON RUTE எனப்பட்டது. இவ்வாறு இந்நாட்டில் ரயில் சேவை வளர்ச்சி பெற தேயிலையின் ஏற்றுமதியே காரணமாகும்.

தேயிலை பயிர்ச்செய்கை

1867 இல் 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட தேயிலை 1876 இல் 1750 ஏக்கர் 1900 இல் 38400 ஏக்கராக மாறியது.

1929 இல் 474000 ஏக்கராக உயர்வை எட்டியது.

தேயிலை ஏற்றுமதி 

முதன் முதலாக தேயிலை ஏற்றுமதி 1873 இல் 23 இறாத்தலாக ஆரம்பித்துள்ளது. 1879 இல் இதன் வளர்ச்சி 95 ஆயிரத்து 969 இறத்தலாக மாற்றம் பெற்றது. 1896 இல் 110095, 194 இறாத்தல் 1929 இல் 251588012இறாத்தல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய தமிழர்களின் உழைப்பின் பெறுமதியை அடையாளம் காணலாம்.

அன்று பிரிட்டிஷ், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, நியூ போலந்து, அமெரிக்கா, ஆபிரிக்கா, எகிப்து, ஈராக், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்நாட்டின் உற்பத்தியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தோட்ட உரிமையாளர்கள்

பர்கியூசன்ஸ் டயறி தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் பெருந்தோட்டங்களின் உரிமையாளர்களாக 96 வீதம் ஐரோப்பியர்களினதும் ஐரோப்பிய கம்பனிகளிடமும் இருந்துள்ளது.

மலையக பெருந்தோட்டங்களின் உரிமையாளர் பெயர், நிர்வாகி, நிலப்பரப்பு உள்ளிட்ட பல விபரங்கள் இந்நூலில் அறியக்கிடைக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயாவிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள சமரிவள்ளி தோட்டம் (CAR FAX) திருமதி ஏ.ஆர்.சிவகாமு அம்மாள் என்ற பெண்மணியும் ஏ.ஆர்.சுப்பையா ரெட்டி ஆகியோர் உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இந்திய வம்சாவளித்தமிழரான திருமதி ஏ.ஆர். சிவகாமு அம்பாளே முதலாவது தமிழ் தோட்ட உரிமையாளர் என தெரிய வருகிறது. இத்தோட்டத்தின் நிர்வாகியாக (துரையாக) என். சுப்புரெட்டி கடமையாற்றியுள்ளார்.

299 எக்கர் நிலப்பரப்பைக் கொண்ட சமரிவள்ளி தோட்டத்தில் 285 ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. டிக்கோயாவிற்கு 1927 ஆம் ஆண்டு நவம்பரில் மகாத்மா காந்தி விஜயம் செய்த தருணத்தில் இத்தோட்டத்திற்கும் விஜயம் செய்து தோட்டத்து துரையான என். சுப்புரெட்டியின் பங்களாவில் தங்கியதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதே போன்று ஹட்டனுக்கு அருகில் உள்ள சின்னதொப்பித்தோட்டம் ( 269 ஏக்கர்) உரிமையாக இருந்துள்ளது. இரு தோட்ட உரிமையாளர்களும் சகோதரர்களாவர்.

இவர்களைத் தவிர நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டங்கள் சிலோன் இந்தியா தோட்ட பயிர்ச் செய்கை சங்கத்திற்கும் வெள்ளைக்கார கம்பனிகளுக்கும் சொந்தமாக இருந்துள்ளது. தொலஸ்பாகை அம்புகென தோட்டம் கிட்ணன் கங்காணி உரிமையாளராக இருக்க எம்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தோட்டத்துரையாக கடமை புரிந்துள்ளார்.

தொலஸ்பாகை தும்பளை அப்புத்தளை ஹேவா ஹெட்ட பகுதிகளிலேயே இந்தியத்தமிழர்கள் தோட்ட உரிமையாளர்களாக விரல் விட்டு எண்ணும் வகையில் இருந்துள்ளனர்.

தமிழ் பெயர்கள்

தோட்டங்களில் தமிழ், சிங்கள, ஆங்கில பெயர்களை தெளிவாக பர்கியுசன் இந்நூலில் வழங்கியுள்ளார். டிக்கோயாவை திக்கோசி பக்கம் என்றும் தலவாக்கலையை பிள்ளாகொலை எனவும் அம்பகமுவ அம்புகாமம் என்ற தமிழ் பெயர்களில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள இவர் இதுவே பூர்வீக பெயர் எனவும் தெரிவித்துள்ளார்.

பல தோட்டங்களின் தமிழ் பெயர்களை இந்நூலில் பார்வையிடுகையில் எமது பாட்டனும் பூட்டனும் தமிழை வளர்த்துள்ளனர் என்பது புரியும். ஒரு இனத்தின் அடையாளத்தை தாங்கள் வளர்ந்த வாழ்ந்த நிலத்தில் பதிவு செய்துள்ளனர். இதை இன்றைய சமுதாயம் இழந்து விட்டது. மொழியும் பண்பாடும் எவ்வளவு முக்கியமானதோ அதுவே எமது இனத்திற்கான அடையாளம் என்பதை எமக்கு சொல்லியே முன்னோர் சென்றுள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும்.

தங்கப்பூ, தாமரைவள்ளி, கிழவன் தோட்டம், புது தோட்டம், கிழவி தோட்டம், சீதா தோட்டம், முத்து லட்சுமி தோட்டம், செட்டி தோட்டம், வாழை மலை, சின்ன எலிப்படை, மீனா தோட்டம், நடுத்தோட்டம், கிழங்கு மலை, மண்வெட்டி, புதுக்காடு, மிளகு சேனை இவ்வாறு பல நூற்றுகணக்கான தூய தமிழ் பெயர்களை தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோட்டப்பெயர்களுக்கும் பின்னால் பெரும் வரலாறு உள்ளதை நாம் மறந்து விட முடியாது. பர்குசன் அனைத்து தோட்டங்களின் தமிழ் பெயர்களை இந்நூலில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் எண்ணிக்கை

1930 இன் மே மாதத்தில் இந்தியத்தமிழர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 92 ஆயிரத்து 735 ஆக பதிவாகி உள்ளது. இதேநேரம் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 17 ஆயிரத்து 324 ஆக பதிவாகி உள்ளது.

மகாராணிக்கு இலங்கைத்தேயிலை

1896 இன் ஏப்ரல் மாதம் இங்கிலாந்து மகாராணிக்கு இலங்கை தேயிலையை அனுப்புவதற்காக ஒரு தொகை தேயிலையை இறாத்தல் 5 ரூபாய் 10 சதம் முதல் ஒரு ரூபாய் 55 சதம் வரையிலான விலைகளில் ஜோசப் கே. லிப்டன் பண்டார எலிய தோட்டத்தில் கொள்முதல் செய்துள்ளார்.

இவரே இந்நாட்டின் தேயிலை கைத்தொழிலுக்கு கைகொடுத்தவர். லிப்டன் தோட்டக்கம்பெனி உரிமையாளர் இவர். இவரின் பெயரில் கொழும்பு  07 சுற்றுவட்டம் லிப்டன் சுற்று வட்டம். இச்சுற்று வட்டத்தின் அருகிலேயே இவரின் லிப்டன் டீ கம்பெனி 1896 இல் இயங்கி உள்ளது.

முகாம்

தென்னிந்திய தொழிலாளர்கள் கொழும்புக்கு வருகை தந்ததும் இவர்கள் தங்குவதற்கு வசதியாக இராகலையில் 18970810 இல் கூலி முகாம் என்ற பெயரில் தங்கு முகாம் திறக்கப்பட்டது எனவும் தகவல்களை வழங்குகிறார் பர்கியுசன்.

இவ்வாறான பல தகவல்களை வழங்கும் பர்கியுசன் சிலோன் டிரக்டரி 1930 காலத்திலும் அழியாத பொக்கிஷ நூலாகும். இவ்வாறான பல ஆங்கில நூல்கள் வெள்ளைக்காரர்களின் தோட்ட நிர்வாகம் மாறியதன் பின்னர் கவனிப்பாரற்று பழையர் பேப்பர் கடைக்கு விற்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates