பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பள விவகாரம் இம்மாதத்துடன்
ஒன்பது மாதங்களை கடந்துள்ளது. ஏனைய தொழிற்றுறையைப் பொறுத்தவரை மூன்று மாதத்தில்
முடிவு பெற்றிருக்கும்.
ஆனால், இந்த மலையகத் தலைமைகளது கையாலாகாத்தனத்தால் அப்பாவித்
தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 'சும்மா கிடந்த
சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி' போல் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுத்தருவதாக
உறுதியளித்த தலைமைகள், இன்று மௌனமாகி மாற்றுத்தலைமைகளை விமர்சித்துக்
கொண்டும் எந்தவொரு தொழிலாளியும் பசி பட்டினியுடனோ, எந்தவொரு பாடசாலைப்
பிள்ளையும் தமது கல்வி தடைப்பட்டுப் போனதாகவோ இதுவரை இவர்களிடம் முறையிடவில்லையென
ஊடகங்களில் வேறு பேட்டியளிக்கின்றனர். இது நொந்து போயுள்ள தொழிலாளரை மேலும் புண்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் மலையக மக்களின் பாதுகாவலன் என்று
கூறி செயற்பட்ட தலைமைகள், ஆயிரம் ரூபா என்ற இலக்கை எட்ட முடியாது
போனாலும் கம்பனிகள் இணங்கிய எழுநூற்றி இருபது ரூபாவுக்கு இணங்கி கையொப்பமிட்டிருந்தாலும்
கூட இம்மக்கள் சற்று நிம்மதியாகவேனும் தொழில் புரிவர்.
இதில் தலைமைகளின் கௌரவப்பிரச்சினை வேறு இழுபட்டுக்கொண்டிருக்கின்றது.
எங்கே தாம் மேற்படி தொகைக்கு கையொப்பமிட்டு விட்டால் மாற்றுத்தலைமைகள் ஊதிப்பெருக்கி
தமது இருப்புக்கு ஆபத்தாகிவிடுமோ என்ற பயம் வேறு.
தற்போதுள்ள நிலைவரப்படி தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளரை முடியுமான
வரை பழிவாங்கும் நிலையிலேயே செயல்படுகின்றன.
அநேகமான கணக்கப்பிள்ளைகள் பென் சன் பெற்றவர்களாகவும் தோட்டத்தில்
ஒரு காலையும் தனியார்துறை தோட்டத்தில் ஒரு காலையும் வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றனர்.
தோட்டத்துரைமாரோ தொழில் செய்யும் பெண் பிள்ளைகளை கண்டியிலோ
கொழும்பிலோ தமது பங்களாக்களில் வேலைக்கு அமர்த்தி தோட்டத்தில் செக்ரோலில் பேர்
போட்டு சம்பளம் வழங்குவதெல்லாம் யாருடைய இலாப நட்டக்கணக்கில் பதிவாகின்றன?
பாவப்பட்ட பெண் தொழிலாளர்களினால்தான் தோட்டங்கள் இயங்குகின்றன.
ஒரு சில தொழிற்சங்க தலைமைகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செய்கின்ற சேவையை கூட தாம் பலம்
வாய்ந்ததோர் மக்கள் எம்பக்கம் என்று தம்பட்டம் அடித் துக் கொண்டிருப்போர் அடங்கிப்
போயிருப்பது ஏன்?
இது டிசம்பர் மாதம். தத்தமது தொழிற்சங்கத்திற்கு ஆள்சேர்க்கும்
காலம். என்னென்ன பொய் வாக்குறுதிகளுடன் இம் மக்கள் முன் வந்து நிற்கப்போகின்றனரோ
தெரியாது?
ஆனால் இம்முறை தொழிற்சங்க அங்கத்துவத்தை நிறுத்தி விடுவதென்ற
ஓர் உறுதிப்பாட்டுடன் இம்மக்கள் உள்ளனர் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
இனிமேலும் இம்மக்களை வைத்து தொழிற்சங்கத் தலைமைகள் தமது சட்டை
ப்பைகளை நிரப்பவோ அரசியல் நடத்தவோ எண்ணுவார்களேயானால் அது கனவாகவே மட்டும்
அமையும். ஏனெனில், மலையக சமூகம் விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாறி
வருவது தலைமைகளின் இருப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
'ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி. ஆற்றைக்
கடந்த பின் நீ யாரோ நான் யாரோ' என்ற நிலையை மாற்றி இம்மக்க ளின் எல்லா
விடயங்களுக்கும் முன்னுரி மையளித்து ஆக்கபூர்வமான செயற்பாடு களை முன்னெடுக்கும்
எந்தத் தலைமை களையும் மக்கள் நிராகரிக்கார். இதுதான் இன்றைய கசப்பான உண்மை.
– கிளன் அல்பின். என்.பி. விஜயன்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...