மலையகத் தோட்டங்களில் 'லயன்' குடியிருப்புகளில் கூரைத்தகடுகளுக்கான கோரிக்கை அதிகளவில் உள்ளது. அரசியல்வாதிகளிடம் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. எனினும் யாரிடமும் எவ்வித கோரிக்கையும் முன்வைக்காது 'டிஷ் எண்டனா' எனப்படும் வட்டத்தகடுகள் லயன் கூரைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்த கலாசாரமும் மலையக பாரம்பரிய கலைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
லிந்துல, அகரகந்தை தோட்டத்தில் பாரதி மொழி மன்றத்தின் வருடாந்த பரிசளிப்பும் கலை கலாசார நிகழ்ச்சிகளும் அண்மையில் நடைபெற்றது. பாரதி மொழி மன்றத்தின் தலைவர் கு.மோகன்ராஜின் தலைமையில் இடம் பெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத் தோட்டங்களில் பாரதி, வள்ளுவர், இளங்கோ என முன்னோர்கள் பெயரில் மன்றங்கள் அமைக்கப்பட்டு கலை கலாசார, நாடக முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்படுவதுண்டு. திருவிழாக்காலங்களில் ஒரு நாள் ஒதுக்கி இத்தகைய மன்றங்கள் தமது கலைகளை நிகழ்த்துவர். நாடகம் அதில் பிரதானமாக அமைந்தது. ஆனால் தற்போது அத்தகைய மன்றங்கள் யங்ஸ்டார், சுப்பர்ஸடார் என மாற்றம் பெற்றுள்ளதோடு கூரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வட்டத்தகடுகள் அழுமூஞ்சி தொலைக்காட்சித் தொடர்களை வீடுகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கின்றன. கூரைத்தகடுகளுக்காக அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கும் மக்கள் இந்த வட்டத்தகடுகளை எவ்வித கோரிக்கையும் இல்லாமல் கூரைகளில் பல ஆயிரம் செலவில் பொறுத்த பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். இது பாரம்பரியமாக மலையகத் தோட்டங்களில் இருந்த நிகழ்த்தும் கலைகள் அருகிச் செல்லவும் மேடை நாடகம் போன்ற செயற்பாடுகளில் இளைய தலைமுறையினர் ஈடுபட தடையாகவும் அமைந்துள்ளது. நாம் கவலைப்பட ஆயிரம் விடயங்கள் இருந்தும் .. நாடகத்தில் வரும் 'அபி' க்கு நாளை என்ன நடக்கப் போகிறது என்கிற கவலையே நம்மை ஆட்கொள்ள வைக்கும் நிலையை இந்த வட்டத்தகடுகள் ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த வட்டத்தகடுகள் குறித்த எச்சரிக்கை மலையக சமூகத்திற்கு அவசியமாகிறது.
இந்த கட்டத்திலேயே ஆகரகந்தை தோட்டத்தில் பாரதி பெயரில் மொழி சங்கமும் அதனையொட்டி கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. சமூகத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்த 'பாரதி' போன்ற ஆளுமைகளை வளரும் இளம் தலைமுறையினருக்கு நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. பாரதியின் போராட்ட குணம் நமது அடுத்த தலைமுறைக்கு அவசியமானது. இங்கே பாரதி வேடமிட்டிருந்த சிறுவனின் தலைப்பாகை முறையாக கட்டப்படாததினால் உங்கள் முன்னிலையில் அதனைத் திருத்தி கட்டிவிட்டேன். இப்போது பாருங்கள் அந்த சிறுவன் கம்பீரமாக தெரிகிறான். பாரதியின் ஒவ்வொரு செயற்பாடுகளும் கம்பீரமானவை. அவை ஒவ்வொன்றையும் நாம் நினைவு கூரவேண்டும். அதே போல மலையக சமூகத்தின் நமது முன்னோடிகளையும் நாம் நினைவு கூரவேண்டும்.அதனாலையே மலையகத்தில் அமைக்கப்படும் புதிய கிராமங்களுக்கு நமது முன்னோடி செயற்பாட்டாளர்களது பெயர்களை சூட்டி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
பாரதி மொழிச்சங்க உறுப்பினர்களின் கலை அரங்கேற்றமும், மேளக்கச்சேரியும் இடம்பெற்றதோடு பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவுச் சிற்பங்களும் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்வகுமார், சமாதான நீதிவான் ஜோதிவேலு மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
(கேதீஸ் - தலவாக்கலை)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...