நேர்காணல்: துரைசாமி நடராஜா
மலையக கல்வித்துறை தேசிய இலக்கினை அடைவதற்கு இன்னும் பல மைல்கற்களை எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் மலையகக் கல்வி அபிவிருத்தி கருதி விசேட சலுகைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு, மலையக கல்வி நிலைமைகள் குறித்து ஆராய்ந்து ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக மலையக கல்வி விசேட ஆணைக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தெரிவித்தார்.
வீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்செவ்வியின் முழு விபரமும் வருமாறு :
மலையக கல்வி வளர்ச்சிக்கும் தேசிய கல்வி வளர்ச்சிக்கும் இடையில் கால வேறுபாடும் இடைவெளியும் காணப்படுகின்றது.
மலையக கல்வி வளர்ச்சி என்பது சற்று முற்பட்ட காலத்திலேயே தொடங்கி இருக்கின்றது. 19 ஆம் நூற்றாண்டில் அவர்களின் கல்வி செயற்பாடுகள் வெற்றியளித்திருக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாடசாலைகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி இருந்தன. எமது கல்விச்செயற்பாடுகள் பின் நிலை கண்டிருந்த போதும், 19 ஆம் நூற்றாண்டில் தேசிய கல்வி வளர்ச்சி கண்டிருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என்றெல்லாம் 19ஆம் நூற்றாண்டில் நிலைமைகள் முன்னெடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இக்காலப்பகுதியில் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக காத்திரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
1905 ஆம் ஆண்டிற்கு பின்னரே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மலையகக் கல்வி என்பது தாமதித்து ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதனால் இன்றுவரை எமது மக்கள் ஏனைய சமூகங்களைக் காட்டிலும் பின்தங்கிய நிலைமையையே எதிர்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இலங்கையின் தேசிய கல்வி முறையை எட்டிப்பிடிக்க முடியாத வகையில் பாரிய இடைவெளி மலையகக் கல்வியில் காணப்படுகின்றது. வரலாற்றில் இது ஒரு மோசமான நிலைமையாகும். இது தொடர்பில் நான் பல உதாரணங்களையும் கூற முடியும்.
1942 ஆண்டு இலங்கையில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட போது மலையகத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதிருந்தது. க.பொ.த. உயர்தரம் பயில்வதற்கான வசதி வாய்ப்புக்கள் மலையக மாணவர்களுக்கு அப்போது இருக்கவில்லை. இது ஒரு பாரபட்சமான நிலைமை என்று கூட சொல்லலாம். இது எமக்கு ஒரு பாதிப்பாகும். வரலாற்று ரீதியாக பின்தங்கியிருப்பவர்கள் நீண்ட காலமாக பின்தங்கியே இருப்பார்கள். அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலைமையைப் போக்குவதற்கு விசேட சலுகைகள், உதவிகள் என்பனவற்றையும் அரசாங்கம் வழங்க முனைதல் வேண்டும். விசேட ஏற்பாடுகளின் மூலம் பின்தங்கியோர் முன்னேறுவதற்கு சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவில் பின்தங்கிய இனத்தவர்களாக கறுப்பினத்தவர்கள் இருந்த நிலையில் கல்வியில் விசேட சலுகைகளை அமெரிக்கா அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது. இந்தியாவை பொறுத்த வரையில் தலித் மக்களுக்கும் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. மலேசியாவிலுள்ள பின்தங்கிய சமூகத்தவர்களுக்கு கல்வி அபிவிருத்தியில் விசேட சலுகை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றமையும் தெரிந்த விடயமாகும். ஆனால், இலங்கையை பொறுத்த வரையில் பின்தங்கிய மலையக சமூகம் உள்ளிட்டவர்களுக்கு எத்தகைய விசேட சலுகைகளும் வழங்கப்படாமையானது விசனத்திற்குரிய ஒரு விடயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.
மலையக பரம்பரையினர் இந்நாட்டிற்கு வந்து சுமார் இருநூறு வருட காலம் ஓடி மறைந்து விட்டது. இந்த இரு நூறு வருட காலத்தில் அவர்கள் எந்த ஒரு துறையிலேனும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டிக்கின்றார்களா? என்பது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது. ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் மலையக மக்களின் பின்னடைவு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். பின்னடைவிற்கான காரணங்களை இனம் கண்டு பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும், இது நடந்தேறாத நிலையில் ஆட்சியில் இது காலவரை இருந்த அரசாங்கங்களின் அசமந்த போக்குகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனான நடவடிக்கைகள் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. மற்றொரு புறத்தில் அரசாங்கத்தினை வலியுறுத்தி உரிய தேவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியப்பாடு மலையக அரசியல்வாதிகளுக்கு இருந்தது.
எனினும், இந்த அரசியல்வாதிகளும் தனது நிலையை அல்லது வகிபாகத்தை உணர்ந்து செயற்படவில்லையா ? என்ற கேள்வியும் பிறக்கின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என்று சிந்திப்பது மட்டும் போதாது. ஏனைய பெரும்பான்மை அரசியல்வாதிகளும் அவர்களின் பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்குவது மிகவும் அவசியமாகும்.
மலையகத்தின் பல்துறை அபிவிருத்தி சார்ந்த ஆலோசனைகளையும் மலையக புத்தி ஜீவிகள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். மலையக தலைமைகள் இவர்களின் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும்.
கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி, பல்கலைக்கழக கல்வி என்று பல நிலைகள் உள்ளன. இந்நிலைகள் யாவற்றிலும் மலையக மாணவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய இன்னும் பல மைல்கற்களை எட்ட வேண்டியுள்ளது. வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் தொகையில் மலையக மாணவர்களின் தொகை குறைந்தது ஒரு ஆயிரத்து ஐநூறாக இருத்தல் வேண்டும். அது இல்லாவிட்டாலும் கூட ஒரு ஆயிரமாவது இருத்தல் வேண்டும். எனினும், இது சாத்தியப்படாத நிலையில் சுமார் இருநூறு மலையக மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர். இது குறித்து நாம் விசேட கவனத்தை செலுத்தி வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் மலையக மாணவர்களின் தொகையில் அதிகரிப்பினை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் அல்லது ஒரு சமூகத்தில் படித்தவர்களின் தொகை மேலதிகமாக இருப்பது சிறந்ததாகும். அபிவிருத்தி நடவடிக்கைகளை நாட்டில் மேற்கொள்ளும்போது படித்தவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் மேலதிகமாக உள்ள படித்தவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு பங்காற்ற முடியும். மலையக மக்கள் மத்தியிலும் படித்தவர்களின் தொகை மேலதிகமாக இருப்பது சிறந்தது.
இதனால் அரசாங்கம் சில நியமனங்களை எம்மவர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படும். சமூகத்தில் படித்தவர்களுக்கான தேவை இருக்கின்றது. இதனையும் நாம் முன்னிறுத்தி செயற்படுத்தல் வேண்டும்.
கல்வி நிலைமைகளை மலையகத்தில் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மலையக இளைஞர்கள் கல்வி நிலையில் முறையான நிலையினை கொண்டிருப்பதனால் தொழில் நிலையிலும் பின் தங்கியே காணப்படுகின்றனர். ஏனைய சமூகத்தினரைப்போலல்லாது குறைந்த வருமானத்தை தரக்கூடிய கீழ் மட்ட தொழில்களில் மலையக இளைஞர்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் விசனப்படுகின்றனர். கல்வித்துறையில் இவ்விளைஞர்கள் மேம்பட்டு விளங்குமிடத்து உயரிய கண்ணியமான தொழில்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எம்மவர்க்கும் உருவாகும் என்பது உண்மையாகும்.
நான் மிக நீண்ட காலமாக பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி இருக்கின்றேன். எனவே,இத்துறையில் எனக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. பல்கலைக்கழகங்களில் சுமார் ஐயாயிரத்து ஐநூறு கல்வித்துறை சார் விரிவுரையாளர்கள் உள்ளனர். இவர்களில் மலையகத்தை சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரேயாவர். இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். பணிப்பாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என்றெல்லாம் பார்க்கும்போது எம்மவர்கள் அவ்வளவாக இல்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
சமூக அந்தஸ்து, உயர்தர தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கல்வியின் ஊடாக வந்தடைகின்றன. எனவே, கல்வி அபிவிருத்தியில் எம்மவர்கள் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும். உயர் பதவிகள் எல்லா சமூகத்தவர் மத்தியிலும் பகிரப்படல் வேண்டும். இதற்கு மலையகத்தவர்களின் கல்வி மேம்பாடு அவசியமாகும்.
ஆணைக்குழுக்களின் ஏற்படுத்துகை இப்போது இடம்பெற்றுள்ளது .இவற்றில் மலையகத்தவர்கள் உரியவாறு உள்ளீர்க்கப்படவில்லை. கலாநிதி இராமனுஜம் தெரிவு செய்யப்பட்டிருப்பது மலையகத்தவர்களுக்கு கிடைத்த பெருமையாகும். இதேவேளை ,மேலும் பல மலையகத்தவர்களும் இவ்வாணைக்குழுக்களுக்கென்று நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும். மலையகத்தில் தகுதியானவர்கள் இருந்தும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருப்பது எந்தளவிற்கு நியாயமாகும்? மலையகத்தவர்கள் ஆணைக்குழுக்களில் இடம்பெறும்போதே தெளிவாக மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்பும் அல்லது பரிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நிலைமை ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. படித்தவர்களின் தொகை மலையகத்தில் உரியவாறு இல்லாத பட்சத்தில் நாம் எமது பிரதிநிதித்துவத்தினை சிலவேளைகளில் இழக்கும் வாய்ப்பும் கூட ஏற்படும்.
விஞ்ஞானக்கல்வி உள்ளிட்ட கல்வியின் சகல பட்டங்களிலும் மலையக சமூகம் பின்நிற்பது தெளிவாக சொல்லித்தெரிகின்றது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்கள் மலையகத்தில் இல்லாத நிலை பெரும் குறைபாடாகும் என்பதை மறப்பதற்கில்லை. விஞ்ஞான மற்றும் கணித பட்டதாரிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. வேறு இடங்களில் இருந்து இத்தகையோரை மலையகத்திற்கு அழைத்து வந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதிலும் நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. எனவே மலையகத்தில் விஞ்ஞான மற்றும் கணித பட்டதாரிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்குவதில் பூரண கவனம் செலுத்துதல் வேண்டும். விஞ்ஞான ஆசிரியர்கள் உரியவாறு மலையகத்தில் இல்லாததால் விஞ்ஞான பட்டதாரிகளையும் கணித ஆசிரியர்கள் உரியவாறு இல்லாமையால் கணித பட்டதாரிகளையும் உருவாக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.
மலையக கல்வி நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட வேண்டும். இது குறித்து ஆராயும் பொருட்டு மலையக கல்வி விசேட ஆணைக்குழு என்ற ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி நிலைமைகளை ஆராய்ந்து உரிய பரிகார நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் இக்குழு முன்வைக்க வேண்டும். நாமும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றோம். இதன் மூலம் மலையகத்தில் கல்வி அபிவிருத்தி ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...