Headlines News :
முகப்பு » , , , » பௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன? (1915 கண்டி கலகம் –13) - என்.சரவணன்

பௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன? (1915 கண்டி கலகம் –13) - என்.சரவணன்


19ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சியில் கேணல் ஒல்கொட் வெறும் சித்தாந்தவாதியாக இருக்கவில்லை. அவர் ஒரு செயல் வீரராக இருந்தார். அவரால் பலனடைந்த சிங்கள பௌத்த சக்திகள் அவர் தந்த ஏணியில் ஏறியபின் அவரையே எட்டியுதைத்து தள்ளியது என்றே வரலாற்று சான்றுகள் விளக்குகின்றன.

1915 கண்டிகலவரத்தின் போது சிங்கள பௌத்தரல்லாத பொன்னம்பலம் ராமநாதன் இங்கிலாந்து சென்று பேசி சிங்கள பௌத்தத் தலைவர்களை எப்படி விடுவித்தாரோ அதுபோல 1883 கலவரத்திலிருந்து சிங்கள பௌத்தர்களுக்கு நியாயம் கோரி அக்கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்கவும் அந்நிய அமெரிக்க ஆங்கிலேயரான ஒல்கொட் காரணமாக இருந்தார். பிற்காலத்தில் சிங்கள தலைவர்கள் ராமநாதனை எப்படி ஒரு துரோகியாக சித்திரித்தார்களோ அதுபோல ஒல்கொட்டும் அன்றே ஒரு துரோகியாக பிரசாரப்படுத்தப்பட்டார். சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு தூணாகவும், ஒரு ஞானத்தந்தையாகவும் (God father) இருந்த ஒல்கொட் இந்த துரோகங்களின் காரணமாக நாட்டை விட்டே சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வரவேயில்லை.

ஒல்கொட்டின் அத்தியாயம் முடிந்ததன் பின்னர் அநகாரிக்க தர்மபால வரும்வரும் வரையான இடைக்காலத்தில் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916 ). இவர்களை விட எச்.எஸ்.பெரேரா, சீ.டபிள்யு.லெட்பீடர் ஆகியோரும் முக்கியமானவர்கள்.

ஏ.ஈ.புல்ஜன்ஸ்
புல்ஜன்ஸ் பிறப்பால் பறங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அதனைக் கைவிட்டுவிட்டு பௌத்த மறுமலர்ச்சிக்கு உழைத்தவர். புல்ஜன்ஸ் குறித்து குமாரி ஜெயவர்த்தன எழுதிய “இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு” நூலில் பெருமளவு தகவல்களைத் தருகிறார்.

புலமைப்பரிசின் மூலம் இங்கிலாந்து சென்று கற்று பட்டம் பெற்று 1887 இல் திரும்பிய புல்ஜன்ஸ் ஒரு கல்விமானாகவும் சிந்தனையாளனாக நாடு திரும்பினார். இங்கிலாந்தில் இருந்தபோது பொதுவுடைமை, ஜனநாயகம், தாராளவாதம் போன்ற அரசியல் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கற்ற காலத்தில் கூட கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றினார். ஆனால் இலங்கை திரும்பிய அடுத்த வருடமே அவர் பௌத்த மதத்துக்கு மாறி பௌத்த மறுமலர்ச்சியில் பங்கெடுத்தார். தீவிர செயற்பாட்டாளருமானார். அவர் கல்விகற்ற கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி இந்த மத மாற்றத்தினால் ஆத்திரமுற்று கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்த அவரின் பெயரையும் நீக்கியது. இது தொடர்பாக எழுத்திலேயே அவர் அக்கல்லூரி நிர்வாகத்திடம் வினவியபோது அதற்கு எழுத்திலேயே கிடைத்த பதிலின் படி “இந்த பாடசாலை கிறிஸ்த்தவத்தை பேணிப் பாதுகாத்து, வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ஞானஸ்தானம் பெற்ற ஒருவர் எதிரியிடம் போய் சேர்ந்துள்ளார். துரோகிகளின் பெயரை இந்தப் பட்டியலில் இடப்போவதில்லை.” என்று பதிலளித்தனர்.

புல்ஜன்ஸ் 1888இல் “பௌத்தன்” (The Buddhist) எனும் பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்கில கிறிஸ்தவ மிஷனரிமார்களுடன் கருத்துப்போரைத் தொடர்ந்தார் என்றே கூறவேண்டும். அடுத்த ஆண்டு புறக்கோட்டையில் பௌத்த ஆண்கள் பாடசாலையின் அதிபராக அவர் நிமிக்கப்பட்டார். (பிற்காலத்தில் அது மருதானை ஆனந்தா கல்லூரியாக ஆனது). 1890இல் இந்த ஆனந்தா மகா வித்தியாலய திறப்புவிழாவின் போது கேணல் ஒல்கொட், புல்ஜன்ஸ், பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.  1890-1903 வரை பௌத்த பாடசாலைகளின் கல்வி முகாமையாளராக பணியாற்றினார்.

1892 இல் ஆங்கிலேய அரசு கால் மைலுக்குள் இயங்கும் பாடசாலைகளுக்கு அரச உதவிகள் கிடைக்காது என்று இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடினார். பௌத்த பாடசாலைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். புல்ஜன்ஸ் தொழிலாளர் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அதிகம் குரல்கொடுத்தவர். செயற்பட்டவர். இவரது மதமாற்றத்தினால் கோபமுற்றிருந்த கிறிஸ்தவ தரப்பின் மோசமான எதிர்ப்புக்கு ஆளானவர் என்கிறார் விக்டர் ஐவன் தனது நூலில்.

கொழும்பு தொழிலாளர்கள் மத்தியில் அவர் பெரும் நன்மதிப்பை பெற்றிருந்தார். புல்ஜன்ஸ் 25.03.1899 அன்று பௌத்த தலைமையகத்தில் வைத்து ஆற்றிய “நான் ஏன் பௌத்தன் ஆனேன்?” (Why I became a Buddhist) எனும் தலைப்பிலான ஆங்கில உரை பிரசித்திபெற்ற உரை. அந்த உரை ஒரு சிறு கை நூலாகவும் வெளிவந்தது. “நான் ஏன் முஸ்லிம்மாகவோ, ஒரு ஹிந்துவாகவோ மாறாமல் பௌத்தத்துக்கு மாறினேன்” என்று அவர் அந்த விரிவுரையில் குறிப்பிடுகிறார்.
“...கிறிஸ்தவத்தை பின்பற்றும் இங்கிலாந்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், சமூக சீரழிவுகளை நேரில் கண்டேன்... நடைமுறை கிறிஸ்தவம் போலியானது. ஏனென்றால் மிஷனரிகளையும், பைபிளையும் நாடுநாடாக அனுப்பப்படுகின்றபோது அவர்களுடன் பெருமளவு மதுபான போத்தல்களும், துப்பாக்கி ரவைகளும் அனுப்படுகின்றன. மதுபானம் சிந்தனையை அழிப்பதற்காக, ரவைகள் கொல்வதற்காக...” என்கிறார்.
புல்ஜன்ஸ் கிறிஸ்தவ பாடசாலை கல்வி முறைமையையும், மிஷனரிகளையும் கடுமையாக தனது பிரசாரங்களின் மூலமும், எழுத்தின் மூலமும் தாக்கினார்.

டபிள்யு.லெட்பீடர் (1854 -1934)
இங்கிலாந்தைச் சேர்ந்த லெட்பீடர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். கேணல் ஒல்கொட் 1886 இல் பௌத்த கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தபோது அவரோடு தோளோடு தோளாக பணியாற்றியவர் சீ.டபிள்யு.லெட்பீடர். 1883 இல் எலேனா ப்லாவட்ஸ்கியின் வழிகாட்டலில் பிரம்மஞான சங்கத்தில் (தியோசொப்பிகல் சொசைட்டி)  இணைந்து பிற் காலத்தில் பிரம்மஞான சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக ஆனார். 1884 இல் சென்னை அடையாறுக்கு வந்து பிரம்மஞான சங்கத்தில் பணியாற்றியவர். 1885இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பிரசாரங்களில் ஈடுபட்டார். குறிப்பாக பௌத்த கல்வி அறக்கட்டளைக்கு பணம் திரட்டுவதில் முன்னின்றார். இவர்களுடன் சிறியவனான டேவிட்டும் (பிற்காலத்தில் அநகாரிக்க தர்மபால) சில சந்தர்ப்பங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதுமட்டுமன்றி ஆரம்பகாலங்களில் ஒல்கொட், லெட்பீடர், புல்ஜன்ஸ் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர் டேவிட்.

ஆனந்தா மகா வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக ஆக்கப்பட்டார் லெட்பீடர் (1886 - 1890). இன்றும் பிரதான கட்டடத்துக்கு அவரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. பௌத்த மறுமலர்ச்சியில் பிரம்மஞான சங்கத்தின் பாத்திரம் முக்கியமானது என அறிந்தோம். அந்த பிரம்மஞான சங்கத்தின் தூண்களில் ஒருவர் லெட்பீடர். ஆனால் இறுதிக்காலத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துகொண்டார். ஆனால் அப்படிப்பட்ட எந்த குற்றச்சாட்டும் இறுதிவரை நிரூபிக்கப்படவில்லை.

எச்.எஸ்.பெரேரா (1868-1914)
பிறப்பால் ஒரு கிறிஸ்தவரான கண்டியை சேர்ந்த ஹேமச்சந்திர சேபால பெரேரா பௌத்தராக மதமாற்றம் செய்துகொண்டவர். பின்னர் எச்.எஸ்.பெரேரா பிரம்மஞான சங்கத்தினால் வெளியிடப்பட்டுவந்த “சரசவி சந்தரெச” பத்திரிகைக்கு ஆக்கங்களை எழுதுவதற்கு ஊடாக அச் சங்கத்தின் பணிகளில் இணைந்து கொண்டவர். 1893 இல் அவர் அப்பத்திரிகையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரின் கடும் உழைப்பின் காரணமாக அப்பத்திரிகையின் விநியோகம் பாரிய அளவு அதிகரித்ததன காரணமாக 1903 இல் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது வெளிவந்த Independent பத்திரிகைக்கு பதிலடி கொடுக்குமுகமாக “இலங்கை பௌத்தர்களின் குரல்” (The Sarasavi Sadaresa – organ of the Buddhists of Ceylon) என்று அப்பத்திரிகையின் முகப்பில் ஆங்கிலத்தில் இட்டார்.

6 வருடங்கள் அப்பதவி வகித்த நிலையில் பிரம்மஞான சங்கத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாக அவர் 16.11.1906 அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும ஒரே மாதத்தில் அவர் டீ.பீ.ஜயதிலக்கவின்  உதவியோடு டிசம்பர் 17 அன்று “தினமின” என்கிற தினசரி பத்திரிகையை ஆரம்பித்தார். சிங்கள பத்திரிகைத்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த பத்திரிகை பிரம்மஞான சங்கம் முன்னெடுத்த சிங்கள பௌத்த சித்தாந்தத்தை அப்படியே தொடர்ந்தது.

சரசவி சந்தரெச
எச்.எஸ்.பெரேரா சில வருடங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டுப் போனார்.  இதனை தொடர்ந்து நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி ஒரு பத்திரிகையின் இருப்பை உணர்ந்த டீ.பீ.ஜயதிலக்க இப்பத்திரிகையை கொள்வனவு செய்யும் படி டீ.ஆர்.விஜயவர்தனாவை கேட்டுகொண்டதைத் தொடர்ந்து எச்.எஸ்.பெரேராவிடமிருந்து அது வாங்கப்பட்டது. அதுவே இன்றும் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

இதே காலத்தில் வெளியான “சிங்கள பௌத்தயா” எனும் சிங்கள பௌத்த இனவாத பத்திரிகையின் ஆசிரியராக ஆரம்பத்தில் செயல்பட்டவர் எச்.எஸ்.பெரேராவின் சிஷ்யரான பியதாச சிறிசேன. அநகாரிக்க தர்மபால அதனை மேலும் செழுமைபடுத்தும் பொறுப்பை எச்.எஸ்.பெரேராவிடம் கொடுக்கும்படி கேட்டிருந்தார். பிற்காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையை தலைமை ஆசிரியராக நெடுங்காலமாக நடத்தியவர் அநகாரிக்க தர்மபால. அக்காலத்தில் அப்பத்திரிகையே மிக மோசமான இனவாத பத்திரிகையாக வெளிவந்தது. இப்பத்திரிகை 1915 கண்டி கலவரத்துக்கு காரணங்களில் ஒன்றாக ஆங்கில அரசினால் குற்றம்சாட்டப்பட்டு அநகாரிக்க தர்மபால வீட்டுச் சிறையில் சில வருடங்கள் வைக்கப்பட்டிருந்தது பற்றி பின்னர் முழுமையாக தெரிந்துகொள்வோம்.

 (தொடரும்)

நன்றி - தினக்குரல்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  1. ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
  2. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  3. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  4. මෛත‍්‍රීට වැරදුණේ කොතැනද? - වික්ටර් අයිවන් (Rawaya – 12.07.2015)
  5. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  6. In Defense of Dharma: Just-War Ideology in Buddhist Sri Lanka (Routledge Critical Studies in Buddhism) - Tessa J. Bartholomeusz - Psychology Press, 2002
  7. Olcott oration - The ideal of ananda, sanjiva senanayake 22.11.2014
  8. "Why I Became a Buddhist?" A Lecture Delivered by the Late Mr. A.E. Buultjens, BA (Cantab.) in 1899. Compiled, printed and published by CA. Wijesekera, 1984
  9. Theosophy and its students. By MBS. Besant. “Borderland:” a quarterly review and INDEX. Vol. I. JULY, 1893.
  10. ප්‍රබල බෞද්ධ මහජන මතයක් ගොඩනැඟූ “සරසවිසඳරැස” නන්දික බැද්දේගම , දිනමිණ, ලේක්හවුස්, 26.05.2014
  11. එච්. එස්. පෙරේරා සොයා යෑම - සී. දොඩාවත්ත, දිනමිණ, ලේක්හවුස්, 2013 Dec 11,18, 21, 24
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates