வரவு செலவு திட்டத்தில் தோட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 300 மில்லியன் மதிப்பீட்டுத் தொகை உரிய நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டு தோட்ட மட்டத்தில் இயங்கக் கூடிய தோட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சுக்குக் கீழாக கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழில் அமைச்சினதும் சுகாதார அமைச்சினதும் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
1972ஆம் ஆண்டு தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டதோடு தோட்டப்புற கல்வித்துறை அரச துறைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று அனைத்து தோட்ட பாடசாலைகளும் அரச பாடசாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதேபோல அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரச வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக இன்றும் கூட தோட்டப்புற வைத்தியசாலைகள் தோட்ட முகாமைத்தவத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளாக இருப்பது துரதிஸ்டவசமானது.
ஒரு சமூக குழுமத்தை அவர்களது சுகாதார நிலைமைகளை நாங்கள் தனியார் வசம் ஒப்படைத்திருப்பது எந்த வகையில் நியாயமானதாகும். தேசிய நீரோட்டத்திற்குள் தேசிய சுகாதாரத்திற்குள் இந்த மக்கள் உள்வாங்கப்படாத தொடர்ச்சியான நிலையே இங்கு காணப்படுகின்றது.
நோயாளியொருவருக்கு அம்பியூலன்ஸ் தேவையா? இல்லையா? என்பதை தீர்மானிப்பவராக தோட்டத்தின் முகாமையாளர் இருக்கின்றார். ஒரு தோட்டத்தின் வைத்தியராக இருக்கக் கூடிய EMA எனப்படுகின்ற Estate Medical Assistants என்பவர்களுக்கு சம்பளம் வழங்குபவர்கள் இந்த தனியார் கம்பனிகள். எனவே இவர்கள் தொழிலாளர்கள் மீது எந்தளவு தேசிய நலனோடு அக்கறையுடன் செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எங்களுக்குள் வருகின்றது.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார பிரதியமைச்சராக இருந்த காலத்தில் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்க வைத்தியசாலைகளாக மாற்றும் நிகழச்சித்திட்டத்தை முன்வைத்தார் . அதன் கீழ் சுமார் 30 வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகளாக மாற்றம் பெற்றன. ஆனால் அந்த திட்டம் முழுமையாக இடமபெறவில்லை.
சுகாதார அமைச்சுக்குக் கீழாக Estate and Urban Medical Unit எனப்படுகின்ற பகுதி ஒன்று இருக்கின்றது. இந்த பகுதிக்கு கீழாக தோட்ட வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகளாக திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட வேண்டும். வரவு செலவு திட்டத்தில் தோட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு 300மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டுத் தொகை உரிய நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டு தோட்ட மட்டத்தில் இருக்கக் கூடிய தோட்ட வைத்தியசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு அரச வைத்திய முறைமைக்குக் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
அதே நேரம் இதுவரைக்காலமும் அந்த மக்களுக்கு சேவையாற்றிய EMA எனப்படுகின்ற தோட்டத்துறை சார்ந்த வைத்தியர்களின் எதிர்கால வாழ்வுரிமை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட வகையிலே அவர்களது எதிர்கால வாழ்வு உள்ளடங்கப்பட்டு MBBS தரத்திலான வைத்தியர்களை தோட்ட வைத்தியசாலைக்கு நியமித்து தேவையான மருந்துகளையும் அரச வைத்தியத்துறையினூடாக அவர்களுக்கு வழங்கி தோட்டபகுதி மக்களையும் தேசிய சுhதார முறைமைக்குள் கொண்டு வரநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...