Headlines News :
முகப்பு » , » தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணவேண்டும் - பெ.முத்துலிங்கம்

தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணவேண்டும் - பெ.முத்துலிங்கம்



கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை முடிவின்றி தொடர்கின்றது. சம்பள பேச்சுவார்த்தையில் பிரதானபங்கு வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாம் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையிலிருந்து கீழிறங்காது அதனையே முன்னிறுத்தி வந்ததுடன், அதனை ஏனைய இரு தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் வலியுறுத்தி வந்தன.
மறுபுறம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என ஆரம்ப முதலே முதலாளிமார் சம்மேளனம் கூறிவருகின்றது.

ஈற்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளது. மறுபுறம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முனைந்தபோதிலும் அதுவும் முடங்கியுள்ளது. அமைச்சர்கள் இருவரும் பிரதமருடன் பேசித் தீர்வுக்கு வந்தாலும் அதனை இ.தொ.கா. ஏற்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதேவேளை, அரசாங்கத்துடன் இல்லாத ஆறுமுகன் தொண்டமான் எம்.பி., அமைச்சர்களாக இருக்கும் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் பெற்றுத் தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகமே. தோட்டக் கம்பனிகளின் பிரச்சினை ஒரு புறமிருக்க மலையகத் தலைமைகளின் முரண்நிலைகளும் சம்பள உயர்வுக்கு இன்னுமொரு பாரிய தடைக்கல்லாக எழுந்துள்ளது. இதனால் இன்றைய சம்பளப் பிரச்சினை இன்னும் சில காலங்களுக்குத் தொடரலாம் என்பது கண்கூடு.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கேற்ப வாழ்வதற்கான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது. .

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைய நிலையில் நியாயமான கோரிக்கையாக காணப்பட்டாலும் அது அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் விலைவாசிக்கு நிகரானதாக அமையாது. எனவே, ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு முறை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கப்படும் சிறிய சம்பள அதிகரிப்பானது ஒருபோதும் தோட்டத்தொழிலாளாகளின்; குடும்பங்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கு போதியதானதாக அமையாது. எனவே இவ்யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு மாற்று உபாயங்களை இப்போதே அடையாளம் கண்டு அமுல்படுத்த முனைவது காலத்தின் தேவையாகத் தோன்றியுள்ளது.

இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நிவாரணமாக தோட்டக்கம்பனிகளுக்கு கடன் உதவியை வழங்கினாலும் முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்வராது. எனவே, ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த சம்பள அதிகரிப்பிற்கே தோட்டக் கம்பனிகள் இணங்கும். இதனை தோட்டத் தொழிலாளர்களும் நன்கு புரிந்துள்ளனர்.

காலத்திற்கு காலம் தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்படும் நெருக்கடியானது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கென்யா, இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுமையானதாகக் காணப்படுகின்றது. தேயிலை தொழிற்றுறை முழுமையாக சந்தை கேள்வியுடன் தொடர்புள்ளதாக இருக்கின்றது. தேயிலைப் பண்டமானது மனித தேவைக்கு அத்தியாவசியமான பண்டமல்ல. மாறாக உதிரிப் பானமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் மக்கள் தேயிலைப் பானத்தை பருகாமல் இருக்கலாம் அல்லது குறைவாகப் பருகலாம். இதேவேளை, நாடுகளில் காணப்படும் பணவீக்கம், உள்ளூர் மற்றும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் என்பனவும் தேயிலையின் விலையை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. உதாரணத்திற்கு எமது நாட்டினை விட அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, தமது தேயிலைக்கான சந்தையை உள்ளூரிலேயே கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி இந்தியாவின் சந்தைக் கேள்விக்கு போதுமானதல்ல. ஆயினும் இந்திய சந்தையில் தேயிலையின் விலை கடந்த பல மாதங்களாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் தேயிலையின் விலையை தீர்மானிக்கின்றது. இதனால் தேயிலையின் விலை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள அதிகரிப்பை கோரி பல போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேரள மாநிலத்தின் மூனார் பகுதியின் 'கண்ணன் தேவன்' தோட்டத்தைச் சேர்ந்த தோட்டப் பெண்கள் ஒன்றுகூடி 231 ரூபாவாக உள்ள நாட்சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரித்து தரும்படி தன்னிச்சையான போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். இப்போராட்டத்தை அவர்களது நான்கு தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தன. போராட்டத்தை கைவிடுமாறு கோரின. ஆனால் தொழிற்சங்கங்களின் மறுப்பை எதிர்த்து 7000 பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களில் 85 சதவீதமானோர் தமிழ் பெண் தொழிலாளர்களாவர். ஒரு மாதம் தொடர்ந்த போராட்டத்தில் ஈற்றில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் தலையிட்டு 100 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்குமாறு கோரினர். அதாவது 331 சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் இதனை ஏற்க மறுத்தனர். இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.

எனவே, தேயிலைத் தொழிற்றுறை இலாபகரமான தொழிற்றுறையாகவும் மற்றும் தேயிலைக்கான கேள்வி பரவலாகக் காணப்பட்டாலும் உள்ளக வெளியக பொருளாதார தாக்கங்களுக்கு உட்பட்டதாகவே இத்தொழிற்றுறை காணப்படுகின்றது. இதனால் ஆரம்ப முதலே தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன் மானிய அடிப்படையில் உணவுப் பொருட்கள், ஆரம்ப மருத்துவ வசதி மற்றும் வீடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாறாக சுதந்திரத் தொழிலாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் அடைந்துள்ளதுடன், அவர்களது அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கை சுற்றோட்டத்தில் பாரிய மாற்றம் அடைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைச் சுற்றோட்டமும் அடிப்படை தேவைகளும் மாறுபட்டுள்ளதால் அவர்களது வருமானமும் அதிகரிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தொழிலிலிருந்து மட்டும் பெறும் சம்பளத்தின் மூலம் தமது குடும்பத்தேவைகளை ப10ர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குத் தோட்டத் தொழிலாளர்; தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தோட்டத்தில் வாழும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக தோட்டத்தொழிலாளரை மட்டும் கொண்டிருந்த தோட்ட வாழ் மலையக சமூகம் இன்று பல வர்க்கத் தட்டுக்களை கொண்டமைந்துள்ளது. இவ்வளர்ச்சி மேலும் முன்னோக்கி நகருமே தவிர பின்னோக்கி நகராது.

அதாவது தோட்டத் தொழிலை மட்டும் நம்பியிருக்கும் பட்டாளம் உருவாகாது மாறாக தோட்டத்தை விட்டகன்று தொழில் தேடி செல்லும் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும். எனவே மாற்று வருமான வழிகளைத் தேடி செல்ல வேண்டிய நிலைக்கு புதியத் தொழிலாளர் சமூகம் ஆளாகியுள்ளது. மறுபுறம் முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தோட்டக் கம்பனிகளும் நிரந்தரத் தொழிலாளர் பட்டாளத்தை வைத்திருப்பதை தவிர்க்க ஆரம்பித்துள்ளது. இதன் வெளி;ப்பாடாக குத்தகைத் தொழிலாளர்கள், நாட் தொழிலாளர்கள், அளவுத் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட நிரந்தமற்ற தொழிலாளர்கள் இன்று தோட்டத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்புலத்தில் சில தோட்டக்கம்பனிகள் தேயிலைக்காணிகளை பல்வேறு தி;ட்டங்களின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மதுரட்ட தோட்டக் கம்பனி தமது தோட்டத் தொழிலாளருக்கு சேவைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை தோட்டத் தொழிலிலிருந்து முழுமையாக நீக்கி விட்டு அவர்களுக்கு இருவருட குத்தகையின் அடிப்படையில் தலா 2 ஏக்கர் தேயிலைக் காணியை வழங்கிவருகின்றது. குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த பணத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் தேயிலைக் கொழுந்தினை தோட்டத் தொழிற்சாலைக்கு வழங்க முடியும். அதேபோல் ஏனைய சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் போல் சுதந்திரமாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் அவர்களது கொழுந்தை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகம் கண்காணிப்பு வேலையை மட்;டும் மேற்கொள்ளும்.

இதேவேளை எல்பிடிய கம்பனி தோட்டத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொண்டே அதிக விளைச்சல் தராத தேயிலைக் காணிகளில் காணப்படும் தேயிலைச் செடிகளில் தலா 3000 தேயிலைச் செடிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியுள்ளது. அத்தேயிலை மரங்களை பராமரிப்பதற்கான உரம் மற்றும் தேவையான மருந்துவகைகளை கம்பனி வழங்கி கண்காணிக்கும். தேயிலை மரங்ககளைப் பெற்ற குத்தகையாளர் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே வழங்க வேண்டும். தேயிலை கொழுந்து கிலோவொன்றிற்கான விலையை தோட்ட நி;ர்வாகமே நிர்ணயிக்கும். இ;வ்வாறு கம்பனி;க்கு கம்பனி மாறுபட்ட குத்தகைத் திட்டங்களை கம்பனிகள் அமுல்படுத்தி வருகின்றன.

இன்றைய முதலாளித்துவம் தொழிலாளியை எட்டு மணிநேர கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை லாபத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கின்றது. அதாவது எட்டு மணித்தியாள வேலையிலமர்த்துவது நட்டமாகின் அதனை தவிர்த்து குத்;தகை முறைக்கு செல்லும். சிலசமயம் எட்டு மணித்தியாள வேலையிலமர்த்துவது லாபமாகின் குத்தகையை முறையை கைவிட்டு எட்;டு மணித்தியால வேலைநேரத்தை அறிமுகப்படுத்தும். இன்றைய சூழலில் குத்தகையாளர் முறையையே தோட்டக் கம்பனிகள் பின்பற்ற முனைந்துள்ளன. தோட்டக் கம்பனிகள் அறிமுகப்படுத்தும் குத்தகை முறை தோட்டத் தொழிலாளர்களது வருமானத்தை அதிகரிக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருந்தப்போதிலும் தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் உடனடி வருமானத்தைக் கருத்திற்கொண்டு குத்தகை முறையை ஏற்றுக்கொள்கின்றனர். இம்முறை மூலம் தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நிலஉரிமையற்ற சிறு உற்பத்தியாளர்களாக மாறுகின்றனர். சிலதிட்டத்தின்படி தொழிலாளர்களாகவும் குத்தகையாளர்கள் என்ற இரண்டு பாத்திரத்தையும் வகிக்கின்றனர். இதன் சாதக பாதகத் தன்மையை சிலகாலம் கழித்தே அடையாளம் காணமுடியும்.
இன்றைய நிலையில் தொழிற் சங்கங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. ஆகையால் அமுல்படுத்தப்படும் குத்தகை முறை திட்டங்களை ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தும் படி மலையக தொழிற்சங்க அரசியற் தலைமைகள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது தோட்டக்காணிகளை பகிர்ந்தளிக்கும் போது குறைந்த பயன் தரும் காணிகளை மட்டும் பகிர்ந்தளிக்காது அதிக விளைச்சல் தரும் காணிகளையும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் ஆகக்குறைந்தது நான்கு ஏக்கர் தேயிலை காணிகளை ஒரு குடும்பத்திற்கு வழங்க கோரவேண்டும். மேலும் குத்தகை; காலம் குறைந்த பட்சம் 20 முதல் 30 வருட குத்தகை காலத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். இதேவேளை அரசாங்க சிறு தேயிலை உடைமையாளருக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் சேவைகளை இவர்களுக்கு வழங்கும்படி கோர வேண்டும். அத்துடன் அவர்களது விருப்பின் பேரில் அதிக விலை தரும் தேயிலைச் தொழிற்சாலைக்கு கொழுந்தை வழங்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியும்.

அவ்வாறு செய்ய முடியாவிடின் அனைத்து தோட்டங்களையும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்படி கோரி தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1500 வழங்கி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சம்பள உயர்வு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தும் படி கோர வேண்டும். இ;வ்விரண்டு மாற்று உபாயங்களில் ஏதாவது ஒன்றினை அமுல்படுத்தும்படி மலையகத் தலைமைகள் அரசாங்கத்தை கோராவிடில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை என்றும் தொடரும் நெருக்கடியாக அமைவதுடன் தொழிலாளர் ஒருபோதும் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியாது. இந்நெருக்கடியை தொழிற் சங்கங்கள் கருத்திற் கொண்டு செயற்படாவிடின் எதிர்வரும் காலத்தில் மூனார் தொழிலாளர்கள் போல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates