Headlines News :
முகப்பு » » ஏன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது? - சு. நிஷாந்தன்

ஏன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது? - சு. நிஷாந்தன்கூட்டு ஒப்பந்தம்  தொடர்பில் பல்வேறு எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனத் தனியார் கம்பனிகள் தொடர்ந்தும் இழுபறியான பதிலையே தெரிவித்து வருகின்றன.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி தற்போது ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. கடந்த 11, 18ஆம் திகதிகளில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நடைபெற்ற 9, 10ஆம் சுற்றுப் பேச்சுகளும் இணக்கப்பாடு இன்றியே முடிவடைந்தன. தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் இவ்வாறு இழுபறிநிலை தொடருமாயின் எதிர்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை கேள்விக்குறியாகிவிடும். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையிலிருந்து ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதனையே கடந்த பத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் வலியுறுத்தி வந்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணி தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான சம்பளம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளமை அறிந்ததே. முதலாளிமார் சம்மேளனமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி வருகிறது, இ.தொ.காவும் பேசுகிறது, த.மு.கூட்டணியும் பேசுகிறது. ஆனால், இதுவரை தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்வுகாணப்படவில்லை. 

வரவு  செலவுத் திட்ட இறுதி நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் சூடு பிடித்திருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைத் தொடர்பில் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இணக்கப்பாடு எட்டும்வரை அரசு சார்பில் நாளொன்றுக்குத் தொழிலாளர்களின் சம்பளத்துடன் ரூ.100 அதிகமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு சம்பள விடயத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயற்படுமானால் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டிருக்கும், கூட்டு ஒப்பந்தமும் எப்போதோ கைச்சாத்திடப்பட்டிருக்கும். அண்மையில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கம்பனிகள் அதிகரிக்கத் தயங்கினால் தோட்டங்களை அரசு பொறுப்பேற்கும் சூழல் உதயமாகுமென அறிவித்தார். உண்மையில் இது வரவேற்கத்தக்கதே. 

இந்த நாட்டில் அரசுடன் துளியளவேனும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் உள்ளமையால்தான் பெருந்தோட்ட மக்கள் அலட்சியப் போக்கில் புறந்தள்ளப்பட்டுள்ளனர். 1972 ஆம் ஆண்டுக்கும் 1992ஆம் ஆண்டுக்கும் இடையில் தோட்டங்கள் அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போது இங்கு அரச பொது நிர்வாகம் காணப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் அரசிடம் கேள்வியெழுப்பக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், தற்போது தொழிலாளர்களின் அனைத்து விடயங்களும் தனியார் துறையினரின் கீழ் காணப்படுகின்றமையால் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

தோட்டங்களை அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற பதம் தற்போது மேலோங்கி நிற்கின்றது. குறிப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றது. தோட்டங்களை அரசுடமையாக்குவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளிட்டுள்ளது. தனியார் உடமையின் கீழ் இருக்கும் போதுதான் எமக்கான சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற வாதத்தை முன்வைக்கிறது.

ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் நிலப்பரப்பு ஐயாயிரம் ஹெக்டேயராகக் காணப்பட்டது. ஆனால், இன்று தனியார் கம்பனிகளின் கீழ் 20ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு காணப்படுகிறது. பாரிய வருமானம் பெற்ற தோட்டங்களில் வருமானம் இல்லையென கம்பனிகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுதான் தேயிலை, இறப்பரின் விலை வீழ்ச்சியைக் கண்டது. தோட்டக் கம்பனிகள் வருமானத்தை மறைத்து வருவதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தற்போது குரல் எழுப்பும் தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களில் அலட்சியப் போக்கில் நடந்துகொண்டமைதான் இன்று தொழிலாளர்கள் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்க காணரமாக உள்ளது. 

குறிப்பாக, 1992க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடையில் பெருந்தோட்டத்துறை பாரிய வருமானம் ஈட்டிய துறையாகக் காணப்பட்டதை எவரும்  மறுக்க முடியாது. அப்போது தொழிற்சங்கங்கள் தற்போது போல் விடாப்பிடியாக  இருந்திருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயர்ந்திருக்கும் என மலையக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு காலம் கடந்து ஞானம் பிறந்ததாகவே ஏனைய தொழிற்சங்கங்களும் வலியுறுத்துகின்றன.

 கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஒரு வேடிக்கையான விடயம் கூட நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூட்டு ஒப்பந்தம் கடந்த 18ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படாவிட்டால் தீக்குளிப்பதாக அறிவித்திருந்தார். இவரின் ஆவேசம் வரவேற்கத்தக்கதே. ஆனால், அவரின் உயிர் பிரிவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்துவிட முடியாது. அவர் தன்னுடைய செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தவே அவ்வாறு பொய் நாடகமொன்று அரங்கேற்றியுள்ளார். எனக் கூறப்படுகிறது. ஜனநாயக ரீதியில் வெவ்வேறு போராட்டங்கள் காணப்பட்டும் முட்டாள் தனமான இவரின் செயற்பாடுகள் மலையக மக்களை மேலும் பலவீனமானவர்களாக மாற்றும் என்பதை இவர் மறந்துவிடக்கூடாது.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய கம்பனிகள் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசும் இன்று உறுதியாக நம்புகிறது. எதிர்வரும் மாதங்களில் தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும்போது கண்டிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை தொழில் அமைச்சர் முன்வைத்துள்ளார். 

எனவே, முதலாளிமார் சம் மேளனம் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான சம்பளத்தை முன்வைத்து கூட்டு ஒப்பந்தத்தைக்  கைச்சாத்திட வேண்டும். இல்லாவிடின் மீண்டும் தோட்டங்கள் அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற வாதமே தற்போது மேலோங்கி நிற்கின்றது. 

மலையக வரலாற்றில் முதன் முறையாக பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணிக்க முற்பட்ட அந்த நபரின் நோக்கம் வரவேற்கத் தக்கதே ஆனால், அதற்காக அவர் மேற்கொண்ட செயற்பாடுகளும், முன்னெடுப்புகளும் ஒரு பம்மாத்து நாடகம் போன்று காட்டப்பட்டமைதான் வேதனைக்குரியது. மக்களும் இது ஒரு நாடகம் என்று புலம்புகின்றனர். 

வரலாற்றில் பாரம்பரியம் தொட்டு மலையக மக்களுக்குப் பாரியப் பிரச்சினைகள் இருக்கின்றமையை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பிரித்தானிய ஏகாதிப்பத்தியத்திலிருந்து விடுதலையடைந்தப் பின்னர் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் தலைத்தூக்கின. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பிரித்தானியரின் பொருளாதாரச் சுரண்டல்களுக்கு இவர்களின் உழைப்பு தேவைப்பட்டதன் காரணமாக ஓரளவு சலுகைகளுடன் மலையக மக்கள் கொண்டு நடத்தப்பட்டனர். 

அது வரலாறாயினும் இன்று உலகளாவிய ரீதியில் வெவ்வேறு சமூகங்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பல்வேறு ஜனநாயகவழிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதில் வெற்றியும் கண்டுள்ளன. அத்தகைய ஜனநாயகப் போராட்டங்களை எமது மலையக அரசியல் தலைமைகள் வரலாற்றில் பெருபாலும் முன்னெடுக்க வில்லை என்பதே உண்மை. ஜனநாயப் போராட்டங்களே தலைமைகளின் உண்மைத் தன்மைக்குக்குத் தீர்க்கமானதாக அமையும். அதுவே மக்கள் குரலாகவும் ஒலிக்கும்.

2013ஆம் ஆண்டு தோட்ட முகாமைத்து கம்பனிகளுடன் தொழிற்சங்கள் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியிருந்தமை அனைவரும் அறிந்ததே. கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்பது மாதங்கள்  கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அதனைக் கைச்சாத்திடப்படாமல் உள்ளமை மலையக மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பாரிய பொருளாதார அநீதியாகும். தாங்கள் முன்வைத்த 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என ஆணித்தரமாகவுள்ள நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான சம்பளம் கிடைத்தால் போதும் எனும் நிலைப்பாட்டில் உள்ளது.

கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவுள்ள நிலையில் இப்பிரச்சினை பூகம்பம் போல் வெடித்துள்ளது.  இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரங்கேறிய ஒரு வேடிக்கையான விடயம்தான் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிடின் மக்களின் நலன் கருதிதான் பாராளுமன்றத்தில் தீக்குளிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கடந்த 11ஆம் திகதி  அறிவித்திருந்தமை ஒட்டு மொத்த மலையக மக்களுக்கும் திகைப்பாக இருந்தது. 10 நாட்கள் அவகாசம் வழங்கி பத்து நாட்களில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிடின் மக்களுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்திருந்தமை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு மக்களுக்காக ஒருவர் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பேன் என்று சொன்னதும்  அதுதான் முதன் முறையாக இருந்தது. 

மலையக மக்கள் மீது இவ்வளவு அக்கரைக் கொண்ட அரசியல் வாதிகள் உள்ளமையை நினைத்து புத்திஜீவிகளும் முக்கியமாக மக்களே திகைத்திருந்தனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து நள்ளிரவு 12 மணிக்கு சத்தியாக்கிரப் போராட்டத்தை ஹட்டன் மல்லிக பூ சந்தியில் ஆரம்பித்திருந்தார். அவருடையப் போராட்டம் அடுத்த நாள் 12 மணிவரைக் கூட நிலைக்க வில்லை. 

இக்காலத்தில் மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திராக்கா குமாரத்துங்கவின் ஆட்சிக்காலத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் சந்திரசேகரனும் இவ்வாறு தொழிலாளர்களுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக சந்திரசேகரர் மல்லிய பூ சந்தியில் கூடாரம் அமைத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.  இவ்வாறு நடைபெற்றப் போராட்டங்களில் எவர் எவர் உண்மையாகச் செயற்பட்டனர் என்ற விடயம் அரசியல் வாதிகளைவிட மக்களுக்கு நன்குத் தெரியும். ஆனால், தீக்குளிக்கும் அளவுக்கு எவரும் சென்றதில்லை. மக்கள் ஏமாந்த காலங்கள் கடந்து விட்டதை அறியாதவர்களாக அரசியல் தலைமைகள் இன்றும் இருக்கின்றார்களா?

உண்மையில் வடிவேல் சுரேஷ் போன்ற தலைவர்கள் இவ்வாறு கூறுவது நகைப்புக்குரிய விடயம் என்று பலரும் கூறினர். அதனை அவரே நிஜமாக்கி விட்டார். கடந்த 18ஆம் திகதி 3 மணிக்குத் தீக்குளிப்பதாக இருந்த வடிவேல் சுரேஷ்  4 மணிக்குத்தான் இரண்டு எரிபொருள்(பெட்ரோல்) கேன்களுடன் பாராளுமன்ற வளாகத்திதை வந்தடைந்தார்.  பாராளுமன்ற வளாகத்திற்குள் எரிபொருளை விடுத்து குறிப்பாகக் கையடக்கத் தொலைபேசியைக் கூட எடுத்து செல்ல முடியாது என எந்தவொரு அமைச்சரும் அறிந்திராதவராக இருக்க முடியாது. 

அதனை அறிந்து வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் தீக்குளிக்கச் சென்றமை மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதப்படுகிறது. அவரை தீக்குளிக்கும் படி மலையக மக்களோ அல்லது வேறு எவரும் கேட்கவில்லை. மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த அவர் கையாண்ட யுத்தியை மாற்றியிருக்க வேண்டும். 

ஊவா மாகாணத்தில் இவர் கல்வி அமைச்சராக இருக்கும் போது இணைத்துக்கொள்ளப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளத்துடன் 10ஆயிரம் ரூபா பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிகரித்து வழங்கியிருந்தார். ஆனால், அது அவர்களுக்கு நிரந்தரமானதாக அமையவில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கல்வி அமைச்சிடமிருந்து மேலதிகமாக உதவியாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளப் பணத்தை ஊவா மாகாண சபைக்குப் பெற்றுத் தருவதாகவே அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் பாராளுமன்றம் தெரிவானப் பின்னர் அவ்விடயம் கைவிடப்பட்டதால் இன்று உதவியாசிரியர்களின் சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபா கழிக்கப்படுகிறது. இவர்களின் மொத்த சம்பளமே 6 ஆயிரம் ரூபாதான். தற்போது இரண்டாயிரம் ரூபா கழிக்கப்பட்டு 4 ஆயிரம் ரூபாதான் சம்பளப் பணமாக வழங்கப்படுகிறது. இத்தகைய பாரிய பிரச்சினைகள்  காணப்பட்டும் வடிவேல் சுரேஷ் அது தொடர்பில் கவனம் செலுத்த வில்லையென்பது முக்கிய குற்றச்சாட்டாகும். 

இவ்வாறு பல்வேறு சமூக ரீதியான பிரச்சினைகள் தீர்வுகாணமால் உள்ள நிலையில் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த வடிவேல் சுரேஷ் மேற்கொண்ட இந்த நாடகம் வெறுமனே மக்களை ஏமாற்றுவதற்கானப் பித்தலாட்டம் என்பதை சாதாரண பாமரனும் இன்று அறிந்துள்ளான்.

இங்கு குறிப்பிட முனைந்ததாவது, மலையக மக்களின் பல்வேறு சமூக, அரசியல், காலாசார, பொருளாதாரம் சார்ந்தப் பிரச்சினைகள்  தீர்வுகாணக் கூடியவையாக எம் கண் முன்னே உள்ளன. அவற்றை ஒருவர் தீக்குளிப்பதன் மூலம் வென்றெடுத்துவிட முடியாது மாறாக அகிம்சை வழியிலும்,  ஜனநாயக ரீதியிலும் உண்மையாக மக்களுக்காகப் போராடினால் வெற்றி என்பது நிச்சம். 

சமூகத்தை மடமை சமூகமாக மாற்றுவதை விடுத்து அறிவுடைய சமூகமாக மாற்ற எத்தனிக்க வேண்டும். வராலற்றில் மலையகத்தில் மறைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை இன்று சில புதிய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிகொண்டு வரப்படுகிறன. இத்தகைய செயற்பாடுகள் கடந்த காலங்களில் குறிப்பாக அமரர் சௌமிய மூர்த்தித் தொண்டமானுக்குப் பின்னர் அரங்கேறியதாக வரலாறு இல்லை. மலையக மக்களை வைத்து பேரம் பேசினார்களே தவிர அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்பியமை குறைவாகவே இருந்தது.

எனவே, மலையக மக்களின் நலனை சிந்தித்து அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தாமல் சமூக அக்கரையுடன் முன்னோக்கிச் செல்ல முற்படும் தலைமைகளை மலையகம் வரவேற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates