Headlines News :
முகப்பு » » மண்சரிவுகளை அடையாளம் காண்பது எவ்வாறு? சில ஆலோசனைகள் - பா.சிவஞானம்

மண்சரிவுகளை அடையாளம் காண்பது எவ்வாறு? சில ஆலோசனைகள் - பா.சிவஞானம்


இயற்கை அனர்த்தங்கள் நமது நாட்டை மட்டுமின்றி, உலக நாடுகளிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. இது இடத்திற்கிடம் மாறுபட்டு சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், எரிமலை, வெள்ளம், மண்சரிவு, மழை என்று மனித இனத்துக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்தப் பாதிப்புக்களை மனிதனால் முழுமையாகத் தடுக்கமுடியாது. எனினும், பாதிப்புக்களிலிருந்து ஓரளவு தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். 

இவ்வாறான அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள மனிதனால் முடியாது என்று ஒருசாரார் கூறினாலும் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. சில அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக மண்சரிவு, வெள்ளம் எற்படுவதற்கு தற்போது காரணமாக இருப்பது காடழிப்பு மற்றும் மரங்களை வெட்டுதல், மண்ணரிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும், கட்டடங்கள், வீடமைப்பு, கைத்தொழில் மையங்கள் போன்றவை அமைப்பதற்காக நிலத்தை வெட்டுதல் போன்ற காரணங்களினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற செயற்பாடுகள் காரணமாக மலையக தோட்டப்புறங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறான இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ஓரளவு அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். இதனையறிந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் (65,000 சதுர கிலோ மீற்றர்) கிட்டத்தட்ட 20 சதவீதமான (12,000 சதுர கிலோ மீற்றர்) பகுதிகள் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடிய பகுதிகளாகவுள்ளன. (Deheragoda & Karunanayake, 2003) இப்பகுதிகள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30ம சதவீதத்தினைக் கொண்டதாகவும், 7 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நிலத்திற்கு ஏற்பட்டு வரும் பல தரப்பட்ட அழுத்தங்கள் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இதன் விளைவுகளே, நாட்டில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் அதிகரித்த நிலச்சரிவுகளுக்கான காரணங்கள் எனலாம். 

மத்திய மலைநாட்டின் ஈரவலய நிலப்பகுதிகளில் சராசரி ஒரு கிலோ மீற்றர் நிலப்பரப்பில் 1 இலிருந்து 2 வரையான நிலச்சரிவுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன (Ariyabandu and Hulungamuwa, 2002). இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில், நீண்ட நாள் வரட்சிக்குப் பின்னர் பெய்யும் கடும் மழை காரணமாக ஏற்படும் ஒரு வழமையான செயற்பாடாக நிலச்சரிவு நிகழ்வுகள் விளங்குகின்றன. நிலச்சரிவுகள் பற்றிக் குறிப்பிடும்போது நிலச்சரிவு என்றால் என்ன? என்பது பற்றியும் அதனுள் அடங்கும் வேறுபட்ட வகைகள் மற்றும் அவற்றுக்கான காரணங்கள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமானதாகும். 

தொகுதியாக மண் அல்லது கற்கள் அல்லது அவை யாவும் கலந்து, தரையின் ஒரு பகுதி ஒரே முறையில் அல்லாத படிப்படியாக கீழே தள்ளுண்டு விழுதல் “தடப்பொருள்” நகர்வு (Mass Movements) எனப்படுகின்றது. இவ்வாறு நகர்ந்த திணிவானது தன்நிலையைவிட்டு கீழே விழுகின்றது. இவ்வாறு இடிந்து விழும் செயற்பாடுகள் நில அளவிற்கேற்ப பலவகையாக வகுக்கப்படுகின்றன. உயர்மட்டச் சரிதல் அல்லது பாறை வீழ்தல் என அழைக்கப்படும் அதனை மலை இடிந்து விழுதல் என கிராமப்புற மக்கள் அழைப்பர். இதனை இயற்கையன்னை புவியின் மேற்பரப்பின் ஒரு பகுதியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரச் செய்யும் ஒரு செயற்பாடு எனவும் நோக்க வேண்டியுள்ளது. 

நிலச்சரிவு (Land Slide) என்பது நிலப்பிரதேசத்திலுள்ள மண், கற்கள், இன்னும் ஏனைய பொருட்களும் சரிந்து விழுவதைக் குறிக்கும். அதாவது பெரியளவிலான மண் திணிவோ அல்லது கற்பாறைத் திணிவோ ஒரு தரையிலிருந்து தனியாகப் பிரிந்து உடைந்து சென்று இன்னோர் இடத்தில் வீழ்வதைக் குறிக்கின்றது. விஞ்ஞானிகளின் கருத்துப்படி (இலங்கையிலுள்ள) பல்வேறு மட்டங்களில் நிகழும் சரிவுகளை மண் சரிவு அல்லது நிலவழுக்கல் என அழைக்கப்படுகின்றது. இவற்றில் கற்கள் உருண்டு வீழ்தல், பாறைகள் வீழ்தல், சேற்றுப்பாய்சல், கிடையான முறையில் அமையப் பெறும் பரவுகைகள் யாவும் உள்ளடங்குகின்றன. எனினும், சந்தர்ப்பங்களுக்கேற்ப இவற்றை அவற்றுக்காக தனிப்பட்ட பதங்களைக் கொண்டு அழைத்தல் பொருத்தமானதாகும். 

மண்சரிவு என்பதும் பாரிய அளவில் திடப்பொருட்கள் சரிந்து விழும் பல வகைகளில் ஒன்றாகும். ஒரு படை மண் நகர்ந்து சரிதல் மலைப் பிரதேசங்களில் காணப்படும் பொதுவான நிகழ்வாகும். தடிப்பம் கூடிய மண்படை நகர்ந்து விழுவது மலைச்சரிவின் கீழ்ப்பகுதியிலும், தடிப்புக் குறைந்த மண்படை நகர்வது மலைச்சரிவின் உச்சிப் பகுதியிலும் இடம்பெறும். 

இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்ந்த மண் சரிவுகள் மிகவும் பயங்கரமான முறையில் நிகழ்ந்துள்ளன. கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில், மழைவீழ்ச்சிக் காலங்களில் கூடுதலான அளவு மண்சரிவுகள் நிகழ்கின்றன. பொதுவாக இந்த நிகழ்வுகள் மத்திய மலை பிரதேசங்களின் காடுகள் அழிக்கப்பட்டு, நிலப்பயன்பாட்டில் அதிகளவு மாற்றங்களுக்குட்பட்ட மலைச் சாய்வுகளிலேயே அதிகளவுக்கு நடைபெறுகின்றன. நிலச்சரிவு மற்றைய இயற்கை அழிவுகள் போலவே சமூகத்தில் பல பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

நிலச்சரிவுகள் இடம்பெற முன்னர் அவதானிக்கப்படக் கூடிய முன்னோடி அறிகுறிகள், நீர் ஊற்றுக்கள் ஏற்படுவதைப்போல் நீர் வெளியேறுதல், கட்டட, சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, வளர்ச்சியடைந்து செல்லல், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து காணப்படல், பாதைகள் பணிந்து கீழிறங்கிச் செல்லல் போன்றவைகளாகும்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கான உந்துகைகளைத் தோற்றுவிக்கும் காரணிகள். நிலத்தின் உறுதித்தன்மையை (Stabilizing) பாதிப்படையச் செய்து, நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு சில உந்துகை நடவடிக்கைகளாக உள்வாரியான செயற்பாடுகள் அல்லது வெளிவாரியான செயற்பாடுகள் அமையப்பெறுகின்றன. அவை பின்வரும் நிகழ்வுகளின் போது கிடைக்கப்பெறுகின்றன. மழைக்காலங்களில் கிடைக்கப்பெறும் மிகையான நீர். (Excessive amounts of Water During rainy season), புவிநடுக்கம் (Earthquake), எரிமலை வெடித்தல் (Volcanic eruptions), அதிர்வுகள் (Vibrations), ஒலி, சத்தம் (Noise), நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகள். நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளை அவற்றின் செயற்பாடுகள் அடிப்படையில் இரு பிரிவுகளில் நோக்கலாம்.

பௌதீகக் காரணிகள், மானிடக் காரணிகள் நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளை பௌதீகக் காரணிகள். சாய்வு வீதம் (Slope Gradient), வானியாலழிதலும் காலநிலையும் (Weathering and Climate), நீரின் அளவு (Water Content), தாவரங்கள் (Vegetation), மிகையான சுமை / அழுத்தம் (Overloading), கல்லியலும் சாய்வுகளின் உறுதிதன்மைகளும் (Geology and Slope stability), நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளை மானிடக் காரணிகள் தாவரங்களை அகற்றுதல் (Removal of Vegetation), இயற்கையான வடிகால் அமைப்புக்களை மாற்றியமைத்தல், (Interference with or Change to Natural Drainage), நீர்க் குழாய்களின் மலசல குழாய்களின் கசிவுகள் (Leaking Pipes Water, Sewer), வீதிகள், புகையிரதப் பாதைகள், அல்லது கட்டுமானங்களை அமைத்து சாய்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தல் (Modification of Slopes by Construction Roads, Railways or Buildings), அகழ்வு நடவடிக்கைகள் (Mining Activities), போக்குவரத்து நெரிசல்களினால் அல்லது வெடிக்கவைத்தல், தோண்டுதல் மற்றும் பாறைகளைப் பெயர்த்தல் நடவடிக்கைகளினால் ஏற்படும் அதிர்வுகள், (Vibrations from Heavy Traffic or Blasting, and Excavation or Displacement of Rocks), நீர்த்தேக்கங்களை அமைத்தல் (Construction of Reservoirs), சாய்வுகளில் மேற்கொள்ளப்படும் முறையற்ற பயிர்ச்செய்கைகள் (Un Planned Cultivations in the Slopes).

மேற்படி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் நாட்டில் ஏன் மலையகத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மண்சரிவுகளில் இருந்தும் அதனால் ஏற்படும் சேதங்களில் இருந்தும் விலகிக்கொள்ளலாம். 

நன்றி - வீரகேசரி
Share this post :

+ comments + 1 comments

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates