நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை நகரில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் நகரம் வட்டகொடை. ஏகப்பட்ட வட்டகொடைகள் நாட்டில் இருப்பதனால் இதற்கு ஸ்டேஷன் வட்டகொடை என்று பெயர். இந்த வட்டகொடை ரயில் நிலையத்துக்கு ஒரு சிறப்பு உண்டு.
சிறிய ரயில் நிலையம் ஆயினும் நீண்ட இறங்கு மேடை ((Platform) இடது பக்கம் நீண்ட களஞ்சிய அறை ((Goodsshed) என நீண்ட வரலாறு கொண்ட இந்த ரயில் நிலையத்தில் வலது பக்க வாசல் வழி வெளியேறினால் உள்ள சிறிய வீட்டுத்திட்டத்துக்குள் ஒரு பெட்டிக்கடையும் ஒரு வகுப்பறையும் என தனது வாழ்க்கைக் காலத்தை அர்ப்பணித்துக்கொண்டிருப்பவர் சண்முகம் மாஸ்டர்.
ஊருக்கு இவர் சண்முகம் மாஸ்டர் ஆயினும் தன்னுடைய முகநூல் பதிவுகளின் வழியாக உலகையே தன் ஊர்பக்கமாக திரும்பிப்பார்க்க வைத்த இவரது இயற்பெயர் சுப்பையா ராஜசேகரன்.
மலையகம் குறித்த வரலாற்று ஆவணங்கள், தகவல்கள் வேண்டுமா..? இவரது முகநூல் பக்கத்திற்கு போனால் போதும். அங்கு இல்லாத தகவலா அவரது முகநூல் பிரத்தியேக செய்திப்பெட்டியில் தொடர்பு கொண்டால் போதும் தேடித் தருகிறேன் சாமி என தகவல்களையும் படங்களையும் திரட்டி தரும் பல்துறை கலைஞர் இவர்.
'வட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் அவரது இல்லம் அமைந்திருந்ததன் காரணமாக சிறுவயது முதலே ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்கும் வாய்ப்பைப் பெற்றவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். குடும்ப சுமைதாங்க பாடசாலை கல்வியின் பின்னர் தந்தை செய்த நகை பட்டறை வேலையை செய்ய ஆரம்பித்தார். எனினும் அவருக்குள் பொதிந்து கிடந்த மலையக உணர்வுகளால் உந்தப்பட்டவராக தனது கடைக்கு அருகாமையில் ஒரு சிறிய குடில் அமைத்து ஸ்ரீ கிருஷ்ணா அறநெறி பாடசாலை என ஆரம்பித்து மாலை நேர வகுப்புகளை ஆரம்பித்தார். இதற்கு மேலதிகமாக தனது ஓய்வு பொழுதுகளில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். சிறந்த ஓவியரான இவர் கோட்டு ஓவியங்களை வரைவதில் வல்லவர். கைப்பணி பொருட்களையும் வடிவமைப்பார்.
சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்குவதில் ஆர்வம் காட்டிய இவரது அறநெறிப்பள்ளி ஏழை மாணவர்களின் இருப்பிடம் ஆகியது. வட்டகொடை நகருக்கு அண்மையில் உள்ள தோட்டங்களான மடகொம்பரை, வட்டகொடை, யொக்ஸ்போர்ட், ஹொலிரூட், கிரேட் வெஸ்டர்ன் போன்ற தோட்டங்களில் இருந்து வரும் பாடசாலை மாணவர்களுக்கு இவரது அறநெறிப்பள்ளி அடைக்களம் தந்தது. இந்த பாடநெறி என்ற எல்லை கிடையாது. எல்லா பாடங்களையும் கற்பிப்பார். இவ்வளவு கட்டணம் என்பதும் கிடையாது. ஏழை மாணவர்கள் கொடுக்கும் எந்தவொரு தொகையையும் புன்னகையோடு வாங்கி அதனை அந்த மாணவர்களுக்கே செலவழித்து விடுவார். பாடசாலை முடிந்து பகல் உணவு இல்லாமல் வரும் மாணவர்களுக்கு தன் பெட்டிக்கடையில் உள்ள பாணை வெட்டிக் கொடுத்து பசியை போக்கிவடும் பரோபகாரி. இதனால் நாளடைவில் ஸ்ரீ கிருஷ்ணா அறநெறிப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலப்பாடசாலையாக மாற்றம் பெற்றது. இந்த பாடசாலையில் கற்ற பல மாணவர்கள் இன்று உயர் பதவிகளில் உள்ளனர்.
நாடகத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஹைலன்ஸ் கல்லூரியில் இர.சிவலிங்கம், செந்தூரன் போன்ற ஆசிரியர்களால் செப்பனிடப்பட்டவர். தனது பள்ளிக்கு வரும் மாணவர்களை நாடகத்துறையில் பயிற்சி வழங்கி நாடகங்களை தயாரித்து மேடையேற்ற வாய்ப்பளிப்பவர். வளங்கள் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடைவாசலில் மேடை அமைத்து கடைக்கு வரும் பொதுமக்களை பார்வையாளர்களாக்கி மாணவர்களின் கலையாற்றலை வளர்த்து வருபவர். அவரது ஊரிலேயே வாழ்ந்து மறைந்த அற்பதமான தோட்டப்புற பாடல் கலைஞரான கபாலி செல்லன் ஊடாக மாணவர்களுக்கு பாடும் பயிற்சியையும் வழங்குவார். நாட்டார் பாடல்கள் பலவற்றை சேகரித்து வைத்திருக்கிறார்.
அதேபோல மாணவர்களின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி ஊக்குவிப்பவர். இவரது பள்ளியில் சுற்றுலா செல்வதற்கு பயணக்கட்டணம் தேவையில்லை. ஊரைச்சுற்றியுள்ள தெப்பக்குளம், சிண்டாக்கட்டி மலை, கிரேட்வெஸ்டர்ன் மலை என நடைபயணமாகவே மாணவர்களை அழைத்துச் சென்று இயற்கை அழகை எடுத்துச்சொல்லும் இயற்கை நேசன் இவர்.
மறுபுறமாக ஆரம்ப நாள் முதலே ஆவண சேகரிப்பில் அதிக கவனம் செலுத்தியவர். அவரது சிறிய இல்லத்தின் பெரும்பகுதியை இந்த ஆவணங்களை சேர்த்து வைப்பதற்கே ஒதுக்கிவைத்துள்ளார். சி.வியின் மறைவுக்குப்பின்னர் அவர் வாழ்ந்த இல்லம் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டபோது சி.வியின் மைத்துனரான ஊடகவியலாளர் சி.எஸ் காந்தியிடம் இருந்து பெற்று அவற்றையும் தன் சேகரிப்பில் இணைத்துக்கொண்டவர். இன்று மலையக கலைவிழாக்களில் சி.வியின் சேகரிப்புகளை கண்காட்சிக்கு வைத்து இளம் சமூகத்தினருக்கு சி.வி.வேலுப்பிள்ளை பற்றிய நினைவுகளை மீட்டித்தருபவர். தன் இல்லத்தை ஒரு ஆவணக்காப்பகமாக மாற்றி வைத்திருக்கும் இவருக்கு சூரியகாந்தி பத்திரிகை உரிய இடம் வழங்கிய பின்னரே உலகுக்கு தெரிய ஆரம்பித்தார். இன்று உலகமே முகநூல் வழியாக இவரது பதிவுகளை தினமும் ஆவலுடன் படித்து வருகின்றது. அதேபோல உலகெங்கினும் இருந்து வரும் தமிழ் ஆர்வலர்கள், மலையக ஆர்வலர்கள், சமூக ஆவர்வலர்கள் இவரது இல்லம் நாடி வருகை தந்து அவரது ஆவணக்காப்பகத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
2000 ஆம் ஆண்டு ஹட்டன் லோயல் கல்வியகம் இவரது கல்விப்பணிக்காக சிறப்பு விருது வழங்கி கௌரவித்தது. 2005 ஆம் ஆண்டு மத்திய மாகாண சாகித்திய விழாவில் அப்போதைய கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமியினால் சமூகப்பணிகளுக்கான மாகாண சாகித்ய பரிசு பெற்ற இவர் 2015 ஆம் ஆண்டு ஆவண சேகரிப்புகளுக்காக மாகாண சாகித்ய பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
கல்வி, கலை, இலக்கியம், ஓவியம், சமூகம் மற்றும் ஆவணக்காப்பு, எழுத்து என அனைத்து துறைகளிலும் பிரகாசிக்கும் பல்துறை கலைஞரான வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் காலம் கடந்தேனும் கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தினால் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது மாணவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமையோடு மலையக மக்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...