Headlines News :
முகப்பு » , » தமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம்

தமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம்

மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம். 
தமிழரசுக் கட்சியுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்ட இ.தி.மு.க . 1962 எப்ரல் 21, 22ல் இரண்டாவது மாநில மாநாட்டை ஹற்றனில் நடாத்த திட்டமிட்டது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்குகொள்ளும்படி, தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஏனைய மலையக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தது. மலையக மக்களின் குடியுரிமையும், மொழியுரிமையும் இம்மாநாட்டின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. இம்மாநாட்டில் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டதுடன், மலையகத்தைச் சார்ந்த தொழிற்சங்கங்களில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சார்ந்த அதன் தலைவர் ஜனாப் ஏ. அஸீஸை தவிர எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும் பங்கு கொள்ளவில்லை மாறாக வாழ்த்துச்செய்தி அனுப்பினர். இவ்விரண்டு நாள் மநாட்டின் இறுதி அங்கமாக ஹட்டன் டன் பார் மைதானத்தில் மாநாட்டின் பொதுக்கூட்டமொன்று நடாத்தப்பட்டதுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைதந் திருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் திரு.எஸ். ஜே. வி. செல்வநாயகம் உட்பட ஏனைய தலைவர்கள் இ.தி.மு.க  தலைவர் திரு. ஏ. இளஞ்செழியன் அவர்களுடன் திறந்த ஊர்தியில் ஹற்றன் மல்லிகைப்பூ பசாரிலிருந்து டன்பார் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும் மழையினையும் பொருட்படுத்தாது திறந்த ஊர்தியில் செல்லும் தலைவர்களுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான இ.தி.மு.க  தொண்டர்கள் மலையக குடியுரிமைப் பிரச்சினையையும். மொழியுரிமைப் பிரச்சினையையும் முன்வைத்து கோசமெழுப்பி சென்றமை நாட்டின் அனைத்து சிங்களச் சக்திகளினதும் கவனத்தை ஈர்த்தது.

வடகிழக்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சீர்த்திருத்த இயக்கமொன்றின் அழைப்பினை ஏற்று மலையகத் தலைநகரில் மொழியுரிமை, குடியுரிமை என்பவற்றிற்காக இணைந்து போராடுவோம் என சூளுரைத்தமை தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் பீதியை உருவாக்கலாயிற்று. இ.தி.மு.க.வினது இச்செயற்பாட்டினைப் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கேள்வியெழுப்ப ஆரம்பித்ததுடன் திராவிட நாடொன்றினை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.க வின் இந்நடவடிக்கையெனக் கூறினர்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு இ.தி.மு.க வினை தடை செய்யுமாறு சிங்கள அரசியல் கட்சிகள் கோரின.

இக்காலகட்டத்தில் பேரினவாதத்தின் சின்னமாக விளங்கிய வெலிமடை பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவருமான கே.எம்.பி.ராஜரத்தின, தம்பதெனிய பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஜீ.சேனாநாயக்க போன்றோர் இ.தி.மு.க ஓர் இனவாதகட்சியெனவும் மற்றும் அது இலங்கையை தமிழகத்துடன் இணைக்க முயலும் தமிழக தி.மு.க வின் கிளை அமைப்பு எனக்கூறி அதனை தடை செய்யும்படி பாராளுமன்றத்தில் கோரினர். இவர்களுடன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான இனவாதக் கருத்தினை முன்வைக்கலாயினர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேர்சி விக்ரமரத்ன உரையாற்றுகையில்
පසු ගිය දිනවල ආණ්ඩු පකෂයේ රැස්වීමකදී ඩී.එම්.කේ. හෙවත් ද්‍රවිඩ මු න්ට කසාගම් නැමැති සංවිධානය පිළිබඳව සාකච්ඡාවු බවත් අපට දැනගන්න තිබෙනවා. ඒ තමයි තවත් කුමන්ත්‍රන සංවිධානයක්
මේ සංවිධානයට අයත් මුලිකයන් අත් අඩංගුවට ගෙන වහාම මේ සංවිධානය තහනම් කිරීමට රජයට බැරී මදැයි මම අහනවා. ඉන්දියාවේ ඇති මේ සංවිධානයේ ශාකාවක් කඳුකරයේ පිහිටු වීමෙන් මොන විධියේ වපාර ඔවුන් ගෙන ගොස් අපට මොන ප‍්‍රශ්න වලට මුහුණ පාන්න සිදුවේදැයි කාට කියන්න පුළුවන්ද? ඒ ගැන එයට වඩා දිඝ වශයෙන් මා කථා කරන්නට යන්නේ නැහැ (19)
- கடந்த சில தினங்களில் ஆளும்கட்சி கூட்டத்தில் டி. எம். கே. அல்லது திராவிட முன் னேற்றக் கழகம் எனும் அமைப் பினைப் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளமை எமக்கு தெரியவந்துள்ளது. இதுதான் இன்னுமொரு சதிகார அமைப்பாகும். இவ்வைமப்பினை சார்ந்த முன்னணியாளர்களை கைது செய்து உடனடியாக இவ்வமைப்பினை ஏன் தடைசெய்ய அரசிற்கு முடியாது என நான் கேட்கிறேன் . இந்தியாவிலிருக்கும் இவ்வமைப்பின் கிளையை மலைநாட்டில் அமைப்பதன் மூலம் எவ்வாறான நடவடிக்கையை இவர்கள் கொண்டுசென்று எமக்கு எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என யாருக்கு சொல்ல முடியும்? இதனைப் பற்றி இதை விட அதிக மாக நான் பேசப்போவதில்லை (தமிழாக்கம் ஆ-ர்)

- பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.எம்.பி ராஜரத்தின. பேர்சிவிக் கிரமரத்ன உட்பட அனைத்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் இ.தி.மு.க வை தடை செய்யக்கோரிய வேளையில் இ.தி.மு.க தடையுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் அவசியமென ஒரு சில இடதுசாரிக்கட்சி அங்கத்தினர்கள் கூறினர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. பீட்டர் கெனமன்
I see that the hon.members of the Government Parliamentry party are very worried about these D. M. K. 'S springing up. You are terribly worried about it and I too thoroughly condemn these D. M. K. 's But it is your total inactivity on this subject that is breeding D. M. K.'s in Ceylon and keeping the Federal Party alive when its prestige among the tamil pepole is slipping
.......... It is quit clear now that the citizenship act of 1948 did not solve this problein, It left over an enormous residue of persons who are stateless but live in Ceylon.
............ Now we are going to have discussions between the two prime min isters again. I do not want to prejudice these discussion by making any statements. But I must say that the aim of these discussions should to be end the sitution of statelessness once for all. (20)
இ.தி.மு.க. வினை தடைசெய்யக்கோரி பாராளுமன்றத்தில் சிங்கள பிரதிநிதிகள் குரலெழுப்புகையில் பாராளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பாக நியமிக்கப்பட்டிருந்த நியமன உறுப்பினரான திரு. எஸ். தொண்டமானும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மௌனிகளாக இருந்தனர். இ.தி.மு.க  தலைவர் திரு. ஏ. இளஞ்செழியன் திரு. எம். திருச் செல்வம், கியூ. சி அவர்களுடன் தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கைளச் சந்தித்து தமிழரசுக் கட்சியினரை மலையகத்திற்கு அழைத்துச் சென்றமையே இனவாத சக்திகள் கொதித்தெழுந்து இ.தி.மு.கவை தடைசெய்யக் கோருவதற்கான பிரதானக் காரணமாயிருக்கையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர் என திரு. ஏ. இளஞ்செழியன் வினவினார். இதற்கு செவிமடுத்த திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தாம் இ.தி.மு.க தொடர்பாக குரலெழுப்பும்படி தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதாகக் கூறினார்.

- இதன் பின்னர் தமிழரசுக் கட்சியினர் இவ்விடயம் தொடர்பாக உரையாற்றிய போதிலும் அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பதாக இ.தி.மு.க அரசினால் தடை செய்யப்பட்டது.

இக்காலகட்டத்தில் திரு.ஏ.இளஞ்செழியனின் அரசியற் நடவடிக்கைகளுடன் முரண்பட்ட இ.தி.மு.க உறுப்பினர் சிலர் இரண்டு குழுவினர்களாக தனித்து செயற்பட்டனர். இலங்கை திராவிடர் முன்னேற்றக்கழகம் எனும் பெயரிலேயே திரு. இரா. அதிமணி தலைமையின் கீழ் ஒரு பிரிவினரும் திரு. ஏ. எம். அந்தோணிமுத்துவின் தலைமையின் கீழ் ஒரு பிரிவினரும் செயற்பட்டுவந்தனர்.

1962 ஜூலை 22ம் திகதி நள்ளிரவுடன் அவசரகால சட்டத்தினைப் பயன்படுத்தி பிரதமர் ஸ்ரீ மா பண்டாரநாயக்கா இ.தி.மு.க . வினை தடைசெய்தார்.
Premier Proscribed the DMK. The three dravida munnetre kazham organi sations have been banned in Ceylon by the prime minister Mrs. Sirima Bandaranayake from midnight last night under the Emergency regulations.... The parties have been proscribed. They cannot hold meetings any where in ceylon invite or collect monies for the organisation communicate with persons or Organi sation or solicit suport print or distribute any matter (21)
இவ்வறிவித்தலுடன் திரு, ஏ.எம்.அந்தோணிமுத்து தமது தலைமையிலான தி.மு.க கலைக்கப்பட்டு விட்டதாக பிரதமருக்கு தந்தி மூலம் அறிவித்ததுடன் திரு. இரா. அதிமணி தலைமையிலான தி.மு.கவும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. தடையின் பின்னர் இத்தடையினைக் கண்டித்து பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் பேசலாயினர். இத் தடை தொடர்பாக நீண்ட உரையாற்றிய திரு. அ. அமிர்தலிங்கம்; இந்த நாட்டில் மலைநாட்டுத் தமிழ் மக்கள் மத்தியில் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து சாதிபேதங்களை அகற்றி அவர்களுடைய மொழி குடி உரிமைகளைப் பெற்று அவர்களும் இந்நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்திற்காக உழைத்து வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயத்திற்கு முரணானது மனித உரிமைக்கு மாறானது என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையில் இந்த ஸ்தாபனம் எடுத்த எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது என்பதை அரசாங்கத்திடம் நான் கேட்க விரும்புகிறேன்......

இந்தக் கெளரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தினர்களும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். கெளரவ அவிசாவலைப் பிரதிநிதி (திரு பிலிப். குணவர்தன) அவர்களும் கெளரவ காலி பிரதிநிதி (திரு. டபிள்யூ. தஹநாயக்கா) அவர்களும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி குறிப்பிட்டார்கள். எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி (ஐனாப் ஏ. ஏச் மாக்கான் மாக்கார்) அவர்களும் குறிப்பிட்டார்கள் நுவெரலியா பிரதிநிதி (திரு. ரி. வில்லியம் பெர்னாண்டோ ) அவர்களும் குறிப்பிட்டார்கள்.

வெலி மடைப் பிரதிநிதி கே.எம்.பி. ராஜரத்தினாவும் அவரது பாரியார் குசுமா ராஜரத்தினவும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகத் கர்ச்சித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுப் பிட்டடியாப் பிரதிநிதி (திரு.பேர்ளி விக்கிரமசிங்க ) அவர்களும் பிரஸ்தாபித்தார்கள். இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டி இருக்கிறது. இந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு இயக்கமல்ல. நான் இலங்கை சர்வகலாசாலையில் 1946-47ம் ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. கடந்த பதினாறு ஆண்டுகளாக இந்த கழகம் இந்த நாட்டில் இயங்கி வருகின்றது. அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாகச் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்கைள ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதாகும். மூடநம்பிக்கையில் சிக்கி காடனையும் மாடனையும் வணங்கி பலியிட்டு கூத்தாடி வாழும் மூடநம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமென்பதாகும் மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் திராவிட முன்னேற்றக்கழகம் இயங்கி வருகிறது. பெயரளவில் தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இலங்கை திராவிட முன்னேற்றக் கழக்கத்திற்கும் ஒற்றுமை இருக்கிறதே தவிர ஸ்தாபன ரீதியாகத் தொடர்பு எதுவும் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறவேண்டியது" உண்மை. இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. அண்ணாத்துரை அவர்களும் செயலாளர் திரு. நெடுஞ்செழியன் அவர்களும் இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தங்களுக்கும் எது விதமான தொடர்பும் கிடையாதென்பதை எல்லோருக்கும் கூறியிருக்கிறார்கள்.

இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் மூன்று ஸ்தாபனங்கள் இருந்தாலும் இரண்டு ஸ்தாபனங்கள் கொழும்பில்தான் இருந்து வருகின்றன. தோட்டப் பகுதியிலிருக்கும் மற்றொரு ஸ்தாபனம் திருவாளர் இளஞ்செழியன் என்பவரைச் செயலாளராகக் கொண்டது. அவர்களுடைய நோக்கம் நாட்டைப் பிரிப்பதல்ல. இவ்ஸ்தாபனத்தின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான் என்று யாரும் நிரூபிப்பார்களேயானால் நான் என்னுடைய பதவியை ராஜினாமாச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். அப்படி உண்மையென்று யாராலாவது ருசுப்படுத்த முடியுமா? அப்படி ருசுப்படுத்த ஒருவராலும் முடியாது.

அவர்களுடைய நோக்கம் மலைநாட்டுத் தமிழ் தொழிலாளர்களைச் சாதி பேதத்திலிருந்து மீட்டு அவர்களை ஒரேயின மக்களாக ஒன்றுபடச் செய்வதேயாகும். ஒருவரையொருவர் தொடக்கூடாது என்றும் அவர் அந்தச்சாதி. இவர் இந்தச்சாதி என்றும் பிளவு படத்தப்பட்டிருக்கும் மக்களிடையேயுள்ள பேதத்தை அகற்றுவது அவர்களை ஒன்று படுத்துவது பிழையா? அரசாங்கக் கட்சியில் உள்ளவர்களானாலும் சரி, எதிர்க் கட்சிகளில் உள்ளவர்களானாலும் சரி, கெளரவ அவிசாவலைப் பிரதிநிதி அவர்களானாலும் சரி இந்த நோக்கம் பிழையானது எனக் கூறுவார்களா?

மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை யோ மூடநம்பிக்கைகளுக்குட்பட்டு கிடக்கிறார்கள். மற்றவர்களிலும் பார்க்க கூடுதலாக அந்தப் படிப்பற்ற தோட்டத் தொழிலாளர்கள் தான் மூடநம்பிக்கைளின் கோரப்பிடியில் சிக்கிக்கிடக்கிறார்கள். கடவுள் ஒருவர் உண்டு. ஆனால் அதற்காகப் பலியிடத் தேவையில்லையெனக் கூறுவது பிழையா? இலங்கை திராவிட முன்னேற்றக்கழகம் நிறுவப்பட்டதன் நோக்கமே இதுதான். அடுத்தது அரசாங்கம் செய்த அக்கிரமான செயல்களால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் இழந்தவைகளைப் பெற்றுக் கொடுப்பது, அதுதான் அவர்களை நாடற்றவர்களாக்கி மொழியுரிமையைப் பிடுங்கி. இந்நாட்டில் அவர்களை எந்த விதமான உரிமையும் அற்றவர்களாக ஆக்கிவைத் திருக்கும் அநியாயத்தை எதிர்த்து அவர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அவர்களுக்குத் தொழிலுமில்லை, துணையுமில்லை. கல்வியும் இனிமேல் புதுக்கல்வித்திட்டத்தின்படி சிங்களத்தில் தான். அவர்களுக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமையில்லை. வாக்குரிமையில்லை. அவர்கள் துரத்தப்பட்டால் தங்கியிருப்பதற்கு ஒரு இடந்தானுமில்லை. மிருகங்களுக்குக்கூடக் காட்டில் இடமுண்டு. எறும்புகளுக்குக்கூடப் புற்றுக்கள் இருக்கின்றன. அந்தத் தொழிலாளர்கள் - இந்த நாட்டின் வளத்துக்காக உழைத்த அந்தத் தொழிலாளர்கள் - இன்று நேற்று வந்தவர்களல்ல. எத்தனை எத்தனையோ தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள். (22)

திரு. அ.அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.தி.மு.க தடை செய்யப்பட்ட பின்னர் அதன் சமூகசீர்த்திருத்த நடவடிக்கைகளையையும், ஏனைய செயற்பாடுகளையும் எடுத்துக்கூறி இ.தி.மு.க  மீதான தடை நியாயமற்றதெனக் கூறினர். அதேவேளை இ.தி.மு.க மீதான தடையை வரவேற்ற ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் மற்றும் இ.தி.மு.க மீதான தடையை கண்டித்த சமசமாஜக் கட்சி உறுப்பினர்களும் தமது உரைகளில் ஒருவிடயத்தைத் தெளிவாக முன் வைத்தனர். அதாவது மலையக மக்களின் அடிப்படை உரிமையான பிரஜாவுரிமை பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினர். பிரஜாவுரிமை மறுக்கப்பட்டமையே இ.தி.மு.க  வின் வளர்ச்சிக்கான பிரதானக் காரணமெனக் கூறினர்.

இ.தி.மு.க தடை செய்யப்பட்டதுடன் பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியன் உட்பட அதன் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டதுடன் இரண்டாவது தலைமையினைக் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தாம் முன்னெடுத்த சீர்த்திருத்த நடவடிக்கைகளை பல்வேறு மன்றங்களை உருவாக்கி அதன் ஊடாக செயற்படுத்தினர். வள்ளுவர் மன்றம். பகுத்தறிவு மன்றம், அண்ணா மன்றம், பாரதிதாசன் மன்றம் போன்ற மன்றங்களை மலையகப் பகுதிகளில் அமைத்து செயற்பட்டதுடன் கொழும்பில் அகில இலங்கை வாலிப முன்னணி என்ற பெயரில் செயற்படலாயின. இதன் தலைவராக பி. நடராஜ செயற்பட்டதுடன் இன்றைய மலையக இலக்கிய கர்த்தாக்களான அந்தனிஜீவா, இரா. மலைத்தம்பி எஸ். மயில்வாகனம் போன்றோர் இவ் வாலிப முன்னணியில் முக்கிய பங்கேற்று செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

இ.தி.மு.க.வின் செயற்பாடு காரணமாக கழகம் எனும் சொல் மலையக மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இ.தி.மு.க தடை செய்யப்பட்டதுடன் இ.தி.மு.க வுடனான தொடர்பினை குறைத்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர் இ.தி.மு.க. வின் துணையுடன் மலையகத்தில் பெற்றுக் கொண்ட அறிமுகத்தினை பயன்படுத்த முனையலாயினர். இ.தி.மு.க தடைசெய்யப்பட்ட வேளையில் இலங்கை தொழிலாளர் கழகம் எனும் தொழிற் சங்கத்தை உருவாக்கி தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்தனர். இ.தி.மு.க தடை செய்யப்பட்ட வேளையில் அவ்வியக்கம் சிதறி விழாது காப்பாற்ற வேண்டிய தமிழரசுக் கட்சியினர் தோழமைக்கு முரணாக பிறிதொரு தொழிற் சங்கத்தையமைத்து மலையகத்த்தில் செயற்பட ஆரம்பித்தமையை தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த இ.தி.மு.க தலைமையினர் வன்மையாகக் கண்டித்தனர். தமது மாற்று அமைப்புகளான மன்றங்கள் ஊடாக இதற்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தில் இணைய வேண்டாம் என மன்றங்கள் ஊடாகக் கோரினர்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates