Headlines News :
முகப்பு » , , , » "எழுதாத வரலாறு" முன்னுரை - பெ.முத்துலிங்கம்

"எழுதாத வரலாறு" முன்னுரை - பெ.முத்துலிங்கம்

மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம். 

முன்னுரை

ஓர் இனம் அல்லது இனக்குழுமம் தமது தனித்துவத்தை நிலை நிறுத்த முனைகையிலேயே தம் கலாசாரம், மொழி, மற்றும் சமூக வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை நுால் வடிவில் வெளிக் கொணரும் முயற்சியில் ஈடுபடுகின்றது. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட இனம் பிற இனத்தால் ஒடுக்கப்படுகின்ற அல்லது இரண்டாம் தரமாக கணிக்கப்படுகிற வேலையிலே தமது தனித்துவத்தை நிலைநாட்டுவதில் வேகமாக செயற்படுகின்றது. இலங்கையின் இரு பெரும் தேசிய இனங்களான சிங்கள இனமும், இலங்கை தமிழ் இனமும் பிரித்தானியரின் ஒடுக்குதலுக்குட்பட்டிருந்த காலத்திலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களும், இந்திய வம்சாவளி மலையகத் தமிழரும் மிக அண்மையிலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடலாயினர். அதிலும் குறிப்பாக மலையகத் தமிழர் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அதிக அக்கறை காட்டலாயினர்.

பிரித்தானியரால் தோட்டத்துறையில் வேலைக்கமர்த்துவதற்காக கொண்டு வரப் பட்ட தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் நுாற்றியெழுபத்தைந்து வருட வரலாற்றை கொண்டிருந்த போதிலும், தாம் எந்த நாட்டிற்கு சொந்தமானோர் என்பதைக் கண்டறிவதில் வரலாற்றில் பெரும் பகுதியைக் கழித்து விட்டனர். இத்தேடலே இவர்களது தனித்துவத்தை, நிலைநிறுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. தமக்கென நாடொன்று இல்லாதோர் எவ்வாறு தனித்துவத்தை நிலைநிறுத்துவதில் அக்கறை காட்ட முடியும். எவ்வாறாயினும் எண்பதுகளில் முனைப்படைந்த வடகிழக்குத் தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய போராட்டம் மற்றும் குடியுரிமை தொடர்பாக ஏற்பட்ட பரிமாற்றங்கள், என்பன இம்மக்கள் தம் தனித்துவத்தை நிலைநிறுத்த உந்து சக்தியாக அமைந்தன. இது நாள்வரை வெளிவந்த பல நுால்கள் இம்மக்களது ஆரம்ப வருகை தொடர்பான வரலாற்றினையும், தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றினையும் உள்ளடக்கியதாக காணப்பட்டன. ஐம்பதுகளின் பிற்பகுதி முதல் இம்மக்களைப் பற்றிய வரலாற்று நுால்கள் ஒருசில வெளிவர ஆரம்பித்த போதிலும் எண்பதுகளிலேயே பல்வேறு நுால்கள் வெளிவர ஆரம்பித்தன. இவற்றுள் பெரும்பாலானவை தலைவர்களினது சொந்த வரலாற்றினை கருப்பொருளாகக் கொண்டமைந்தனவாகவே காணப்படுகின்றன. ஆனால் இலங்கை நாடு சுதந்திரமடைந்தவுடன் சுதந்திரமற்றவர்களாக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்ட இம்மக்கள் தம் சுதந்திரத்திற்காக போராடிய வரலாற்றினைப் பற்றிய நுால்கள் வெளிவரவில்லை.

மலையக மக்களைப் பொறுத்தமட்டில் 1948 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள் என்பனவற்றிலிருந்து இம்மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இவ்வாறு ஒதுக்கப் பட்டமைக்கெதிராக அவர்கள் மத்தியில் செயற்பட்ட தொழிற்சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் சொல்லளவில் எதிர்ப்பை காட்டின. மாறாக இவ்வுரிமையை வென்றெடுப்பதற்காக எவ்வித போராட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

தாம் எந்த நாட்டைச் சார்ந்தோர் என்பதனை தீர்மானிக்க முடியாமல். நான்கு தசாப்தங்களைக் கழித்து விட்ட இம்மக்கள், தமது அடிப்படை மனித உரிமைக்காக குரலெழுப்பவில்லையா? போராடவில்லையா? அல்லது உரிமைக்காகப் போராட இவர்கள் மத்தியில் எந்தெவாரு இயக்கமும் தோன்றவில்லையா? என்ற கேள்வி இயற்கையாகவே எழலாம். காலனித்துவ வாதிகளினால் த ம து. காலனிகளில் அறிமுகப் படுத்தப் பட்ட தோட்டத்துறைகளுக்கு, பிறிதொரு காலனியைச் சார்ந்த தொழிலாளர்களே அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மக்கள் குறிப்பிட்ட நாட்டின், தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஒரு சில தசாப்தங்களுக்குள் இம்மக்கள் ஒதுக்கலுக்கும், ஒடுக்குதலுக்கும், எதிராக போராட ஆரம்பித்ததுடன், தேசிய நீரோட்டத்தில் இணைவதில் வெற்றி கண்டனர். குறிப்பாக அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் குடியமர்த்தப்பட்ட கறுப்பின மக்களே இவ்வாறு வெற்றிகண்ட பிரிவினராவர்.

அமெரிக்க கறுப்பின மக்களைப் போன்று இலங்கைவாழ் இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான பாரிய போராட்டங்களை முன்னெடுக்காவிட்டாலும், அடிப்படை மனித உரிமை மறுப்புக்கும் ஒடுக்குதலுக்கும் எதிராக போராட்டங்களை மேற் கொண்டனர். ஒடுக்குதலுக்கு எதிராக குறிப்பாக தொழிற்சங்க ஒடுக்கலுக்கு எதிராக காலத்திற்கு காலம் போராடி வந்துள்ளனர். அதேவேளை அடிப்படை உரிமை யான குடியுரிமைக் கோரியும் போராட்டங்களை மேற் கொண்டுள்ளனர். இப் போராட்டம் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவில்லை.

மலையகத்தில் இன்று தொழிற்சங்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஒவ்வொரு தொழிற்சங்கமும் தொழிற்சங்க உரிமைகளுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் அடிப்படை மனித உரிமை யான குடியுரிமைக்காக மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்கவில்லை. இருந்தபோதிலும் மலையகத்தில் தொழிற்சங்கரீதியில் செயற்படாத பிறிதொரு இயக்கம் இப்போராட்டத்தை முன்னெடுத்தது. தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்துக் கொண்டே தமது அடிப்படை மனித உரிமைக்காக குரலெழுப்பும் இவ் இயக்கத்தின் கீழ் அணிதிரண்ட மலையகத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கதிகமாக மலையக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற் றிருந்த இலங்கை திராவிடர் முன் னேற்றக் கழகமே இப் போராட்டத்தினை முன் னெடுத்தது. ஆனால் இவ் வரலாறு வெளிக்கொணரப்படவில்லை. மலையக வரலாற்றினைப்பற்றி எழுதிய நுால்களும் இதனை உள்ளடக்கவில்லை. இதனை வெளிக்கொணர்வது இன்றைய யுகத்தின் தேவையாகும் இத்தேவையின் வெளிப்பாடே எழுதாத வரலாற்றின் உருவாக்கம்.

மலையக மக்கள் மத்தியில் அறியாமையும் எழுத வாசிக்க தெரியாத நிலையும், கோலோச்சிய காலகட்டத்திலேயே இலங்கைத் திராவிடர் கழகம் மக்கள் மத்தியில் செயற்பட ஆரம்பித்தது. தமிழகத் திராவிட இயக்கப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைத் திராவிடர் முன்னேற்றக்கழகம். தமிழகத் திராவிடர் இயக்கத்தினைப்போல் மலையக மக்கள் மத்தியில் நிலவிய சாதியத்தையும், அறியாமையையும் களையும் பணியில் ஈடுப்பட்டது. நாளடைவில் சாதிய கொடுமை நிலவிய வடகிழக்கு பகுதிக்கும் வியாபித்தது ஆரம்பத்தில் சாதியத்தையும், அறியாமையையும் களைவதில் ஈடுபட்ட இ. தி. மு. க மலையக மக்களின் அடிப்படை உரிமையான. குடியுரிமைப் பிரச்சினையையும், அதனைத் தொடர்ந்து அனைத்து தமிழ் பேசும் மக்களும் முகம் கொடுத்த மொழிப்பிரச்சினை தொடர்பாகவும், குரலெழுப்பியதுடன் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து யுகத்தின் தேவைக்கேற்ப தம்மை நெகிழ்வுப்படுத்தி எழுபதுகளில் தம்மை அரசியற் கட்சியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், இடதுசாரி அரசியலைப் பின்பற்றியது. நாட்டில் தமிழ் தேசிய வாதம். வலுப் பெறுவதற்கு துணை நின்ற இ. தி. மு. க தமிழ் தேசிய வாதம் உயர் கட்ட நிலையை அடையும் வேளையிலேயே இடதுசாரி அரசியலைக் கடைப்பிடித்தது. இந்நிலைப்பாடு அதன் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

இ. தி. மு. க தமது பரிணாம வளர்ச்சியின் உயர்கட்டமாக இடதுசாரி அரசியலைக் கடைப்பிடித்த போதும், தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்த இன ஒடுக்கல் காரணமாக குறிப்பாக இடதுசாரி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகிய முறையின் பிரதிபலனாக இடது சாரி அரசியலை கடைப்பிடித்த இ. தி. மு. க தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்தது.

எனினும் தமது மூன்று தசாப்த வரலாற்றில் மலையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை. சாதிக் கொடுமை, குடியுரிமை மறுப்பு, மற்றும் மொழியுரிமை மறுப்பு என்பவற்றிற்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக குடியுரிமை மறுப்புக் கெதிராக மேற்கொண்ட போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். இப்போராட்டத்தின் தாக்கமே ஸ்ரீமா சாஸ்திர ஒப்பந்தத்திற்கு வழிகோலியது.

இ. தி. மு. க வின் வளர்ச்சிப் படிகளுக்கமைய நூலின் அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வமைப்பின் தலைவராக வீற்றிருந்த திரு. ஏ. இளஞ்செழியனின் பெயர் தொடர்ச்சியாக இடம் பெறுவதை தவிர்க்கமுடியாது போய்விட்டது.

சில வேளைகளில் ஒரு சமூகத்தினதோ அல்லது இயக்கமொன்றினதோ வரலாற்றை ஆராய்கையில் சில தனிநபர்களின் முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாதுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கதிகமாக இ.தி.மு.க வின் தலைவனாக, அமைப்பாளனாக, ஊழியனாக திரு. இளஞ்செழியன் செயற்பட்டுள்ளமையினாலும் மற்றும் அனைத்து தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதில் அவரது பங்கு பெருமளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளமையினாலும் நுால் முழுவதும் அவரது பெயர் தவிர்க்க முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் இவ்வாய்வின் இறுதி நோக்கம் மலையகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றினை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் வெளிக்கொணர்வதாகும். அதேவேளை மறைக்கப்பட்ட வரலாற்றினை அறிவதன் ஊடாக புதிய வரலாற்றிற்கு வித்திட வேண்டும் என்பது இன்னுமொரு எதிர்பார்ப்பாகும். இன்றைய மலையகத்தின் அரசியல். சமூக, பொருளாதார, மற்றும் கலாசார உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் இ. தி. மு. க வினைப் போன்ற ஓர் வெகு ஜன அமைப்பினை மலையகத்தில் உருவாக்குவது வரலாற்றுத் தேவையாக உள்ளது.

ஏனெனில் இ.தி.மு.க எவ்வுரிமைகளுக்காக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததோ, அவ்வுரிமைகள் இதுநாள்வரை மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை. மலையக மக்களில் ஒரு பிரிவினருக்கு பிரஜாவுரிமை கிடைத்தபோதிலும், அது நாட்டின் ஏனைய பிரஜைகள் கொண்டிருக்கும் உரிமைக்கு சமதையல்ல. இவர்கள் வெறுமனே பதிவுப்பிரஜைகளே. எச்சந்தர்ப்பத்திலும் இவ்வுரிமை பறிபோகலாம். எனவே பதிவுப்பிரஜைக்கு பதிலாக ஏனைய பிரஜைகளைப்போல் எம்மையும் நாட்டின் குடிகளாக அங்கிகரிக்க கோருவதுடன், தொடர்ந்து நாடற்றவர்களாக இருக்கும் நான்கு இலட்சத்திற்கு அதிகமாகவுள்ள மலையக மக்களுக்கு குடியுரிமை கோரியும் போராட வேண்டியுள்ளது. இவ்வரலாற்று தேவையினைப் பூர்த்தி செய்யும் நாயக, நாயகிகளுக்கு இந்நூல் ஓர் ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலினை வெளிக்கொணர்வதற்கான முயற்சிகள் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும் தொண்ணுாறுகளின் பிற்பகுதியிலேயே வெளிக்கொணர முடிந்தது. இந்நுாலுக்கான ஆதாரங்கள் தேசிய சுவடிகள் திணைக்களத்திலிருந்து குறிப்பாக பெரும் ஆதாரங்கள் திரு . ஏ . இளஞ்செழியனின் தூசிப்படிந்த புத்தக அலுமாரியிலிருந்து பெறப்பட்டது. அத்துடன் திரு. ஏ. இளஞ்செழியனுடனும் இ.தி.மு.க வின் மூத்த உறுப்பினர்களுடனும் அவ்வப் போது மேற் கொண்ட கலந்துரையாடலும் நூலின் தோற்றத்திற்கு பேருதவியாக அமைந்தது.

இறுதியாக இந்நூலை எழுத ஆரம்பித்த நாள் முதல் கையழுத்துப் பிரதியை சரிபார்ப்பதுடன் அவ்வப்போது ஆலோசனை வழங்கிய செல்வி. க. மேனகா, அந்தோனி ஜீவா மற்றும் நூலின் அச்சுப்பிரதியைச் சரிபார்த்த திரு. எஸ். சண்முகநாதன், திரு. ஜே. ஜேஸ் கொடி. திருமதி. யோகலட்சுமி முத்துலிங்கம், சமூக அபிவிருத்தி நிறுவனத்தைச் சார்ந்த செல்விகள் கி.யோகேஸ்வரி, வே. லக்ஷ்மி. வீ. ஜோதிலக்ஷ்மி, சிங் கள மொழியில் அச்சுப் பிரதியை சரிபார்த்த திரு. நிஹால் ஹெட்டியாராச்சி, செல்வி சின்தா கருணாரட்ன என்போருக்கும்  இந்நூலின் வெற்றியில் பங்குண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.

பெ. முத்துலிங்கம்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates