Headlines News :
முகப்பு » , , » தொழிலாளர்களின் போராட்ட உணர்வு சிதைக்கப்பட்டு விட்டதா? - ஜோதிமலர்

தொழிலாளர்களின் போராட்ட உணர்வு சிதைக்கப்பட்டு விட்டதா? - ஜோதிமலர்


செப்டெம்பர் தொடக்கம்  கடந்த மூன்று மாதங்களாக எமது தோட்டத் தொழிலாளர்களை படாத பாடுபடுத்தி வறுத்தெடுத்து விட்டார்கள்.

ஆயிரம் ரூபா இல்லாமல் யானை வந்து அசைத்தாலும் ஓரடி விலகேன் என்று ஆறுமுகன் தொண்டமான் ஒருபுறம் அடம்பிடிக்க, பெற்றால் ஆயிரம் இல்லையேல் வீரமரணம் என்று அவரது ஆதரவாளர்கள் ஊர் ஊராக சென்று தண்டோரா போட்டு, மார்தட்டி மக்கள் நெஞ்சில் தீயை மூட்ட எமது மலையகம் எங்கும் வெடித்தெழுந்தது போராட்டம்.

பாதயாத்திரைகள் ,தீயிட்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பரித்து எழுந்த தோட்டங்கள்!! தளிர் கிள்ளாமல் வெறிச்சோடிய தேயிலை மலைகள்!!! ஓங்கி வளரும் விலைவாசி உயர்வை, சமாளிக்க முடியாத மக்கள் வயிற்றில் ஏற்கனவே மூண்டிருந்த தீ தான் அது.

ஆனால், அந்தத் தீயை அணைக்க எந்தவொரு வழியும் இந்தத் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு இல்லாமல் போனது. காலம்காலமாய் பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்றும் பின், கூட்டு ஒப்பந்தம் என்றும் வாய்ப்பேச்சிலேயே கூத்தடித்து மாயாஜாலம் செய்தவர்களுக்கும், பாராளுமன்றத்துக்குள்ளே மண்ணெண்ணெய் கேனை தூக்கிச் சென்று தலையில் கொட்டிக்கொள்ளப் போகிறேன் என்று கோமாளி கூத்தடித்தவர்களுக்கும், சூதுவாதற்ற எமது தொழிலாளர் வேதனத்துக்காக ஓர் வழிகாட்ட முடியவில்லையே என்பதில் தான் எமது தலைமைகளின் கையாலாகாதத்தனம், வெட்ட வெளிச்சத்திற்கு இன்று வந்துள்ளது.

இத்தனை லட்சம் பேருக்காய் பேரம் பேசுகின்றோம் என்று கூறிக்கொண்டவர்களும், பேச்சுவார்த்தையில் அப்படி என்னத்தான் பேசினார்கள் என்பதை ஒரு நாளும் வெளியே சொன்னதில்லை என்பதுவே சரித்திரம்.. முதலாளிமார்களும் சரி இந்த பேரம் பேசியவர்களும் சரி காதோடு காது வைத்தாற்போல் பேசி முடித்து, விசயத்தை அவர்களுக்குள்ளேயே அடக்கி, கொடுக்க வேண்டியதை கொடுத்து பெற வேண்டியதைப் பெற்று தொழிலாளர்களுக்கு ஆப்பு வைத்ததே இன்றைய வரைக்கும் இருந்துள்ள சரித்திரமாகும். இதற்கு சற்றும் குறைவைக்காமலேயே இப்போதும் நடந்து முடிந்துள்ளது.

மலை நாடெங்கும் தொழிலாளர் மக்கள் தமது வயிற்றுப் பசியோடு கடந்த பல மாதங்களாய் வாடி நின்ற போது கூட்டு ஒப்பந்தம் காலாவதியாயிற்று என்று புது ஒப்பாரி வைத்தார்கள். (அப்பொழுது வேலை நிறுத்தம் பற்றி எதுவும் பேசவில்லை)

பின்னர் புதிய ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கின்றோம் என்றார்கள். (அப்போதும் வேலைநிறுத்தம் பற்றி எந்தவித கதையுமில்லை. ஆனால், அமைச்சுப் பதவி கிடைத்தவுடனேயே வேலை நிறுத்தம் பற்றி பேசுகிறார்கள்) எவ்வளவு காலம் தான் இந்த பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கின்றோம் என்று இவர்கள் கூறினார்கள்?? இரண்டு மாதங்களுக்கு மேல்!!

இதைப் பொறுக்காத எம் மலையக இளைஞர்கள்  அதாவது எமது தொழிலாளர் பிள்ளைகளின் வாரிசுகள் அவர்களே போராட்டத்தின் முன்னோடியாய் வீதியில் இறங்கத் தலைப்பட்டார்கள். மலையக வரலாறு காணாத நிகழ்வு இது.

மலையக வரலாற்றை எடுத்தால் சம்பள உயர்வுப் போராட்டங்களின் போது முழு மலையகமுமே ஒன்றாய் திரண்டு நாம் தொழிலாளர்கள் என்ற ஐக்கியத்தில், குறித்த தினத்தில், குறித்த நாளில் சமத்துவமாய் போராட்டத்தில், வேலை நிறுத்தத்தில் குதிப்பதே வரலாறாக இருந்துள்ளது. தேவை ஏற்படின், முதலில் ஓர் அடையாள வேலை நிறுத்தத்தை நிகழ்த்துவார்கள். அதற்கும் முதலாளிமார் மசியாத பட்சத்தில் ஒரு முடிவு எட்டப்படும் வரை வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

இதுவே காலங்காலமாய் வரலாறாக இருந்துள்ளது. அதாவது தமக்கு தீங்கிழைக்கப்படும் போது, அத்தீங்கை எதிர்த்து தொழிலாளர் போராட்டங்கள் ஒன்றிணைந்த பாணியில் ஒரே நாளில் போராட்டத்தில் குதிப்பதே வரலாறாக இருந்துள்ளது.

இதையே – இந்த ஒற்றுமையையே – இந்தப் போராட்ட வர்க்க உணர்வையே இன்று இவர்கள் சிதைக்க முற்பட்டுள்ளார்கள் அல்லது வெறும் வேடிக்கையாக்க முற்பட்டுள்ளார்கள். பேச்சு வார்த்தைப் பேச்சுவார்த்தை என்று தொழிற்சங்கத் தலைமைகள் இழுக்க இழுக்க மலையகமும் மேலும் சிவந்து சிவந்தே வந்தது. இதைத் தடுக்கவோ என்னவோ, இவ்வளவு காலம் பேசாதிருந்த ஆறுமுகன் தொண்டமான் ஓர் அதிரடி அறிவிப்பை அறிவித்தார். அதாவது போராட்டத்தை ஆரம்பிக்கப் போகின்றேன் அல்லது அதுவும் சரிவராவிட்டால் எனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யப்போகின்றேன் என்றார்.

செய்தாரா என்றால், இல்லை! ராஜபக் ஷ பிரதமரானவுடன் சந்தோசமாய் ஓர் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு வாயெல்லாம் பல்லாக தொலைக்காட்சியில் சிரித்தார்!!

சம்பள உயர்வு? – கிடப்பில்!

இராஜினாமா? – அதை யார் சொன்னது?

விக்கித்துப்போன மலையக மக்கள் விழிக்கும் முன்னரே உயர் நீதிமன்றம் வைத்தது ஆப்பு. மகிந்தவின் பிரதமர் வேடத்தையும் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சர் பதவியையும் இடைநிறுத்திவிட்டது. நாடு பெரிதும் குழம்பித் தவிக்க–இதை மேலும் போட்டுக் குழப்பினால் ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினாலும் கைப்பற்றி விடுவார் என்ற நம்பிக்கை தொழிற்சங்கத் தலைமைக்கு ஏற்பட இறங்குங்கள் வேலை நிறுத்தத்தில் என்று ஆறுமுகன் திடீர் அறிவிப்பொன்றைச்செய்தார்.

அமைச்சுப் பதவிகளை மீட்டெடுக்க ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்களை வெறும் பகடைகளாக்கி, வேலை நிறுத்தத்தில் இறங்கச் செய்த வெறும் நாடகமே இது என்பதை அறியாத தொழிலாளர்கள் தொழிற்சங்க வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்தனர். இங்கு எழும் கேள்விகள் இது தான்,

• வேலை நிறுத்தத்தின் முன் இ.தொ.கா. ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்ததா?

• அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து ஓர் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டதா?

• வேலை நிறுத்தத்தின் முன் வேலை நிறுத்தம் தொடர்பில் அறிவிப்பு (நோட்டிஸ்) வழங்கப்பட்டதா?

• வேலை நிறுத்தம், நாட்டில் காணப்படும் தகுந்த சூழலில் மேற்கொள்ளப்பட்டதா?

• கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி முடிந்தவுடனேயே முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடுதழுவிய ஓர் அடையாள வேலை நிறுத்தத்தை ஏன் செய்யவில்லை?

இவையெல்லாம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளே.

இவற்றின் மர்மம் என்ன? இவற்றையெல்லாம் தொழிலாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தொழிலாளர் சக்தி மாபெரும் சக்தியாகும். தொழிலாளர் பலம் மாபெரும் பலமாகும். அவர்கள் நினைத்தால் இவ்உலகத்தையே புரட்டித் தள்ளும் சக்தி அவர்களுக்கு உண்டு. இதையே மலையக வரலாறு எமக்கு காலங்காலமாய் சொல்லித் தந்துள்ள பாடமாகும். வெறும் அடிமையாய் இருந்த தொழிலாளி (ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பாய் கங்காணிமார் காலத்தில்) இன்று குறிப்பிடத்தக்களவு சுதந்திரமாய் இருக்கின்றார்கள் என்றாலும் அது அவர்களது போராட்டத்தால் அவர்களது சக்தியால் சாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

இப்படிப்பட்ட தொழிலாளர் சக்தியைத்தான் இன்று சிலர் சின்னாப் பின்னமாக்கிப் பார்க்கின்றார்கள்.

அதன் வெளிப்பாடே இந்த எட்டு நாள் போராட்டத்தின் வெற்றியின்மை. இவற்றையெல்லாம் தொழிலாளர்கள் உணர்ந்து மீண்டும் ஒன்றிணைய வேண்டும். தம்மை ஏய்த்து பிழைப்போரை கண்டுகொள்ள வேண்டும். தாம் வாக்களித்து வெற்றி பெற செய்தோரிடம் உரத்த கேள்விகளைக் கேட்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தங்களின் முழு உண்மைகளையும் வெளிப்படுத்த கோரவேண்டும். பேச்சுவார்த்தைகளின் முழுவிவரங்களையும் வெளியிடக்கோர வேண்டும். இல்லாவிடின் சிலரின் ஏய்த்தலும், மோசடியும், திருட்டும், வஞ்சனையும் இன்னமும் நீடிக்கும். எம்மை பலிக்கடாக்களாக்கிவிடும்.

உண்மைதான். தற்போதைய இந்த வேலை நிறுத்தமானது எந்தவொரு திட்டமிடலும் இன்றியே நடத்தப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த போராட்டம் எந்தவொரு முடிவும் இல்லாமல் தொழிலாளர்களின் ஊதியத்தை பறித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பித்து விட்டன. தொழிலாளர்கள் தமது பிள்ளைகளின் பாடசாலை செலவீனங்களுக்கு என்ன செய்வர் என்பது பற்றியெல்லாம் இந்த பிரதிநிதிகளுக்கு கவலையில்லை. அமைச்சர் பதவியை அல்லது எம்.பி பதவியை இராஜினாமா செய்வேன் என்று முழங்கி தள்ளியவர்கள் இதைப்பற்றி எல்லாம் யோசித்துத்தான் முடிவெடுத்தார்களா?

விடயங்கள் இப்படி இருக்கையில், தொழிலாளர்களை இன்னும் ஏமாற்றும் வகையில் இன்றும் புது வேடம் போடப்படுகின்றது. கறுப்புச்சட்டைகளை சீருடை போன்று அணிந்து கொண்டு குடும்பம் சகிதம் வரிசை வரிசையாகக் காட்சி தருகின்றார்கள். ஏன் இந்த கறுப்புச்சட்டை?

கறுப்புச்சட்டைக்கு ஓர் வரலாறு உண்டு! அது திராவிடக் கழகத்தின் இலட்சினை. இந்த வரலாறு எப்படி இவர்களுக்கு புரியப்போகிறது. கறுப்புச்சட்டைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இனி யார் இந்த சம்பள உயர்வுப் போராட்டத்தை முன்னெடுப்பது? கம்பனிகளுடனான பேச்சுவார்த்தையை யார் முன் நின்று நடத்துவது? இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும், புதிதாய் தெரிவு செய்யப்படும் அரசு அல்லது அதனது உத்தரவின் பேரில், தொழில் திணைக்கள ஆணையாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையானது மிக வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். அனைத்து விபரங்களும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் அறியத்தரப்பட வேண்டும். இவை பத்திரிகையில் அல்லது வானொலியில் உடனடியாக பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.எந்த காரணத்தினாலும் மலையக தொழிற்சங்க இயக்கத்தை கட்டுக்குலைக்கவோ அல்லது நாசமுறச் செய்யவோ இடமளிக்கக்கூடாது. மலையக தொழிற்சங்க இயக்கத்தை கட்டுக்குலைக்கவும், நாசமாக்கவும் சில வெளிச் சக்திகள் முயலலாம். அவர்கள் தமது அரசியலை மலையக அரசியலுடன் கலந்து, மலையக தொழிலாளரை வெறும் காவு கொடுக்கும் நிகழ்வொன்றுக்கே இட்டுச் செல்லலாம்.எனவேதான் கறுப்புச்சட்டைகள் குறித்து எவ்வளவு அவதானம் தேவையோ அதே அவதானம் தொழிலாளர் தமது நாளைய பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளுதல் வேண்டும்.இதனால் தத்தமது தொழிற்சங்கத் தலைமைகளுடன் தொழிலாளர்கள் நேரடி நிபந்தனைகளை விதிக்க வேண்டும். மீண்டும் இன்னுமொரு தடவை சிந்திப்போம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates