ஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய அரசியல் தலைவர்களை அவர்களின் செயற்பாடுகளுக்கும் அறிவுக்கும் அமைய காரணப் பெயரிட்டு அழைப்பது தமிழர் மாண்புகளில் ஒன்று, தமிழக அரசியல்வாதிகளில் அறிஞர், கலைஞர், பாவேந்தர், புரட்சிக் கவிஞர், பாவலர், சிலம்புச்செல்வர், கர்மவீரர், பொன்மனச் செம்மல், தீரர் எனப் பலர் இன்றும் எம் கண்முன்னே வந்து செல்கின்றனர். அவர்களது சேவைகளும் அர்ப் பணிப்புகளும் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. இதேபோன்று இலங்கை அரசியலிலும் சிலரைக் கூறலாம். அதில் தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அதிலும் மலையக பிரமுகர்கள் எத்தனைப்பேர் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொழிலாளர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிப் பதற்கு நாம் தான் காரணம் என்றும் அவர்களுக்கு சொந்தக் காணி வாங்கிக்கொடுத்தது நாம் என்றும் பெயருக்கு முன்னால் தாமே காரணப்பெயர்களைப் போட்டுக்கொள்ளும் அரசியல் கலாசாரம் மலையகத் துக்கு புதியதல்ல. ஆனால், இவர்கள் எவரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு எதுவும் செய்திருக்கின்றார்களா அதற்கு நன்றி கூறும் விதமாக ஏதாவது இவர்களுக்கு கெளரவப் பெயர் வைக்கலாமா என்றால் ஆயிரம் ரூபா கோரிக்கை தான் கண்முன்னே வந்து நிற்கின்றது. என்ன அடிப்படை காரணங்களை முன் வைத்து அத்தொகைப் பற்றி பேசப்பட்டதோ அதை பெற் றுக்கொடுப்பதற்கான எத்தகைய தார்மீக முயற்சி களையும் மனிதாபிமான ரீதியில் எந்த மலையக அரசியல் பிரதிநிதியும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதே ஆயிரம் ரூபா கோரிக்கையே தொழிற்சங்கங்களால் முன் வைக் கப்பட்டது. ஆனால், இரண்டு வருடங்களுக்குப்பிறகு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா என்று அது மாற்றப்பட்டது.
கூட்டு ஒப்பந்த வரலாற்றில் ஆகக்கூடுதலாக 20 வீத சம்பள அதிகரிப்பையே கம்பனிகள் இதுவரை வழங்கியுள்ளன. ஆனால், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கமான இ.தொ.கா, அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இது அடிப்படைச் சம்பளத்தின் 100 வீத அதிகரிப்பு கோரிக்கையாகும், தமது கோரிக்கை சாத்தியமாகுமா, எந்த அடிப்படையில் இது கேட்கப்பட்டது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் தொழிற்சங்கத்திடம் பதி லில்லை . ஆனால் இவர்கள் மீது நம்பிக்கை வைத்த தொழிலாளர்கள், சிவில் சமூகத்தினர் களத்திலிறங்கி ஆர்ப் பாட்டங்களை மேற்கொண்டனர். எனினும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காலகட்டங்களில் தமது நாளாந்த சம்பளத்தை இழந்ததே மிச்சம். நாட்டில் தோன்றிய குழப்பகரமான நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தொழிற்சங் கங்கள் மாறி மாறி தொழிலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொண்டதிலும் தொழிலாளர்களை ஏமாற்றுவதிலுமே வெற்றி கண்டன.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத பிரதான தொழிற்சங்கங்களும் இதையே தொடர்ந்தன. தற்போ துள்ள வாழ்க்கைச்செல்வின் படி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தொகை எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது குறித்த எந்த அறிவார்ந்த புள்ளி விபரங்களும் தகவல்களும் எந்த தொழிற்சங்கங்க ளிடமுமில்லை. அது தொடர்பாக புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும் இத்தொழிற்சங் கங்கள் கணக்கிலெடுக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மேற் கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்த விவகாரங்களிலேயே சாணக்கியமான முடிவுகளை எடுக்க முடியாத தொழிற்சங்கங்கள் எவ்வாறு பெருந்தோட்டத்தொழிற் துறை பற்றிய எதிர்கால சிந்தனையை கொண்டிருக்க முடியும்? இவர்களா தொழிலாளர்களின் பாதுகாப்பு கவசங்களாக திகழப்போகின்றார்கள்?
தோல்வியை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் மெளனம் காப்பதைத் தவிர வேறு வழியின்றி வாய் பொத்தி நிற்கின்றன. கடந்த முறை போன்றே இம்மு றையும் நீண்ட இழுபறிகளுக்குள் சிக்கித்தவிக்கின்றது கூட்டு ஒப்பந்தம். அநேகமாக அடுத்த வருடமும் இந்நிலை தொடரும் சாத்தியங்களே உருவாகியுள்ளன. ஆக வரலாற்றில் இவர்கள் ஆயிரம் ரூபா தலைவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவா கியுள்ளது. வேறு எக்காலத்திலும் இல்லாத நெருக்க டிகள் பெருந்தோட்டப்பகுதிகளில் உருவாகியுள்ளன. தொழிற்சங்க அரசியல் தலைமைகளிடத்தே நம் பிக்கை யிழந்து தனிமைப் பட்டுள்ளனர் தொழிலாளர்கள், இந்த விரக்தி நிலை நீடிக்குமாயின் தொழிலாளர்களின் கட்டுக்கோப்பு மேலும் தளர்ந்து அவர்கள் சிதறிப்போகும் அபாயம் உருவாகும். இதை உணர்ந்தாவது மேலும் அவர்களை தவிக்க விடாது ஆயிரம் ரூபா இல்லாவிட்டாலும் ஒரு நியாயமான தொகைக்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் முன் வரவேண்டும். அல்லது ஆயிரம் ரூபாவை வழங்க முடியுமா முடியாதா என்ற பதில் ஜனாதிபதியிடமிருந்து வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...