இலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் கண்டதை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாதிய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிறார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்.
கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக எனது நெருங்கிய தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.
அவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார்.
"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.
ஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.
"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.
ஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.
“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதை உடனடியாக செய்வதற்கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார் லெனின்.
நான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.
பின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.
“தோழர்! வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வழி செய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.
தோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை அதற்கு முன் நான் கண்டதில்லை. அவரின் சமூக பிரக்ஞை தான் எங்களை இணைத்தும் வைத்திருந்தது.
அதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது.
ஆக வெகுஜன சூழலில் இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட தூஷண சொல் சக்கிலி என்கிற சொல். எவரையும் பயமுறுத்தக்கூடிய சொல் அது. எவரையும் புண்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒன்றாக வலுப்பெற்றிருக்கிறது. இழிவுணர்வை ஏற்படுத்தக்கூடியதும், யாரையும் ஆத்திரப்படுத்தக்கூடிய சொல்லும் கூட. ஜாதி, இன, மத, வர்க்க, வேறுபாடுகளையும் கடந்து அனைவரதும் ஆயுதம் சக்கிலி என்கிற ஆயுதம்.
ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது.
தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.
சாதியச் சாடல் என்பது ஒடுக்கபட்ட சமூகம் குறித்து மோசமான ஒன்றாக புனைந்து, பரப்பி, ஜனரஞ்சகப்படுத்தி அந்த சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை அதீதமாக விதைத்து வந்திருக்கிறது. நாமும் அதற்கு துணை போக வேண்டாமே.
இது பற்றிய விரிவான கட்டுரை என்.சரவணன் எழுதிய "தலித்தின் குறிப்புகள்" நூலில் வெளிவந்துள்ளது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...