நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த மலையக மக்களுக்கான பசும்பொன் வீடமைப்புத்திட்டத்தில் பல குறைபாடுகள் வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் எஸ்.அருள்சாமி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன தொண்டமான் உத்தரவிட்டிருப்பதாகவும் எதிர்வரும் வாரமளவில் அந்த அறிக்கைகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறார். மேலும் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படுவதற்கு முன்னரே தொழிற்சங்க, கட்சி ரீதியாக பலர் வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது தொடர்பில் 'கேசரி' வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் விபரம்.
கேள்வி: நல்லாட்சி அரசாங்கத்தின் பசும்பொன் வீடமைப்புத்திட்டம் மற்றும் இந்திய வீடமைப்புத்திட்டங்களில் குறைகள் உள்ளதாக கூறியிருக்கின்றீர்களே ?
பதில்: ஆம் நிச்சயமாக குறைகள் இருக்கின்றன. அவை பயனாளிகளாலும் மக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து குறித்த இடங்களுக்கு உடனடியாக விஜயம் செய்து பார்வையிட்ட பின்னர் அம்முறைப்பாடுகள் உண்மை தான் என்பதை அறிந்தோம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படல் வேண்டும் ஆகவே, இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் எனக்கு அதிகாரங்களை வழங்கினார். அதையடுத்து வீடமைப்புத்தொடர்பான அரச அதிகாரிகள் குழுவினரைக் கொண்டு இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நான் கேட்டுள்ளேன். அனேகமாக இந்த வாரம் அது எமக்குக்கிடைக்கும்.
கேள்வி: வழமை போன்று இது குறை கண்டுபிடிக்கும் செயற்பாடு என சிலர் கூறுகிறார்களே?
பதில்: அந்த சிலருக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் சில வீட்டுத்திட்டங்கள் சரியாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத்தான். ஆனால், முன்பு குறித்த அமைச்சு அதிகாரங்களை கொண்டிருந்தவர்கள் தமது வாக்குகள் உள்ள பிரதேசங்களில் தம் விருப்பப்படி அதாவது தனக்கு நெருங்கிய வட்டாரங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சில விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கின்றார்கள். பெரிய ஊழலே இடம்பெற்றுள்ளது. வீடமைப்பு தொடர்பில் ட்ரஸ்ட் அமைப்பின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதற்கு முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல; அமைப்பின் முன்னாள் தலைவரும் சில அதிகாரிகளும் பதில் கூற வேண்டும்.
கேள்வி: அந்த விதிமுறைகள் என்ன?
பதில்: ஒரு தோட்டப்பிரதேசத்தில் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருவோர் ,ஒரு லயன் அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களாக இருப்போர் ஆகியோருக்கே வீடுகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே ட்ரஸ்ட் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு உள்ள விதிமுறைகளில் முக்கியமானதாகும். இந்த நிலையில் வாழ்ந்து வருவோர் பற்றிய சரியான தகவல்கள் தோட்ட முகாமைத்துவத்தால் ட்ரஸ்ட் அமைப்புக்கு வழங்கப்படல் வேண்டும். இதை தோட்ட நலன்புரி அதிகாரி மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோரே உறுதி செய்தல் வேண்டும். ஆனால், பசும்பொன் வீடமைப்புத்திட்டங்களில் இது பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக குறித்த தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ,இணைப்பாளர்கள் அவர்களது சொந்தங்கள் என பலரும் ஒன்றுக்கு இரண்டு வீடுகளை தமதாக்கிக்கொண்டனர். லயன் வீடுகளில் உள்ளவர்கள் தற்காலிக கூடாரங்களில் உள்ளவர்கள் அப்படியே இருக்கின்றனர். இது அநியாயமில்லையா? அது மட்டுமல்லாது கட்சி ரீதியாகவே பலருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இது முதலாவது விடயம் அடுத்தது பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் என்று கூறப்படுகின்றது, ஆனால், அத்தொகைக்கு ஏற்றாற்போல் வீடுகள் அமைக்கப்படவில்லை. இது நிதி பயன்பாட்டில் ஊழல் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறான பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்துள்ளன.
கேள்வி: 7 பேர்ச் தனி வீடமைப்புத்திட்டமும் தொழிலாளர்களுக்கு பொருத்தமானதில்லையா ?
பதில்: 7 பேர்ச் காணியுடன் கூடிய வீடமைப்புத்திட்டத்தை நாம் குறை கூறவில்லை அத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. வீட்டிலுள்ள குறைகளை நான் கூறினேன் இப்போது காணி பற்றி கூறுகிறேன் கேளுங்கள். தனி வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள வீடு 550 சதுர அடியில் மட்டுமே உள்ளது. அதாவது இதற்கு 2 பேர்ச் அளவு காணியே தேவைப்படுகின்றது. எவ்விடத்திலும் 7 பேர்ச் காணி அடையாளப்படுத்தப்படவில்லை. அதாவது மாயங்கள் இல்லை. 7 பேர்ச்சை எவ்வாறு அறிந்து கொள்வது? மட்டுமல்லாது ஒப்பனை என்ற பெயரில் சாதாரண ஆவணம் ஒன்றையே வழங்கியுள்ளனர். ஒரு வீட்டின் உறுதி என்று கூறும்போது வீட்டின் வரைபடம், காணி பதிவாளரின் கையொப்பம் , பிரதேச த்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளரின் ஒப்பம் முதலியன இருத்தல் வேண்டும். இவர்கள் கொடுத்திருக்கும் ஆவணத்தின் பெறுமதி என்னவென்பதை அவர்களே கூற வேண்டும்.
கேள்வி: அப்படியானால் இ.தொ.கா. முன்வைத்திருக்கும் வீடமைப்புத்திட்டம் என்ன?
பதில்: நாம் தனி வீட்டுத்திட்டத்திற்கு 10 பேர்ச் காணியை அடையாளப்படுத்தி கேட்டிருக்கிறோம். மட்டுமன்றி வீடுகளின் கூரைகளுக்குப்பதிலாக கொங்கிறீட் தளத்தை இடுவதற்கு யோசனை தெரிவித்துள்ளோம். ஏனென்றால் இன்று தொழிலாளர் குடும்பங்களைச்சேர்ந்த இளைஞர்கள் தலைநகரில் பணி பரிந்து வருகின்றனர். தோட்டப்புறங்களில் உள்ள தமது வீடுகளை அப்படி அமைப்பதில் அக்கறை காட்டி வருகின்றனர். ஆகவே, இது மேற்கொண்டு அவர்கள் தமது வீடுகளை விஸ்தரிக்க உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாது ஆங்காங்கே பத்து அல்லது இருபது வீடுகளை அமைப்பதில் என்ன பயன் உள்ளது? நாம் லயன் முறைகளை முற்றாக ஒழித்து அதற்குப்பதிலாக நகரமயமாக்கல் திட்டத்தை முன்வைத்திருக்கின்றோம். ஒரே தோட்டத்தில் 50 ஏக்கர் வரையான காணியில் முழு தோட்ட மக்களுக்கும் வீடுகளை அமைத்து அதில் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இலக்கு.
கேள்வி: பசும்பொன் வீடமைப்புத்திட்டத்தில் கூடுதலாக முறைப்பாடுகள் கிடைத்த பிரதேசங்கள் எவை?
பதில்: பொகவந்தலாவை பகுதியின் கொட்டியாகலை ,கெர்கஸ்வேல்ட், மற்றும் அட்டன் பகுதியில் மல்லியப்பு தோட்டம்,மவுண்ட்வேர்னன் ,டிரேட்டன் ஆகிய தோட்டங்களில் வீடுகள் முறைப்படி அமைக்கப்படவில்லை என்று முறைப்பாடுகள் உள்ளன. ஆனால் நான் ஆரம்பத்தில் கூறியது போன்று டயகம மேற்கில் அமைக்கப்பட்ட வீடுகள் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி: இந்திய வீடமைப்புத்திட்டங்களிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளதா?
பதில்:இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்ட பணிகள் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளிடமே ஒப்படைக்கப்படுகின்றன. இதில் ட்ரஸ்ட் அமைப்பின் பங்களிப்புகள் இல்லாமலில்லை. வீட்டுத்திட்டத்துக்குரிய காணிகளை தெரிவு செய்தல் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை அது செய்கின்றது. ஆனால், இதிலும் அரசியல் தலையீடு இருந்ததாக குறிப்பிட்ட அரச சார்பற்ற அமைப்புகளின் அதிகாரிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர்.
கேள்வி: ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாக கொண்டு வரப்பட்ட வீடமைப்புத்திட்டத்தை வரவேற்க முடியாது என்கின்றீர்களா?
பதில்: அப்படியில்லை ஒரு பக்கம் கொடுத்து விட்டு மறுபக்கம் அள்ளி விடும் குணம் கொண்டவர்கள் அவர்கள். நுவரெலியா மாவட்டத்தில் ஒரு காலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை பெற்றுத்தருவேன் என்று பெரும்பான்மை மக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்தவரின் மகனே இன்று அவ்வேலையை வேறு வழிகளில் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார். அன்று அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இல்லாவிட்டால் இன்று நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையினத்தவர்கள் தான் ஆட்சி செலுத்தி கொண்டிருப்பர். எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று அவர்களுக்கே மறைமுகமாக துரோகம் இழைக்கப்பட்டதோ அவ்வாறு இன்றும் இடம்பெறுகிறது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சி செலுத்தும் சிறுதோட்ட உடமையாளர்களுக்கே சலுகைகள் அள்ளி இறைக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் எல்லாம் சாத்தியமே இல்லை என பகிரங்கமாக கூறித்திரியும் அரசியல்வாதிகளுக்குப்பின்னால் சில தமிழ் பிரதிநிதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். இந்த ஆபத்து அவர்களுக்கு இப்போது புரியாது.
கேள்வி: ட்ரஸ்ட் அமைப்பின் புதிய தலைவர் நியமனம் சட்டபூர்வமானதா?
பதில்: அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் புதிய அமைச்சரவை தாபிக்கப்பட்டது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊடாக மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் சபை கூட்டப்பட்டு அமைச்சரால் எனக்கு முறைப்படி நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது இதில் என்ன சந்தேகம்?
கேள்வி: நிதியத்தின் முன்னாள் தலைவர் வீ.புத்திரசிகாமணி தானே இன்னும் இதன் தலைவர் என்று கூறுகிறாரே?
பதில்: ஐ.தே.க தலைவர் ரணில் என்ன கூறுகிறாரோ அதைத்தான் அக்கட்சியை சேர்ந்த இவரும் கூறுகிறார். அவர் எப்படி பிரதமர் இல்லையோ அதே போன்று இவரும் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் இல்லை.படித்தவர் விடயதானம் அறிந்த ஒருவர் இப்படி சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்ளக்கூடாது. மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு தான் தலைவராக இருந்த காலகட்டத்தின் குறைகளை மறைப்பதற்கு அவர் இவ்வாறு கூறி வருகிறார். நான் மேற்குறிப்பிட்ட வீடமைப்புத்திட்டத்தின் குறைகளுக்கு இவரும் பொறுப்பு கூற வேண்டியவராக இருக்கிறார். விசாரணை அறிக்கை வந்தவுடன் இவரும் சில கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிவரும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றி - வீரகேசரி
நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...