எமக்கு வாக்களித்தவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே பதவிகளை பயன்படுத்துகிறோம்.
அதையும் விட்டுக்கொடுத்தால் எப்படி பேசுவது என்கிறார்கள் மலையக அரசியல்வாதிகள். சரி பதவிகளை வைத்துக்கொண்டு ஏதாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, பின்பு எதற்கு இவர்களுக்கு இந்தப் பதவிகள்? தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா? தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தின் எந்தக் கட்சிகளும் உருப்படியான யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ற அந்தஸ்து மட்டுமே இ.தொ.கா, தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு கமிட்டி ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் உள்ளன.
மற்றும் படி இவர்களால் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய எந்த தீர்க்கதரிசனங்களும் இல்லை. கேட்டால் வாக்குரிமை வாங்கித்தந்தோம் ,பெரும்பான்மையின சமூகத்தினரிடம் இருந்து இத்தனை காலமும் காப்பாற்றி வந்திருக்கிறோம் என்ற பழைய பல்லவிகளையே இவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் பாடாவிட்டாலும் கூட அவர்களின் தொண்டர்களும் உதவியாளர்களும் கச்சிதமாக அதை முகநூல் ஊடாக செய்து வருகின்றனர்.
அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்கிறேன், எம்.பி பதவியை விட்டு வீசுகிறேன் என்று மார்தட்டியவர்கள் இன்று தொழிலாளர்களின் முன் சென்று நிற்க முடியாது. இன்னும் அதிக வேகமாக தமது வாகனங்களால் அவர்களை கடந்து செல்கின்றனர். தொழிலாளர்களை நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியாத திராணியற்று மாவட்ட தலைவர்களை அழைத்து இரகசிய சந்திப்புகளை நடத்துகிறார்கள்.
முதலாளிமார் சம்மேளனம் கூறிய சம்பளத்தொகைக்கு ஒத்து வர முடியுமா? இதை தொழிலாளர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் எனக் கெஞ்சுகிறார்கள். இது இப்படி என்றால் மற்றொரு பக்கம் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பதவியை இராஜினாமா செய்தால் தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தனி வீட்டுரிமை இல்லாது போய் விடும் என்றும் கூறுகிறார்கள். புதிய வீடுகள் இந்த மக்களின் பட்டினியை தீர்த்து விடுமா என்று கேட்கத்தோன்றுகிறது. எங்களுக்கு கொடுத்த பணி, வீடு கட்டிக் கொடுப்பதே. ஆகையால் அதை செய்து வருகிறோம். சம்பளத்தை வாங்கிக்கொடுப்பது அவர்களுடைய வேலை. ஆகவே அதை அவர்கள் பார்க்கட்டும் என்று சமாளிப்பது தான் இவர்களின் அரசியலா?
ஆனால், இவை எல்லாவற்றையும் ஏன் இவர்களால் பாராளுமன்றில் பேச முடியாதுள்ளது? ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற அமர்வுகள் எத்தனைக்கு இவர்கள் சமுகமளித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தாலே உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.
தமது விடிவுக்காக பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைத்தால் இவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே ஒவ்வொருவரும் இன்று வெளியே வந்து தொழிலாளர்களுக்காக போராடி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் இப்போராட்டம் வியாபித்துள்ளது. நாட்டின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கூட தொழிலாளர்களுக்காக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
ஆனால், மலையகப் பிரதிநிதிகளோ ஒன்றுமே நடவாதது போன்று நாட்களை கடத்துகின்றனர்.
அநேகமாக தேர்தல் ஒன்றின் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருந்து இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரமாக்க தயாராகின்றனரோ தெரியவில்லை.
சிந்தித்துப்பார்க்கும் போது இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனரேயொழிய, இவர்களில் எத்தனை பேர் வீதியில் அமர்ந்து ஒரு போராட்டம் செய்யவோ அல்லது உண்ணா விரதத்தை ஆரம்பிக்கவோ தயார்? அல்லது எத்தனை பேர் இவர்களில் அமைச்சுப்பதவியையோ பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையோ இராஜினாமா செய்யத்தயார்?
மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தானது அந்த மக்களுக்கு ஆற்றிய சேவைகளை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகின்றது. என்ன தான் வாக்குரிமை பெற்றுக்கொடுத்து ,வீதிகள் அமைத்து வீடுகள் கட்டிக்கொடுத்தாலும் அடிப்படை பிரச்சினையான ஊதியப்பிரச்சினை இந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
இன்று நாடங்கினும் உள்ள எல்லா சமூக மக்களும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளனர். தாம் ஆதரவு தரும் தேசிய தலைவருக்கு வாக்களித்தால் மட்டுமே, அவரால் மட்டுமே தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மலையகப் பிரதிநிதிகள் நினைத்தார்களேயானால், இவர்களுக்கு எதற்கு அமைச்சுப்பதவியும் பாராளுமன்ற உறுப்புரிமையும்? பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே?. அந்தஸ்து என்பது தமது அமைச்சுப்பதவிகளிலா அல்லது தமக்கு வாக்களித்த மக்களை எங்ஙனம் அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதிலா இருக்கின்றது என்பது குறித்து பிரதிநிதிகள் இனியேனும் சிந்திப்பார்களா?
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...