Headlines News :
முகப்பு » » 1974 ' பஞ்சத்தால் மடிந்த மலையகம்'

1974 ' பஞ்சத்தால் மடிந்த மலையகம்'


இலங்கையில் எந்த மூலைமுடக்காக இருந்தாலும் - மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமானால் அவற்றுக்கு எதிராக பொங்கி எழுந்து - நீதிக்காக தளராது துணிந்து போராடும் மனித உரிமை செயற்பாட்டாளர்தான் அருட்தந்தை மா.சக்திவேல்.
மதத்துக்கு அப்பால் மனிதத்தை நேசிப்பவர். நீதியின் வழி நடப்பவர். சமூகநீதிக்கான குரல் என்றெல்லாம் இவரின் புகழை பட்டியலிடலாம்.  ஏன்! கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல்விழா நடத்தியவர். அதுமட்டுமல்ல, மலையக மக்களையும் தேசிய இனமாக அங்கீகரித்து, அவர்களுக்கும் அரசியல் உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்திவருபவர்.
எம் மலைநாட்டு விடிவுக்காக வாழ்ந்து மடிந்தவர்களை போற்றும் அதேவேளை, வாழ்பவர்களின் புகழையும் உலகறியச்செய்ய வேண்டும் என்பதே ‘பச்சை தங்கம்’ தளத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில் மலையக மண்ணில் பிறந்து, அந்த மக்களுக்காக போராடும் அருட்தந்தை மா. சக்திவேல் தொடர்பான தகவல்களை உங்களுக்காக பதிவிடுகின்றோம் .மலையக பாரம்பரியம், பஞ்சகால வலிகள் என பல விடயங்களை எம்முடன் அவர் பகிர்ந்துகொண்டார். 

அவர் தெரிவித்த கருத்துகளின் சுருக்கம் வருமாறு.

பிறப்பு
1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி ‘காட்டு பங்களா’ தோட்டத்தில் பிறந்தேன். கண்டி நகரிலிருந்து சுமார் 4 கிலோமீற்றம் சென்றதும் எமது தோட்டம் வரும். ஆரம்பகாலத்தில் தேயிலை பயிர்செய்கையை நம்பியே பொருளாதாரம் இருந்தது. காணி உச்சவரம்பு சட்டத்தின்கீழ் தோட்டம் சுவீகரிக்கப்பட்டது. அதன்பிறகு தேயிலை பயிர்செய்கை மாயமான பட்டியலில் இணைந்தது.

எங்கள் வீட்டில் 8 பிள்ளைகள். ஆறாவது ஆளாகவே நான் பிறந்தேன். அன்று எல்லாமே சுகபிரசவம்தான். தோட்டத்திலிருந்த எம் பாட்டியே பிரசவ வைத்தியரென சொன்னால் அது மிகையாகாது. மருத்துவம் படிக்காவிட்டாலும் அனுபவத்தால் உயிர்காக்கும் நபர் அவர்.

இந்தியா சென்றிருந்தவேளை அருட்தந்தை தப்படிக்கும் காட்சி.....
கல்வி
பேராதனை தமிழ்ப் பாடசாலையிலேயே கல்விபயின்றேன். எமது தோட்டத்திலிருந்து காட்டுவழியாக நடந்தே வருவேன். சப்பாத்து, புத்தகப்பை என எதுவுமே இருக்கவில்லை. அந்தளவுக்கு வறுமை கோரத்தாண்டவமாடியது. மூங்கிலை சீவியே பென்சிலாக பயன்படுத்தினோம். உயர்தரம் செல்லும்வரை துன்பத்தின் பிடிக்குள்ளிருந்து நாம் மீளவே இல்லை. மறுபுறத்தில் பஞ்சமும் எம்மை பாழாங்குழிக்குள் தள்ளிவிட்டது.

பஞ்சம்
மலையக மக்களின் வாழ்க்கையில் 1974 ஆம் ஆண்டு பஞ்சத்தை என்றுமே மறந்திடமுடியாது. செல்வசெழிப்போடு வாழ்ந்த எம்மக்களின் தலைவிதியை தலைகீழாக புரட்டிப்போட்ட பஞ்சம் அது.

இரண்டு இராத்தல் பாண்களே வழங்கப்படும். அவற்றை பெறுவதற்காக பலமணிநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டும். நானும், அக்காவும் அதிகாலை 3 மணிக்கே சென்றுவிடுவோம். 7 மணிக்குதான் பாண் பகிரப்படும். அதன்பிறகு பாடசாலைசென்றால் தூக்கம் வந்துவிடும். பிறகு மாலை 3 மணிக்கு மறுபடியும் சென்றுவிடுவோம்.

கிராமத்தில் வாழ்ந்த சிங்கள மக்களிடம் பலாக்காய், மரவல்லிக்கிழக்கு போன்ற கிழங்கு வகைகள் இருந்தன. எம்மவர்களிடம் ஒன்றுமே இருக்கவில்லை. சோறு, ரொட்டிக்கே அடிமையாகியிருந்தோம். பஞ்சம் தலைவிரித்தாடியதாலும், பட்டினியாலும் வீட்டில் சேமித்துவைத்த தங்கம், வெண்கலம் உள்ளிட்ட பொருட்களையெல்லாம் குறைந்த விலைக்கு கிராமத்திலுள்ள சிங்களவர்களுக்கு விற்பனை செய்தனர்.

இதனால் தோட்டப்பகுதிகளுக்கு வெற்றிலை, பாக்கு விற்பனைசெய்யவரும் சிங்களவர்கள் வாழ்வுமேம்பட்டது. உணவுக்கு வழியின்றி பலர் மடிந்தனர். மேலும் சிலர் பிச்சையெடுக்க சென்றனர். இப்படி எமது வாழ்வே நாசமாகிவிட்டது. இந்நிலைமைதான் சுதந்திரக்கட்சி அரசுக்கு சாவுமணியாக அமைந்தது. எட்டு வகையான தாணியங்கள் வழங்கப்படும் என கூறி ஜே.ஆரும் ஆட்சியைப்பிடித்தார்.

தேவாலயத்தில் பொங்கல் விழா நடத்தியவேளை....
பஞ்சம் தலைதூக்க முன்னர் எம்மவர்களின் வீடுகளில் நிறைய தங்கம் இருக்கும். பெண்களில் காதூகளில் பெரிய ஓட்டை விழுமளவுக்கு தோடுகள் தொங்கும். வீடுகளின் வெண்கலப்பாத்திரங்களையே பயன்படுத்தினர். ஆனால், அவை அனைத்தும் இல்லாமல்போனது. அதை இன்று நினைத்தாலும் நெஞ்சம் வலிக்கின்றது.

புரட்சி பயணத்துக்கான காரணம்
இவ்வாறு எம் மக்கள் பொருளாதாரம், அரசியல், சமூகரீதியில் அநாதையானதன் காரணமாகவே என் மனதுக்குள் விடுதலைக்காக போராடும் எண்ணம் உதித்தது. ஆரம்பத்தில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு கல்விகற்றுகொடுத்தேன். அதன்பிறகு பலவழிகளில் சமூகவிடுதலைக்காக அறவழிகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். 

எங்கு அநீதி இடம்பெற்றாலும், ஜனநாயகம் மறுக்கப்பட்டாலும் அதற்கு எதிராக குரல்கொடுப்பேன். 

தமிழ் மக்களுக்கு எதிராக பொன்சேகா போர்தொடுத்திருந்தாலும் அவர் கைதுசெய்யப்பட்டவேளை ஜனநாயகத்துக்காக போராடினேன். மக்களை அழித்த குற்றத்துக்காக அவரை சிறைபிடித்திருந்தால் மனம் மகிழ்ந்திருக்கலாம். மஹிந்தவை எதிர்த்த காரணத்தாலேயே கைது இடம்பெற்றது. அதில் அநீதி இருந்தது. அதனாலேயே அன்று போராடினேன்.

பணசாட்சிக்காக அல்லாது மனசாட்சியின் பிரகாரம் நான் செயற்பட்டுவருவதாலேயே இன்றும் நிம்மதியாக நீதியின் வழியில் வாழமுடிகின்றது. இயேசுநாதர் ஓர் இலட்சியவாதி, புரட்சியாளர், சமூகம் புதுவழியில் பயணிக்க வேண்டும் என நினைத்தனர். என் வழியும் அப்படிதான். மதரீதியான நான் செயற்படுவதில்லை.

மலையக தேசியம்
மலையக மக்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுக்கான பூமிஎல்லையொன்று இருக்கிறது. மொழி, கலாசாரம், அடையாளங்களும் இருக்கின்றன. இவற்றை அழிப்பதற்கான சிதித்திட்டம் பல ஆண்டுகளாகவே தீட்டப்பட்டுவருகின்றது. மேற்கூறப்பட்ட விடயங்களை அழித்தாலேயே ஓர் இனம் தானாக அழிந்துவிடும். எனவே, எமது கலை, கலாசாரங்களை அவமானமாக அல்லாது அடையாளமாக பார்க்கவேண்டும்.

எமது மக்களை பிரித்துவைக்கவே பலரும் பார்க்கின்றனர். தெற்கு, வடக்கில் நடைபெறும் தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்பதற்குரிய வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், பிரச்சினைகளும் வெளிவருவதில்லை. இந்நிலைமை மாறவேண்டும். மலையகம் எழுச்சிபெறவேண்டும். இதுவே எனது கனவு.

இவ்வாறு கருத்து தெரிவித்த பின்னர், பச்சை தங்கத்தின் முயற்சியையும் பாராட்டி ஆசிர்வதித்தார்.

எழுத்து - எஸ். பிறை

நன்றி - பச்சை தங்கம்-
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates