ஒருமீ சிவில் அமைப்புக்களின் ஒன்றியம்
11.01.2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்த காலம் நிறைவடைந்து 3 மாதங்கள் கடந்தும் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுவதில் ஏற்பட்டுள்ள காலத்தாமதம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. அது தொழிலாளர் வர்க்கத்திற்கு தொழில், தொழில் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் போன்ற விடயங்களில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளமை கவலையளிக்கிறது. இந்த செயல் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்று அறிவித்துஇ சிவில் அமைப்புகளின் ஒன்றியமான "ஒருமீ" அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவான சக்திகளும் கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை நாட்சம்பளம் ரூபா 1000 கொடுக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கெளரவ. அமைச்சர் நவீன் திசாநாயக்க ரூபா 1000 அடிப்படை சம்பளமாக கொடுக்க முடியாது என நாடாளுமன்றில் அறிவித்துள்ளமையும், முதலாளிமார் சம்மேளனம் முதலாம் வருடம் அதாவது இவ்வருடம் 2019ல் அடிப்படை சம்பளமாக ரூபா 625ம், மொத்த நாட்சம்பளமாக ரூபா 875 எனவும் 2ஆம் மற்றும் மூன்றாம் வருடங்களில் முறையே ரூபா 650 ரூபா மற்றும் 675 ரூபா எனவும் அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும். தொழிலாளர்களுக்கு தொழில் மீதும் தாம் 200 வருடகாலமாக உயிரிந்து வாழ்ந்துவரும் மண் மீதும் உள்ள நம்பிக்கையினை அறுத்து அம்மண்ணிலிருந்து மக்களை அகற்றும் உள்நோக்கம் கொண்ட செயல் என்பதோடு முதலாளிமார் சம்மேளனம் மலையக மண்ணோடு தொடர்புடைய மாற்று திட்டத்தை விஸ்தரித்திருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொழிலாளரின் வாழ்வைப் பாதுகாக்கும் வகையில் அடிப்படை சம்பளம் ரூபா 1000 வேண்டும் என கோரிக்கை விடுத்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவான பொது அமைப்புக்களும் மலையகத்திலும் மலையகத்திற்கு வெளியிலும் நடாத்தும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்பு தொடர்பான முன்யோசனையை வைத்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மலையகத்திலும் முழுநாட்டிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் அரசியல் சூழ்ச்சி எனவும் கருதவேண்டியுள்ளது.
இந்நிலையில், மலையக மக்களின் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வு, தொழில், அவர்களின் எதிர்காலம், அரசியல் என்பவற்றில் அக்கறையுள்ள அனைவரும் முதலில் முதலாளிமார் சம்மேளனத்தின் அராஜக சிந்தனை செயற்பாட்டை கண்டிக்க வேண்டும் என்றும், மலையக மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்பிற்காக அணிவகுத்து தமது சக்தியை வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நன்றி
ஒருமீ
Orumee Civil Society Forum
No. 324/4.C.Ciril Pirshs Mawatha,
Keravalapitiya, Handala, Wattala /
Tel: +94-0714806035, +94-0766870891/ Email: orumeeinfo@gmail.com
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...