கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன.
ஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்கு முன்னரே அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தும் கூட இன்று வரையில் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை. இரு வருடங்களுக்கொரு முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் அந்த காலப்பகுதியில் மேடையேற்றும் நாடகத்தின் தொடர்ச்சியையே நாம் தரிசித்துக்கொண்டிருக்கின்றோம்.
2015 ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் இத்தடவையைப் போன்றே இழுத்தடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் (சுமார் ஒன்றரை வருடம் தாமதமாக) கையெழுத்திடப்பட்டது. 1000 ரூபா அடிப்படை சம்பளம் உறுதியென அப்போதும் கூறிய தொழிற்சங்கங்கள் அதே பொய்யையே இன்றும் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடகத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மற்றும் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வகிபாகமே பிரதானமாகக் காணப்படுகின்றது.
ஆறுமுகன் தொண்டமான் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக ஒக்டோபர் 25 ஆம் திகதி அறிவித்தார். அதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன பயன் என்பதே எமது கேள்வியாக இருந்தது.
எனினும் ஜனாதிபதியின் திடீர் திருப்பமான தீர்மானங்களின் காரணமாக அது பிற்போடப்பட்டு 50 நாட்களே நிலவிய அரசாங்கத்தில் அமைச்சராகிக் கொண்டார். தொடர்ந்து வடிவேல் சுரேஷ், ' இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு பொருட்டில்லை. நான் மக்கள் சேவைக்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன்' என பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சரானார். இருவருக்கும் அமைச்சு, வாகனம் என அனைத்தும் கிடைத்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கிடைக்கவில்லை.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பழனி திகாம்பரம் ' ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபா நிச்சயம்' எனக் கூறினார். அவர் மீண்டும் அமைச்சரானதும் ' கூட்டு ஒப்பந்த்தில் இருந்து வெளியேறாமல் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது' சுருதியை மாற்றிக் கொண்டார். ' அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்வதென்பது ஒரு போதும் சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் அல்லது கம்பனிகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தால் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடையும்' என ஐக்கிய தேசிய கட்சிக்கே உரிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்திய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்துக்கு தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களுமே பதிலளிக்காது மௌனம் காத்தது ஏன்?
தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் இவ்விடயத்தில் ஆமை வேகத்தில் செயற்பட்டாலும் தமது பெற்றோருக்காக நாடளாவிய ரீதியிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் கொழும்பில் ஒன்று திரண்டு பாரிய ' கருப்பு சட்டை ' போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களுக்கு பக்க பலமாக அமைந்தாலும் தொழிற்சங்கங்களுக்கோ கம்பனிகளுக்கோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் மலையகப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தின் காரணமாக கம்பனிகள் பல மில்லியன் நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தும் விடாப்பிடியாக நின்று 1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளன.
வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், தாமத வேலை என பல்வேறு முறைகளில் தமது உரிமையான ஊதியத்திற்காக போராடிய மக்கள் தோல்வியே கண்டனர். அதாவது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டிய தொழிற்சங்கங்களே, அதனை கைவிடுமாறும் பணித்தன. ஜனாதிபதி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வு வழங்குவார் என்பதை அதற்கு காரணமாகக் கூறினர். அனைத்து வகையிலும் போராடிய மலையகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தனர். ஐந்து நாட்களாக அவர்களுடைய போராட்டம் தொடர்ந்தும் அப்போதும் அரசாங்கமும் தொழிற்சங்கங்கங்களும் கண்டும் காணாமல் இருந்தன.
எவ்வாறிருப்பினும் ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் போதும் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள் இம்முறையும் ஏமாற்றப்பட்டுள்ளனர். 1000 ரூபாய் உறுதி எனக் கூறிய தொழிற்சங்கங்கள் குறைந்தது 700 ரூபாவையேனும் பெற்றுக்கொடுப்போம் என தற்போது சமாளிப்பதிலிருந்தே 1000 ரூபாய் சாத்தியமில்லையென்பது தெளிவாகின்றது. சந்தா பணத்தை நிறுத்த வேண்டும் என அம்மக்களை தூண்டுபவர்கள் சிறந்தவொரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவத்தினை பெறுவதற்கு அல்லது புதியதொரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு அவர்களை வழிநடத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றுக்காரர்கள் எனத் தெரிந்தும் வேறு வழியின்றி அவர்களை நாடியிருப்தையாவது தவிர்க்க முடியும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...