சிங்களவர்களாக மாறும் தமிழர்கள்
கொழும்பு மாவட்ட பெருந்தோட்டமொன்றில் ஒலிக்கும் அவலக் குரல்கள்
* பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்* 1983 ஆம் ஆண்டுதான் லயன் கூரைகள் சீரமைக்கப்பட்டன
* 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்
* பெரும்பாலான சிறுவர்கள் சிங்கள பாடசாலைக்குச் செல்கிறார்கள்
“நாம காலம் முழுக்க கம்பனிக்கும் நாட்டுக்கும் உழைச்சுக் கொடுத்திட்டு, தலைவர்களுக்கு அடிமையாக இருக்கனும்னு தான் எல்லாரும் நெனைக்கிறாங்க. இந்த இறப்பர் மரங்கள எங்க சொந்தங்களா நெனச்சு எல்லா சோகங்களையும் மரங்களுக்குத் தான் சொல்றோம். எங்க உசுரு போகும் வரைக்கும் ஏழையாவே வாழனும்னுதான் கடவுளுக்கும் ஆசை போல” -
இப்படிப் பேசுகிறார் வேரகொல தோட்டத்தில் 17 வயதிலிருந்து இறப்பர் பால்வெட்டுத் தொழிலில் ஈடுபட்டுவரும் என். கலைச்செல்வராணி (37).
கொழும்பு – அவிசாவளை வீதியில் பாதுக்கை நகருக்குச் செல்லும் வழியில் இருக்கிறது வேரகொல தோட்டம். எலிஸ்டன் தோட்டத்துக்குச் சொந்தமான பிரிவாக இருந்தாலும் பொதுவாக வேரகொல என்றே அழைக்கப்படுகிறது. சுற்றிலும் சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் மிகவும் மோசமான லயன் அறைகளில் வசிக்கும் அவர்களை நாம் சந்தித்தோம்.
ஆம்! கலைச்செல்வராணியின் ஆதங்கம் இவ்வாறு தொடர்கிறது, “தலைவர்கள் எல்லாரும் தேயிலைய பத்தி மட்டுந்தான் பேசுறாங்க. இறப்பர் தொழிலாளிய பத்தி பேசுறதே இல்ல. நாங்க படுற கஷ்டத்த யார்கிட்ட, எப்படி சொல்றதுனே புரியல்ல”.
“ஒரு நாளைக்கு 7 கிலோ பால் எடுக்கனும். ஆனா, அந்தளவு பால் எடுக்க முடியாது. மரங்களுக்கு ஒருவகையான மருந்து அடிக்கிறாங்க. அதனால வாரத்தில ரெண்டு நாளைக்கு மட்டுந்தான் அந்தளவு பால் எடுக்கலாம். மத்த நாளில 5 கிலோவுக்குக் குறைவா தான் பால் வெட்டுறோம். அப்போ அரை நாள் பேர போட்டு 250 ரூவா தான் சம்பளம் போடுவாங்க”.
“நாங்க ரொம்ப வேதனையோடு வாழுறோம். தொழிற்சங்கங்கள் எல்லாமே நம்மல ஏமாத்துறதுக்குத்தான் இருக்காங்க. சந்தாவ நிறுத்திட்டு, இவங்களுக்கு வோட்டுப் போடுறதையும் நிறுத்தனும். நம்ம உசுரு இன்னும் கொஞ்ச காலம் தானே இந்த ஒடம்ப தாங்கிகிட்டு இருக்கப்போகுது. ஏதோ பிறந்ததுக்காக வாழ்ந்திடுவோம் என்கிற நிலையில தான் இப்போ நாங்க இருக்கிறோம்” என்றார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களா இந்தளவு இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு கவனிப்பாரற்றிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. லயன் குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்துள்ளதால் வீடுகளுக்கு மத்தியில் மாடுகள் வசிக்கும் நிலைதான் அங்கு காணப்படுகிறது. கடும் மழைபெய்யும் காலங்களில் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் அவலச் சூழலுக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் சொல்லும் மற்றுமொரு ஆச்சரியத் தகவல் என்னவென்றால், இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் தங்களது குடியிருப்புப் பக்கம் காலடி எடுத்து வைத்ததில்லை என்பதுதான்.
இவர்கள் வாழும் லயன் குடியிருப்புகள் 1983 ஆம் ஆண்டுதான் இறுதியாக சீர்செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு தமக்கு இயலுமான வகையில் கூரைத்தகடுகளைப் பொறுத்தி வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களுடைய வாழ்க்கைச் சூழல் குறித்து பி.எஸ். காந்தி (48) இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நாங்க காலையில அஞ்சர மணிக்கு வெட்டுக்கு வருவோம். காலையில தான் பால் அதிகமா சுறக்கும், அதோட வெய்யிலும் குறைவா இருக்கும். ஆளுக்கு 300 மரங்கள் பார்க்கனும். கால வெட்டு முடிஞ்சு அந்தி வெட்டுக்கும் போகனும்னு சொன்னாங்கனா, ஒரு மரத்துகிட்ட 2 தடவ படி 600 தடவ வேல பார்க்கணும்”.
மழைக்காலங்கள்ல வெட்டு எதுவும் இல்ல. தொடர்ச்சியா மழை பெய்தா எங்க நிலை ரொம்ப மோசமாகிடும். ஒருசில மாதங்கள்ல மாசம் 5ஆயிரம் ரூவா சம்பளம் எடுத்ததும் உண்டு. எங்களோட சிரிப்புக்கு எல்லாம் சந்தோஷம்னு அர்த்தம்; இல்ல. வெளியில் சொல்ல முடியாத ஏராளமான பிரச்சினைகள ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குறோம்”.
இந்தத் தோட்டத்தில் உள்ளவர்களில் 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்லாது பெரும்பாலான மாணவர்கள் சிங்கள பாடசாலைகளிலேயே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடருகிறார்கள்.
இது குறித்து மரியசூசை இந்திரா (52) கூறுகையில், இங்க சுற்றிவர சிங்கள ஆட்கள்தான் இருக்காங்க. நாம இங்க வந்து குடியேறிய நாள் தொடக்கம் அவங்களோடதான் உறவு இருக்குது. தமிழர்கள் பலர் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்திருக்காங்க. வீட்டிலயும் சிங்களத்தில பேசிப்பேசியே பழக்கமாகிடுச்சி. பக்தில சிங்கள ஸ்கூல் இருக்கதால பிள்ளைகளும் அங்கேயே படிக்கிறாங்க” என்றார்.
இந்தத் தோட்டத்தில் இறப்பர் தொழிற்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் பற்றி எஸ். இராஜரத்தினம் (35) பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இறப்பர் மரங்களுக்கு ஒரு வகையான இரசாயனப் பதார்த்தம் பூசப்படுது. இப்படியொரு செயற்பாடு கடந்த ஒரு வருஷமா தான் நடக்குது. அப்படி இரசாயனப் பதார்த்தம் பூசின பிறகு பால் ரொம்ப கிடைக்குது. ஆனாலும் மரம் கூடிய சீக்கிரத்திலேயே பால் தரும் சக்திய இழந்திருது. அதாவது வாரத்தில 3 நாளைக்கு பால கறக்க முடியும் நேரத்தில மிகுதி 4 நாளைக்கு பால் கிடைக்காது. திரும்பவும் மறு வாரம் அந்த இரசாயனப் பதார்த்தம் பூசுவதற்கு உத்தரவிடுறாங்க”.
“அது தவிர ஒரு கப் ஒன்றை வச்சி கேஸ் ஒன்றை மரத்துக்கு உட் செலுத்துறாங்க. இந்தமாதிரி செய்றதுனால 15 வருஷத்துக்கு பால் கொடுக்கிற மரங்கள் எல்லாம் 5 வருஷத்திலேயே காய்ந்து போகும் நிலைதான் இருக்குது”.
“நெறய சக்தி மிக்க நல்ல மரங்கள் எல்லாம் உடைஞ்சு விழும் நிலையில இருக்குது. முன்னர் நிர்வகிச்ச கம்பனியில இப்படியெல்லாம் செய்யல்ல. இப்போ பொறுப்பெடுத்திருக்கிற கம்பனிக்காரங்க தான் இப்படி மோசமான வேலைகளை முன்னெடுக்கிறாங்க” எனத் தனது மன உளைச்சலை கோபத்தோடு கூறினார்.
தொழிற்சங்கங்கள் மீது தாம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையவில்லை என்றும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு தமது முழுமையான எதிர்ப்பையும் இந்த மக்கள் வெளியிடுகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக இருப்பதாகக் கூறப்பட்டாலும் தோட்டங்களில் முதுகெலும்பற்றவர்களாக நடத்தப்படுவதாகவும் தொழிற்சங்கங்கள், சம்பளப் விடயத்துடன் நிர்வாகமுறைகேடுகள் குறித்தும் பேச வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா அடிப்படைச் சம்பளமே கிடைக்கப்பெறுவதாக கூறுகிறார் எம். ரோஸ்மேரி (27). இவ்வாறானதொரு நிலையில் தமது 3 பிள்ளைகளினதும் கல்விச் செலவு உள்ளிட்ட இதர அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் ஒவ்வொரு நாளையும் சவாலுடன் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மலையகம் என்றால் பெரும்பாலும் மத்திய, ஊவா மாகாணங்கள் மாத்திரமே தலைவர்களின் கண்களுக்குத் தெரிவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருந்தோட்ட மலையக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூட கவனிப்பாரற்றிருக்கிறார்கள் என்றால், எந்தளவுக்கு எமது மக்கள் மீதான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
எமது அடிப்படையை விட்டு, முற்றுமுழுதான கலாசார வேறுபாட்டுக்குள் இந்த மக்கள் பயணிக்கும் நிலை ஒருபுறம் இருக்க வறுமையின் கோரப்பிடிக்குள் நிர்வாகத்தின் சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தொழிற்சங்கங்களும் கைவிடுமாக இருந்தால் மக்களின் வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களாகவே எதிர்காலம் அமைந்துவிடும். ஆதலால் பேதங்களைத் தவிர்த்து தலைமைகள் தமது கடமையைச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
நன்றி ஞாயிறு தினக்குரல் 20.01.2019
+ comments + 1 comments
மனித நேயமற்ற முதலாளிகளும் ,உளுத்துப்போன அரச நிர்வாகமும்
அடிப்படை காரணம்.
இதைவிட இலங்கையிலுள்ள எல்லோருமே அடுத்த பொறுப்பாளிகள் .
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...