1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான போராட்டத்திற்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கி வருகின்றன. முன்னர் எப்போதும் இல்லாதவாறு இனம், மொழி எனும் பேதமின்றி நாட்டின் ஒட்டுமொத்த சிவில் அமைப்புகளும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றன. தொழில் தருனர் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தில் 100 ரூபாவே அதிகரிக்க முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், இனி சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லைஎனக் கூறியுள்ளது. இப்பின்புலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி தொழிலா ளர்களைக் கோரிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதியை சுட்டிக்காட்டி தொழிலாளர்களிடம் வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கோரினார். 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கோரிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்பதாக
இராமநாதன் ஆறுமுகம் தொண்டமானாலேயே முன்வைக்கப்பட்டது. 1 ½ வருடங்களாக முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக அடிப்படை சம்பளத்தில் 50 ரூபா சம்பள அதிகரிப்பு கடந்த கூட்டு ஒப்பந்தத்தின்போது வழங்கப்பட்டது. அதாவது 1000 ரூபா கேட்ட போதும் அடிப்படைச் சம்பளம் 450 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக உயர்த்தப்பட்டது. அன்று உலக சந்தையில் நிலவிய தேயிலை விலை இறக்கம் மற்றும் வரட்சி என்பன சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமைக்கான காரணிகளாக தொழில் தருனர் சம்மேளனத்தால் முன் வைக்கப்பட்டன. இதற்கமைய 1000 ரூபா கோரிக்கையை தொழில் தருனர் சம்மேளனம் முற்றாக நிராகரித்தது.
இரண்டாவது தடவையாகவும் ஆயிரம் ரூபா கோரிக்கை
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட அதே 1000 ரூபா சம்பள கோரிக்கை இம்முறையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இம்முறை வரலாற்றில் முதல் முறையாக மலையக இளைஞர்கள் தன்னிச்சையாக சமூக ஊடகத்தை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை காலி முகத்திடலுக்கு அழைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். ஒருவர் அட்டனிலிருந்து பாதயாத்திரையாக கொழும்புக்குச் சென்று ஜனாதிபதியிடம் மனு சமர்ப்பித்தார்.இவற்றுடன் கோட்டை புகையிரத நிலையத்தின் முன் மூன்று மலையக இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மலையகம் முழுவதிலும் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தளவு அழுத்தங்கள் கொடுத்த போதிலும் அடிப்படைச் சம்பளத்தில் 100 ரூபா மட்டுமே அதிகரித்துத்தர முடியும் என மீண்டும் மீண்டும் கூறியது மட்டுமல்லாமல், தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடபோவதில்லையென தொழில் தருனர் சம்மேளனம் கூறியுள்ளது. வழமைபோல் இம்முறையும் உலக சந்தையில் தேயிலையின் விலை குறைந்துள்ளது என்பதைக் காரணமாக காட்டியுள்ளதுடன், ஏனைய கொடுப்பனவுகளுடன் சேர்த்து 940 ரூபா வழங்க முடியும் என தொழில் தருனர் சம்மேளம் கூறியுள்ளது.
இவ்வேளையில் கண்டியைத் தளமாகக் கொண்ட சமூக அபிவிருத்தி நிறுவகம் பொருளாதார பேராசிரியர்கள் சின்னத்தம்பி மற்றும் விஜேசந்திரன் முதலியவர்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வின்படி இன்றைய வாழ்க்கைச் செலவு நிலைமையின் கீழ் தோட்டத்தொழிலாளர் குடும்பம் ஒன்று தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவகையில் வாழ்வதற்கான சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1108 தேவைப்படுகின்றது என வெளிப்படுத்தியுள்ளது. இவற்றுடன் தி ஐலண்ட் பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியுள்ள பேராசிரியர் ஜனக ரத்னசிறி 1000 ரூபா சம்பளக்கோரிக்கை நியாயமானது என சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி பார்க்கின் 1000 ரூபா கோரிக்கை நியாயமானது என்பதனை மறுக்க முடியாது.
1992 ஆம் ஆண்டு தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்கிய வேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூபா 52.52 ஆக இருந்தது. இது வாழ்க்கைச் செலவு புள்ளி அதிகரிப்பிற்கமைய 1996 இல் 83 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. எனினும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது தன்னிச்சையாக ஆங்காங்கே தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வைக் கோரி வேலை நிறுத்தங்களை 1999 இல் மேற்கொண்டனர், தொழிற்சங்கங்களும் போராட்டங்களை ஆதரித்தன. இவற்றுடன் 1996 இல் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டன. இதன் விளைவாக நாட் சம்பளமாக 95 ரூபாவை வழங்க தொழில் தருனர் சம்மேளனம் இணங்கியதுடன், கூடவே விலை பங்கு கொடுப்பனவாக 6 ரூபா வழங்கவும் இணங்கியது. இதன்படி தோட்டத் தொழிலாரின் சம்பளம் 101 ரூபாவாக மாறியது. இதுவே கம்பனிகளுடனான முதல் கூட்டு ஒப்பந்தமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இருவருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடந்துள்ளதுடன், ஒவ்வொருமுறையும் தொழில் தருனர் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தில் 20 சதவீத அதிகரிப்பையே வழங்கிவந்துள்ளதுடன் அடிப்படை சம்பள இல்லாத ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்து வந்துள்ளது.
முதலாளித்துவ பொருளாதார தத்துவத்தின்படி ஒரு உற்பத்தி தொழில் நிறுவனம் அல்லது வர்த்தக நிறுவனம் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கும் போது ஆகக்கூடியதாக 10 வீத சம்பள அதிகரிப்பினையே வழங்குவதை கொள்கையாகக் கொண்டுள்ளது. ஆயினும் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் போது அரசியல் தலையீட்டின் விளைவாக 20 முதல் 25 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கிய சம்பவங்களும் உள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அவ்வாறான நிகழ்வுகள் நடந்ததுண்டு. 1984 ஆண்டு சம்பள அதிகரிப்பைக் கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன. அன்றைய அரச கூட்டுத்தாபனங்கள் தொழிற்சங்கள் முன்வைத்த சம்பள கோரிக்கையை வழங்க மறுத்தன. இச்சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்கங்கள் அரசாங்கத்தின் தலையீட்டினை கோரின. இதன் விளைவாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன சம்பளப் பேச்சுவார்த்தையில் தலையிட்டு சம்பள அதிகரிப்புடன் ஆண் பெண் இருபாலாருக்கும் சம சம்பளத்தை வழங்கும்படி ஆணையிட்டார். எதிர்காலத்தில் பின்வரும் அடிப்படையின் கீழ் சம்பள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவேண்டும் என இணக்கம் காணப்பட்டது.
- அடிப்படை சம்பளம்
- வாழ்க்கைச் செலவு புள்ளி கொடுப்பனவு
- விலை பங்கு துணைத் தொகையும்
வழங்க இணக்கம் காணப்பட்டது. இதேவேளை 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசவின் தலையீட்டுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது வாழ்க்கைச் செலவு புள்ளி கொடுப்பனவு நீக்கப்பட்டு அரசாங்க வரவு செலவு (பாதீடு) திட்டத்திற்கமைய சம்பள அதிகரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது 1993 இல் ரூபா 53.32 சதமாக இருந்த நாள் சம்பளம் 72.24 சதமாக உயர்த்தப்பட்டது.
மீண்டும் 1996 இல் ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. இதன் விளைவாக 72.24 சதமாக இருந்த நாட்சம்பளம் 83 ரூபாவாக உயர்த்தப்பட்டது. மீண்டும் 1998 ஆம் ஆண்டு சம்பள உயர்விற்கான போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டதுடன் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் தலையீட்டின் விளைவாக 83 ரூபாவாக இருந்த நாட் சம்பளம் 95 ரூபாவாக உயர்த்தப்பட்டதுடன் விலை பங்கு கொடுப்பனவாக 6 ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டது. 95 ரூபாவிற்கு மட்டும் EPF /ETF வழங்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சில தோட்டக் கம்பனிகள் இச்சம்பள உயர்வை வழங்க மறுத்தன. சம்பள உயர்வை வழங்க முடியாது எனக் கூறும் கம்பனிகள் தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்த்துக் கொள்ளும்படி ஜனாதிபதி சந்திரிகா ஆணையிட்டார். ஆனால், அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காது அனைத்துத் தனியார் கம்பனிகளும் இச்சம்பள உயர்வை வழங்கின.
1998 முதல் இன்று வரையிலான சம்பள உயர்வு
ஆதாரம் : கூட்டு ஒப்பந்தங்கள்
இதன்படி பார்க்கின் 1998 முதல் இதுநாள் வரை தொழில் தருனர் சம்மேளனம் சம்பளத்தை 50 சதவீதமாக கூட்டியதாக இல்லை. ஆகக்கூடியதாக 20 சதவீத அதிகரிப்பையே வழங்கியுள்ளன. மறுபுறம் தனியார் கம்பனிகள் படிப்படியாக தொழிலாளர் தொகையை குறைத்துள்ளது. தனியாருக்கு கம்பனிகளுக்கு தோட்டங்கள் வழங்கும் போது 327,000 தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்தனர். தற்போது 160,000 பேர் மட்டுமே தோட்டத்தில் வேலை செய்கின்றனர். எதிர்வரும் காலங்களில் தொழிலாளர்கள் மேலும் குறைக்கப்படுவர் அல்லது சுயமாக தொழிலாளர்கள் தோட்ட வேலையில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள வரலாற்றை மீட்டு பார்ப்போமாகின் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் தோட்டத் தொழில் அறிமுகப்படுத்திய நாள் முதல் குறைவான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவே இன்றைய நெருக்கடிக்கு அடிப்படையாக உள்ளது. ஆயினும் வெள்ளை தோட்டத்துரைமார் குறைவான சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கியபோதிலும் நாட்டின் பொருளாதார நிலைமையுடன் இசைந்து போகும் வகையில் அவர்களுக்கு பல மானியங்களை வழங்கினர். மானிய விலையில் அரிசி, கோதுமை மா, குழந்தைப் பால் மா வழங்கப்பட்டன. மருத்துவ வசதி, மற்றும் ஆரம்ப கல்வி, வீடு, வீட்டுக்கான வெள்ளை அடித்தல் போன்றன இலவசமாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் வீட்டுத் தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றிற்கும் வாய்ப்பளிக்கப்பட்;டது. இதனால் குறைவான சம்பளத்தைப் பெற்ற போதிலும் ஏனைய தொழிலாளார்களுக்கு நிகராக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்கக் கூடியதாகவிருந்தது. ஆனால் இச்சலுகைகள் தற்போது வழங்கப்படுவதில்லை. மேற்கூறப்பட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது.
இதனாலேயே தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை கோருகின்றனர்.இந்நிலையில் தேயிலையை உற்பத்தி செய்யும் (தோட்ட) கம்பனிகள் நட்டத்தை அடைவதாகக் கூறுகின்றன. ஆனால் தேயிலையை ஏற்றுமதி செய்யும் கம்பனிகள், பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்யும் கம்பனிகள், விற்பனை செய்யும் கம்பனிகள் அனைத்தும் பெரும் இலாபம் பெறுவதை அதன் வருடாந்த அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது. சில தோட்டக் கம்பனிகள் மேற்குறிப்பிட்ட கம்பனிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அக்கம்பனிகளும் தோட்டங்கள் நட்டமடைவதாகவே கூறுகின்றன. தோட்டத் தொழிலுடன் தொடர்புள்ள அனைத்துக் கம்பனிகளும் இலாபம் பெறுகையில் மூலக்கம்பனிகளான தோட்டக் கம்பனிகள் மட்டுமே நட்டமடைவதாகக் கூறப்படுகின்றது. இப்பின்புலத்தை நோக்குகையில் இனிவரும் காலங்களிலும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முன்னெடுக்குகையில் தோட்டக்கம்பனிகள் நட்டமடைந்துள்ளன என்ற கூற்றையே தொடர்ந்தும் முன்வைக்கும்., ஒரு போதும் இலாபமடைவதாகக் கூறாது.
இடைக்கால தீர்வு
இந்நிலையில் ஒரு இடைக்கால தீர்வையும் மாற்று உபாயத்தையும் அடையாளம் காணவேண்டியுள்ளது. இடைக்கால தீர்வாக தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுமான ரூபா 730 ரூபாவை அடிப்படைச் சம்பளமான வழங்கும்படி கோரலாம். இதுவே சுமுகமாக தீர்க்க வழிவகுக்கும்.. இதனை தோட்டக் கம்பனிகள் வழங்க மறுக்குமாயின் அரசாங்கத்தின் தலையீட்டை கோரலாம். இது ஒரு இடைக்கால தீர்வாகவே அமையும். ஏனெனில் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்படாவிடின் இப்பிரச்சினை தொடரவே செய்யும். எனவே தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் முறைமையை அடையாளம் கண்டாலே இப்பிரச்சினைக்கு சுமுகமானத் தீர்வைக் காணமுடியும்.
இன்று உற்பத்தி செய்யப்படும் பசுமை தேயிலையில் 77 சதவீதத்தை சிறுஉடைமையாளர்களே உற்பத்தி செய்கின்றனர். மிகுதி 23 சதவீத பசுமை தேயிலை உற்பத்தி செய்ய 1 இலட்சத்து 60 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆயிரக்கணக்கான அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் 77 சதவீத பசுமை தேயிலையை 4 இலட்சத்து 25 ஆயிரம் சிறுஉடைமையாளர்கள் உற்பத்தி செய்கின்றனர். குடும்ப மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் சிறு தோட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பசுமை தேயிலையை கொள்வனவு செய்யும் தொழிற்சாலைகள் இலாபம் பெறுகின்றன. அதேவேளை சிறுஉடைமையாளர்களும் போதியளவு வருமானத்தைப் பெறுகின்றனர்.
எனவே சிறுஉடைமை முறையை பாரிய தோட்டங்களில் அறிமுகப்படுத்துவதே இதற்கான தீர்வாக அடையாளம் காணமுடிகின்றது. தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணிகளை நீண்டகால குத்தகைக்கோ அல்லது நிரந்தரமாகவோ பிரித்துக் கொடுத்து கம்பனி தேயிலை தொழிற்சாலைகளை தேயிலைக் கொழுந்தினை வாங்கும் ((Bought leaf factory) தொழிற்சாலைகளாக மாற்றினால் தோட்டங்கள் நட்டமடைவதை நிறுத்த முடியும், இவ்வாறு தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணியை வழங்கும் போது தோட்டத்தொழிலாளர்களை போட்டிச் சந்தையில் தேயிலையை விற்க அனுமதிக்க வேண்டும். சிறுஉடைமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே உரிமையை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அதாவது பசுமை தேயிலைக்கு எந்த தொழிற்சாலை அதிக விலை கொடுக்கின்றதோ அத்தொழிற்சாலைக்கு விற்க அனுமதிக்க வேண்டும். மேலும் எவ்வாறு தேயிலை சிறுஉடைமையாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவும் மானியங்களும் வழங்கப்படுகின்றதோ அதேபோல் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்பஅறிவும் மானியங்களும் வழங்கபடல் வேண்டும்.
இவ்வாறு மாற்றங்களை கொண்டுவரும்போது தோட்டத்தொழிலாளர் ஒருவரின் நாள் வருமானம் 1500 ரூபாவாக அமையும் வகையில் அவர்களுக்கான தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். அதனை விடுத்து அதிக பலன் தராத தேயிலை காணிகளை மட்டும் தொழிலாளார்களுக்கு வழங்கினால் மீண்டும் தொழிலாளர்கள் அதளபாதாளத்தில் விழ நேரிடும். எனவே புதிய தேயிலைக் காணிகளையும் பழைய தேயிலைக் காணிகளையும் இணைத்து வழங்க வேண்டும். இன்று தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் பாரிய தொழிலாளர்களைக் கொண்டு நடத்தும் தேயிலை உற்பத்தி முறையை கைவிட்டுவருகின்றன. மாறாக புதிய உற்பத்தி முறையான சிறுஉடைமை முறையையே அறிமுகப்படுத்தியுள்ளன.
இவ்வாறு செய்யப்படின் நாட்டின் முழுத் தோட்டத்துறையும் ஒரே வகையான சிறுஉடைமை உற்பத்தி முறையை பின்பற்ற முடியும். மறுபுறம் தோட்டத்தொழிலாளர்கள் சிறுஉடைமையாளர்களாக மாறுவதுடன் அவர்களது வருமானம் அதிகரி;க்கப்பதுடன் கிராம சமூக பொருளாதார சூழல் உருவாகும். அவ்வாறு செய்யின் தோட்ட முகாமையாளரை மையமாகக் கொண்ட 150 வருட தோட்டத் தொழில்முறை நீங்கி புதிய உற்பத்தி உறவுமுறை தோட்டப்பகுதியில் உருவாகலாம். இது மலை நாட்டு புதிய கிராமங்கள் என்ற எண்ணக்கருவை பலப்படுத்துவதாக அமையும். மலை நாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் புதிய அதிகாரசபை உருவாக்கப்பட்டுள்ளது. இச்சபைக்கு தோட்டக் குடியிறுப்புகளின் கட்டமைப்புகளையும் சமூக சேவைகளையும் மேம்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சம்பள உயர்வு போராட்டத்தை சிறுஉடைமைக்கான போராட்டமாக நகர்த்த வேண்டும். அடுத்த இரு வருடங்களுக்குள் இதில் வெற்றி காணாவிட்டால் மீண்டும் இதுபோல் ஒரு நெருக்கடியை சந்திக்க நேரிடும். தோட்டத்தொழிலாளர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடுவதுடன் அவர்களது போராட்டமும் வேறு வடிவத்தை நோக்கி நகரலாம்.
- எனவே இடைக்கால தீர்வாக 730 ருபாவை அடிப்படை சம்பளமான வழங்குக
- இரண்டு வருடத்திற்குள் தேயிலைக் காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகவோ அல்லது 30 வருட குத்தகைக்கு பிரித்தளிக்குக
- தேயிலைக் காணிகளை பகிர்ந்தளிக்கும் போது புதிய தேயிலைக் காணிகளையும் பழைய தேயிலைக்காணிகளையும் இணைத்து வழங்குக
- தேயிலை சிறு உடைமையாளர் அதிகாரசபையின் கீம் காணி பெற்ற தொழிலாளர்களை இணைக்குக
- தோட்ட தேயிலை தொழிற்சாலைகளை பசுமை தேயிலை வாங்கும் தொழிற்சாலையாக மாற்றுக
- பிரதேச சபை மற்றும் புதிய தோட்ட அதிகார சபைக்கள் கட்டமைப்பு மற்றும் சமூக சேவையை முன்னெடுக்கும் வகையில் போதியளவு நிதி ஒதுக்குக
- தேசிய, சர்வதேசிய தேயிலை நுகர்வோர் மத்தியில் தொழிலாளரின் நியாயமான சம்பள கோரிக்கை தொடர்பாக பரப்புரை செய்க.
என்றதன் கீழ் போராட்டத்தை நகர்த்த வேண்டியுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...