Headlines News :
முகப்பு » , , , , » திபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்

திபிடகவை மரபுரிமையாக்குதலின் அரசியல் - என்.சரவணன்


கடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தையும் முன்னுரிமையையும் எந்தவிதத்திலும் மாற்ற மாட்டோம் என்றார்.

ரணில் பௌத்த பிக்குமாரை மதிப்பதில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. ஆனால் கடந்த ‘ஒக்டோபர் 26’ சதிகளுக்குப் பின்னர் அவர் சாஷ்டாங்கமாக அவர்களை நமஸ்காரம் செய்கிறார். அடிக்கடி பௌத்த விகாரைகளுக்கும், பௌத்த நிகழ்வுகளுக்கும் செல்வதாகக் காட்டிக்கொள்கிறார். தான் ஏனைய பௌத்தர்களுக்கு சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கப் படாது பாடு படுவதைக் காண முடிகிறது. ரணிலின் இத்தகையை போக்கின் ஒரு அங்கம் தான் மேற்படி உத்தரவாதம்.


இன்று ஜனாதிபதி திபிடகவை - (திரிபிடகம்) தேசிய மரபுரிமையாக அறிவித்திருக்கிறார். இதற்கான பணிகள் கடந்த செப்டம்பர் மாதமே தொடக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போது அந்தப்பணியை கையிலெடுத்திருப்பவர் ஜனாதிபதி சிறிசேன. ஜனாதிபதி இதனை பிரகடனப்படுத்தும் உத்தியோகபூர்வமான பெரு நிகழ்வை மாத்தளையிலுள்ள அலுவிகாரையில் 2000க்கும் மேற்பட்ட மகாசங்கத்தைச் சேர்ந்த பிக்குமார்களின் முன்னிலையில் நடத்திக் காட்டினர். அன்றைய தினம் இலங்கையிலுள்ள சகல வீடுகளிலும், அரச காரியாலயங்களிலும் பௌத்த  கொடியை ஏற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தார் புத்தசாசன அமைச்சர் ஜயவிக்கிரம பெரேரா.

திபிடக என்றால் என்ன?
“திபிடக” என்பது பௌத்த அறநெறியைப் போற்றும் முதன்மையான பௌத்த பண்பாட்டு இலக்கியக்கங்களின் தொகுப்பாக போற்றப்பட்டு வருகிறது. திபிடக என்கிற  பாலி சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு “முக்கூடைகள்” எனலாம். தேரவாத பௌத்தம் இந்த திபிடகவுக்கு ஊடாகத் தான் உபதேசிக்கப்பட்டு வருகிறது. புத்தர் அருளிய போதனைகள் அடங்கப் பெற்ற மூன்று திருமுறைகளான விநய பிடகம் (ஒழுக்கத்திருமுறை), சுத்த பிடகம் (பேருரைத்திருமுறை), அபிதம்ம பிடகம் (மீயுயர்தம்மத் திருமுறை) ஆகிய பிரதான தலைப்புகளின் கீழ் பௌத்த வேத இலக்கியங்களையும், வரலாறையும், அறநெறிகளையும் புகட்டும் நூற்றுக்கணக்கான பெரிய பெரிய நூல்களை உள்ளடக்கியது இன்றைய திபிடக.

புத்தரின் போதனைகளை அவரின் சீடர்களின் மூலம் வழிவழியாக சில தலைமுறைகளுக்கு செவிவழி, வாய்மொழி மரபாகத்தான் கடத்தப்பட்டு வந்தன. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு அசோக சக்கரவர்த்தியின் மகன் மகிந்தனின் வருகைக்கு ஊடாக திபிடக இலங்கைக்கு வந்தது. புத்தர் இறந்து 454 ஆண்டுகளுக்குப் பின் தான் திபிடக எழுத்துருவம் பெற்றது. அதுவும் அது இலங்கையில் தான் நிகழ்ந்தது. திபிடகம் எழுத்துருவில் முதலில் பதிவு பெற்றது இலங்கை என்பதால் இலங்கைக்கு உலக பௌத்த நாடுகள் மத்தியில் உயரிய இடம் உண்டு.

“திபிடக” தீபெத்திலும், சீனாவிலும் வித்தியாசமான வடிவங்களில் உள்ளதாக அறியப்படுகிறது. இலங்கையிலும் வெவ்வேறு பௌத்த சங்கங்களாலும், தனி நபர்களாலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உதரணத்திற்கு 1956 புத்தஜயந்தி காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியில் உள்ளவற்றிலிருந்து வேறுப்படும்வகையில் கிரம விமலஜோதி தேரரால் (பொதுபலசெனாவின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் அதன் தலைவராக இருந்தவரும்) நெதிமால பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தொகுதிகளைக் குறிப்படலாம். ஆக இவற்றில் எந்த “திபிடகவை” இப்போது அரசு தேசிய மரபுரிமையாக்கப் போகிறது என்கிற கேள்வி இன்று பரவலாக எழுப்பப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த திபிடக இந்தியாவினுடையது என்றால் அல்லது வேறு நாட்டுடையது என்றால் அது எப்படி இலங்கையின் தேசிய மரபுரிமையாக ஆகமுடியும் என்கிற தர்க்கமும் எழவே செய்கிறது. (குறிப்பாக திபிடகவை போதித்த புத்தர் நேபாளைச் சேர்ந்தவராயின்). இலங்கையின் தேசிய மரபுரிமயாக்கப்பட்டால் (கொபிரைட்) பௌத்த போதனைகளுக்கு இலங்கையிடம் தான் அனுமதி பெறவேண்டுமா?


வரலாற்றுப் பிழைகளை புனிதப்படுத்துதல்
மாத்தளையிலுள்ள ஆலோக (அலு) விகாரை என்கிற பௌத்த விகாரையில் தான் திபிடகம் பொற்றகட்டில் பாலி மொழியில் எழுதப்பட்டு அவ்விகாரையில் ஒரு கற்பாறையின் கீழ்ச்சேமித்து வைக்கப்பட்டதென்று கூறப்படுகிறது. அந்த விகாரையில் தான் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வை கோலாகலமாக செய்துமுடித்தார்.

உண்மையில் திபிடக எழுதப்பட்டது மாத்தளையில் உள்ள அலுவிகாரையில் அல்ல என்றும் அது கேகாலையில் உள்ள மாதுல என்கிற இடத்திலேயே எழுதப்பட்டது என்று பல வரலாற்று ஆதாரங்களுடன் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இந்த நிகழ்வை மாத்தளையில் ஏற்பாடு செய்தததன் மூலம் முக்கிய பிழையொன்று நிகழ்ந்திருக்கிறது என்று மேலும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான பௌத்த வேத நூல்களுடன் திரிபுபெற்ற பல வரலாற்று இதிகாசக்கதைகளும் இன்றைய திபிடகவில் அடங்குகின்றன. அவையும் புனிதத்துக்குரிய வேத நூல்களாகவே பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன. ஏற்கெனவே மகாவம்ச புரட்டுக்கதைகள் புனித மரபுரிமையாக ஏற்றுக்கொண்டதன் விளைவு தான் மகாவம்ச மனநிலையால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களால் – பௌத்தர்களல்லாத ஏனைய சமூகங்களின் மீது காழ்ப்பையும், வெறுப்பையும், மறுப்பையும், எதிர்ப்பையும் கொண்ட ஒரு சமூகம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டது.

அந்த பிழை சரிபடுத்தபடாத நிலையில் மீண்டும் திபிடக எனும் பேரில் மேலதிக புனைவுகளை இந்த நாடு தாங்குமா? ஒரு பல்லின, பன்மத நாட்டில் அரச மேற்பார்வையில் ஏனைய மதங்களும் இனங்களும் ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வரலாற்று அடையாளங்களை திட்டமிட்டு அழித்து, ஒழித்து, ஒளித்து வரும் சூழலில் இந்த திபிடக மரபுரிமையாக்கப்படலை எப்படி எடுத்துக்கொள்வது?


மரபுரிமை அந்தஸ்து
1956 ஆம் ஆண்டு புத்த ஜெயந்தியின் 2500 நிறைவையொட்டி பண்டாரநாயக்கவின் ஆட்சியின் கீழ் திபிடக நூல்கள் பல முறையாக தொகுக்கப்பட்டு சிங்களத்தில் அரச பதிப்பாக அச்சிடப்பட்டன.

திபிடக இலங்கையில் பதிவுபெற்ற மிகப்பழைய புராதன வேத நூலாக கருதப்படுவதால் அதை மீள அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அது தொடர்பில் பிக்குமார்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இழுபறிபட்டே வந்திருக்கிறது. குறிப்பாக பாலியில் இருந்த மூல ஓலைச்சுவடிகளில் இருந்த சில சொற்களை ஒருவருக்கொருவர் பிழையாக வியாக்கியானம் செய்துகொண்டிருந்தனர். இறுதியில் இப்போது அவர்கள் அப்பொறுப்பை அரசிடமே கையளித்துவிட்டார்கள்.

மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இப்போது திபிடக அரச அந்தஸ்துயர்வு பெற்றிருக்கிறது. அதைப் பேணிப் பாதுகாத்து, பரப்பும் பணி இனி அரசுடையது.

இலங்கையில் அரசு மரபுரிமையாக இதுவரை ஏற்றுக்கொண்டவை எவை என்பது பற்றிய பட்டியலை இன்றுவரை அரசு முழுமையாக தயாரித்து முடிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டல்
பௌத்த வேதநூல்கள் உண்மையில் மானுட உய்வுக்கான அறநெறிகளை உள்ளடக்கிய ஒன்று தான் என்பது உண்மை. அதற்கு உரிய உயரிய  இடத்தைக் கொடுப்பது வரவேற்கத்தக்கதே. மறுபுறம் பௌத்த மதம் சிங்கள இனத்துவத்துடன் இணைக்கப்பட்டு சிங்கள பௌத்தமாக உருபெருப்பித்து மற்றவர்களை அந்நியப்படுத்தும் போக்கை எப்படி கண்டுகொள்ளாமல் விடுவது.

ஏற்கெனவே மகாவம்சத்தை மரபுரிமயாக்கி, அதைப் பேணவும், தொடர்ந்து எழுதவும் ஒரு நிரந்தர அரச பொறிமுறையையும் ஏற்படுத்தியிருக்கிறது அரசு. அது சிங்களவர்களுக்கு மட்டும் மட்டுபடுத்தும் வகையில் சிங்களத்திலும் பாலியிலும் மட்டுமே அரசு கிடைக்கச்செய்திருக்கிறது. இப்போது திபிடகவும் அந்த வரிசையில் இணைக்கப்படுகிறது.

தமிழர்களுக்கு எதிராக
இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ஆலோகோ உதபாதி” என்கிற ஒரு சிங்களத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் படம் அதுதான். இந்தத் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக்கொண்டது. ஆலோக (அலு) என்பது திபிடகவை உருவாக்கிய  மகாவம்சம், தீபவம்சம் போன்றவற்றில் காணப்படும் பெயர். திரைப்படத்தின் கதையே திபிடகவை உருவாக்க மன்னர் வலகம்பாவும் பிக்குமாரும் எத்தனை பெரிய விலையைக் கொடுத்தார்கள் என்பது தான். 

2100ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு 89இல் மன்னர் வலகம்பா அரசாட்சி செய்த சமயத்தில் தென்னிந்தியாவிலிருந்து “தமிழ் – சைவ” சோழர்கள் படையெடுத்து வந்து நாட்டின் சொத்துக்களையும், ஆட்சியையும் கைப்பற்ற போர் நடத்தியதுடன், பௌத்தத்தை அழித்து தமது சமயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்தார்கள் என்றும், அப்போது ஏராளமான பிக்குகளை தமிழர்கள் கொன்றார்கள் என்றும், பிக்குமார் பலர் காடுகளிலும், குகைகளிலும் மறைந்து வாழ்ந்ததாகவும், 14 ஆண்டு காலம் சோழர்களை எதிர்த்து போராடிய அரசர் வலகம்பா பிக்குமாரை பாதுகாப்பாக இந்த அலுவிகாரைப் பகுதியில் தலைமறைவாக இருத்தச் செய்து திபிடகவை எழுதச் செய்தார் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கான உண்மையான பிக்குமார் இந்தத் திரைப்படத்தில்  நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 41 நாடுகளில் காண்பிக்கப்பட்டு பல நாடுகளில் சர்வதேச விருதுகளைக் குவித்தது.

அரசர் வலகம்பாவுக்கு சோமாதேவி, அனுலாதேவி என இரண்டு மனைவிகள். சோழர்களின் ஆக்கிரமிப்பின் போது பின்வாங்கி ஒரு வண்டிலில் தப்பிச் செல்லும்போது ஐந்துபேர் கொண்ட வண்டி ஒரு கட்டத்தில் பாரம் காரணமாக வேகமாக செல்லாததால் அந்தப் பாரத்தை குறைக்கும் நோக்கத்துடன் சோமாதேவி வண்டிலை விட்டு பாய்ந்து தன்னை அர்ப்பணிக்கிறாள். அனுலா தேவி ஏற்கெனவே கர்ப்பிணியாக இருப்பதாலும், மன்னர் வலகம்பா தப்பினால் தான் இந்தப் போரில் மீண்டும் ஈடுபடமுடியும் என்பதாலும், மற்ற இருவரும் சிறு பிள்ளைகள் என்பதாலும் இந்த முடிவை சோமா தேவி எடுத்தார் என்கின்றன சிங்கள இதிகாசக் கதைகள். வண்டிலை விட்டு பாய்ந்த சோமா தேவி தமிழர்களிடம் அகப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறாள். இன்றளவிலும் சோமா தேவி சிங்கள சமூகத்தில் பெரிய வீராங்கனையாக சித்திரிக்கப்படும் பாத்திரம். தன்னை இழந்து இலங்கை தேசத்தை காப்பாற்றிய தியாகியாக வணங்கப்படுகிறார் சோமாதேவி.
மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். ஆகவே துட்டகைமுனுவுக்குப் பின் அரச பதவி அவரின் சகோதரன் சத்தாதிஸ்ஸவுக்கே போனது. சத்தாதிஸ்ஸவின் மரணத்துக்கு பின் அவரது மகன்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசி இளைய மகன் தான் வலகம்பா. “வட்டகாமினி” என்கிற பெயராலும் வரலாற்று நூல்களில் அறியப்படுபவர்.

இந்தக் கதை மகாவம்சம் உள்ளிட்ட பல இலக்கியங்களில் உள்ளவை தான். திபிடகவிலும் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


ஆக அந்நியத் தமிழர்களிடமிருந்து (இந்துக்களிடம் இருந்தும்) சிங்கள பௌத்தர்களை பாதுகாக்க புரியப்பட்ட போர்களாக சித்திரிக்கப்பட்ட இப்பேர்பட்ட கதைகள் தான் இன்றளவிலும் தமிழர்களை கள்ளத்தோணிகளாகவும், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாகவும், அழித்தொழிப்பாளர்களாகவும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கருத்துருவமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அப்பேர்பட்ட புனைவின் நீட்சியாகத் தான் இப்போதைய இந்த முயற்சியைக் காண வேண்டியிருக்கிறது.

தேரவாதம் அடிப்படைவாதமா? 
இலங்கையில் தேரவாத – மகாயான பௌத்தத்துக்கிடையில் கடும் சண்டைகள் வரலாற்றில் நடந்து பின் தேரவாதம் நிலைபெற்ற வரலாற்றை அறிவோம். தேரவாதத்தின் அடிப்படை வேதநூல் தான் திபிடக. உலகில் தேரவாதத்தை கடைபிடிக்கும் நாடுகளெல்லாம் பௌத்த வன்முறை சார்ந்த தீவிரவாத நாடுகளானது தற்செயலா? திபிடகவை கடைபிடிக்கும் நாடுகள் இப்படி ஆனதன் பின்புலம் தான் என்ன? அகிம்சையை போதிக்கும் பௌத்த வழிகளில் இருந்து இந்த திபிடக வேறுபடுகிறதா என்பது போன்ற கேள்விகள் நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தேரவாத பௌத்தத்தின் தலைமையகமாக இலங்கையை அறிவித்துவருகிறார்கள் இலங்கை பௌத்தர்கள்.

உலகில் இலங்கை, மியான்மார், தாய்லாந்து ஆகிய தேரவாத பௌத்தத்தைக் கடைபிடிக்கும் நாடுகள் மாத்திரம் மோசமான அந்நிய வெறுப்புணர்ச்சியையும், தீவிர வன்முறையைக் கைகொள்வதன் பின்னணி என்ன என்கிற ஆய்வுகள் சமீப காலமாக  கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது மேலதிக செய்தி. மென்போக்கும் கருணையும் நிறைந்த மஹாயான பௌத்தத்தை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகிறார்கள். தேரவாத நாடுகள் குறைவிருத்தி நாடுகளாக காணப்படுகின்றன. இந்த மஹாயான நாடுகள் தான் செல்வந்த நாடுகளாகவும் உள்ளன. அதுமட்டுமன்றி இலங்கைக்கும் நீண்டகாலமாக பொருளாதார ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவும் திகழ்கின்றன. இவை தற்செயல் தானா?


தேரவாத சட்டமூலம்
தேரவாத பௌத்த சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து பிக்குமாரின் மோசமான நடத்தைகளை கட்டுப்படுத்தும் முயற்சி இழுபறி நிலையில் இருக்கிறது. அச்சட்டமூலம் பிக்குமாரின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியது. ஏறத்தாழ அது பௌத்த பிக்குகளுக்கான ஒழுக்கக் கோவை தான். “துறவறம் பூண்ட” பிக்குமார் பலரிடம் இன்று பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. பணம், காணிகள், வாகனங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருகின்றன. எந்த வரையறையுமில்லாமல் தாம் நினைத்த இடங்களில் விகாரைகளை அமைத்து வருகிறார்கள். பிக்குவாக ஆவதற்கான வயது, தகுதி என்பன மீறப்படுகின்றன. தன்னிச்சையாக கட்டுபாடின்றி இயங்குகின்றார்கள். இவை எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் வகையில் இந்த சட்டம் தயாரிக்கப்பட்டது.

இப்படியான ஒரு சட்டக்கோவையின் தேவையை அரச மட்டத்தில் உணர்ந்திருந்தாலும் கூட அதனை முன்னெடுக்கும் துணிச்சல் அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. ஆனால் 2013ஆம் ஆண்டு மூன்று பிரதான நிக்காயக்களின் மகாநாயக்கர்கள் சேர்ந்து அன்றைய ஜனாதிபதி மகிந்தவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து “தேரவாத சட்டமூலம்” என்கிற ஒன்றைக் கொண்டுவரும்படி வலியுறுத்தினர். அதனை செய்வதாக ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்ஷவால் அவர் பதவி வகித்த 2015வரை அதனைக் கொண்டுவரமுடியவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு “நல்லாட்சி” என்கிற பேரில் பதவியேற்ற அரசாங்கம் அச்சட்டமூலத்தைகொண்டுவர ஏற்பாடுகளை செய்தது. ஆனால் முக்கிய பிக்குமார்களை இணைத்துக்கொண்டு மகிந்த அந்த சட்டமூலத்தை எதிர்த்து பிரச்சாரங்களைத் தொடங்கினார். அந்த சட்டமூலம் இழுபறி நிலையைத் தொடர்ந்தது.

கடந்த 17.05.2018 அன்று கொட்டுகொட தம்மாவாச மகாநாயக்க தேரர் மீண்டும் அந்த சட்டமூலத்தை ஜனாதிபதிக்கு நினைவூட்டி அறிக்கைகளை விடுத்தார். மீண்டும் அச்சட்டமூலத்தை எதிர்த்து மகிந்த பிக்குமார்களுடன் வீதியில் இறங்கினார். இது பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கையாக திரித்து பிரச்சாரங்களை முடுக்கினார். இறுதியில் அரசு பின்வாங்கியது.

பொதுபல சேனா உள்ளிட்ட ஆராஜக பௌத்த அமைப்புகளையும், பிக்குமார்களையும் எதிர்த்து நின்ற பல ஜனநாயக சக்திகள் இப்படிப்பட்ட ஒரு சட்டமூலம் அவசியம்தான் என்று காத்திருந்தனர். ஆனால் அது மீண்டும் குப்பைக்கூடைக்குள் போய்விட்டது.

பௌத்தர்களை திருப்திபடுத்துவதில் சிறந்தவர் ரணிலா, சிறிசேனவா
இன்று ஜனாதிபதிமுறைக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையில் ஒரு கெடுபிடிப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் அறிவோம். பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களை திருப்திபடுத்துவதில் அதி சிறந்தவர் ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்கிற போட்டியும் இதில் உள்ளடங்குகிறது. பிரதமர் ரணில் பௌத்த மதத்துக்கு தொடர்ந்தும் முன்னுரிமை கொடுப்பேன், யாப்பில் அது தொடர்பில் எந்தவித மாற்றத்தையும் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி கொடுக்கையில் மறுபுறம் ஜனாதிபதி தான் திபிடகவை மரபுரிமையாக பிரகடனப்படுத்துவேன் என்கிறார். வேகமாக களத்தில் இறங்கி அதை முடித்தும்விடுகிறார். 

இது 1956 நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறது. களனி மாநாட்டில் வைத்து சிங்களம் மட்டும் கொள்கையை ஜே.ஆர். பிரகடனப்படுத்தியபோது, பண்டாரநாயக்கா அதற்கு ஒருபடி மேலே போய் நான் மட்டும் சளைத்தவனா என்கிற பாணியில்; தான் ஆட்சியமைத்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல்படுத்திக்காட்டுவேன் என்று பிரகடனப்படுத்தி சிங்கள ஆதரவு அலையை தன் பக்கம் திருப்பியெடுத்தார். இன்றும் அதே ஐ.தே.க. - அதே சுதந்திரக் கட்சி. தலைவர்கள் மட்டும் தான் வேறுபடுகின்றனர். 60 ஆண்டுகளுக்கும் பின்னர் மாறாத போக்கு.


2019 தேர்தல் ஆண்டு என்று ஏற்கெனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கைப்பற்றும் போட்டியில்; சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளுக்கு எதிரான பணிகள் வேகமாக நடக்கின்றன. தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இவற்றை பொருட்படுத்தாமல் இருக்கின்றன.

சிங்கள - பௌத்த பேரினவாத கட்டமைப்பை நிரந்தரமாக பலப்படுத்தும் பணிகளை இரு பிரதான கட்சிகளும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி வேகமாக மேற்கொண்டு வருகின்றன.

தேசிய மரபுரிமைகள் அமைச்சு
இந்த அமைச்சு மகிந்த ஆட்சியினால் 22.11.2010 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அறிவிக்கப்பட்டு தனி அமைச்சாக உருவாக்கப்பட்டது. அதுவரை கலாசார அமைச்சின் கீழ் ஒரு பகுதியைக் இயங்கிவந்தது.

இதன் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம், தேசிய நூதனசாலைகள் திணைக்களம், தேசிய சுவடிகள் திணைக்களம் என்பன இந்த அமைச்சீன கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த மூன்று திணைக்களமுமே தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்துவருவதையும், திட்டமிட்டு அழித்துவருவதையும், தமிழ் பிரதேசங்களில் உள்ள புராதன இடங்களையெல்லாம் சிங்கள பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்திவருவதையும் நாம் அறிவோம்.

இந்த அமைச்சுக்கான நிர்வாக அறிக்கை 2011 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் 31.12.2011 ஆம் திகதி பிரதான பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட 10 பேரின் பெயர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் ஒருவர் கூட சிங்கள பௌத்தர் அல்லாதவர் இல்லை. அந்த வருடம் மாத்திரம் அவ்வமைச்சின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மாத்திரம் 47.5கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சுக்காக மொத்தம் வருடாந்தம் ஏறத்தாழ 1.5 பில்லியன்கள் ஒதுக்கப்படுகின்றன.

‘திபிடக’வை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளை ஏற்கெனவே கலாச்சார அமைச்சு முன்னெடுத்து வருகிறது. இதுவரை தமிழில் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகளை செய்ததில்லை என்று கலாச்சார அமைச்சின் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது. பௌத்த அலுவல்கள் அமைச்சின் 2015 ஆண்டின் செயற்திட்ட அறிக்கையின்படி ‘திபிடக’ ஆங்கில மொழிபெயர்ப்புக்காக மட்டும் 25 லட்சம் ரூபாய் அவ்வாண்டுக்கு மாத்திரம் செலவிடப்பட்டிருக்கிறது.

கலாசார அமைச்சு, மரபுரிமைகள் அமைச்சு, பௌத்த விவகார அமைச்சு போன்ற தேசிய அமைச்சுக்கள் “தனிச் சிங்கள அமைச்சு”க்களாகவே இயங்கி வருகின்றன என்பதற்கு இப்படி நூற்றுக்கணக்கான ஆதாரங்களைக் கூற முடியும். இவ் அமைச்சுக்களின் தனிச்சிங்களப் போக்கை அறிய அவற்றின் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தனிச்சிங்கள செய்திகளும், விபரங்களும், வெளியீடுகளும் போதும்.

இலங்கையின் மரபுரிமை என்பது சிங்களவர்களின் மரபுரிமையாக மட்டும் நம்பவைக்கப்பட்டிருக்கும் தேசத்தில் வேறென்ன நமக்கு மிஞ்சும்.

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates