இலங்கையில் மலையகத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் செறிந்து வாழும் (இந்திய வம்சாவழி தமிழர்களாகிய) மலையகத் தமிழர்கள் ஆகிய நாம் தேயிலை, இறப்பர். தென்னம் தோட்டங்களிலும், மலையக நகரங்கள், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றோம்! தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பின்பற்றும் நாம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் மரபுரிமையாக பெற்றவர்களாவோம்.!
ஒரு இன - வர்க்க சமூகமான மலையகத் தமிழர்களாகிய எமக்கென சிறப்பான மொழி, இலக்கிய காப்பிய மரபுகள், வழக்காறுகளை, மரபுகள் நம்பிக்கைகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவு, ஆடை ஆபரணங்கள் பாவனை பொருட்கள் வாழ்வியல் முறைகள் என்பன உண்டு.
எமக்கிடையே காணப்படும் எண்ணற்ற மரபுரிமைகளை மீட்டெடுக்கவும், ' பாதுகாக்கவும் முன் வருமாறு அறைகூவல் விடுகின்றோம்
- எமது மூதாதையர் உருவாக்கிய தேயிலை இறப்பர் தோட்டங்களில் காணப்படும் கோவில்கள், கல்லறைகள், சுமைதாங்கிகள், கட்டுமானங்கள், சிலைகள், வேலைத்தலங்கள், தொழிற்சாலைகள், கல்வெட்டுக்கள், நினைவு சின்னங்கள் மட்டுமின்றி எமது வீடுகளில் காணப்படும் ஓவியங்கள், அம்மி, ஆட்டுக்கல், திருவைகல், உணவு தயாரிக்கும் பாரம்பரிய வெண்கலப்பொருட்கள், அணிகலன்கள், எமது மரபு சொத்துக்களாகும்.
- எமது இடப்பெயர்கள், தொழிற்பெயர்கள், மொழி வழக்குகள், தாலாட்டு, தெம்மாங்கு பாடல்கள், ஒப்பாரி, குழவைப்பாடல்கள், பறவை காவடி, காவடிப்பாடல்கள், எமது மரபுரிமைகளாகும். அத்தோடு கோலாட்டம், கும்மி, தீ பந்தம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பம் என்பனவும் எமது மரபுரிமைகளாகும்.
- எமது மலையக தமிழர்களிடையே, தொழிலாளர்களிடையே பயிலப்படும் மலையக தேசிய கூத்தான காமன் கூத்து, பொன்னர் சங்கர். அர்ச்சுனன் தபசு, லவக்குசா, பவளக்கொடி, காத்தவராயன் கூத்து, மருதைவீரன் கதை, காட்டேறி விழா..! கெங்கையம்மன் திருவிழா, தேசிங்கராஜன் கதை. கண்டியராஜன் கதை, குறவஞ்சி மார்கழி பஜனை போன்ற கூத்து வடிவங்கள் எமது மரபுரிமைகளாகும்.
இலங்கை மலையகத்தமிழர் மரபுரிமை பாதுகாப்பு அமைப்புமலையகத் தமிழர் மரபுரிமை பாதுகாப்பு ஆண்டு - 2019
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...