ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் நாம் சில தீர்மானங்களை எடுப்போம். எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதாக அது அமையும். அதை வருடம் முழுக்க எத்தனைப்பேர் செயற்படுத்துவார்கள் என்பது சந்தேகமே.
மீண்டும் அடுத்த வருடம் அதை முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையோடு காலத்தை கடத்தினால் புதிதாக ஒரு பிரச்சினை எம்மை அணுகும் அல்லது நாமாகவே உருவாக்கிக்கொள்வோம். இது மனித இயல்பு. ஆனால் ஒவ்வொரு வருடமும் எந்த இலக்குமில்லாது தீர்மானங்களை மட்டும் எடுத்து விட்டு பயணிக்கின்றது மலையக அரசியல்.
ஒவ்வொரு புதிய வருடத்திலும் ஏமாற்றங்களே தமக்கு மிஞ்சப்போகின்றன என்பதை அறிந்தே மலையக பெருந்தோட்ட மக்களும் இப்போது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதேயில்லை. சம்பள விவகாரத்திலும் எந்த ஒரு நம்பிக்கையுமில்லாது புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர் தோட்டத்தொழிலாளர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை நாட்காட்டியின் இலக்கங்களே மாறியுள்ளனவே தவிர, புது வருடத்தை வரவேற்கும் மனநிலையில் எந்தத் தொழிலாளர் குடும்பங்களும் இல்லை.
மலையக அரசியல்வாதிகளும் நாட்டின் அரசியல் சூழ்நிலைகளின் மீது பழியை போட்டு விட்டு தமது அன்றாட அலுவல்களை கவனிக்க புறப்பட்டு விட்டனர். கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புபடாத அரசியல் தலைவர்கள் தமக்குக் கிடைத்த பொறுப்புகளின் மூலம் பழைய பணிகளை ஆரம்பிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் பற்றி புதிதாக பேசுவதற்கு எவரிடமும் எந்த தகவல்களும் இல்லை. ஏனென்றால் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க சகல தரப்பினருடன் பேச்சு நடத்தி முடித்து விட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இனி கடவுளிடம் பேச்சு நடத்தப்படும் என்று அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஐந்து வருட பாராளுமன்ற உறுப்புரிமை அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஆசனங்களில் அமரும் பிரதிநிதிகளில் எத்தனைப்பேர் இதுவரை குறைந்தது ஓர் ஐந்து வருட திட்டத்தையாவது வரைந்துள்ளனர்? இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை எப்படியாவது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது வழமை என்று தெரிந்தும் இறுதி நிமிடம் வரை கதிரைகளை சூடாக்கி அமர்ந்திருந்து விட்டு பின்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என திடீரென தூக்கத்திலிருந்து விழித்து தமது இயலாமையை காட்டுவதே இவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது.
கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் இப்படி என்றால் அதற்கு வெளியே இருக்கும் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் உருப்படியான ஒரு திட்டத்தை இதுவரை முன்மொழியவில்லை. கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் நாம் நியாயமான சம்பளத்தை பெற்றுத் தருகிறோம் என்று கூறும் இவர்கள் அதை எங்ஙனம் பெற்றுத்தரப் போகின்றார்கள் என்பதை கூறினாலே போதுமே தொழிலாளர்கள் வேண்டாம் என்றா கூறப்போகின்றனர்? வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுவது போன்று, “தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகள் எடுப்பதை விட இங்கு யார் அதை பெற்றுக்கொடுப்பது என்ற போட்டியே நிலவுகிறது “ என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தொழிலாளர்களின் ஊதிய விவகாரத்தில் ஏமாற்றமடைந்திருப்பது தொழிலாளர்கள் மட்டுமல்லர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தொழிற்சங்கவாதிகளும் தான். இதற்குப்பிறகு எந்த முயற்சிகளும் எடுக்க முடியாத நிலைமையில் ஏமாற்றத்தின் விரக்தியில் அவர்களின் மௌனம் தொடர்கிறது. சில நேரங்களில் இவ்வருடம் இடம்பெறவிருப்பதாகக் கூறப்படும் தேர்தல்களில் இவ்விவகாரம் குறித்து பேசுவதற்கு தம்மை தயார் படுத்துகிறார்களோ தெரியவில்லை.
பிரதிநிதிகளை நம்பி தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர். அரசாங்கத்தையும் தனி நபர்களையும் நம்பி பிரதிநிதிகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். ஆனால்; இது திட்டமிட்ட செயற்பாடு என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமலிருக்கின்றனர் பிரதிநிதிகள். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதுவுமே தட்டில் வைத்து கொடுக்கப்படவில்லை. அதுவும் பெருந்தோட்ட மக்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. அப்படியும் ஏதாவது கொடுக்கப்பட்டாலும் அது மலையக பிரதிநிதிகள் ஊடாகவே பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் இந்த மக்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போனதே மிச்சம். நாம் எதற்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம் என்ற கேள்வி இன்று ஒவ்வொரு தொழிலாளியின் மனதிலும் எழுந்துள்ளது. இது ஒவ்வொரு தேர்தலிலும் எழுந்து அது பிரதிநிதிகளிடம் நேரடியாக கேட்கப்படும் போதே அதற்கான பதில் அவர்களுக்குக்கிடைக்கும். அந்த பதிலின் மூலமே யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற தெளிவை அவர்கள் பெறுவார்கள். அதுவரை கேள்விகளை மனதிலடக்கி வைத்துக்கொண்டிருந்தால் ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் இலக்கங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கும். இவர்களின் வாழ்க்கை அப்படியே தொடரும்.
ஒவ்வொரு புதுவருடத்திலும் மலையக பிரதிநிதிகள் தமது வாழ்த்துச் செய்தியில் மறக்காது ஒரு வார்த்தையை பிரயோகிப்பார்கள். மலையக மக்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும்,சுபீட்சம் பெருகட்டும் இப்படியாக வாழ்த்துக்கள் தொடரும். அதை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு பிரதிநிதிகளிடம் தானே உள்ளது? அதற்கு இவர்களில் எத்தனைப்பேர் முயற்சிக்கின்றார்கள் என்பது தான் இங்கு எழுந்திருக்கும் கேள்வி. ஏனென்றால் சாதாரணமாக நடமாடிக்கொண்டிருந்தவர்களை வாக்குகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்து அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுவதற்குக் காரணமாக இருந்த தொழிலாளர்களுக்கு இவர்கள் என்ன செய்யப்போகின்றனர்? அதை எப்போது செய்யப்போகின்றனர்? இந்த மக்கள் குறித்த புதுவருட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு விட்டனவா? அல்லது வழமை போன்று வருட இறுதி வரை அறிக்கை அரசியல் மட்டும் தானா? கொழுந்து கூடையின் சுமையை இறக்கி வைத்தாலும் தொழிலாளியின் மனச்சுமை கூடிக்கொண்டே செல்வதை தடுக்க முடியாதுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...