Headlines News :
முகப்பு » , , » வரலாற்று நாயகி "தாசி அஞ்சுகம்" பிரிட்டிஷ் நூலகத்தில் கண்ட அற்புதம் - சோ.சிவபாதசுந்தரம்

வரலாற்று நாயகி "தாசி அஞ்சுகம்" பிரிட்டிஷ் நூலகத்தில் கண்ட அற்புதம் - சோ.சிவபாதசுந்தரம்


ஐம்பது ஆண்களுக்கு முன்னர் இலங்கை வானொலியில் தமிழ் நிகழ்ச்சிப் பொறுப்பாளராயிருந்த போது, சங்கீத வாத்தியார் பலருடன் பழக நேர்ந்தது. அனேகமாக அந்த நாட்களில் கொழும்பில் சங்கீதம் சொல்லிக்கொடுத்தவர்கள் இந்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார் கள். ஒரு சிலர் பிராமண வகுப்பினர். வேறு சிலர் நாதசுரப் பரம்பரையினர். வீணை சண் முகம்பிள்ளை என்ற முதியவர் முன்பு நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்தவர், பின்பு அதை விட்டு, வீணை வித்வானாகப் பலருக்கு முறையாக வீணை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நல்ல ஞானஸ்தர். கர்நாடக இசை சம்பந்தமாக ஏராளம் உருப்ப டிகளைத் தெரிந்து வைத்திருந்தார்.

வானொலி நிலையத்தில் ஒரு நாள் நான், சிலப்பதிகாரத்தில், நாரதர் அபஸ்வரம் இழைத்து இந்திர சபையில் ஊர் வசியின் நட னத்தில் குழப்பம் செய்ததால் இந்திரன் சாபம் பெற்ற ஊர்வசி, பூலோகத்தில் மாதவியா கப் பிறந்த காட் சியை ஒலிச் சித்திரமாக நான்கு வீணை களை வைத்து ஒத் திகை செய்யும் போது, வீணை சண்முகம் பிள்ளையும் அங்கிருந்தார். ஒத்திகை முடிவில் சண்முகம் பிள்ளை , தனது அத்தை ஒருவர் தேவதாசிகள் பரம்பரையைப் பற்றி, புராணங்களிலும் சரித்திரத் திலுமிருந்து செய்திகள் சேகரித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார் என்றும், சேர் பொன். இராமநாதன் குடும்பத்தைச் சேர்ந்த சிறீகாந்தா என்பவர் இதற்கு உதவினார் என்றும் ஒரு தகவலைச் சொன்னார். அந்தப் புத்தகம் அவரிடத்தில் இல்லை. பின்பு நானும் கொழும்பிலே பலரிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்தின் கீழைத்தேசப் பிரிவிலுள்ள பழைய தமிழ் நூல்களில், "உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு" என்ற பெயரில் ஒரு புத்தகம் எதிர்ப்பட்டது. என் கண்களை நான் நம்பவில்லை. இதன் ஆசிரியர் பெயர், "கொழும்பு சிவகாமி யம்பிகா சமேத பொன்னம்பலவாணேசருக்கு அடிமை பூண்ட கா. கமலாம்பிகையின் புத் திரி அஞ்சுகம்" என்று முதல் பக்கத்தில் தெளிவாகக் காணப்பட்டது. நூலைப் புரட்டிப் பார்த்ததில், புராண இதிகாச காலத்துத் தாசிகள் முதல், ஆசிரியை அஞ்சுகத்தின் மூத்த ஆறு தலைமுறையினர் வரலாறும் விவ

ரமாக எழுதப்பட்டடிருப்பதைப் பார்த்தேன் . ஆசிரியை அஞ்சுகம், தனது பாட்டியார் காமாட்சி முதலாகச் சொல்லியிருக்கும் வரலாற்றின் சுருக் கத்தை இங்கு பார்க் கலாம். யாழ்ப் பாணக் கலாச் சாரத்தின் சென்ற நூற்றாண்டு வடி வத்தின் ஓர் அம் சத்தை இங்கு காணலாம்.

1850ம் ஆண்டு யாழ்ப்பாணத்து கைதடி மணியகா ரர் காசிநாத முதலியாரின் மகன், வேலப்ப முதலியார் தென்னிந்தியாவில் குளிக்கரை விஸ்வநாதேஸ்வரர் கோ வில் திருவிழா ஒன் றில் காமாட்சி என்ற தாசியின் நடனத்தைப் பார்க் கிறார். இந்தக் காமாட்சியின் கொள்ளுப்பாட்டி (பாட்டியின் தாயார்) திருக் கண்ணமங்கை அபிஷேக வல்லி என்பவர் அவர் காலத் தில் கலையுலகத்தில் புகழ் பெற்று விளங்கியவர். அவர் வழிவந்த காமாட் சியின் நடனத்தைப் பார்த்த வேலப்ப முதலியார், உரியவர்களுடன் ஒப்பந்தம் பேசி, காமாட்சியையும், பதினொரு வயதான அவர் பெண் கமலாம்பி கையையும் அழைத்துக்கொண்டு கைத்டிக்குத் திரும்பினார். பல காலமாக யாழ்ப்பாணத்தவர் தென்னிந்திய நடன மாதர்களை, ஒப்பந்தம் பேசி, யாழ்ப் பாணத்துக்கு அழைத்து வந்து கோவில் திருவிழாக்களில் "சின்ன மேளம்" என்ற பெயரில் நாட்டியமாட ஏற்பாடு செய் வது பெருவழக்காயிருந்து வந்தது. அள வெட்டி, இணுவில் முதலிய இடங்களில் நாதஸ்வர தவில் இசைக் குழுவினர் பரம்பரை, கோவில் திருவிழாக்களுக்காக வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் சந்த தியார் என்பதைக் காணலாம்.

காமாட்சியின் புதல்வி கமலாம்பிகையின் நாட்டியச் சிறப்பைக் கேள் விப்பட்ட கொழும்புப் பிரமுகர் ஒருவர் அதில் அக்கறை கொண்டார். அவர் பெயர் பொன்னம்பல முதலியார். இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருந்த சேர். பொன். இராமநாதனின் தந்தை பொன்னம்பல முதலியார் தான் அவர். இவர் தமது கல்யாண வைபவத்தில் கமலாம்பிகையின் நாட்டியம் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தில், வேலப்ப முதலியார் மூலம் ஏற்பாடு செய்தார். கொழும்பிலே அது ஒரு முக்கிய மணவிழாவாகப் பேசப் பட்டது.

கைதடியில் சில காலம் தங்கியிருந்த காமாட்சி பின்னர் பெண் கமலாம்பிகையுடன் குளிக்ரைக்குத் திரும்பியதும், நோய்வாய்ப்பட்டுக் காலமானார். தாயாக வளர்ந்துவிட்ட கமலாம்பிகை, தனக்குப் பிறந்த புதல்வி சந்தானவல்லியையும் அழைத்துக்கொண்டு பழையபடி கைத்டிக்கே வந்துவிட்டார். இதற்கிடையில் கொழும்புப் பிரபு பொன்னம்பல முதலியார் கொழும்பு நகரிலே ஒரு சிவன் கோவில் ஸ்தாபிக்கத் தொடங்கி, தமிழ் நாட்டு சிற்பிகளைக் கொண்டு "பொன்னம்பலவாணேஸ்வரம்' என்ற பெயரில் ஓர் ஆலயம் எழுப்பி, அதன் கும்பாபிஷேக வைபவத்தில் கமலாம்பிகையின் நடனத்தையும் ஏற்பாடு செய்ய விரும்பினார். உடனே கைதடிக்கு தகவல் அனுப்பி, 'எனது கல்யாணத்தில் நீ ஆடினாய். இப்போது நீ பொன்னம்பலவாணேஸ்வரர் கும்பாபிஷேகத்தில் உன் ஆடலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என செய்தி அனுப்பினார். அந்தக் கைங்கரியம் நிறைவேறியதும், கமலாம்பிகையும், மகள் சந்தானவல்லியும் கொழும்பிலே தங்கி, பொன்னம்பலவாணேசருக்கு சேவை செய்யலானார்கள். சோடசோ பசாரங்களுடன் நடனமும் சமர்ப்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிறுமி சந்தானவல்லிக்கு அங்கேயே பொட்டுக்கட்டு சடங்கு நடந்தது. அவளுக்குப் பிறகு மூன்று சகோதரிகள் பிறந்து மடிந்தார்கள். நாலாவதாகப் பிறந்தவள் தான் இந்த வரலாற்றை எழுதிய அஞ்சுகம். இவளுடைய பிரதாபம் வெகு சிறப்பானது. அஞ்சுகம் மாயவரம் கந்தசாமி நட்டுவனாரிடம் பரதமும், மைசூர் சமஸ்தான வித்வான் கிருஷ்ணசாமி முதலியாரிடமும் திருச்சி அழகிரிசாமி ரெட்டியாரிடமும் வாய்ப் பாட்டும், திருநெல்வேலி சீதாராம் பாகவதரிடம் வீணையும் பயின்று கொண்டார். யாழ்ப்பாணம் வித்வான் நாகலிங்கம் என்பவரிடம் இந்துஸ்தானி இசையும் கற்றார். இது மாத்திரமல்ல யாழ்ப்பாணம் குழந்தைவேல்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கியமும் கற்று, தனது பன்னிரண்டாவது வயதில் பொன்னம்பலவாணேசருக்கு அடிமையாய் பொட்டுக்கட்டி, பதினாறாவது வயதில் வேதாரண்யம் சுந்தரேசக் குருக்களிடம் சிவதீட்சை பெற்று, கொழும்பு பிரபல வர்த்தகர் சின்னையாபிள்ளையின் அபிமான ஸ்திரியாக' கடந்த 25 ஆண்டுகளாக வாழ்கிறேன்" என்று எழுதுகிறார் அஞ்சுகம். இந்த நூல் எழுதப்பட்டது சாதாரணவருடம் (1910)

அஞ்சுகத்தின் கடைசி சகோதரன் குழந்தைவேல், நட்டுவாங்கத்தில் வல்ல வராக விளங்கினார் என்றும், அவருடைய மகன் சண்முகம் பிள்ளை வீணையிலும் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் வல்லவர் என்றும் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இந்தக் குடும்பங்களுக்கு, பொன்னம்பல முதலியாரின் மகன் குமாரசாமி முதலியாரும் அவருக்குப் பின் இராமநாதனும் தொடர்ந்து சம்ரக்ஷணை செய்து வந்தார்கள் என்றும் நன்றியுடன் குறிப்பிடுகிறார் அஞ்சுகம்.

கொழும்பிலே சண்முகம் பிள்ளையிடம் தான் என் மனைவி வீணை கற்றுக் கொண்டார். அவருடைய ஒரே மகன் குழந்தைவேல் ஒருகாலத்தில் வீணை வித்வானாகவும் வாய்ப்பாட்டு வித்வானாவும் விளங்கினார். ஆனால் பிற்காலத்தில் மதுபானப்பழக்கம் அவரை ஆட்கொண்டது. கடைசியாக சென்னையில் நான் அவரைப் பார்த்தது 1966 இல் . அந்தக் குடும்பத்தின் கதை அத்தோடு முடிந்தது.

 நன்றி - நாழிகை 1994.01
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates