மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை திராவிடக் கழகம் 1949 இல் தமிழகத் திராவிடக் கழகத்தினுள் ஏற்பட்ட பிளவின் போது தமிழகத்தையே பின்பற்றியது. சுயமரியாதை இயக்கத்தின் ஸ்தாபகரான ஈ. வெ. ரா. பெரியார் தமது அறுபத்தெட்டாவது வயதில், கழக உறுப் பினர்களில் ஒருவரான இருபத்தாறு வய துடைய செல்வி. மணியம்மையை திருமணம் முடிக்கத் தீர்மானித்தார். பெரியாரின் கொள்கையினை முன்னெடுத்த கழகத்தின் இளம் தலைமுறையினருக்கு இது பாரிய சமூகப் பிரச்சனையாகத் தோன்றியது. தாம் இறந்த பின்பு தமது சொத்துக்களுக்கும், கழக சொத்துக்களுக்கும் ஓர் உறவு முறை உரித்துடையார் சட்ட ரீதியாகத் தேவைப்படுவதை கருத்திற் கொண்டு கழகப் பணிகளுடன் தமது பணிகளையும் செய்து வந்த மணியம்மையை பெரியார் மணமுடிக்கத் தீர்மானித்த போதும், கழகத்தின் ஒரு பிரிவினர் அதனை ஏற்க மறுத்தனர். பெரியாருக்குப் பின் அவரது பணியினை முன்னெடுத்துச் செல்வார் எனக் கருதப்பட்ட திரு. சி. என். அண்ணாத்துரை அவர்கள் பெரியாரின் இவ் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்ததுடன்,
பல வெளியேரத் தீர்மானித்தார். திரு சி. என். அண்ணாதுரையுடன் ஒரு சில பிரிவினர் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பினை 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி உருவாக்கினர்.
திராவிட முன்னேற்றக்கழக அங்குரார்ப்பணக் கூட்டத்தில் உரை யபற்றிய திரு சி. என். அண்ணாத்துரை கழகத்தை கைப்பற்றுவதும், புதிய தலைமையின் கீழ் நடத்துவதும் சாத்தியமான காரியமேயாகும். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். போதிய வலிவும் தேவையான வசதியும், மறுக்கமுடியாத நியாயமும் நம் மிடமிருக்கின்றன. எனினும் நாம் இவ்வழிசெல்வது நாட்டிலே நாசம் நர்த்தனம் செய்வதும், பாசத்திற்கும், பழமைக்கும், நம்மையறியாமல் இடம் தேடி கொடுத்திடவும் நாம் ஆளாகி விடுவோமா என்று அஞ்சுகிறேன். கனிபறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலைச்சுற்றிக்கொள்வது போல் பெரியாரிடமிருந்து கழகத்தை மீட்கும் காரியத்தில் நாம் ஈடுபடும் சமயமாகப் பார்த்து அதைச் சாதகமாக ஆக்கிக்கொண்டு பாசிசமும், பழமையும் மக்களை பிடித்தாட்ட முற்படக் கூடும். கழகத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு யாரும் கட்டுப்படவேண்டிய முறைகள் உண்டு. நாம் அறிந்துள்ள பெரியார் இந்த முறைகளுக்குக் கட்டுப்படவோ இதனை ஏற்கவோ தயாரில்லை. நாம் ஒருபுறம் திராவிடக் கழகமென்ற லேபிளுடனும் அவர் மற்றொரு புறம் அதே லேபிளுடனும் உலாவுவதும் இரு சாராருக்கும் இடையில் மோதவிட விரும்பும் சந்தர்ப்பவாதிகள் ஆட்டம் ஆடுவதற்கும் இந்த சூழ்நிலையை சாதகமாக ஆக்கிக் கொண்டு நாட்டை நாசம் ஆக்குவதற்குமான காரியம்தான் நடைபெறும். கழகத்தின் 'லேபிள்' அல்ல முக்கியம். கொள்கைகள் வேலைத்திட்டம் இவைகளே முக்கியம். ஒரு தனிநபர் கூட லேபிள் தன்னிடம் இருப்பதாக எப்போதும் கூறிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது. இலட்சியமும் உருப்பெறாது. அந்த கூட்டு முயற்சிக்கான வசதியும் வாய்ப்பும் வலிவும் நம்மிடம் இருக்கின்றன. ஏராளமான அளவில் வளரக்கூடிய விதத்தில் கொள்கைகளைப் பரப்பி இலட்சியத்தை வெற்றிகரமாக ஆக்க நாம் தனித்திருந்து அவருடைய தலைமையை மட்டுமல்ல லேபிளையே நீக்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழகமென்ற பெயருடன் பணியாற்றி வருவது தான் நல்ல வழி என்பது என் கருத்து. (11) மேற்கூறிய கருத்துக்களை முன்வைத்து திரு. சி. என். அண்ணாதுரை திராவிட கழகத்தை விட்டகன் று திராவிட முன் னேற்றக் கழகத் தை உருவாக்கியதுடன், இலங்கை திராவிட கழகத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. தமிழக திராவிடக் கழகத்தில் ஏற்பட்ட பிரச்சினையைப் 'பற்றி கலந்துரையாடுவதற்காக இலங்கை திராவிடக் கழக செயற்குழு 1949 செப்டம்பர் 17ம் திகதி ஒன்று கூடியது. பெரியாரின் திருமணம் தொடர்பாகவும் திரு.சி.என்.அண்ணாதுரையின் நடவடிக்கை பற்றியும் கலந்துயைாடப்பட்டது. ஈற்றில் திருவாளர்கள் ஞான. செபஸ்டியான், புலவர் தமிழ்மறை, சீதாக்காதி, கு. யா. திராவிடக்கழல் முதலியோரின் எதிர்ப்புக்கு மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அமைப்பு செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய 1949 முதல் இலங்கை திராவிடக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரினை ஏற்று அதனைப் பிரகடனப் படுத்துவதென முடிவு செய்தது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத்தின் இளம் பேச்சாளராக வளர்ந்து வந்தவரும், கழகத்தின் பொதுச்செயலாளராக அவ்வருட இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திரு. ஏ. இளஞ்செழியன் பிரேரித்த திருத்த பிரேரணையுடன் கழகத்தின் புதிய பெயர் பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழகத்தை சார்ந்த திராவிட கழக உறுப்பினர்கள் திராவிட நாட்டினைக் குறிக்கோளாக கொண்டே திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரினை முன்வைத்துள்ளனர். இலங்கையைத் தாயகமாகக் கொண்ட எம்மால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே நாம் இனத்தினை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் முன்னேற்றக் கழகம் எனும் பெயரினையே பிரகடனப்படுத்த வேண்டும் எனக்கூறியதுடன் அப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அன்று முதல் செயற்பட ஆரம்பித்த இலங்கை திராவிடக் கழகம் அவ்வருட இறுதியில் கழகப் பொதுத்தேர்தலை நடத்தியது. இப்பொதுத்தேர்தலில் கழகப் பொதுச் செயலாளராக இளம் பேச்சாளரான ஏ. இளஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. ஏ. இளஞ்செழியன் பொதுச்செயலாளராகப் பதவியேற்றப்பின் திராவிடர் முன்னேற்ற கழகம், நாடு தழுவிய இயக்கமாகப் பரிணமித்தது. தனியே தமிழகத்தில் தோன்றும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் இயக்கமாக இல்லாது உள் நாட்டு பிரச்சினைகள் தொடர்பாகவும், கழகம் குரலெழுப்பியது. சிறப்பாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பொதுவாக தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குரல் எழுப்பியது.
1946ல் இலங்கை திராவிடர் கழகத்தில் இணைந்து செயற்பட்ட திரு. இளஞ்செழியன் இயற்கையாகவே நாவன்மையைக் கொண்டிருந்தார். தமிழகத்திலிருந்து வெளிவரும் திராவிட வெளியீடுகளான "விடுதலை" “குடியரசு" முதலிய பத்திரிகைகளை தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலம் சாதியத்தைப் பற்றியும். சமயரீதியான மூடநம்பிக்கைகளைப்பற்றியும், ஆழமான அறிவினைப் பெற்றிருந்தமையினால் மிக இலகுவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்பீடத்தை திரு. ஏ. இளஞ்செழியனால் அடையமுடிந்தது. திரு. ஏ. இளஞ்செழியன் முதன்முதலாக 1946ல் கண்டிக்கு அண்மையிலுள்ள (கடுகண்ணாவ) கிரிமெட்டிய தோட்டத்திற்கு விஜயம் செய் ததுடன் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மலையகத் தோட்டங்களுக்கும் வியாபித்தது.
தமிழக திராவிடக் கழகத்தினர், மக்களின் கலாசாரத் துடன் ஒன்றிணைந்து காணப்பட்ட குடும்ப விழாக்களை தமது பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தினர். தமிழ் மக்களின் கலாசாரத்தின்படி திருமணம், பூப்பெய்தல் என் பன பிரிக்க முடியாத குடும்ப நிகழ்வுகளாக காணப்பட்டன. இவ்விழாக்களில் உறவினர்களும், சுற்றம் சூழவுள்ள மக்களும் கலந்து கொள்வது வழமையாக இருந்தது. கழக அங்கத்தினர் ஒருவரின் வீட்டில் இவ்வாறான நிகழ்வுகள் நடந்தால் திராவிடக்கழகத் தலைவர்களை அழைப்பதனை கழக உறுப்பினர்கள் ஓர் கடமையாகக் கொண்டிருந்தனர். இவ்வாறு கலந்து கொள் ளும் தலைவர்கள் பாரம்பரியத்துக்கு பதிலாக சீர்த்திருத்த முறையினை அறிமுகப்படுத்தினர். திரு மணம் ஓன்று நடந்தால் அங் கு ஐயர் புறக்கணிக்கப் பட்டு, கழகத்தலைவர் முன்நிலையில் திருமணம் நடாத்தப்பட்டது. திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என பெரியார் கூறினார். திருமணத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் திராவிடக் கொள்கைகளை விளக்குவதையும், மதத்தையும் சாஸ்திரத்தையும் சாடுவதை ஓர் குறிக்கோளாகக் கொண்டனர். அதே ஊடகத்தை இலங்கை திராவிடக்கழகமும் பின்பற்றியது. திரு. ஏ. இளஞ்செழியன் செயலுக்க உறுப்பினரானதுடன் இவ்வூடகத்தை பயன்படுத்துவது அதிகரிக்கலாயிற்று.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது பிரித்தானிய காலனித்துவ இராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வீடு திரும்பிய கிரிமெட்டிய தோட்டத்தைச் சார்ந்த கே. பி. குணசீலன் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டதுடன் இ.தி.க உடன் இணைந்து செயற்பட்டார். திரு. கே. பி. குணசீலன் 1946ம் ஆண்டு தமது தங்கை செளந்தரம்பாள் திருமணத்தை சீர்திருத்த முறையில் நடாத்த விளைந்து திரு. ஏ. இளஞ்செழியனை தமது தோட்டத்திற்கு வரவழைத்தார். இளஞ்செழியனின் தலைமையில் இரவில் நடக்கவிருந்த இச் சீர்திருத்த திருமணத்தை இத்தோட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்த இலங்கை, இந்திய தொழிச் சங்கக் காங்கிரசைச் சார்ந்த தலைவர்கள் எதிர்த்தனர். இவ்வெதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணத்திற்கான ஆயத்தங்கள் நடைபெறுதுடன் திரு. இளஞ்செழியன் பேச ஆரம் பித்த போது இவ் வுறுப் பினர்கள் அதனை தடை செய் ய முனை ந் த னர். இருதரப் பினர் களுக்கிடையில் பின் னர் சமரசம் ஏற் பட்டதுடன் திரு. இளஞ்செழியன் பேச அனுமதிக்கப்பட்டார். நாவன்மை கொண்ட இளஞ்செழியன் பாரதிதாசனின் கவிதை யான தென் திசை3) யப் பார்க்கின்றேன் என் செய்வேன் எந்தன் தோள்களெல்லாம் பூரிக்குதட்டா, எனும் கவிதையைக் கூறி, மலையகத்தை பார்க்கின் றேன். எந்தன் தோள்களெல்லாம் பூரிக்கு தட்டா, என ஆரம்பித்து மலையக மக்கள் மத்தியில் நிலவும், சாஸ்திரங் களையும், சம்பிரதாயங்களையும் சாதியத்தையும் மதத்தையும் சாடலானார். இவ்வுரையின் பின்னர் அவரை எதிர்த்த பிரிவினர் அவரை தம் வீட்டுக்கு விருந்திற்கு அழைக்கலாயினர். இச் சம்பவத்தின் பின் இ.தி.மு.க. விற்கான களம் மலையகத்தோட்டத் தொழிலாளர் மத்தியிலேயே இருக்கின்றது, என்ற உண்மையை திரு. இளஞ் செ ழியன் அறியலானார். 1950 ஆண்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றும் பொறுப் பினை யேற்ற திரு. ஏ. இளஞ்செழியன் தம்மை ஒரு முழுநேர கழக ஊழியனாக்கிக் கொள்ளாவிடில் கழகத்தினை கட்டியெழுப்ப முடியாது என உணர்ந்தார். அதுநாள் வரை விக்ரோரியா டீ ஸ்ரோஸ் எனும் கடையில் காசாளராக பணியாற்றிய தம் தொழிலை இராஜினாமா செய்து கழகத்தின் முழு நேர ஊழியரானார். தமிழகத் தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த சி. என். அண்ணாதுரை இரண்டு மாதங்களுக்குள் 700 கிளைகளை உருவாக்கி 50, 000 உறுப்பினர்களைச் சேர்த்தார். இதே பாணியிலான நடவடிக்கையை இளஞ்செழியனும் மேற்கொண்டார்.
மலையகத் தோட்டங்கள் தோறும் கிளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதேவேளை இக்காலக்கட்டத்தில் வட இந்தியாவில் டாக்டர் அம்பேத்காரும் தென்னிந்தியாவில் பெரியாரும் சாதியத்தையும் இந்து மதத்தையும் சாடியமையினால் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மதம் மாறும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களுக்கு ஏதேனும் அறவழி தேவையென்பதனை உணர்ந்த அம்பேத்காரும் பெரியாரும் பௌத்த அறநெறி நிலையை பின்பற்றும்படி மக்களிடம் கூறினர். இலங்கையில் திரு. இளஞ்செழியன் தமிழ் பெளத்த சங்கத்தை 1950 இல் உருவாக்கி அதன் இணை செயலாளராகவும் செயற்பட்டார். இத் தமிழ் பௌத்த சங் கத் தின் உருவாக்கம் அகில இலங்கை பெளத் த (சிங்கள) சங்கத்தினருடன் உறவை ஏற்படுத்த உதவியது.
அகில இலங்கை பௌத்த சங்கத்தின் ஆதரவாளரான பொலிஸ் மாஅதிபர் ஒஸ்மன் டி சில்வா தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழ் பெளத்த சங்கத்திற்கு காரியாலயம் ஒன்றினை பெற்றுக்கொடுத்தார். கொழும்பு காலி வீதியில் இல. 161ல் அமைந்திருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் தமிழ் பெளத்த சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்த திரு. இளஞ் செழியன் திராவிடர் முன் னேற்றக் கழக நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். மலையகத் தோட்டங்கள் அனைத்திலும் கிளைகள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த செழியனுக்கு இக்காலகட்டத்தில் வெளிவந்த தமிழக சினிமா படங்கள் பெரிதும் உதவின. தமிழகத் திராவிட முன்னேற்றக் கழக தலைவரானத் திரு. சி. என். அண்ணாதுரை முதலாக கலைஞர் மு. கருணாநிதி வரையிலான தி. மு. க உறுப்பினர்களே இக் காலகட்டத்தில் சினிமா படத்திற்கான கதை வசனங்களை பெரும்பாலும் எழுதினர். இவ் வகையில் கலைஞர் மு. கருணாநிதியினால் திரை, கதை, வசனம் எழுதப் பட்டு சிவாஜிகணேசனால் நடிக்கப்பட்ட " பராசக்தி ” எனும் திரைப்படம் இக் காலகட்டத் திலேயே மலையக சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பீஜி, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்ற தமிழர்களின் அவல நிலைப்பற்றி இப்படத்தில் குரலெழுப்பப்படுவதுடன் சீர்திருத்த கருத்துக்களையும் கடவுளின் பெயரால் மேற் கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான காட்சிகளையும் இப்படம் கொண்டிருந்தது.
சீர்திருத்தக் கொள்கைகளை முன்னெடுத்த இ. தி. மு. க. விற்கு இது பேருதவியாக அமைந்தது. இத்துடன் தமிழகத்தில் இருந்து வெளிவந்த "மாலைமணி ”, “ விடுதலை '', " திராவிடர் ”, போன்ற பத்திரிகைகள் இலங்கையில் பரவலாக கிடைத்தது மட்டுமல்லாது இ. தி. மு. க. வினர் எவ்வெவ் தோட்டங்களில் பிரச்சார கூட்டங்களை நடாத்தின மற்றும் நடாத்தவுள்ளன போன்ற செய்திகளையும் இவை தாங்கி வரலாயின.
இ.தி.மு.க.வினர் மலையகத் தோட்டங்களில் கிளைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை சென்னையை ஆட்சிசெய்த தமிழக காங்கிரஸ் அரசு 1950களில் இறுதியில் மீண்டும் ஹிந்தி மொழியை முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கட்டாயப்பாடமாக்கியது, இதனை எதிர்த்து பெரியாரின் தி. க வும் திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்ப்பார்ப்பாட்டங்களை மேற் கொண்டன. இதற்கு ஆதரவாக எதிர்ப்புக்கூட்டங்களை இ. தி. மு.க. வும் நடாத்தியது, அத்துடன் 1951ல் நடந்த முதலாவது தி . மு .க. மாநாட்டிற்கு இ . தி. மு . க . சார்பாக பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்து இம்மாநாட்டிற்கு நிதிதிரட்டும் முகமாக மலையகத் தோட்டத் தொழிலாளர் முகம் கொடுத் துள் ள துயர வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் கண்ணீர் எனும் நாடகத்தை இ - தி. மு. க. கொழும்பில் மேடையேற்றியதுடன் இதன்மூலம் பெற்ற நிதியை தமது பிரதிநிதிகளுடாக தமிழக தி மு. க. விற்கு அனுப்பி வைத்தது.
இந்நாடகத்திற்கான கதையை திரு. இளஞ்செழியன் கூற செம்பனூர் .கே. இராமசாமி அதற்கான வசனத்தை எழுதியமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு தமிழக தி . மு . க. வின் சிற்பியான திரு.சி . என் . அண்ணாத்துரை தாம் எழுதிய நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தாரோ அதே போல் இளஞ்செழியனும் இந் நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடிக்கலானார். திரு. இளஞ்செழியனுக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட கழக உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு உருவாகியதுடன் கொழும்பு உறுப்பினர்கள் தமது கிளை சார்பாக தனியான பிரதிநிதிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன்படி திரு. எஸ்.கே. மாயக்கிருஷ்ணன், திருப்பூர் கே. கந்தசாமி, அ. நாச்சியப்பன் முதலி யோர் இ. தி. மு . க . சார்பாக கலந்து கொண்டதுடன் இரா . அதிமணி, ஏ. எஸ் .மணவைத்தம்பி என்போர் தொழும்பு மாவட்டம் சார்பாக கலந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளுடன் தமிழக பேச்சாளர்களை இங்கு வரவழைத்து அவர்களை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு கொண்டு சென்று கொள்கை பிரச்சார நடவடிக்கைகளையும் இ. தி. மு. க . மேற்கொண்டது. இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறப்புக் குழுவொன்றினையும் உருவாக்கியது. முறையே அமைப்புக் குழு செயலாளராக கே . இரத்தினம் (பீ, ஏ), அரசியற்குழு செயலாளர் பி . எஸ் . வேலு (பீ. ஏ), ஆய்வுக்குழு செயலாளர் எம் , ஏ , வேலழகன் பத்திரிகைக்குழு செயலாளர் இரா. திருமறவன். நிதிக்குழு செயலாளர் ஆர் . சந்திரன் மற்றும் குறட் செல்வன் குமாரசாமி, க . தமிழ்மாறன் முதலியோர் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.
பபப 1952ல் கொழும்பு சாஹிராக் கல்லுாரி திருக்குறள் மன்றம் தம் கல்லுாரி திருக்குறள் விழாவிற்கு தமிழக தி. மு. க உறுப்பினர் பேராசிரியர் க. அன் பழகனை அழைத்திருந்தது. இவ் விழாவிற்கு சமூகமளித்த பேராசிரியர் அன்பழகனை இ. தி . மு . க. அழைத்து கொழும்பில் பிரச்சாரக்கூட்டத்தை நடாத்தியது, அத்துடன் 1953ல் தமிழக தி . மு . க . உறுப்பினர்களான திருவாளர்கள் சி. பி. சிற்றரசு, ரா. சு. தங்கப்பழம் போன்றோரை வரவழைத்து, பல பிரச்சாரக் கூட்டங்களை நடாத் தி ய து. இவ் வாறான நடவடிக்கைகளுடன் , இலங் கைப் பிரச்சினைகளிலும் இளஞ்செழியன் தலைமையிலான இ.தி.மு.க. அக்கறை செலுத்தத் தவறவில்லை,
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இலங் கையையும் பாதித் த து. 1953ல் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அதுநாள் வரை மக்களுக்கு அளித்து வந்த அரிசி மானியத்தை அகற்ற தீர்மானித்ததுடன் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களை சேவையிலிருந்து நீக்கியது. அதேவேளை ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவ் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதற்காகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஓரணித்திரளுமாறு தொழிற்சங்கங்கள் அறைககூவல் விடுத்தன. இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் இதற்கான கலந்துரையாடலை 20. 07. 53 அன்று ஒழுங்கு செய்தது. அதற்கான அழைப்புக் கடிதத்தை முதல் நாளே அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பி வைத்தது. |
20.07.53 அன் று நடந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் (கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தொழிற் சங்கம்) சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு. எம். ஜி. மென்டிஸ் அவர்களும். இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் (சமசமாஜக் கட்சி சார்பு) சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு. யு. FF. பெரேரா அவர்களும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திரு. எம். சுப்பையா அவர்களும் இலங்கை - வர்த்தக ஊழியர் சங்கம் சார்பாக அதன் பொதுச் செயலாளரான திரு. பி. பாலதம்பு அவர்களும் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலின் முடிவில் மனிதாபிமானமற்ற ரீதியில் அரிசி மானியத்தை நீக்கும் அரசின் முயற்சியையும், ஏனைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் கண்டிக்கும் வகையில் நாட்டின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து! அரசிற்கு எதிர்ப்பினைக் காட்ட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி 1953 ஆகஸ்ட் 12ம் திகதி பூரண ஹர்த்தால் நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தை மேற்கொண்ட அமைப்புகளில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங் கிரஸ் இவ்ஹர்த்தாலில் பங்கு கொள்ளவில்லை. இக்காட்டிக் கொடுப்புக்கு மத்தியில் ஹர்த்தால் பூரண வெற்றி பெற்றது. இவ்வரலாற்று முக்கியத்துவம் பெற்ற போராட்டத்தில் கலந்து கொள் ளு மாறு இலங் கைத் ) தி. மு. க. விற்கு அழைப்பு கிடைக்கா விட்டாலும். இ. தி. மு. க. இவ் ஹர்த்தாலுக்கு சார்பாக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதுடன், சிற்றூழியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தமது அங்கத்தினர்களை அன்றையதினம் தொழிலில் ஈடுபட வேண்டாமென அறைகூவல் விடுத்தது. இதற்கிணங்க இ. தி. மு. க உறுப்பினர்கள் சிலர் அன்றையதினம் தொழிலில் ஈடுபடவில்லை. மேற்கூறிய நடவடிக்கையின் காரணமாக இல 161 காலி வீதி, கொள்ளுப்பிட்டியில் இயங்கிய அதன் செயலகம் பொலீசாரால் முற்றுகையிடப்பட்டதுடன் ஆவணங்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.
இவ்வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவம் தொடர்பாக பல நுால்கள் வெளிவந்துள்ள போதிலும் இ. தி. மு. கவின் பங்கினை பற்றி குறிப்பிடப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகவும், தற்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும் திரு. பீட்டர் கெனமன் இலங்கையை “உலுக்கிய ஒரு நாள்” என்ற நுாலில்
The right wing leaders of the Ceylon Indian Congress and the Ceylon Workers Congress who yielded to the pressure of the Government and of the high commis sioner for India and refused to sanction the strike of their members in the estates have missed a golden opportuniy of demonstrating in prectice the unity of interest between the Ceylonese people and the Indian residents in Ceylon. It is to the mass of the Ceylonese people and not to the UNP government that workers of Indian origin in Ceylon must look for a just solution of their claims to citizenship and franchise (12)
திரு. பீட்டர் கெனமன் தமது நுாலில் இலங்கை தொழிலாளர் காங் கிரஸும், இலங்கை இந்திய காங்கிரஸும் ஹர்த் தால் போராட்டத்தினை கைவிட்டமையைப் பற்றி சுட்டிக்காட்டிய போதிலும் சிறிதளவிலேனும் ஒத்தாசை நல்கி பொலிஸ் கெடுபிடிகளுக்கு ஆளான இ. தி. மு. கவைப் பற்றி குறிப்பிடவில்லை . ஹர்த்தால் சம்பவத்துடன் இலங்கைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் குரலழுெப்பிய இ. தி. மு. க உட்கட்சி முரண்பாட்டிற்கு முகம் கொடுத்தது. திரு. ஏ. இளஞ்செழியன் தலைமையிலான பிரிவினர் இ. தி. மு. க இலங்கை வாழ் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்காக குரலெலுப்ப வேண்டுமென்பதுடன் தமிழக தி. மு .க தலைமைகளை இ. தி. மு. க ஏற்கக்கூடாது எனும் கருத்தினை முன்வைத்தனர். இக்கருத்தினை ஏற்காதவர்கள் வேரொரு அமைப்பாக பிரிந்தனர்.
1954ல் இலங்கை வந்த தி. மு. க. வின் மூத்த உறுப்பினர் நாவலர் நெடுஞ்செழியன் இவ்விரு பிரிவினரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் அம்முயற்சி பயனளிக்கவில்லை,
திரு. ஏ. இளஞ்செழியன் பதவியேற்ற முதல் இ. தி. மு. க. வை இலங்கை மயமாக்க முனைந்ததுடன் அதன் தலைமை இலங்கையரைக் கொண்டதாக இருக்க வேண் டும் என் ற நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தார். ஆனால் இக்கருத்தினை எதிர்த்த பிரிவினர் தமிழக தி. மு. க. தலைமையே இலங்கை தி. மு. க.வின் தலைமையாக இருக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டினை மேற்கொண்டனர்.
இப்பிரச்சினை தொடர்பாக பொதுச் செயலாளர் என்ற ரீதியில் திரு. ஏ. இளஞ்செழியன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில், இலங்கை திராவிடர் முன்னேற்றக்கழகம் இலங்கை மக்களுடையது. அதன் லட்சியமும் வாழ்வும் ஆகும் என்பதை புரிந்துக்கொண்டு ஒரே இன மக்கள் என்ற திராவிட இனத்தவர்களுக்கான தன்னால் ஆன மட்டும் ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக இருக்கவேண்டும் தவிர பாரத நாட்டு காந்தியார், நேருஜி போன்ற தலைவர்களின் பெயர்களை கூறி நாம் இந்தியர்கள் நமது தலைவர்கள் காந்தி நேரு என காங்கிரஸ்ப்பக்கம் மலைநாட்டு மக்களை இழுத்து மக்கள் மீது இந்நாட்டுப் பற்றும், இந்நாட்டு நம்பிக்கையை கொள்ளாத வண்ணம் பல லட்சம் மக்களது வாழ்விலே மண்ணைத்தூவி அவர்களை நாடற்றவர் நாதியற்றவர் என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். மலைநாட்டு மக்களே அஞ்சாதீர்,அஞ்சாதீர் உங்களது பிரஜா உரிமை இதோ பாரோர் புகழும் பாரதப் பிரதமர் நேருவிடமிருந்து வருகிறது தபாலில் என்ற நம்பிக்கையை ஊட்டி ......... இன்னுமொரு பிரிவினர் சென்னையை காட்டி அங்கிருந்துதான் உங்கள் விடுதலை நிச்சயமாக வரும் என்ற ஆகாத நம்பிக்கையை ஊட்டி (13) என நீண்டுச் செல்லும் தமது செய்தியில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டுத் தலைவர்களையே தமது தலைவர்களாக கொள்ள வேண்டுமெனவும் இந்நாட்டை அவர்களது தாய்நாடாக கருதேவண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வம்சாவளி மக்கள் இலங்கையில் நிரந்தரக்குடிகளாக ஆகிய நாள் முதல் இந்தியத் தலைவர்களையே தமது தலைவர்களாகக் கருதியதுடன் இந்தியாவைத் தமது தாய் நாடாகக் கருதினர். இலங்கையின் இடதுசாரி தலைவர்களை தவிர்த்து ஏனைய இலங்கைத் தலைவர்கள் இவர்களை வேற்று நாட்டினராக கருதியமையே இதற்கான பிரதான காரணம். ஆயினும் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் அவர்கள் மத்தியில் இந்தியத் தலைவர்களை தமது தலைவர்களாகக் காட்டி வேருன்றிய ஸ்தாபனங்கள் தொடர்ந்தும் இந்தியத் தலைவர்களே இலங்கைத் தோட்டத்தொழிலாளர்களின் தலைவர்கள் எனக் கூறி வந்தனர் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியத் தலைவர்களை வந்தனம் செய்தனர். இதனால் சுதேச சிங்கள மக்களும் மலையக தோட்டத்தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு விசுவாசமானவர் அல்ல என்றனர். இந்நாட்டில் ஆயுத கிளர்ச்சி மேற்கொண்ட மறைந்த ஜே. வி. பி. (மக்கள் விடுதலை முன்னணி) தலைவர் விஜேவீரவும் இதே நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார். இவ்வகையில் திரு. இளஞ்செழியன் தொலைநோக்குடன் இலங்கை வாழ் இந்தியத் தமிழர் மத்தியில் நாம் இந்நாட்டைச் சார்ந்தோர் இந்நாட்டுத் தலைவர்களே நமது தலைவர்கள் என்பதனை ஐம்பதுகளிலேயே வலியுறுத்தியமை ஓர் தீர்க்க தரிசனமிக்க செயலாகும்.
ஐம்பதுகளில் இறுதியில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் இ. தி. மு. க. மேலும் தேசிய மயமாவதற்கும் தேசிய ரீதியில் வியாபிக்கவும் வாய் ப் பளித் த து. 1956 ல் ஆட்சி பீடமேறிய எஸ். டபிள்யு ஆர். டி. பண்டாரநாயக்க சிங்கள மொழியினை மட்டும் அரசகரும மொழியாக ஆக்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவரலானார். பத வியேற்க முன் நாட்டு மக்கள் பேசும் இரு மொழிகளான சிங்களத்தையும், தமிழையும் அரசு மொழியாக்குவேன் எனக்கூறிவந்த திரு. எஸ். டபிள்யு ஆர். டி. பண்டாரநாயக்க 1956 ஜூன் 5ம் திகதி கொண்டுவரப்பட்ட அரசமொழிச்சட்டத்தின் மூலம் சிங்களத்தை அரச மொழியாக்கினார். தமிழகத்தில் தி. க. வும். தி. மு. க. வும் செல்வாக்குப் பெறுவதற்கு ஹிந்தி மொழித்திணிப்பு ஓர் பிரதான காரணமாக அமைந்தது. இதே போல் இலங் கை யில் சிங் கள மொழி சட்ட அமுலாக்கல் இ. தி. மு. க. தமிழ்மக்கள் மத்தியில் வியாபிக்க அடித்தளமாக அமைந்தது.
சான்றாதாரங்கள்
12.Pieter Keuneman _ One day that shook Ceylon P. 51
13.இலங்கை திராவிடர் முன்னேற்றகழக பொதுச் செயலாளர் இளஞ்செழியனின் அறிக்கை – துண்டுப்பிரசுரம் 22-09-1955
12.Pieter Keuneman _ One day that shook Ceylon P. 51
13.இலங்கை திராவிடர் முன்னேற்றகழக பொதுச் செயலாளர் இளஞ்செழியனின் அறிக்கை – துண்டுப்பிரசுரம் 22-09-1955
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...