மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 500/= வில் இருந்து 700/=வாக உயர்த்த இருப்பதாகவும், அதற்கு அப்பால் விலைக்கேற்ற படி 50/=வும், ஓய்வுதிய கொடுப்பனவாக சட்டரீதியாக தொழில்தருநனர்களை நிர்ப்பந்திக்கும் கொடுப்பனவையும் சம்பள உயர்வு எனக் கூறி அதன் அடிப்படையில் 105/=வும், சேர்த்து நாளாந்த மொத்த சம்பளமாக 855/= என கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்பனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாளை சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பள அதிகரிப்பை எந்த வகையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர் ஏற்றுக் கொள்ளப்பபோவதில்லை என்பதால் இதனை மக்கள் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பதுடன் அதற்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எனவே இந்தவிதமான கபடத்தனமான முன்மொழிவுகளுக்கு இசைந்து தொழிலாளர்களை ஏமாற்றலாம் என நினைத்துக் கொண்டு குறித்த தொழிற்சங்கங்கள் கையெழுத்திடுவதானது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை பாரிய வரலாற்று துரோகத்தை இளைப்பதாகும். அதனால் இந்த தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது என்பதை வலியுறுத்துவதுடன் அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர்களுக்கு சார்பான அமைப்புக்களும், தனிநபர்களும் குறித்த சங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற சம்பள சூத்திரம் மோசடியானது. ஊ.சே.நி. (EPF)/ ஊ.ந.நி. (ETF) கொடுப்பனவு 105/= மற்றும் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவான 40/= என்பன எந்த விதத்திலும் நாட்சம்பளத்தில் அடங்குபவை அல்ல. ஊ.சே.நி. (EPF)/ ஊ.ந.நி. (ETF) என்பது ஒரு நியதிச் சட்டக் கொடுப்பனவு. இது ஒரு ஓய்வூதிய கொடுப்பனவு. இது அனைத்து தனியார் தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குநர்கள் வழங்கும் நியதிச் சட்டக் கடப்பாடு. அவ்வாறான கொடுப்பனவு வேறு எந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் என்று காட்டப்படுவதில்லை. அதனை சம்பளத்தில் சேர்த்து சொல்லப்படுவது வேடிக்கையானது. தொழிலாளர்கள் 2016 ஆண்டில் இருந்து 720/= மொத்த சம்பளமாக பெற்று வந்த நிலையில் இந்த இணக்கப்பாடு ஒப்பந்தமாக மாறும் போது வெறும் 30/= சம்பள அதிகரிப்பையே பெற்றுக் கொள்வார்கள். இதற்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் எப்படி உடன்பட முடியும்? அவர்கள் உடன்படுவார்களாயின் அது மலையக வரலாற்றில் முதன்மை துரோகம்.
வெறும் 30/= சம்பள அதிகரிப்பு என்பதை மறைக்க மொத்த சம்பளம் 855/= என கணக்கிடப்பட்டு 3 மாதங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க பெருந்தோட்ட அமைச்சர் தேயிலைச் சபையின் (வுநய டீழயசன) நிதியில் இருந்து கம்பனிகளுக்கு சலுகை வழங்க முன்வந்துள்ளார். அதனூடாக மொத்தச் சம்பளம் 855/= என்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கம்பனிகளாலும் அரசாங்கத்தின் தலையீட்டாலும் மறுக்கப்பட்டுள்ளது. கம்பனிகள் சம்பளத்தை எவ்வாறு குறைக்கலாம் என்ற நோக்கத்தில் தமது சம்பள சூத்திரத்தை வகுத்து அதற்கு தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டை பெற்றுள்ளதையே காண முடிகிறது. ஏற்கனவே, மொத்த சம்பளமாக 940/= வரை வழங்க கம்பனிகள் உடன்பட்டிருந்த நிலையில் வெறும் 30/= மொத்தச் சம்பள அதிகரிப்புக்கு எவ்வாறு தொழிற்சங்கங்கள் இணங்க முடியும்? இது பாரிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை 1000/= அடிப்படை சம்பளம். அடிப்படை சம்பளம் 700/= என்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத நிலையில் மொத்தமாகவே 30/= அதிகரிப்புடனான மொத்தச் சம்பளம் அதிகரிப்பை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
குறித்த தொழிற்சங்கங்களுக்கு இந்த சம்பள சூத்திரத்திற்கு இணங்கும்படி அழுத்தங்கள் விதிக்கப்பட்டிருக்குமாயின் அதனை அவர்கள் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி மக்களின் ஒத்துழைப்புடன் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இல்லை நாங்கள் இதய சுத்தியுடன் செய்தோம் என அத்தொழிற்சங்கங்கள் நியாயங்கள் சொல்வார்களாயின் அவர்களின் அடிப்படை கணக்கு பற்றிய அறிவீனத்தை கம்பனிகள் மற்றும் அரசாங்கமும் பயன்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், மிகவும் இலகுவாக ஏமாற்றக்கூடிய தொழிற்சங்கங்கள் தாங்களே என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமையும். இப்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சம்பள சூத்திரம் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் குறித்த சங்கங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துளியளவும் நன்மையை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது உறுதி செய்யப்படும்.
எனவே, குறித்த தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது என்பதை வலியுறுத்தி தொழிலாளர்களையும், தொழிலாளர்களுக்கு சார்பான அமைப்புக்களையும், தனிநபர்களையும் தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழு சார்பாக
பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா
071-4302909/ 071-8971406
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...