Headlines News :
முகப்பு » » மலையக வீடமைப்புத்திட்டம் : சப்ரகமுவ மாகாணத்திற்கும் விஸ்தரிக்க வேண்டும் - கேகாலை கல்கி

மலையக வீடமைப்புத்திட்டம் : சப்ரகமுவ மாகாணத்திற்கும் விஸ்தரிக்க வேண்டும் - கேகாலை கல்கி


இருநூறு வருடகாலமாக தமது உழைப்பை நாட்டுக்காக வழங்கி நாட்டின் அபிவிருத்திக்காக பெரிதும் பாடுபட்ட மலையக பெருந்தோட்ட சமூகம் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளில் சிக்குண்டு தொடர்ந்து இன்னல்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான பெருந்தோட்ட சமூகம் கல்வியின் மூலம் மெல்லமெல்ல இன்று அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. எனினும் அம்மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் குடியிருப்பு என்ற அம்சம் மிகவும் மோசமான நிலையிலேயே இன்றும் காணப்பட்டு வருகின்றது என்பது வேதனைக்குரியவிடயமே. லய வாழ்க்கையின் அவலநிலையை மீரியபெத்தை இயற்கை சீற்றம் உணர்த்தியதோடு அதனைத் தொடந்து மலையகம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவம்,மண்சரிவு அபாயம் என்பன மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்திற்கான தேவையை வலுப்படுத்தியிருந்தன.

இந்திய வீடமைப்புத்திட்டம்

கடந்த அரசாங்கத்தினால் மலையக மக்களுக்காக 50,000 வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக வரவு செலவுத் திட்டத்தில் கூறியிருந்தும் அதற்கான நிதி ஒதுக்கப்படாது அது வெறும் வாய்வார்த்தையாகவே அமைந்துவிட்டது. இன்றைய நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களுக்கான 7 பேர்ச்சஸ் காணியுடனான வீடு கட்டித்தரப்படும் என உறுதி கூறி அதனை நடைமுறைப்படுத்திவருகின்றது.

அதில் முன்னின்று செயற்படுபவர்களாக தமிழ்முற்போக்கு கூட்டணி காணப்படுகின்றது. மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் இந்திய அரசினால் மலையக மக்களுக்கு 4000 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. அப்பொழுது மலையகத்தில் அதிகாரம் செலுத்தியிருந்த இ.தொ.கா, அந்த வீடுகளை பகிர்ந்தளிக்கும் ஆரம்பகட்ட செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும் அந்த 4000 வீடுகளும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. அதில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை,காலி, குருநாகல், ஆகிய மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

அதன்பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டதிலே அந்த 4000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வீடுகள் உருவாக்கப்பட்டன. அதன்பின் இந்திய குடியரசின் பிரதமர் மோடி மலையக விஜயத்தின் போது மேலதிகமாக 10,000 வீடுகளை மலையக மக்களுக்கு தருவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கான ஒப்பந்தம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்திய அரசுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் கைச்சாத்திடப்பட்டது. இவ்வீடமைப்புத் திட்டமும் முழுக்கமுழுக்க தற்போது நுவரெலியா,பதுளை,பண்டாரவளை ஆகிய மாவட்ட தோட்டப்புறங்களில் மாத்திரமே நடைமுறைப்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் கிராமங்கள் கையளிக்கும் நிகழ்வுகளும் செய்திகளாக அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்

இருப்பினும் இந்த அடிக்கல் நாட்டல் நிகழ்வுகள் ஏன் மலையகத்தின் ஏனைய மாவட்டங்களான இரத்தினபுரி,கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்படவில்லை என்ற இயல்பான கேள்வி எழுகின்றது.அடிக்கல் நாட்டலில் முக்கியமாக நுவரெலியா மாவட்டத்தினை மாத்திரம் பிரதானமான களமாகக் கொண்டு வீடமைப் புதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதானது இவர்களின் அடுத்த இலக்கு பாராளுமன்றத் தேர்தலில் அதிகவாக்குகளைப் பெற்றுமீண்டும் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கவேண்டும் என்பதாலா என்ற கேள்வியும் எழுகிறது. . அதேநேரம் தமக்கு வாக்கு அளிக்கப்படாத ஏனைய மாவட்டங்களுக்கு இவர்களது பணிகளை முன்னெடுத்துச்செல்வதில் அர்த்தம் இல்லையென கருதுகிறார்களா? எது எவ்வாறு இருப்பினும் தோட்டமக்களுக்கு நன்மை கிடைக்கும் போது அதனை வரவேற்க வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதும் மறுப்பதற்கில்லை எனலாம்.

இருந்த போதிலும் இந்த சமூக செயற்றிட்டமும் அக்கறையும் மலையகத்தில் ஒட்டமொத்த மாவட்டத்திற்கும் அது செல்லுமானால் அது மேலும் வரவேற்கதக்கதாக இருக்கும். இன்று இரத்தினபுரி,கேகாலை மாவட்ட பெருந்தோட்ட வாழ் மக்களும் மலையகத்தின் ஏனைய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சந்தித்துவருவதோடு, இவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் அடாவடித்தனம், ஆக்கிரமிப்பு போன்றவற்றுக்கும் அடிக்கடி ஆளாகி வருகின்றார்கள். எனவே மலையகத்தின் அதிக பிரச்சினைகளை தாங்கியவர்களாக சப்ரகமுவ வாழ் தோட்டப்புறமக்களை குறிப்பிட முடியும்.

ஆகவே மலையகத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்ற வீடமைப்புத் திட்டத்தினை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தோட்டபுறங்களுக்கும் விஸ்தரிக்குமாறு மலையக ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இவர்களின் தொழிற்சங்க கட்சியைப் பொறுத்தவரையில் மத்திய,ஊவா மாகாணத்தினை விட இம்மாகாணத்தில் அவர்களுக்கான உறுப்பினர்கள் மிகவும் குறைவுதான். இருப்பினும் தொழிற்சங்கபேதம் பார்க்கப்படாது இவர்களுக்கும் தனிவீட்டுக் கனவினை பெற்றுத் தருமாறு சப்ரகமுவ வாழ் தமிழ் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலைநாட்டு கிராமங்கள் போன்று இங்கும் கிராமங்கள் அவசியம். அப்படியான ஒரு கிராமம் கூட ஆரம்பிக்கப்படாமை வேதனையே.

கேகாலை மாவட்டம்

கேகாலை மாவட்டத்தில் இதுவரை மண்சரிவு அபாயத்திற்குள்ளானவர்களுக்கு மாத்திரமே வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு டெனிஸ்வர்த் மற்றும் களுப்பான தோட்டங்களில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் தற்காலிக கூடாரங்களில் தொடர்ந்து வசிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் விரும்பியோ விரும்பாமலோ புதிய வீடுகளில் வசித்து வரலாயினர். அமைக்கப்பட்ட வீடுகள் தரமின்மை,பொருத்தமான உட்கட்டமைப்பு இன்மை போன்ற இன்னோரன்ன குறைபாடுகள் அந்த வீடமைப்பில் காணப்படுகின்ற. அத்தோடு களுப்பான தோட்டத்தில் மேலும் 40 வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் வீடுகள் முழுமைப்பெறவில்லை. இன்று இரண்டு வருடங்களை தாண்டியும் வீடுகள் முழுமைப்பெறவில்லை என்பதும் வேதனைக்குரியவிடமாகும். மேலும் டெனடின் தோட்டத்தில் 19 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்திற்கு மொத்தமாக இதுவரை 123 வீடுகள் மாத்திரமே அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன என்பது முக்கிய விடயம்.

இரத்தினப்புரி மாவட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட கொலம்பகம தோட்டத்தில் 17வீடுகளும்,மரம் விழுந்துபாதிப்புக்குள்ளான ஹவுப்பே தோட்டத்தில் 16 வீடுகளும் மீண்டும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. மண் சரிவில் பாதிக்கப்பட்ட மாதம்பை இல 3 இல் 25 வீடுகளும், ஸ்பிரிங்வூட் தோட்டத்தில் 20 வீடுகளும் மற்றும் பெட்டிகல தோட்டத்தில் 32 வீடுகளும், ஹேஸ் தோட்டத்தில் 20 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் திறப்புவிழாக்கள் நடைபெறவில்லை. அதேநேரம் அப்புகஸ்தன்ன வேவெல்கெட்டிய (31),நிவித்தியகல கிரிபத்கல (18),பலாங்கொடை இழுக்கும்புர (12), உனுவல் இல 4 (20) வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.இதனடிப்டையில் நோக்கும்போது பொதுவாக கேகாலை, இரத்தினப்புரி மாவட்டங்களுக்கு மிகச்குறைவான வீடுகளே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதுவும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டதாலேயே புதிய வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.

இன்று பொதுவாக சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட மக்கள் பெரும்பான்மை இனத்தோடு கலந்திருப்பதனால் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தின் அபிவிருத்திப்பணிகள் தோட்டப்புறங்களுக்கு உரிய முறையில் செல்வதில்லை. தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை பெரும்பான்மையின அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறமுடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. அடிப்படை பிரச்சினைகளையும் போராடியே பெறவேண்டியுள்ளது.

அடிக்கடி மலையகத் தலைவர்களால் தனிவீட்டுத்திட்டம் மலையகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் எனவும்,கட்சிபேதம்,தொழிற்சங்கபேதம் பார்க்கப்படாது அனைவருக்கும் தனி வீடு கிடைக்கும் வண்ணம் வழிசெய்யப்படும் எனவும் பிரதிநிதிகளால் கூறப்பட்டு வருகிறது. நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த கேகாலை ,இரத்தினபுரி மாவட்டங்களில் இதை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது அதற்குரிய திட்டம் என்ன என்பதை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூற வேண்டும் மலையக தலைமைகள் சப்ரகமுவ மாகாண மக்களை மாற்றாந் தாய் பிள்ளைகளாக கருதுவது போன்றே உள்ளது. அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஊடகங்களில் கவனம் தம் மீது செலுத்தப்படும் என்பதற்காக சேவைகளை வழங்காது மக்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates