பெருந்தோட்ட நிர்வாக முறை இன்னும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முறையையே பின்பற்றி செயற்படுகின்றது.. தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் எல்லாமே அடக்குமுறையாகும். இதன் காரணமாகவே புதிய தலைமுறைகள் தோட்ட வேலையை இழிவாகக் கருதுகின்றனர்..! ஒரு காலத்தில் தொழிற்சங்க பலத்தைக் காட்டி தோட்ட நிர்வாகங்களை மிரட்டி அடக்கி வைத்த ஆளுமை நிறைந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் இருந்துள்ளனர்.
இன்று நம் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற எம்.எஸ்.செல்லச்சாமி இ.தொ.கா வின் பொதுச் செயலாளராக இருந்தவர். தோட்ட நிர்வாகிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.அவர் பல தொழிற்சங்க போராட்டங்களை தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக நடத்தியவர்.. அனுபவ வாயிலாக ஆங்கில மொழியைக் கற்று அதிசயிக்கும் முறையில் தோட்ட நிர்வாகிகளிடம் தர்க்கங்கள் புரிந்தவர். பேச்சு வார்த்தை மேசைகளில் கம்பீரமாக விவாதம் புரிந்தவர்.. பல தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர். இவரைப் போன்றே அமரர்களான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் செயற்பட்ட யட்டியாந்தோட்டை நாயர், ரொசாரியோ பெர்னாண்டோ, யட்டியாந்தோட்டை பாலகிருஷ்ணன், நாராயணன் போன்றோரும் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர்களான, எஸ்.பெருமாள், பி.வி.கந்தையா, த.ஐயாதுரை ஆகியோரும், செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த ஓ.ஏ.ராமையா செல்லையா, மோகன் , கரவை கந்தசாமி மற்றும் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி, பதுளை கந்தசாமி, லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் எஸ்.இராமநாதன்,சிவசாமி, ஹனுவல ஹமீது, எஸ்.முருகையா (அகில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ) ஆகியோர் நினைவில் நிற்கின்றனர்..
அமரர்களான ஜனாப் அப்துல் அஸீஸ், சௌமியமூர்த்தி தொண்டமான்,சி.வி.வேலுப்பிள்ளை வி.கே.வெள்ளையன், ராசலிங்கம் ,எஸ்.நடேசன் போன்றோர் வெள்ளைக்கார தோட்ட நிர்வாகிகளை, அவர்களுடைய விளையாட்டுக் கழக மண்டபத்தில் சந்தித்துப்பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இவர்கள் எல்லோருமே, ஆங்கில அல்லது சிங்கள அறிவு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து, பல ஆளுமை மிக்க மாவட்டப் பிரதிநிதிகள் செயற்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், புதிய தொழிற்சங்கத் தலைமுறை வரிசையில் வைத்து விதந்து பேசக் கூடிய தொழிற்சங்கவாதி தான் அமரர் சந்தனம் அருள்சாமி. தொழிற்சங்கத்துறையில் கல்விமானாக அடையாளம் காணப்பட்டவர். சிங்கள , ஆங்கில மொழிகளில் சரளமாக உரையாடுவதிலும், மேடைகளில் பேசுவதிலும் ஆற்றல் கொண்டவராக இருந்தவர்.
அருள் என்று செல்லமாக பலராலும் அழைக்கப்பட்ட இவர், தொழிற் சட்டங்களை நன்கு அறிந்தவர்.. தொழில் நீதிமன்றங்களில் வாதாடுவதில் திறமை நிறைந்தவர். அமரர் அருள்சாமி இ.தொ.கா. அங்கத்துவம் வகித்த சர்வதேச சுதந்திர தொழிற்சங்க சம்மேளன கருத்தரங்குகளில் பங்கு கொண்டுள்ளார். அச் சமகாலத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அங்கம் வகித்த உலக சுதந்திர தொழிற்சங்க சம்மேளன கருத்தரங்குகளில் நானும் கலந்து கொண்டமை நினைவுக்குரியவை..அமரர் அருள்சாமி 1976ஆம் ஆண்டளவில் அக்கரபத்தனை மாவட்ட தொழிற்சங்க காரியாலய பிரதிநிதியாக பணி புரிந்தார். அவருடைய உதவியாளராக நாகவத்தை சதாசிவமும் பணி புரிந்தார்.
அப்போது ஊட்டுவள்ளி தோட்ட காரியாலயத்தில் நான் பணி புரிந்து கொண்டிருந்தேன். தொழிலாளர் பிரச்சினைகளுக்காக அடிக்கடி தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அருள்சாமி வருவதுண்டு.. அவரது பேச்சு வன்மையை நான் பல முறை கவனித்துள்ளேன்.. அச் சந்தர்ப்பத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்களானோம். அரசாங்கம் தோட்டங்களை தேசிய மயமாக்கி ஜனவசம, உசவசம, அரச கூட்டுத்தாபனம் என அமைப்புக்களை உருவாக்கி செயற்பட்டது.
கிராமத்து சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தில், கல்வி அறிவு குறைந்தவர்களையெல்லாம் வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் மூலம் தொழிலாளர்களின் சேமலாப நிதியும், நிர்வாகத்தின் சேமலாப நிதியும் குளறுபடியான முறையில் மத்திய வங்கிக்கும், தொழில் திணைக்களத்துக்கும். C3 படிவங்கள் மூலம் விபரங்கள் அனுப்பப்பட்டன.. வேலை பழகுபவர்களின் இந்த குளறுபடிகள் காரணமாக ஒவ்வொரு தொழிலாளரும் தங்களுக்குரிய நிதியை இழக்க நேரிட்டது.. இறுதி காலங்களில் சேமலாப நிதிக்கு விண்ணப்பித்தவர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்கள் உதாசீனம் செய்யப்பட்டார்கள்.
இந்த நிலைமையை நண்பர் அருள்சாமிக்கு தனிப்பட்ட முறையில் அறிவித்து நிதி கணக்குகளை பரிசீலனை செய்ய வருமாறு கேட்டிருந்தேன். நன்றியோடு இந்தப் பணியை ஏற்று தோட்ட காரியாலயத்துக்கு நேரடியாக வந்து,நான்கு வருடங்களுக்கான சம்பளப் புத்தகங்களையும், சி3 ரிடர்ன் படிவங்களையும் இரண்டு வாரங்கள் வரை பரிசீலித்து,தவறுகளை தோட்ட நிர்வாகியிடம் சுட்டிக் காட்டி, அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்த சம்பவம் இன்றும் என் மனதில் இருக்கின்றது. அமரர் அருள்சாமி சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளைப் போன்று தோட்ட நிர்வாகிகளிடம் தேயிலை பெற்றுக் கொண்டும், தங்கள் வாகனங்களுக்கு டீசல், பெற்றோல் வாங்கி நிரப்பிக்கொண்டும் உறவினர்களுக்கு தொழில் பெற்றுக் கொண்டும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் காட்டிக் கொடுத்ததில்லை.
மிக நேர்மையான பிரதிநிதியாக செயற்பட்டார். காலப்போக்கில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக நான் செயற்பட்ட போது அமரர் அருள்சாமியும் இணைந்து பணி புரிந்த காலம் பசுமையானவை.. மத்திய மாகாண சபையிலும் நாங்கள் இருவரும் செயற்பட்ட காலமும் மறப்பதற்கில்லை.
எனது இனிய நண்பர் அமரர் அருள்சாமி சக மனிதர்களோடு பழகிய பண்பு, மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களால் பெருமையாகப் பேசப்பட்டது.
இவற்றோடு இவரது ஆளுமையின் காரணமாக கல்வி அமைச்சராக செயல்பட்ட காலம், தனியாக தொழிற்சங்கம் அமைத்து செயற்பட்ட காலப்பகுதி சக அரசியல் நண்பர்களோடு நேசமோடு பழகிய மனப் பக்குவம்., யாவும் இவரது பெருமைக்குரிய அடையாளங்களாகும் இவரது நாமம் மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
நன்றி வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...