கலவரம் நடப்பதற்கு முன்னரே ஆளுநருக்கு அது குறித்த பல தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றிருந்தன. பெரஹரவுக்காக நாடு முழுவதுமிருந்து வந்து குழுமியிருந்தவர்கள் மத்தியில் ரோந்துக்காக அனுப்பப்பட்டவர்கள் ஒரு அதிகாரியும், சாஜன்ட் ஒருவரும், மூன்று கான்ஸ்டபிள்களுமே. முஸ்லிம் பள்ளிவாசல் ஒரு தாக்குதல் கோட்டையாக தயார்படுத்தப்பட்டிருந்தது என்கிற செய்தி வெளியாகியிருந்தது. ஏற்கெனவே முஸ்லிம்களால் தாக்கப்படக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கையுடன் எதிர்த்து தாக்குவதற்கு தயாராகவே பௌத்தர்கள் இருந்தார்கள்.
அந்த பள்ளிவாசலுக்கு எதிரில் கண்டி நகரத்தின் பிரபல செல்வந்தரான சல்காது என்பவரின் வீடும் அமைந்திருந்தது. இந்த பெரஹரவுக்கு வருடாந்தம் பெருமளவு நிதியளிப்பவர்களில் அவரும் ஒருவர். பெரஹர அந்த வீதிவிழியாக செல்லும் போதெல்லாம் அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு பெரஹரவுக்கு மரியாதை செலுத்தி வணங்கும் வழக்கம் இருந்தது. அவரது வீட்டுக்கருகில் பெரஹர கடக்கும் போது பள்ளிவாசலில் சமய நடவடிக்கைகள் எதுவும் இல்லாத பட்சத்தில் “பக்தி கீ” (கீதம்) இசைப்பதற்கான விசேட அனுமதியை போலிசாரிடமிருந்து சல்காது பெற்றிருந்தார்.
இரவு நேரத்தில் அதிகமான நேரம் சமய நடவடிக்கைகளுக்காக பள்ளிவாசலை திறந்திருக்கும் வழக்கம் இருக்கவில்லை.
ஊர்வலம்
1915 மே 28 வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினம். புத்தரின் பிறந்தநாள். வெசாக் தினம். அன்றைய நள்ளிரவு 12 மணிக்கு முதல் காசல் ஹில்ஸ் வீதிக்குள் பெரஹர நுழையக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜ வீதியிலிருந்து காசல் ஹில்ஸ் வீதிக்கு திரும்பும்போது நள்ளிரவு 1 மணி. பெரஹர ஊர்வலத்திற்கு முன்னால் இன்ஸ்பெக்டர் குரே கண்காணித்தபடி சென்றுகொண்டிருந்தார். ஊர்வலத்தில் வந்தவர்கள் பள்ளிவாசலை பார்த்தபடி வந்தார்கள். அங்கே பள்ளிவாசல் திறந்திருந்தது. அங்கே விளக்கொளிகள் தெரிந்தன. பலர் (ஹம்பயாக்கள், ஆப்கான் முஸ்லிம்கள் என்றே பதிவுகள் அவர்களை அழைக்கின்றன) அங்கே கூடி நின்று பார்த்தபடி இருந்தனர்.
ஊர்வலத்தினர் அமைதியாக அந்த இடத்தை கடக்காவிட்டால் சல்காதுவின் வீட்டுக்கருகில் போகவிட முடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி ஒரு அறிவுறுத்தல் தமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்று பௌத்தர்கள் தரப்பில் பின்னர் நடந்த விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்டிருந்தால் கூட இத்தனை பெரிய ஊர்வலத்தில் அவ்வாறு கட்டுபடுத்துவது இலகுவானதுமல்ல.
பெரஹரவின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான பக்தி கீதம் இசைக்குழு இரண்டு வண்டில்களில் (கரத்தைகளில்) முன்னால் சென்றது. குறிப்பிட்ட சந்தி வந்ததும் திடீரென்று அங்கிருந்து சைகை செய்தபடி இன்ஸ்பெக்டர் குரே திரும்பச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார். ஆனால் அந்த கூட்ட சத்தத்தில் சரியாக அதனை விளங்கிக் கொள்வதற்கு முதல் வண்டில் தாண்டி சென்று கொண்டிருந்தது. பின்னர் விளங்கியதும் அந்த வண்டியோட்டி அதனை மீண்டும் ஒரு சுற்று சுற்றி திருப்பிக்கொண்டு வந்தார். அடுத்த வண்டியை குரே கூறியபடி திருப்பிப்பட்டிருந்தது. இதனால் ஊர்வலத்தினரின் ஒழுங்கு சீர் குலைந்தது. இவ்வாறு பள்ளிவாசலிலிருந்து 120 யார்களுக்கு அருகில் ஊர்வலம் சென்று திரும்ப நேரிட்டது. இந்த நிலைமையை பள்ளிவாசலின் மேலிருந்தவர்கள் கேலி செய்து “ஊ” என்றும் “சாது... சாது...” என்றும் சத்தமிட்டு ஆத்திரமூட்டினர்.
இன்ஸ்பெக்டர் குரே ஊர்வலத்தை வேகமாக பள்ளிவாசலை கடக்கும்படி அவசரமாக கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மேலிருந்து வந்த கற்களால் அந்த ஊர்வலத்தை சீராக கொண்டு செல்லமுடியவில்லை. பலர் சிதறியோடினார்கள். போத்தல்கள் மற்றும் சிற்சில பொருட்கள் என வந்து வேகமாக விழுந்ததில் பலர் காயமுற்றனர். களேபரமடைந்த நிலையில் ஊர்வலத்தில் வந்தவர்கள் பள்ளிவாசை நோக்கி விரைந்து தாக்கினார்கள். பெரஹரவுக்கு வந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் என்பதால் அவர்களில் பலர் சேர்ந்து அருகில் இருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளையும் தாக்கி உடைத்து பலத்த சேதத்தை உண்டு பண்ணினர்.
ஆனால் சிலருக்கு சிறிய காயங்களைத் தவிர வேறெந்த உயிராபத்தும் இந்த சந்தர்ப்பத்தில் நடக்கவில்லை. இந்த உடைப்புகள் நடந்துகொண்டிருந்த போது இன்ஸ்பெக்டர் குரே பெருமளவு பொலிசாருடன் வந்து சேர்ந்தார். அங்கிருந்தவர்கள் தப்பியோடினார்கள். சிலர் கைது செய்யப்பட்டார்கள். அடுத்த நாள் அப்படி கைது செய்யப்பட்ட 28 பேருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இப்படித்தான் அன்றைய நள்ளிரவு பெரஹர குழப்பப்பட்டு களேபரத்தில் முடிந்தது.
தலதா மாளிகை
கலகம் அடக்க கொண்டுவரப்பட்ட பொலிசார் முன்கூட்டிய முன்னெச்சரிக்கையுடன் முன்னரே பந்தோபஸ்து அளித்திருந்தால் இதனை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. அடுத்த நாள் காலையில் நகரமெங்கும் மக்கள் பதட்டத்துடன் குழுமியிருந்தார்கள். கண்டி தலதா மாளிகைத் தாக்குவதற்காக கொழும்பிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் முஸ்லிம்கள் பலர் வந்து தாக்க இருக்கிறார்கள் என்கிற வதந்தி நகரமெங்கும் பரவியிருந்தது.
இந்த கதையில் சற்று உண்மையும் இருந்தது என்று சூசா தனது நூலில் விளக்குகிறார். 29 ஆம் திகதி கொழும்பிலிருந்து கண்டியை நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் முஸ்லிம் கும்பலொன்று வந்துகொண்டிருந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் கடுகண்ணாவை புகையிரத நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுடன் அவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடுகன்னாவையில் 25-30 பேர்களைக் கொண்ட கும்பலை அவ்வாறு இறக்கி விரட்டும்வரை புகையிரதம் தரித்திருந்தது.
பெரஹரவுக்கு வந்து குழுமியிருந்த மக்களில் பலர் கண்டியை விட்டு போகாமல் தொடர்ந்தும் தலதா மாளிகையை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு பொல்லுகள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். 30 ஆம் திகதியன்று நிலைமை மேலும் மோசமானது. 29 ஆம் திகதி இரவில் பாதையில் சென்ற சிங்களவர் ஒருவரை முஸ்லிம் ஒருவர் கடையொன்றின் மேலிருந்து சுட்டுக்கொன்று விட்டார் என்கிற தகவல் பரவியது. காயமடைந்த நிலையில் கொண்டுசெல்லப்பட்ட அந்த இளைஞன் ஆஸ்பத்திரியில் இறந்து போனார். அதேவேளை சுட்டவர் பற்றி தெரிந்திருந்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆத்திரமடைந்தனர் சிங்களவர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு சமூகங்களையும் சேர்ந்த சமூகத் தலைவர்கள் ஒன்றுகூடி இனி இதனை இருதரப்பும் நிறுத்திக்கொள்வதாக உடன்பாடு கண்டனர். கலகக்கார்கள் நடந்தவற்றிற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கோரினர். அன்று இரவு கண்டியில் வசித்துவந்த பௌத்த, கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெரியவர்களை வில்லியம் துனுவில “திசாவ” தலைமையில் (1815இல் கண்டி கைப்பற்றப்பட்டபின்னர் ஆங்கிலேயர்களால் உயர்குடியைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கி வழங்கும் பதவி “திசாவ”) அரசாங்க அதிபர் சீ.எஸ்.வோகனை சந்தித்து நகர சபை வளாகத்தில் குழுமியிருக்கும் மக்களின் குறைகேட்டு ஒரு அறிவித்தலை செய்யுமாறு கேட்கப்பட்டது. அப்படி ஒரு அறிவித்தலை வெளியிட்டால் கூட்டம் கலைந்துவிடும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்க அதிபர் அந்த வேண்டுகோளை நிராகரித்தார்.
குழுமியிருந்த கூட்டம் இதனால் ஆத்திரத்துக்கு உள்ளானது. முன்னைய தினம் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பொலிஸ் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் விசாரணையாவது செய்யுமாறு கோரினர். அவ்வாறு செய்தால் கூட்டம் களையும் என்று கூறினர். இந்த சர்ச்சைகள் நீடித்து கொண்டிருந்தபோது அரசாங்க எழுதுவினைஞராக பணிபுரிந்த சிங்கள இளைஞர் ஒருவர் முஸ்லிம் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட தகவல் வெளிவந்ததும் மேலும் நிலைமை மோசமடைந்தது. சம்பவம் நடந்த பகுதிக்கு சென்ற இரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் இதன் போது கொல்லப்பட்டார்கள்.
ஆங்கிலப் படையில் அப்போது பஞ்சாப்பை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே மோசமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு பஞ்சாபிய படையினர் சென்றதும் கூட்டம் அமைதியடைந்து கலைந்து சென்றது. படையினர் முன்கூட்டியே போதிய பந்தோபஸ்துடன் இருந்திருந்தால் இந்த நிலைமை தோன்றியிருக்காது என்பதே இதன் மூலம் தெரிகிறது.
பொலிஸ் மா அதிபரும் கண்டியில் தான் அப்போது இருந்தார். இந்த மூன்று நாட்களும் கண்டி நகரெங்கும் கூட்டம் கூட்டமாக கூடியிருந்த குழுமியிருந்தவர்களை கலைத்திருக்கலாம். ஆனால் மூன்று நாட்களின் பின்னர் ஆளுநரின் பிரேத்தியேக செயலாளர் சுவேஸ், நீதவான் மற்றும் சில பொலிசாருடன் கூட்டம் குழுமியிருந்த தலதா மாளிகை பகுதிக்கு சென்றார். பொலிசாரிடம் இருந்த துப்பாக்கிகளில் எந்த தோட்டாவும் இருக்கவில்லை. பொல்லு, தடிகளை போட்டுவிட்டு மூன்று நிமிடத்துக்குள் கலைந்து செல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பலத்த சத்தத்துடன் சுவேஸ் உரத்துக் கத்தினார். போலீசார் துப்பாக்கிகளை நீட்டியபடி இருந்தனர். கடிகாரத்தை பார்த்தபடி சுவேஸ் இருந்தார். கூட்டம் கலையாமல் பார்த்துக்கொண்டிருந்தது. நீதவான் “ஒரு நிமிடம்” என்று சத்தமிட்டார். சிறு சலசலப்பு ஏற்பட்டது. “இரண்டு நிமிடம்...” என்று மீண்டும் நீதவான் உரத்துக் கூறினார். மூன்றாவது நிமிடம் கூறுவதற்குள் கூட்டம் பெரும்பாலும் களைந்து சென்றிருந்தது. வீதியெங்கும் தடி, பொல்லுகளால் நிறைந்திருந்தது. இந்த தகவல்கள் அன்றைய பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.
பஞ்சாப் படையினர் நகரமெங்கும் உலாவத் தொடங்கியதன் பின்னர் நகரம் கட்டுக்குள் வந்தது. அமைதியானது. வெளியிடங்களில் இருந்து வந்தவர்களும் அவரவர் இடங்களை நோக்கிப் பயணமானார்கள்.
பரவிய கலவரம்
இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றிய செய்திகள் நாடுபூராவும் பரவி சூடு பிடிக்கத் தொடங்கிருந்தது. பல இடங்களில் கலவரங்கள் தொடங்கின. கண்டியை விட்டு களைந்து சென்ற வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் கலவரம் பற்றிய செய்திகளுடன் போய் சேர்ந்தார்கள். கண்டியில் மட்டுபடுத்தப்பட்டிருந்த கலவரம் கொழும்புக்கு முதலில் பரவியது.
இரண்டாவது உலகப்போர் தொடங்கியிருந்த நிலையில் துருக்கி மைய நாடுகள் அணியில் இருந்தது. பிரித்தானியாவுக்கு எதிரான அணியில் அது இல்லை என்பதால் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று செய்யாது என்றும் முஸ்லிம்களுக்கு இடையூறு விளைவிக்காது இருப்பதே அவர்களுக்கு பிரித்தானியா செய்யும் சேவை என்று சிங்களவர்கள் மத்தியில் கருத்து நிலவியது.
முதலாவது உலக யுத்தத்தின் விளைவாக கடல் போக்குவரத்துக்கள் மட்டுபடுத்தப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள், ஏற்றுமதி - இறக்குமதி என்பன பெருமளவு பாதிக்கப்பட்டதுடன் உள்நாட்டு பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டது. பணவீக்கம், வேலையின்மை, பொருள் விலை உயர்வு என்பவற்றால் நாடு சிக்குண்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வறிய தொழிலாளர் வர்க்கமே. சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என அனைவரும் இன, மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளில் சிங்களவர்கள் எதிர்கொண்ட பொருள் விலையுயர்வை புதிய பொருளாதார நெருக்கடியுடன் பார்க்கத் தவறிய பொதுப்புத்தி இனவெறுப்பாக வெளிப்பட்டது. “கொள்ளையடிக்க வந்த முஸ்லிம்கள்” என்றே பார்க்க வைத்தது. இந்த கலவரத்தின் போது முஸ்லிம்களின் கடைகளும் சொத்துக்களுமே அதிகம் நாசப்படுத்தப்பட்டன.
இதே நாட்களில் கொழும்பு இரயில் நிலைய தொழிலாளர்கள் வழமைபோல வேலைத்தளத்திற்கு வெளியிலுள்ள கடைகளில் தேநீர் அருந்த சென்ற இடத்தில் சர்ச்சைகள் கிளம்பின. வழமையை விட தேநீரானது கடைகளில் முப்பது மடங்கு அதிகமாக இருந்தது. இந்த “ஹம்பயா”க்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற முனகலும், சலசலப்பும் பரவலாக காணப்பட்டது. கண்டி கலவரமும் இந்த நிலைமையை ஊக்குவித்தன. அடிக்கடி இந்த முஸ்லிம்களின் கடைகளில் கற்கள் வந்து விழுந்தன. கடைகாரர்கள் கடைக்கு வந்தவர்களை வெளியேற்றிவிட்டு கடைகளை மூடிவிட்டு சென்றனர். இத்தனைக்கும் பொலிஸ் தலைமையகம் கூட சில மீட்டர்கள் தொலைவில் தான் இருந்தது. சம்பவம் குறித்து போலீசார் அறிந்திருந்த போதும் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இதன் விபரீதம் புரிந்த போலீசார் புகையிரத வேலைத்தளத்தின் கதவுகளை மூடிவிட்டு அன்றைய தினம் காவல் காத்தனர்.
தொழிலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும் கதவுகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வெளியே செல்வது தடுக்கப்பட்டது. பெரும்பாலான வறிய தொழிலாளர்கள் வெளியிடங்களில் இருந்து வருபவர்கள். பலர் கொழும்பில் வாடகைக்கு அறைகள் எடுத்து தங்கியிருப்பவர்கள். அன்றைய தினம் அதிகாரிகளால் அவர்களை அதிக நேரம் தடுத்து நிறுத்தி வைக்க முடியவில்லை. இறுதியில் கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர்கள் செல்ல வேண்டிய இரயில்கள் சென்றுவிட்டிருந்தன. இறுதியில் அவர்கள் நகர வீதிகளில் திரிந்தார்கள். பாதைகளில் தென்பட்ட கற்கள், பொருள்களைக் கொண்டு முஸ்லிம்களின் கடைகளைத் தாக்கினார்கள். இப்படி தாக்கிக்கொண்டு சென்ற வேளை இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சண்டியர்களும், கொள்ளையர்களும் அந்த கடைகளுக்குள் நுழைந்து கொள்ளையிட்டனர். இப்படி சம்பவங்கள் பரவலாக நிகழ்ந்தன. பொலிசார் பலரை இழுத்துச் சென்று சிறையிலடைத்தனர்.
தொடரும்...
நன்றி - தினக்குரல்
இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
- Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
- Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
- The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
- Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
- “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
- “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam, (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
- “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
- ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
- ශ්රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...