Headlines News :
முகப்பு » , » தனிச் சிங்கள பௌத்த பாடசாலைகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் - என்.சரவணன்

தனிச் சிங்கள பௌத்த பாடசாலைகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் - என்.சரவணன்


முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய அரசாங்கத்தின் நிழல் இயக்குனராகவும் இருக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க சமீப காலமாக பொதுக் கூட்டங்களில் கூறிவரும் கருத்துக்கள் சிங்கள பௌத்தர்களை கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளன. சமீபத்தில் கூட இப்படி உரையாற்றியிருந்தார்.

“இலங்கையில் மிகப் பெரிய பிரபல பாடசாலைகள் உள்ளன. சிங்கள பௌத்தர்களைத் தவிர வேறெவரையும் சேர்ப்பதில்லை என்கிற கொள்கையை உடையவை அவை. ஒரு காலத்தில் ஆனந்தா, நாலந்தா பாடசாலைகளில் கல்வி கற்ற பெரும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் இன்றும் உள்ளார்கள். இன்று வேறெவருக்கும் அங்கு இடமில்லை. இத்தனைக்கும் இந்த சிங்கள பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தவர்கள் சிங்கள பௌத்தர்கள் அல்லர். ஆங்கில கிறிஸ்தவர்களால் அவை ஆரம்பிக்கப்பட்டவை. எனது பதவி காலத்தில் இந்த நிலைமையை மாற்ற முற்பட்டேன். யுத்தம் நடந்துகொண்டிருந்ததால், நிர்ப்பந்தமாக இவற்றை செய்வதில் பல சிக்கல் இருந்தது.


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவன் ஐந்தாவது ஆண்டு புலமைப்பரீட்சையில் முதலாவதாக வந்தார். அவர்களுக்கு எந்த பாடசாலையும் கேட்க முடியும். அவர் ஆனந்தா பாடசாலையில் கற்பதற்காக கோரிக்கை விடுத்தார்கள். அந்த மாணவனுக்கு அனுமதியைக் கொடுக்கும்படி நான் கூறினேன். தரமுடியாது என்று அப்பாடசாலையின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கினார்கள். அப்படியிருந்தும் எனது நிர்பந்தத்தால் அங்கு அந்த சிறுவன் சேர்க்கப்பட்டான்.  இரு மாதங்களுக்குப் பின்னர் அந்த மாணவன் அங்கிருந்து தானாக விலக நேரிட்டது. அங்கு அந்த மாணவனை மோசமாக நடத்தியிருக்கிறார்கள்.  நாம் பௌத்தர்களாக கற்றுக்கொண்டது இதைத்தானா? இந்த மாணவர்கள் வாழ்க்கையில் வேற்று மதத்தவர்களோடு பழகியது இல்லை. ஏனைய பாடசாலைகளுக்கும் இதே நிலை தான். ஆக இந்த நாட்டில் யுத்தம் தோன்றுவது ஆச்சரியமானதல்ல. அதன் பின்னர் நான் பாடசாலையே மூடும்படி கூறியதாக ஒரு புரளியையும் கிளப்பிவிட்டுள்ளார்கள்.”

இலங்கையில் இனவாதத்தை களையெடுப்பதில் கல்வி அமைப்பு முறையின் பாத்திரம் முக்கியமானது என்று அவர் பல இடங்களிலும் கூறிவருகிறார். சமீபத்தில் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலும் அதனை வலியுறுத்தியிருந்தார்.

அதுபோல பாடத்திட்டங்களில் பௌத்த மத கல்வியையும் நீக்கிவிட்டு சர்வமதங்களையும் பற்றி கற்கக் கூடியவாறு மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். சிங்கள பௌத்த பாடசாலைகளிலும், பாடத்திட்டத்திலும் கைவைக்கும் துணிச்சல் இதற்கு முன்னர் எவருக்கும் இருக்கவில்லை. இன்றைய நிலையில் நிறுவனமயப்பட்ட பேரினவாதம் பல்வேறு தளங்களில், பல்வேறு வடிவங்களில் சந்திரிகாவை தாக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த அரசாங்கம் பௌத்த எதிர்ப்பு அரசாங்கம் என்று பகிரங்கமாக பிரசாரம் செய்து வருகிறது.

“மேடம் முடிந்தால் நீங்கள் மருதானை சாஹிரா கால்லூரியிலோ, புனித பெனடிக் கல்லூரியிலோ, அல்லது இந்து கல்லூரிகளிலோ சில பௌத்த மாணவர்களை சேர்த்து காட்டுங்கள் அதற்கப்புறம் நாங்கலும் உங்கள் முயற்சியில் கைகோர்க்கிறோம்.” என்று சந்திரிகாவை விமர்சித்து சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை சவாலிடுகிறது.

புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவுடன் “தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லினக்கத்துக்குமான அலுவலகம்” ஒன்றை ஸ்தாபித்தது. இந்த பணியை முன்னெடுக்கும் பொறுப்பை சந்திரிகா ஏற்றுக்கொண்டார். தற்போது அதன் இயக்குனராக இயங்கிவருகிறார். எனவே சந்திரிகாவின் புதிய முன்னெடுப்புகள் உத்தியோகபூர்வ வெளிப்பாடுகளே.

ஆனந்தா, நாலந்தா போன்ற பாடசாலைகள் இன்று நூறு வித சிங்கள பௌத்த பாடசாலைகளா ஆகியுள்ளன. அப்படி பேணுவதை அப்பாடசாலையில் கற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர். இது குறித்த சர்ச்சை நீட காலமாக தொடர்கிறது. சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சகல அதிகாரங்களைக் கொண்டிருந்தும் கூட முடியவில்லை என்பதையே அவரது உரையும் பறைசாட்டுகிறது.

சந்திரிகா தனது பதவிக்காலத்தில் இனவாத சக்திகளுக்கு துணைபோன வரலாற்றை எவரும் மறக்கமாட்டார்கள். ஆனால் இன்று அதற்கெல்லாம் பிராயச்சித்தம் தேடும் வகையில் மேற்கொண்டிருக்கும் துணிச்சல் மிக்க முயற்சிகள் பாராட்டுதற்குரியவை

கல்வியில் மதம்

1880இல் கேணல் ஒல்கொட் இலங்கை வந்து பிரம்ம ஞான சங்கத்தை (Theosophical Society) ஆரம்பித்தபோது அதன் இணை ஸ்தாபகர் பொன்னம்பலம் இராமநாதன். அச் சங்கம் பௌத்த கல்வி நிதியத்தை ஆரம்பித்தபோது அந் நிதியத்தின் இணைசெயலாளராக ஒல்கொட்டுக்கு நிகராக அதில் பணியாற்றினார் இராமநாதன். ஆங்கில மிஷனரி பாடசாலைகள் கிறிஸ்தவத்தை நிலைநாட்டுவதற்காக ஆங்கில பாடசாலைகளை
பயன்படுத்திவந்த வேளை சுதேச பாடசாலைகளை நிறுவும் நோக்கில் சிங்கள பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. பௌத்த மறுமலர்ச்சிக்கு துணைபுரிந்த இந்த நிதியத்துக்கு அப்போதைய நிலையில் 15 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கி அந்நிதியத்தை ஆரம்பித்தார் இராமநாதன். ஆனால் அந்நிதியம் ஆனந்தா, நாலந்தா போன்ற தனி பௌத்த பாடசாலைகளை மாத்திரமே தொடக்கும் பணிகளில் ஈடுபட்டதால் மனமுடைந்த இராமநாதன் அதில் இருந்து வெறும் ஐயாயிரம் ரூபாயை மாத்திரம் மீள பெற்றுக்கொண்டு இந்துக் கல்லூரிகளை ஆரம்பிக்கப் புறப்பட்டார்.

பொன்னம்பலம் இராமநாதனை ஆனந்தா கல்லூரி ஆரம்பவிழாவுக்கு 1.11.1886 அன்று ஒல்கொட் அழைத்திருந்தார். தனக்கு அடுத்ததாக இராமநாதனை உரையாற்ற அழைத்திருந்தார். இராமநாதனின் உரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

“உங்கள் சிங்கள உதடுகள் சிங்களம் பேசாது போனால் வேறெவர் தான் பேசுவார். ஒரு தேசம் தனது தவறுகளிலிருந்து மீள்வது எப்படி. சீர்திருத்தமும், தூரநோக்குள்ள உயர்கல்வியும் சொந்த மொழியின்றி எப்படி சாத்தியமாகும்? சிங்கள நபர் சிங்களம் பேசுவதை தவிர்த்தாலோ, பெருமையுடன் சிங்களம் பேச முன்வராவிட்ட்டாலோ அவர் சிங்களவர் அல்லர்.”

சிங்கள பாடசாலைகள் சிங்களத்தையும், பௌத்தத்தையும் முன்னிறுத்தி, சுதேசிய உணர்வுக்குப் பதிலாக “இன, மத” போக்கை கடைபிடித்தன. ஆனால் வடக்கில் “சைவத்தையும், தமிழையும்” அதாவது மதத்தையும், மொழியையும் முதன்மைபடுத்தி வேலைத்திட்டங்கள் நடந்தன. அந்த சைவ பாடசாலைகள் அரசுடமையாக்கும் வரை யாழ்-உயர் சாதியினருக்கான பாடசாலைகளாகவே இருந்தன என்பது வேறு கதை.

இலங்கையில் பௌத்த அறநெறிப் பாடசாலை (தஹாம் பாசல்) முதன் முதலாக 03.08.1895 இல் காலி ஸ்ரீ விஜயானந்தராம விகாரையில் தொடங்கப்பட்டது கேணல் ஒல்கொட்டின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இலங்கையிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளிலும் வாரம் தோறும் சில மணித்தியாலங்கள் பௌத்த அறநெறியைப் புகட்டும் கற்கை ஆரம்பிக்கவேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தது மட்டுமன்றி அதனை செயல்படுத்தினார் ஒல்கொட். இன்றுவரை ஞாயிறு “தஹாம் பாசல்” எனப்படும் பௌத்த அறநெறிப் பாடசாலைகள் தொடர்கின்றன. கிறிஸ்தவ முறையில் “ஞாயிறு கிறிஸ்தவ அறநெறிப் பாடசாலை” வழிமுறையையே ஒல்கொட் இலங்கையின் பௌத்த மரபில் இணைத்துக்கொண்டார். அதுபோல இந்துக்களின் மத்தியிலும் கூட சைவ அறநெறிப் பாடசாலைகள் வார இறுதிகளில் இந்து பாடசாலைகளில் நடக்கின்றன. முஸ்லிம் பாடசாலைகளிலும், பள்ளிவாசல்களிலும் இவ்வாறான மதப் போதனை வகுப்புகள் நடக்கவே செய்கின்றன.

தமது பெற்றோரின் மதத்தை பிள்ளைகள் கற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும் என்கிற கோரிக்கையின் காரணமாக 1945 டிசம்பர் அது சட்டமாக கொண்டுவரப்பட்டது. அதுவரை 1956இல் தமது தாய்மொழியில் உயர்கல்வி கற்கக்கூடிய வழிவகைகளை உருவாக்கினார்  அன்றைய கல்வி அமைச்சர் கன்னங்கரா. கடும் எதிர்ப்பின் மத்தியில்   சிறிமா தலைமையிலான அரசாங்கம் பாடசாலைகளை அரசமயப்படுத்தியது. கல்வி அமைச்சராக நியமிக்கபட்டார் பதியுதீன் மொகமட். அவரை இன்றுவரை கடுமையாக சிங்கள பௌத்தர்கள் தாக்குவதைக் காண முடிகிறது. குறிப்பாக வரலாறு, இலக்கியம் போன்ற பாடங்களை பதியுதீன் நீக்கினார் என்கிறார்கள்.

1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்த போது படித்த இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு காரணமாக அடையாளம் காணப்பட்டது. வரலாறு, இலக்கியம் என்பன தொழில் வாய்ப்புக்கான பாடங்கள் இல்லையென்று அதற்கு மாற்றீடாக வேறு பாடங்களை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் வரலாறு என்கிற பெயரில் ‘சிங்கள பௌத்த’ வரலாற்றையே அதுவரை கற்பித்து வந்தார்கள். இன்றும் இலங்கையின் வரலாறு பற்றிய பாடத்திட்டம் சிங்கள பௌத்த வரலாறாகவே சிங்கள, தமிழ் மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பாடநூல்களில் தமிழ் நூல்களில் முதற் பக்கங்களில் மிக சமீபகாலம் வரை இருந்து வந்த தமிழ் மொழியிலான இலங்கையின் தேசிய கீதம் கூட “ஸ்ரீ லங்கா தாயே” என்பதை சிங்களத்தில் “நமோ நமோ தாயே” என்று மாற்றி விட்டார்கள். தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை பறித்தெடுத்தார்கள். ஒரு புறம் சிங்கள பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை, இருக்கும் தமிழ் பாடசாலைகள் மூடப்பட்ட கொடுமைகள் பல தொடர்கின்றன. 

சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் இந்த நிலைமையை மாற்றுவதற்கென “சமவாய்ப்பு சட்டம்” எனும் பேரில் ஒன்றை நிறைவேற்ற முற்பட்டபோதும் 1999 இல் சிங்கள வீரவிதான உள்ளிட்ட இனவாதிகள் தமது பலமான எதிர்ப்பின் மூலம் அம்முயற்சியை கைவிடச் செய்தார்கள். மகாசங்கத்தை சேர்ந்த பிக்குமார்களையும் இணைத்துக்கொண்டு அச்சட்டத்துக்கு எதிராக மாநாடுகளையும், ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட பாடசாலைகளும் வீதியில் இறங்கி போராடின. இறுதியில் அரசாங்கம் மண்டியிட்டு சரணடைந்தது. இனவாதிகள் வெற்றி பெற்றார்கள்.

சமவாய்ப்பு சட்டம் குறித்து அத்துரலியே ரதன தேரர் ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார். இந்த நாட்டின் பௌத்த தலைவர்கள் உருவாக வேண்டிய இடம் ஆனந்தா கல்லூரியே. 1956 சிங்கள வெற்றியின் பிறப்பிடம் ஆனந்த வித்தியாலயம் தான். 1999 இல் சமவாய்ப்பு சட்டத்தை தோற்கடித்தவர்களும் நாங்களே. (13.05.2005 - திவய்ன)

சமவாய்ப்பு சட்டம் குறித்த சர்ச்சையில் அன்று பேரினவாதிகளால் அதிகம் இலக்கு வைத்து தாக்கப்பட்டவர் மறந்த அஷ்ரப். “68% பௌத்தர்கள் வாழும் இந்த நாட்டில் சாஹிரா கல்லூரியில் அதற்கேற்ப இடம் கொடுப்பீர்களா” என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பினார்கள்.

சர்வமத பாடத்திட்டம்

பெரும்பாலான மேற்கத்தேய பாடசாலைகளில் “இறையியல்” (Theology) என்கிற பாடத்திட்டமே பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றன. மாணவர்கள் அங்கு சகல மதங்கள் குறித்த அறிவைப் பெறுவார்கள். மத நம்பிக்கையை ஊட்டும் கல்விமுறை அங்கு கிடையாது. இது ஒரு பன்மத, பன்முக அறிவை மாணவர்களுக்குப் பெற்றுத் தருவதோடு தனியொரு மதத்துக்குள் உள்ளிழுப்பதை தவிர்க்கிறது. ஏனைய மதங்களுக்கு மதிப்பளிப்பதற்கும், அவற்றின் மீதான சகிப்புணர்வுக்கு பழக்கப்படுத்துவதற்கும் வழிகாட்டப்படுகிறது. அதேவேளை இந்த நாடுகளில் வெளிநாட்டு குடியேற்றவாசிகள் தமது மத நம்பிக்கை சார்ந்த பகுதிநேர பாடசாலைகளைத் திறந்து தனிமத போதனைகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்குவதை இந்த நாடுகளின் தாராள ஜனநாயகவாத கொள்கைகள் தடுக்கமுடியவில்லை. பல ஐரோப்பிய நாடுகளில் அந்த நாடுகளின் பாரம்பரிய கிறிஸ்தவ தேவாலயங்கள் பலமிழந்து வருவதுடன் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் மதவழிபாட்டுத் தளங்கள் பலமடைந்து வருவது கூட மதசார்பற்ற நிலைக்கு சவாலாக அமைந்துள்ளன என்பது உண்மை தான், முஸ்லிம் பள்ளிவாசல்களின் பெருக்கம், யூத, இந்து, பௌத்தம், சீக்கியம் போன்ற மத வழிபாட்டுத் தளங்களின் தோற்றமும் அவற்றின் போதனைகளும் கூட இப்பேர்பட்ட வேறுபாடுகளையும், மனிதத் துருவங்களையும் உருவாக்கிவருவதை நடைமுறையில் காண முடிகிறது.

நமது நாட்டில் இன்றைய பாடசாலைகள் இனவாரியாக பிரிக்கப்படவில்லை, அல்லது தனி மொழிப் பாடசாலைகளாக அவை இல்லை, அவை “தனி மத” பாடசாலைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன என்பது நடைமுறை யதார்த்தம். பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளாகவே நிலைபெற்று பழகிவிட்ட இந்த அமைப்புமுறையை மாற்றுவதை குற்றம் சாட்டுபவர்கள் கூட விரும்புவதில்லை. சமத்துவம், சகோரத்துவம், சகவாழ்வு, மதச் சகிப்பு போன்றவை எட்டாத் துருவ நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இன்றைய நிலையில் அது இலகுவானதல்ல.

இன்றைய நிலையில் இலங்கையில் மத சார்பற்ற தனியார் பாடசாலைகள் சாத்தியப்பட்டிருக்கிறதே. அந்த இடைவெளியை பல்தேசிய கம்பனிகளும், பணம் கறக்கும், கல்வியை விற்றுப் பிழைக்கும் உள்ளூர் மாபியாக்களும் நிரப்பியுள்ளன.

பௌத்த மத முன்னுரிமை

மத சமத்துவம் மீறப்படும் வேளைகளில் சிறுபான்மை இனங்கள் எதிர்வினையாற்றும்போதேல்லாம் அரசியலமைப்பில் அன்று நுழைத்துக்கொண்ட பௌத்த மதம் குறித்த சரத்தை வைத்துக் கொண்டு தான் முறியடிக்கின்றன.

இனவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் சகல முயற்சிகளையும் இனவாதிகள் எதிர்த்து முறியடிப்பதற்கு ஆதாரமாக இருப்பது இந்த நாட்டின் அரசியலமைப்பும், 1815 கண்டி ஒப்பந்தமுமே. ஆங்கிலேயர்களிடம் கண்டி வீழ்ந்ததன் பின் முழு நாட்டையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் ஆங்கிலேயர்கள். கண்டி அரசனைக் காட்டிக்கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்ட கண்டி பிரதானிகள்  அவ் ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவிற்கு ஊடாக பௌத்த மதத்தை பேணிப் பாதுகாப்பதாக ஆங்கிலேயர்களிடம் கையெழுத்தில் உறுதி வாங்கிக்கொண்டனர். அந்த ஒப்பந்தத்தைக் காட்டியே தொடர்ச்சியாக ஆங்கிலேயர்களோடு சர்ச்சைகள் செய்து அவ் உரிமைகளை உறுதிபடுத்தி வந்தனர். அவ்வொப்பந்தத்தை இன்றும் அவர்கள் எங்கும் எடுத்துக் காட்டுவதுண்டு.

அடுத்தது பிரபல இடதுசாரித் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்களால் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பில் முதன் முறையாக பௌத்த மதம் அரச மதமாக ஆக்கப்பட்டது. அதுவரை சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பாக சோல்பரி அரசியல் அமைப்பில் இருந்த 28ஆவது சரத்து நீக்கப்பட்டது. இலங்கையை உத்தியோகபூரவமாக சிங்கள பௌத்த நாடாக நிறுவனப்படுத்திய முதல் சந்தர்ப்பம் அது தான். 

1978 இல் கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலும் கூட இந்த சரத்தை ஜே.ஆரால் எடுத்து விட முடியவில்லை. இனிவரும் காலங்களிலும் அதனை மாற்றுவது என்பது குதிரைக்கொம்பே. அப்பேர்பட்ட சரத்தைப் பயன்படுத்தி பௌத்த மதம் பெரும் நிதியொதுக்கீட்டுடன் பல சலுகைகளுடன் ஏனைய இனங்களையும் மதங்களையும் நசுக்கி பாசிச வடிவம் பெற்று விருட்சமாகியுள்ளது. இன்று ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும், பறிப்பதற்கும் இந்த அரசியலைமைப்பு ஏற்பாடு தான் பக்க பலமாக இருந்து வருகிறது.

தற்போதைய அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின் 09 ஆவது சரத்து பின்வருமாறு கூறுகிறது. 'இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க, 10 ஆம், 14 (01)(உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்'.

எந்த அரசியல் சந்தர்ப்பவாதிகளால் பௌத்த மத முன்னுரிமை ஏற்பாடு கொண்டுவரப்பட்டதோ இன்று அவர்களே நினைத்தால் கூட மாற்ற முடியாத நிலைமையை இன்று தோற்றுவித்துள்ளது. சாதாரண சமவாய்ப்பு சட்டத்தையே கைவிட்டு சரணடைந்தவர்களால் அரசியலமைப்பில் மாத்திரம் அம்மாற்றத்தை எப்படிக் கொண்டு வர முடியும். இந்த சரத்து நீக்கப்பட்டால் இனப்பிரச்சினை தீர்வு எதிர்நோக்கும் முக்கியதொரு தடை நீங்கி விடும்.

புதிய அரசியமைப்புக்கு ஊடாக மத சார்பற்ற நாடாக பிரகடனபடுத்துமாறு கோரிக்கைகள் வலுக்கின்றன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இவ்வரசியலமைப்பின் நோக்கங்களில் ஒன்று என கூறும் அரசாங்கம் பௌத்த மத முன்னுரிமையை நீக்குமா?

சமீபத்தில் அரசாங்கம் கொண்டுவரவிருந்த வெறுப்பு பேச்சுக்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலமும் பௌத்த சக்திகளின் எதிர்ப்பின் விளைவாக கைவிடப்பட்டிருக்கிறது.

தாம் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள்; அரசியலமைப்புக்கு ஊடாக தமக்கு தந்த அதிகாரம் என்று நம்பிகொண்டிருக்கும் பிக்குகள் பெருகிவருகிறார்கள். பௌத்த காவியுடை என்பது சண்டித்தனம் செய்வதற்கு அளிக்கப்பட லைசன்ஸ் அல்ல என்பதை தெளிவுபடுத்த வரவிருப்பது தான் பிக்குகள் ஒழுக்கச் சட்டம்.

பிக்குகள் ஒழுக்கவியல் சட்டம்

தேரவாத பௌத்த சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து பிக்குமாரின் மோசமான நடத்தைகளை கட்டுப்படுத்தும் முயற்சி இழுபறி நிலையில் இருக்கிறது. அச்சட்டமூலம் பிக்குமாரின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியது. “துறவறம் பூண்ட” பிக்குமார் பலரிடம் இன்று பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. பணம், காணிகள், வாகனங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருகின்றன. எந்த வரையறையுமில்லாமல் தாம் நினைத்த இடங்களில் விகாரைகளை அமைத்து வருகிறார்கள். பிக்குவாக ஆவதற்கான வயது, தகுதி என்பன மீறப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் வகையில் இந்த சட்டம் தயாரிக்கப்படுகிறது.

அரசாங்கம் எடுத்துள்ள இந்த முயற்சியை எதிர்ப்பவர்கள் அத்தகைய இனவாத – சண்டித்தன அமைப்புகளே. ஆனால் மூன்று பௌத்த சங்க பீடங்களும் தமது கோரிக்கையின் பேரிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளன. இது 25 வருடகால கோரிக்கை என்கிறார்கள் அவர்கள். இப்போது அரசாங்கம் இதற்கான சட்டவரைபை தாம் தயாரிக்காமல் சங்க பீடங்களிடமே அந்த பொறுப்பை கொடுத்து விட்டது. அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கர்கள் இந்த சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி தமது ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கின்றன. சென்ற அரசாங்கத்திடம் இந்த சட்டத்தை கொண்டுவரும்படி கோரிக்கை விடுத்திருந்தபோதும் அவர்கள் அதை சில நலன்களுக்காக பொருட்படுத்தவில்லை என்று  மல்வத்து நாயக்க தேரர் சித்தார்த்த சுமங்கல தேரர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இனவாத அமைப்புகள் ஆங்காங்கு சிங்கள அமைப்புகளை தூண்டி இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. போதாததற்கு சிங்கள ஊடகங்களில் இச் சட்டத்தை எதிர்த்து பல கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. பிக்குமாரின் நடவடிக்கைகளை இப்படி கட்டுபடுத்தினால் பௌத்தர்கள் பலவீனப்படுவார்கள், ஏனைய இனங்கள் இந்த நாட்டை துண்டாடி ஆக்கிரமித்துவிடும், பௌத்த சாசனம் அழிந்துவிடும் என்று பீதியைக் கிளப்பி வருகின்றன.

கடந்த 26.01.2016 அன்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்த சட்டத்தை எதிர்த்து ஒரு வழக்கு கூட தாக்கல் செய்தது குறித்த செய்தி பதிவாகியுள்ளது.

புதிய அரசியலமைப்பு மாற்றம். போர் விசாரணை. இந்த இரண்டும் தமது உடனடி முன்னுரிமை நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கிறது பேரினவாத தரப்பு. அந்தப் பேரினவாதத்தின் வீரியம் சோராமல் தக்கவைத்திருப்பதற்கு ஓய்வற்று அது இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். தனது இனவாத நிகழ்ச்சிநிரலில் உள்ள பல்வேறு நடவடிக்கைகளில் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

கல்விமுறையானது சர்வமத கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும், பிரபல பாடசாலைகளில் சகல மதத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்பதும் பெரும் சவாலான காரியங்களே. பௌத்த மத முன்னுரிமையை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதன்மூலம் பேரினவாதத்தின் வீரியத்தைக் குறைத்தால் மட்டுமே இனப்பிரச்சினைத் தீர்வு உட்பட மேற்படி பல்வேறு சிக்கல்கள் தீர வழிதிறக்கும்.

நன்றி  - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates