Headlines News :
முகப்பு » , , » தமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்! -என்.சரவணன்

தமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்! -என்.சரவணன்


இலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது எப்படி என்பது பற்றி அடுத்த நாள் 05.02.1949 சிங்கள தினமின பத்திரிகை இப்படி எழுதியது.
“மாலை 4 மணிக்கு பிரதமர் வந்தடைந்ததும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது... நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிங்களத்திலும், அரபி மொழியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் தேசத்தின் செய்தியை வாசித்தார்கள். அதன் பின்னர் சுதந்திர சதுக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 133 வருட காலனித்துவத்தை நினைவுபடுத்தும் வகையில் 133 புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் உரையைத் தொடர்ந்து அணிவகுப்புகள் நிகழ்ந்தன. பிற்பகல் 5.15க்கு சிங்களத்தில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்யப்பட்டது.”

இதுவரை இல்லாத “தமிழ் மொழி தேசிய கீதத்தை” இப்போது திணித்து விட்டார்கள் என்று இன்று வெகுண்டெழுந்தவர்கள் எவருக்கும் இன்னும் பல செய்திகள் தெரியாது. அன்று தொடக்கம் தொடர்ச்சியாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. சகல அரசாங்க பாடசாலை பாடநூல்களிலும் தமிழ் பாட நூல்களில் தமிழிலும், சிங்கள நூல்களில் சிங்களத்திலும் தேசிய கீதம் உள்ளடக்கப்பட்டு வந்திருக்கிறது. சகல பாடசாலைகளிலும் அதைப் பாடி வந்திருக்கிறார்கள். தேசிய கீதம் பற்றி இலங்கையின் அரசியலமைப்பின் சிங்கள பதிப்பில் இலங்கையின் தேசிய கீதம் “ஸ்ரீ லங்கா மாதா” என்று கூறப்பட்டிருப்பது போல் அரசியலமைப்பின் தமிழ் பதிப்பில் “ஸ்ரீ லங்கா தாயே” என்றே இருக்கிறது. 

இது எதுவும் தெரியாமல் தான் இவர்கள் பேசுகிறார்களா அல்லது தெரிந்தும் சிங்கள மக்களை பிழையாக திசைதிருப்ப இப்படி ஒரு திரிப்பை பிரசாரப்படுத்துகிறார்களா? சிங்கள பேரினவாதமயபட்ட கட்டமைப்பில் இந்த பிரசாரங்கள் இலகுவாக எடுபட்டிருகிறது.

ஜனாதிபதிகள் இருவர்
முன்னாள் ஜனாதிபதியும் சட்டம் படித்த வழக்கறிஞருமான மகிந்த ராஜபக்ஷவுக்கு கூட அரசியலமைப்பு குறித்து தெரியாது இருந்திருக்கிறது.


“அரசியலமைப்பில் எங்கும் தமிழில் தேசிய கீதம் இல்லை. எங்கிருக்கிறது. நான் பார்த்ததில்லை. உலகில் வேறெந்த நாட்டிலும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. இன்னும் சில காலத்தில் ஆங்கிலம் கற்ற மாணவர்கள் தங்களுக்கு ஆங்கிலத்தில் பாட வேண்டும் என்பார்கள். பின்னர் அரபு மொழியிலும் கேட்பார்கள் அப்படி அனுமதிக்க முடியுமா?” (மகிந்த ராஜபக்ஷ 02ஆம் திகதி அபயராம விகாரையில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்தது.)

சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஒரு கூட்டத்தில் இனவாதிகளை இப்படித் திட்டித் தீர்க்கிறார்.

“யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்...”
(சிங்கள மொழியில்)

என்று தேசிய கீதத்தின் இறுதி வரிகளில் கூறுகிறதே.. இப்படியெல்லாம் திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளை போல பாடிவிட்டு முஸ்லிம்களையும், தமிழர்களையும் தாக்குகிறீர்களே. இதுவா உங்கள் தேசிய உணர்வு. இந்த எருமைமாட்டு செயல் நிறுத்தப்படவேண்டும்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சிங்கள பௌத்த பேரினவாத தரப்பு வெகுண்டெழுந்துள்ளது.

அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த ஜனவரி 28 அன்று நடத்திய ஊடக மாநாட்டில் வெளியிட்டிருந்த செய்தியினால் மீண்டும் இப்பிரச்சினை சூடுபிடித்தது.

இன்றைய எதிர்ப்பாளர்கள்
பேரினவாத சக்திகள் என்ன வெளியிட்டார்கள் என்பதை சுருக்கமாக இங்கு பதிவு செய்வோம்.

“தேசிய கீதத்தை தமிழில் பாட விட முடியாது.” – அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க


“தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு இடமளித்த சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவேண்டும். அது அரசியலமைப்புக்கு விரோதமானது.” – பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில

 “இந்த சிங்கள நாட்டில் சிங்களத்தில் மட்டும் தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்” – விஜித ரோகன விஜேமுனி ஆர்ப்பாட்டம் (ராஜீவ் காந்தியை கடற் சிப்பாய் இவர்)

“பல இராணுவவீரர்களை பலிகொடுத்து காப்பாற்றிய நாட்டை மீண்டும் பிளவுபடுத்தி தமிழீழ கனவை நனவாக்கும் முயற்சி இது”. – ரியல் அட்மிரல் சரத் வீரசேகர  (04.02.2016 திவய்ன)

“இம்முறை தேசிய கீதத்தை பாடினால் அதுவே இந்த நாட்டின் சமஷ்டிக்கான முதல் கதவு” – ஹேகோட விபஸ்சி தேரர்.

“அப்படிஎன்றால் தேசிய கீதத்தை வேடுவ மொழியிலும் பாடு!” என்று கேலி செய்யும் கோரிக்கைகள்.

“சிறிசேன இதோ பார். பைத்தியக்காரனத்தனம் பண்ண வேண்டாம். இம்முறை தேசிய கீதம் இரு மொழிகளில் பாடினால் அத்தினம் கேலிக்கூத்தாகிவிடும். என்றாவது தமிழர் ஒலிம்பிக் பதக்கம் நேரிட்டால் அங்கு தமிழில் நமது தேசியகீதம் பாடுவதை அனுமதிக்க முடியாது.” என்கிறது ஒரு முகநூல் விளம்பரம்.

“தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவேண்டும். இல்லையேல் இது சமூக முறுகல்  நிலையை ஏற்படுத்தும். “ஹெல பொது சவிய” (சிங்கள பௌத்த தேகாரோக்கிய இயக்கம்) வெளியிட்ட அறிக்கையில்.

இம்முறை சுதந்திர தினமன்று தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதன் பின்னர் “தனிச் சிங்க” தேசியக் கொடியுடன் வீதிகளில் வலம்வந்தும், அக்கொடியுடன் கறுப்புக் கொடியையும் சேர்த்து வீடுகளில் பறக்கவிட்டும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அத்தோடு மேலும் பல பேரினவாத அறிக்கைகள், கூட்டங்கள், ஊடக மாநாடுகள், சமூகவளைத்தள எதிர்ப்பு பிரசாரங்கள் என்று ஓய்வில்லாமல் தொடர்கின்றன.

இலங்கை அளவுக்கு தேசிய கீதம் சர்ச்சைக்குள்ளான நாடு உலகில் இருக்க முடியாது. அதுவும் தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக தொடரும் தீராச்சிக்கல்.
இத்தனை காலமும் “தமிழர்கள் சொந்த தேசத்தை பிரித்துக் கொண்டு போகப் போகிறார்கள்...” என்று வெகுண்டெழுந்தீர்களே. “சொந்த தேசியக் கொடியையும், சொந்த தேசிய கீதத்தையும் உருவாக்கிக்கொள்ளப் போகிறார்கள்” என்று கொக்கரித்தீர்களே. இப்போது இலங்கையை தமது நாடாக ஏற்றுகொண்டு தமிழிலும் தேசிய கீதம் பாட முன்வந்த தமிழர்களையிட்டு ஆறுதல் கொள்ளுங்கள். பெருமூச்சு விடுங்கள். உங்கள் வேலை சுலபமாகியிருக்கிறது என்பதையிட்டு நிறைவு பெறுங்கள். அல்லது தமிழில் பாடக்கூடாது என்றால் அவர்களின் தனித்துவ தேவையை அங்கீகரித்து ஓடிப்போய்விடுங்கள் என்றே கூற வேண்டியிருக்கிறது.

சில நாடுகளின் உதாரணங்கள்
உலகில் வேறெங்கும் இரண்டு தேசிய கீதங்கள் இல்லை என்கிற வாதம் வசதியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இலங்கையில் இரண்டு தேசிய கீதங்கள் இல்லை. ஒரே தேசிய கீதத்தின் மொழிபெயர்ப்பு தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பல நாடுகளில் தேசிய கீதம் உள்ளன.

நாடு
பன்மொழி தேசியகீதம்
பெல்ஜியம்
ப்ளெமிஷ், பிரெஞ்சு, ஜேர்மன்
புருண்டி
பிரெஞ்சு, கிருந்தி
கேமரூன்
பிரெஞ்சு, ஆங்கிலம்
கனடா
பிரெஞ்சு, ஆங்கிலம்
கொமொரோ
பிரெஞ்சு, கொமொரியன்
பிஜி
ஆங்கிலம், பிஜி
பின்லாந்து
பினிஷ், ஸ்வீடிஷ்
கென்யா
ஆங்கிலம், கிஷ்வாஹிலி
மலாவி
சிச்சேவா, ஆங்கிலம்
மாஷல் தீவு
ஆங்கிலம், மாஷல்
நைய்று
ஆங்கிலம், நைய்று
நியுசீலாந்து
ஆங்கிலம், மௌரி, சைகை
பலாவு
பலாவு, ஆங்கிலம்
சுரினாம்
டச்சு, ஸ்ரானன், டோங்கோ
சுவிட்சர்லாந்து
பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ரோமன்
சிம்பாபே
ஆங்கிலம், ந்தேபேலே, ஷோனா
தென் ஆப்பிரிக்கா
ஷோசா, சூலு, செசோதோ, ஆப்பிரிக்கா, ஆங்கிலம்

தென்னாப்பிரிக்காவில் ஒரே தேசிய கீதத்தின் ஐந்து பகுதிகளும் ஐந்து மொழிகளிலும் வரிசையாக ஒரே தடவையில் பாடிமுடிக்கப்படுகின்றன. சோமாலியா போன்ற சில நாடுகளில் தேசிய கீதத்துக்கு பதிலாக எழுச்சி இசையை மாத்திரம் இசைக்கின்றனர். ஸ்பெயின், பொஸ்னியா, சான் மரினோ, ஹெர்சகோவினா போன்ற நாடுகளில் உத்தியோகபூர்வமான தேசிய கீதத்துக்கு எழுத்து வடிவமே கிடையாது.இசை மாத்திரம் இசைக்கப்படுகின்றன. இலங்கையில் கூட 1961 ஆம் ஆண்டு கண்டியில் அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க தலைமையில் நிகழ்த்தப்பட்ட தேசிய சுதந்திர தினத்தின் போது இசை மாத்திரமே இசைக்கப்பட்டது. “நமோ நமோ மாதா” என்பதை “ஸ்ரீ லங்கா மாதா” என்று மாற்றுவது குறித்த சர்ச்சை தொடர்ந்த அந்த காலப்பகுதியில் முடிவெடுக்கப்படாத நிலையில் அவ்வாறு இசைக்கப்பட்டது.

இலங்கையில் நீண்டகாலமாக இனவாதத்தை மக்கள் மயப்படுத்துவதில் தலைமைப்பாத்திரம் ஆற்றி வரும் சிங்கள நாளிதழான திவய்ன பத்திரிகையில் 22.03.2015 தலையங்கத்தில் “தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை மிகவும் அசிங்கமான முறையில் கேலி செய்திருந்தது. தேசிய கீதத்தை ரெப் செய்து பாடி கசிப்பு குடித்துக்கொண்டு ஆடுவதை இவர்கள் பல்லின சுதந்திரம் என்று கூறினால் நாங்கள் சத்தமின்றி இருக்கவேண்டும்” என்கிறது.

அதே பத்திரிகையில் பிரபல இனவாதியான பேராசிரியர் நளின் டி சில்வாவின் வாராந்த பத்தியில் “...தமிழர்களுக்கு இப்படி கப்பம் கொடுக்காவிட்டால் மீண்டும் யுத்தத்தை தொடக்கிவிடுவார்கள் என்று சொன்னது எவன்...? இலங்கையின் சுதந்திரத்துக்காக இந்த தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழ் வெள்ளாள மேட்டுக்குடியினர் சிங்களத் தேசியவாதத்துக்கு எதிராகவும் சிங்கள கலாசாரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்துக் கொண்டவர்கள். தமிழ் இனவாதத்தை தோற்கடிக்க நமக்கு நிறைவேற்று ஜனாதிபதிமுறையை தக்கவைத்துக்கொள்வது அவசியம்...” என்கிறார்.

ஏற்கெனவே அவர் “இந்த நாடு பிளவு படாமல் காக்க வேண்டுமென்றால் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் தான் இருக்க வேண்டும்” என்று கட்டுரை எழுதியிருந்தார் (திவய்ன – 10.03.2013)

2009இல் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் 11.12.2010 மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியன பற்றிய அமைச்சரவைப் பத்திரம் இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டுமென்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு நீக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இந்த பத்திரத்தை பரிந்துரைத்தவர் பொதுநிர்வாக உட்துறை அமைச்சர் W.D.J.செனவிரத்ன. இதற்கு சிங்கப்பூரை முன்மாதிரியாக காட்டப்பட்டிருந்தது. பல்லினங்கள் வாழும்  சிங்கப்பூரில் ஒரே மொழியில் அந்த தேசிய கீதம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அந்த தேசிய கீதம் அங்கு வாழும் சிறுபான்மை மொழியிலேயே இயற்றப்பட்டிருப்பத்தையும், அங்கு வாழும் 75வீத பெரும்பான்மை சீனர்களின் மொழியில் அது இல்லை என்பதையும் வசதியாக மறைத்துவிட்டனர். விமல் வீரவங்ச போன்றோர் தனிச்சிங்கள தேசிய கீதத்தை வற்புறுத்தியிருந்தார்கள். 300 மொழிகள் பேசப்படும் இந்தியாவில் இந்தி மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் இலங்கையில் இரு மொழிகளில் அதனைப் பாடத் தேவையில்லை என்று மகிந்த கூறியதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 

இதற்கிடையில் சிங்கள தேசிய கீதத்தை தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த வலிகாமம் வலய துணைக் கல்விப்பணிப்பாளர் மாணிக்கம் சிவலிங்கம் (வயது 54) உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து 26.12.2010 இரவு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பலர் மறந்திருக்க மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெமட்டகொட விபுலானந்த தமிழ் மகா வித்தியாலய அதிபர் சண்முகானந்தன் கல்வி திணைக்கள அதிகாரிகளால் எச்சரிக்கை செய்யப்பட்ட செய்தி பல ஊடகங்களிலும் பார்த்தோம். அதிபர் சண்முகானந்தன் துணிச்சலாக அதனை எதிர்கொண்டிருந்தார். ஏனைய தமிழ் பாடசாலை அதிபர்கள் பலர் தமது சொந்த பாதுகாப்பு நலன் கருதி அப்படி முன் வர முடியவில்லை.


அரசியலமைப்பில்
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பு” அத்தியாயம் 1இல் 7வது பிரிவில் இப்படி கூறுகிறது.

“இலங்கை குடியரசின் தேசிய கீதம் “ஸ்ரீ லங்கா தாயே” என்பதாக இருத்தல் வேண்டும் : அதன் சொற்களும் இசையமைப்பும் மூன்றாம் அட்டவணையில் தரப்பட்டவாறாக இருத்தல் வேண்டும்”
-பாராளுமன்றச் செயலகத்தினால் வெளியிடப்பட்டது

ஆக தமிழில் பாடப்படுவது அரசியலமைப்புக்கு விரோதமானது என்பது பச்சைப்பொய். சட்டவாக்கத்தை மேற்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களே அடிப்படை அரசியலமைப்பைப் பற்றி தெரியாது இருக்கின்றனர். சிலர் வசதியாக மூடி மறைக்கின்றனர்.

தேசபக்தியைத் தராத கீதம்

எதற்கெடுத்தாலும் இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில் இருப்பதாக கூறும் பேரினவாதம், அந்த இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு குறைந்தபட்ச சமஷ்டி ஆட்சியதிகாரம் வழங்கியிருப்பதை வசதியாக மறைத்துவிடுகிறது. இந்தியாவின் தேசிய கீதம் பெரும்பான்மையினர் பேசும் மொழியில் இல்லை என்பதை வசதியாக மறைத்துவிடுகிறனர்.

தமிழ்மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாதிருந்த 1956-1987 தனிச்சிங்கள காலத்தில் கூட தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. ஆனால் தமிழ்மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளபோது தமிழிலுள்ள தேசிய கீதத்தை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முரண்நகையாக உள்ளன. வடக்கு கிழக்கு பகுதிகளில் 30 வருடங்களாக தமிழில் கூட தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. சமீப கால அரசியல் வரலாற்றில் தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்குமாறு தமிழர்கள் அரசியல் கோரிக்கையாக வைத்ததில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இலங்கையில் ஆஸ்பத்திரிகள் உட்பட சகல அரச நிறுவனங்களிலும் காலை சிங்களத்தில் தேசிய கீதத்தை ஒலிபெருக்கிகளில் இசைப்பதும் அனைவரும் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்துமாறு நிர்பந்திக்கும் ஒரு வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகிந்த அரசாங்கத்தின் போது “யுத்த தேசிய” மனநிலையை தக்கவைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம் இன்னமும் தொடர்கிறது. சிங்களத்தில் என்ன அர்த்தத்தில் பாடுகிறார்கள் என்று தெரியாவிட்டாலும் இந்த சம்பிரதாய நிர்பந்தத்திற்கு அனைத்து தமிழர் முஸ்லிம்களும் எழுந்து நிற்பார்கள். விரும்பியோ விரும்பாமலோ எழுந்து நிற்கவேண்டும் இல்லேயேல் எழுந்தி நில்லாதவர்கள் மீது தேசாபிமானம் குறித்த சந்தேகம் தோன்றிவிடும், அந்த சந்தேகம் வீணாக “பயங்கரவாதி” என்கிற சந்தேகம் வரை கொண்டு சென்று நிறுத்திவிடும் என்பதால் எரிச்சலுடனேனும் எழுந்து நிற்கும் பலரை காண முடிகிறது.

தமிழர்கள் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு பிரயத்தனப்படவில்லை. மொத்தத்தில் தேசிய கீதத்தையே அவர்கள் பெரிதாக வரவேற்றதுமில்லை, அக்கறை காட்டியதுமில்லை. முதலில் இலங்கை என்கிற நாட்டில் தமிழர்களும் சக பிரஜைகள் என்கிற உணர்வு ஊட்டப்படாமல் வெறும் தேசிய கீதத்தை விழுங்குமளவுக்கு என்ன தான் இருக்கிறது. தமிழர்களுக்கு தேசிய கீதத்தை விட்டால் வாழ்வில்லை என்பதுபோன்ற தோற்றம் காட்டப்படுகிறது. இந்த கண்மூடித்தனமான எதிர்ப்பில் உண்மையான வரலாற்றை மறந்து விட்டார்கள், இத்தனை கால நடைமுறையை மறந்து விட்டார்கள். உண்மையான தகவல்களை மறந்துவிட்டார்கள். அரசியலமைப்பின் உண்மையான சரத்தைக் கூட மறந்துவிட்டார்கள். 

உண்மையைச் சொல்லப்போனால் தமிழ் வாயால் சிங்கள தேசாபிமானத்தை  வெளிப்படுத்தவைக்கும் செயல் இது என்று சிங்கள எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான ரோஹித்த பாஷன சமீபத்தில் எழுதிய கட்டுரை கவனத்துக்குரிய ஒன்று. இரண்டு நிமிடங்களும் 31 செகண்டுகளை ஸ்ரீ லங்காவின் மீதான தமது தேசாபினாத்தை தமிழர்கள் வெளியிடக்கூடாது என்பது தமிழர்கள் தமக்கான தேசியகீதத்தை தனியாக வைத்துக்கொள்ள நிர்ப்பத்திக்கும் ஒரு போக்கே. யுத்த வெற்றியின்  பின்னர் தமிழர்களை தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடவைக்க வேண்டும் என்கிற மனநிலை எதன் தொடர்ச்சி, எதன் ஆரம்பம் என்பதை வாசகர்களே சிந்திக்கட்டும்.

சிங்கள பௌத்தத்தின் பெயரால் தானே இந்த பாரபட்சம். பாளி  மொழியின்றி சிங்களம் எப்படி தோன்றியது. பாளி மொழியின்றி இலங்கையில் பௌத்தம் ஏது. புத்தம் சரணம் கச்சாமி என்பது என்ன சிங்கள மொழியா. இன்றும் பௌத்த மதகுருக்களால்  பௌத்தமும், தம்ம பதமும் போதிக்கப்படுவது பாளியில் தானே. இன்னொரு மொழியிலிருந்து, இன்னொரு தேசத்திலிருந்து எடுத்து கையாளும் போது அது புனிதமாகிறது, இந்த நாட்டின் தமிழ் பூர்வீகக் குடிகள்; உங்கள் சிங்கள மொழி தேசிய கீதத்தை தமது மொழியில் பாடுவது மட்டும் வலிக்கிறதா. அது தேசத்துரோகமாகிற்றா? இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களின் மொழியில் தான் தேசிய கீதத்தை பாட வேண்டுமென்றால் வேடுவ மொழியில் பாடுவோமா? 

சகல ஆறுகளும் கடலில் கலந்தபின்னே அனைத்தும் ஒரே சமுத்திரமாவது போல எனது சாசனத்திற்கும் இன, சாதி பேதங்கள் எதுவும் இல்லை என்று புத்தர் போதித்தாரே அந்த புத்தரின் பெயரால் அல்லவா பௌத்தத்துக்கு புறம்பான செயல்கள் அரங்கேறுகின்றன. 

சமரகோனைக் கற்றல்
குறைந்த பட்சம் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன எழுதிய “ஆனந்த சமரகோனைக் கற்றல்” என்கிற ஆய்வு நூலையாவது அவர்கள் வாசிக்கலாம். தேசியகீதத்தை இயற்றிய ஆனந்த சமரகோன் பற்றி ஒரு முக்கியமான விரிவான நூலை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன சிங்கள மொழியில் (375 பக்கங்களில்) எழுதியிருக்கிறார். இந்த நூலின் முதலாவது பதிப்பு 1988ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர் மூன்று மறுபதிப்புகளை அது கண்டிருக்கிறது. பிந்திய பதிப்புகளில் அவர் மேலும் பல புதிய விபரங்களையும் அத்தியாயங்களையும் சேர்த்திருக்கிறார். 2011 இல் வெளியான மூன்றாவது பதிப்பில் மிக சமீபத்தேயே பேரினவாத சக்திகள் தேசிய கீதம் குறித்து மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் விலாவாரியான தகவல்களையும் வெளியிட்டிருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று. இந்த நூல் உண்மையைக் கூறும் ஒரு முக்கியமான நூல்.

தேசிய கீதம் என்பது நாட்டுப்பற்றை உணர்வுபூர்வமாக நெஞ்சிலிருத்தும் ஒரு ஓர்மம் மிக்க கீதம். அதனைப் புரியாத ஒரு மொழியில் இன்னொரு சாராருக்கு எப்படி திணிக்க முடியும். “ஸ்ரீ லங்கா தாயே” எனும்போது இலங்கையை “தாயே” என்று உணர்வு பூர்வமாக கூறாமல், “மாதா” என்று ஒரு அந்நிய மொழியில் தாயை அழைப்பதில் என்ன உணர்வு இருக்கமுடியும். 

போரின் பின்னர் பேரினவாதம் தமிழர்களிடமிருந்து ஒவ்வொன்றாக பிடுங்கி இறுதியில் பெயரளவில் மிச்சமிருந்த தேசிய கீதத்தையும் பறித்துக் கொள்ளப் பார்க்கிறது. தமிழர்களைப் பொறுத்தளவில் அது இருந்து தான் என்ன... இல்லாவிட்டால் என்ன என்கிற நிலை தான். தமிழில் தேசிய கீதத்தை பாட அனுமதித்து விட்டால் மாத்திரம் இலங்கையர் என்கிற தேசப்பற்று தமிழர்களுக்கு கிடைத்து விடுமா என்பது வேறு கதை. தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய சின்னங்கள் என அனைத்தையுமே சிங்களமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே இந்த தனிச் சிங்கள தேசிய கீதம்.

தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் பல எதிர்ப்புகளையும் மீறி தேசிய தினத்தன்று தேசிய கீதத்தை மீண்டும் பாடச் செய்திருப்பது மகிழ்ச்சியே. இன்னொருபுறம் யுத்தத்தின் பின்னர் வருடாந்தம் மார்ச் மாத ஜெனிவா நிர்பந்தங்களை சரிகட்டவும், தாம் கடும்போக்காளர்களையும் எதிர்த்தபடி தமிழர்களுக்கு தீர்வை வழங்கி வருகிறோம் என்று காட்டும்  கண்கட்டிவித்தை தானா என்று சந்தேகிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

அடிக்குறிப்பு:சுனில் ஆரியரத்ன: சமகால முற்போக்கு சிங்கள புலமைத்துவ ஆளுமைகளில் முக்கியமானவர். அவர் பல ஒருசிறந்த ஆய்வாளர் மட்டுமல்ல, பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பல முகங்கள் அவருக்கு உண்டு. பல தமிழ் வரலாற்று இலக்கியங்களை சிங்களத்துக்கு கொண்டுபோய் சேர்த்தவர் அவர். அவர் எழுதிய (தெமல பௌத்தயா) “தமிழ் பௌத்தம்” என்கிற நூல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவேண்டிய முக்கிய சிங்கள நூல். “தமிழ் இலக்கிய வரலாறு” என்கிற அவரது சிங்கள நூலுக்கு 1991 இல் அரச சாகித்திய பரிசு கிடைத்தது. தமிழ் இலக்கணச் சுருக்கம், தமிழ் இராமாயண மொழிபெயர்ப்பு போன்ற பல நூல்களை எழுதியிருப்பவர். சுனில் ஆரியரத்ன அளவுக்கு சிங்கள மொழியில் தமிழுக்கு தொண்டாற்றிய வேறெவரும் இலர் என்றே கூற முடியும்.
சிறந்த சிங்கள திரைப்படப் பாடலாசிரியருக்கான ஜனாதிபதி விருது, சரசவி விருது போன்ற விடுதுகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக பெற்றிருப்பவர். தமிழ் – தமிழர் குறித்த அறியாமையினால் கட்டுண்டு கிடக்கும் சிங்கள பேரினவாதத்தோடு தொடர்ச்சியாக வாதம் செய்து மோசமான வசவுகளை பல காலமாக
எதிர்கொண்டு வருபவர். 
Share this post :

+ comments + 1 comments

http://ilankainet1.rssing.com/browser.php?indx=25663853&item=2864

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates