புதிய அரசியலமைப்பு வடிவமைப்புத் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது அரசியலமைப்பில் மலையக மக்களின் அரசியல் அடையாளம் என்ன என்பது பற்றி உரையாடும்போது சிலர் ‘மலையகம்’ என்பதை புவியியல் நிலை சார்ந்து நோக்குகின்றனர். ஆனால் மலையகம் என்பது அந்த மலையக மண்ணை உருவாக்கிய மக்களின் அடையாளமாக, புவியியல் எல்லைகளைக் கடந்து ‘உணர்வு ரீதியாக’ மாறிவிட்ட ஒரு விடயம். எனவே பண்பாட்டு ரீதியாக மலையகத் தமிழர் எனப்படுவோர் அரசியல் ரீதியாகவும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படல் வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
‘அரசியல் யாப்பு சீர்திருத்தமும் மக்கள் பங்குபற்றலும்’ எனும் தொனிப்பொருளில் கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் மலையகமெங்கும் நடாத்திவரும் பொதுக் கருத்துப்பகிர்வு கலந்துரையாடல் அண்மையில் ஹட்டன் நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித அபிவிருத்தி நிறுவன (கண்டி) தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வை சாத்தியமாக முன்னெடுக்கும் வகையில் கருத்துப்பகிர்வை கேள்வி, பதில் வடிவத்தில் ஏற்பாட்டாளர்கள் அமைத்திருந்தனர். அந்த வகையில் திலகர் எம்.பிக்கு வழங்கப்பட்ட நான்கு கேள்விகளுக்கும் அவர் பின்வருமாறு பதில் வழங்கியிருந்தார்
ஆட்சி முறை –
பாராளுமன்ற முறைமை ஒற்றை ஆட்சியா ? அல்லது சமஸ்டி முறையிலா அமைதல் வேண்டும்?
தற்போது இலங்கையில் ஒற்றையாட்சி நிலவுவதாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு மாயை நிலவுகின்றது என்றே நினைக்கிறேன். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாணசபைமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதிகாரப்பகிர்வு ஒன்று இடம்பெற்று ஒற்றையாட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைகள் தனியான நிர்வாகத்தையும் அதிகாரங்களையும் கொண்டு இயங்கி வருகின்றன. அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் உண்டு. போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை மற்றும் அதிகாரங்கள் சம அளவில் பகிரப்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் அவற்றை நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தரப்பினரிடம் இருந்து இது பரவலாக முன்வைக்கப்படுகின்றது. அதுவே இன்று சமஷ்டியாக அமைதல் வேண்டும் என தெளிவாக முன்வைக்கப்பட்டும் வருகின்றது.
அதே நேரம் மலையகம் இன்னும் உள்ளுராட்சி நிர்வாகத்திலேயே முழுமையாக பயன்பெறாத நிலையில் இங்கு சமஷ்டி பற்றிய உரையாடல்கள் குறைவாகவே உள்ளன. அதற்கு வடக்கு, கிழக்கு போல் அல்லாது மலையக மக்கள் பரவலாக வாழ்வதும் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே கலந்து வாழ்வதும் காரணமாக அமையலாம். எனவே அதிகாரப்பகிர்வு என்று வருகின்றபோது தேசிய ரீதியில் எவ்வாறான பிரேரணைகள் சக சமூகங்களினால் முன்வைக்கப்படுகின்றதோ அதற்கு எவ்வாறான இசைவாக்கம் அரச மட்டத்தில் கடைக்கின்றதோ அவற்றுக்கு ஏற்ப மலையக சமூகமும் அவதானங்களைச் செலுத்தி முன்னகர வேண்டும். ஆனால, எவ்வித அதிகாரப்பகிர்வு முறை வரினும் அதில் மலையக மக்கள் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தேர்தல் முறை –
தொகுதிவாரி தேர்தல் முறையா? அல்லது விகிதாசார தெரிவு முறையா? அல்லது கலவை முறையா? மலையகத் தமிழ் மக்களுக்கு பயணளிக்கும்?
வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977க்குப்பின் சிறுசிறுக வாக்குரிமைக் கிடைக்கப்பெற்றதும் நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநித்துவ முறையின் கீழ் கணிசமான அளவில் மக்கள் சபைகளில் பிரதிநிதித்துவத்தை பெற்று வருகின்றனர். தற்போது ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த சமூகம் 2006-2010 காலத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. குறைபாடுகள் உள்ள முறைமையாயினும் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமை மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஓரளவ உறுதி செய்வதாக உள்ளது. அதேநேரம் தேசிய ரீதியாக தொகுதிக்கு பொறுப்புக்கூறும் உறுப்பினர் ஒருவர் இல்லாமை மற்றும் விருப்பு வாக்குகளினால் உட்கட்சி மோதல்கள் அரசியல் செயற்பாட்டாளர் அல்லாத ஒருவரும் மந்திரியாகிவிடுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நடைமுறையில் உள்ள விகிதாசார முறை மாற்றப்படல் வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்படுகின்ற வேளை நாம் தனித்து நின்று விகிதாசார முறைiமையை வேண்டி நிற்கும் நிலைமை இன்று இல்லை. இதில் பாதிக்கப்பட போவது தென்னிலங்கை முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களும் சிறுகட்சிகளுமே.
அதேநேரம் நிலவுகின்ற தன்மைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்புக்கு முன்பதாகவே ஏற்கனவே 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ள ‘கலப்பு முறை’ தேர்தல் முறைக்கான நடைமுறைகளை சட்டமாக்கும் ஒரு அறிகுறி தெரிகின்றது. எனவே இதுவரைக்காலமும் நடைமுறையில் இருந்திருக்காத கலப்பு முறையில் நாம் எத்தகைய பிரதிபயன்களை அடைவோம் என்பது யாரும் அறியாததாக உள்ளது. அதேநேரம் கலப்பு முறையை பிரேரிக்கும் அரசியல் தரப்பாக இருந்தாலும் சரி அல்லது அதனை வடிவமைக்கும் நிபுணத்துவ குழுக்களாயினும் சரி மலையக மக்களை ‘பல அங்கத்தவர்’ தொகுதிகள் மூலம் உள்வாங்கினால் போதுமானது என்பது போன்ற கருத்து நிலையில் உள்ளன. இதனை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு ஆசனத்தை வைத்து அவர்கள் அளக்கிறார்கள். இது தவறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மலையக மக்கள் 1947 ஆம் பாராளுமன்ற அவைக்கு 7 உறுப்பினர்களை நேரடியாக தனித் தொகுதிகள் ஊடாக தெரிவு செய்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். நாம் அதனை மீளவும் நினைவ படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சொல்பெரி அரசியல் அமைப்பில் மலையக மக்கள் 14 பேர் பிரதிநித்துவம் பெறத்தக்கதாக வழி அமைக்கப்பட்டிருந்தது. 1948இல் குடியுரிமை பறிக்கப்பட்டதாலும், 1964 ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினால் மலையக மக்கள் இந்தியா அனுப்பப்பட்டதாலும் ஏற்பட்ட மாற்றங்களே 1977 ஆம் ஆண்டு ‘பலஅங்கத்தவர்’ தொகுதியொன்றின் ஊடாக ஒரு ஆசனத்தைப் பெறும் நிலை உருவானது. எனவே தொகுதியும் விகிதாசாரமும் கலந்து ஒரு முறை அறிமுகப்படுத்தப்படுமெனில் மலையக மக்கள் தனித்தொகுதிகளை பெறுவதற்கு போதுமான எல்லாத் தொகுதி நிலைகளும் தனித்தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அதற்கு மேலதிகமாகவே பல அங்கத்தவர் தொகுதி மூலமும் மாவட்ட விகிதாசார முறை மூலமும் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை ஏற்றுக்கொள்ளபப்டல் வேண்டும் என்பதை நான் அழுத்தமாக சொல்லி வருகிறேன். அதனையே அரசியல் யாப்புக்கான எனது பிரேரணையாகவும் முன்வைக்கிறேன்.
அதிகாரப்பகிர்வு-
உள்ளுராட்சி, மாகாண சபை முறை அல்லது சிறுபான்மையினரை மையப்படுத்திய தீர்வு. இவற்றில் எது சாத்தியமானது,
முதலாவது வினாவுக்கு பதிலளித்து போன்றே இதில் நாம் தேசிய செல்நெறியைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதேநேரம் உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் தற்போதுள்ள நடைமுறை மலையக மக்கள் பேரளவில் உள்ளவாங்கிய ஒரு முறையாகவே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள உள்ளுராட்சி நிர்வாக முறைமையோ அல்லது அதன் சட்டங்களோ மலையக மக்களுக்கு முழுமையான பயனைத் தருவதாக இல்லை. எனவே மலையக மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட காலமாக அரசியல், சிவில் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு இப்போது மாவட்ட செயலாளர் மட்டத்தில் கூட அது ஒரு கோரிக்கையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பிரதேச செயலகங்கள் அதிகரிக்கும்போது பிரதேச சபைகள் இயல்பாகவே அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான அழுத்தம் இந்த அரசியலமைப்பு மாற்ற கலந்துரையாடல்களின்போது மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மறுபுறம் மாகாண சபைக்கு மாறான ஒரு முறைமை சம்ஸ்டி என்ற பெயரிலோ அவ்வாறு அல்லாமலோ முன்வைக்கப்படும் பட்சத்தில் அது ‘பிராந்திய சபை ஒன்றாக’ அமையும் வாய்ப்புகள் உள்ளன. வடக்கு கிழக்கு இணைப்பை கோரி நிற்கும் வடகிழக்கு மக்களுக்கு மாற்றாக இந்த பிராந்திய சபை முறை முன்வைக்கப்படலாம். இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் இணைக்கப்படும் நிலை வரும்போது ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் இணைந்த ஒரு பிராந்தியத்துக்குள் மலையக மக்கள் அரசியல் அதிகாரம் பெறக்கூடிய அலகு ஒன்று அமையும் வாய்ப்பு உள்ளது. அது அவ்வாறு அமைதல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கலாம். இந்த மூன்று மாகாணத்து வெளியே பரந்து பட்டு வாழும் மலையக மக்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கீழான அரசியல் அதிகாரங்களைப்பெறும் யோசனை வலுவாக முன்வைக்கப்படுதல் வேண்டும்.
மலையக மக்களின் இன அடையாளம்?
இது மிகவும் முக்கியமான ஒரு தலைப்பு என நினைக்கிறேன். ஏனெனில் சிலர் ‘மலையகம்’ என்பதை புவியியல் நிலை சார்ந்து நோக்குகின்றனர். ஆனால், மலையகம் என்பது அந்த மலையக மண்ணை உருவாக்கிய மக்களின் அடையாளமாக புவியியல் எல்லைகளைக் கடந்து ‘உணர்வு ரீதியாக’ மாறிவிட்ட ஒரு விடயம். எனவே பண்பாட்டு ரீதியாக மலையகத் தமிழர் எனப்படுவோர் அரசியல் ரீதியாகவும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படல் வேண்டும். நாம் இந்திய வம்சாவளி தமிழர் என அழைத்துக்கொண்டாலும் சட்டப்பதிவுகளில் அவ்வாறு இல்லை. இன்றும் கூட நேரடியாக மலையக மக்களை பிறப்பு சான்றிதழ்களில் ‘இந்திய தமிழர்’ என அழைக்கும் நிலை காணப்படுகின்றது. இது இலங்கை நாட்டில் இருந்து மலையக மக்களை அந்நியப்படுத்தும் சொல்லாடல் என்றே நான் பார்க்கிறேன் அது அவ்வாறு தான் நடக்கிறது.
அதேநேரம் நிலை மாற்றமடைந்துவரும் மலையக சமூகத்தில் இந்திய அனுதாபிகளாகவும் அவ்வாறு அழைப்பதை கௌரவமாகவும் கருதும் மூத்த தலைமுறையினர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்கள் எவ்வாறு தமக்கு இந்திய அடைமொழி தேவையென நினைக்கிறார்களோ அதைவிட இறுக்கமாக மலையக அடையாளத்தினை ஏற்கனவே இளம் மலையக தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வேறுபட்ட மனநிலைகள் காரணமாக இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் சனத்தொகை எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்துக் காட்டுகின்றது. இது பாரதூரமான விளைவுகளை அரசியல் ரீதியாக தந்துகொண்டிருக்கிறது.
எனவே அரசியல் யாப்பு மாற்ற காலத்தில் மலையக மக்கள் கடந்த ஐம்பது வருடகாலமாக பண்பாட்டு ரீதியாக வளரத்தெடுத்திருக்கும் உணர்வு பூர்வமான ‘மலையகத் தமிழர்’ என்பது எவ்வகையிலும் அரசியல் அடையாளமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதேநேரம் அந்த உணர்வைப் பெறாத அல்லது பெற மறுக்கின்ற மக்களையும் இணைத்துச் செல்லும் நோக்கில் ‘இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்’ என்ற சொல்லாடலை பிரேரிக்கலாம். இதன் மூலம் இதுவரை காலம் சேர்க்கப்படாத ‘வம்சாவளி’ (Origin) என்ற சொல்லும் ( இது இந்திய தமிழர் என்பதற்கு பதிலீடாக அமையும்) ‘மலையகம்’ என்ற சொல்லும் உள்வாங்கப்பட இரண்டு தரப்புக்குமான தீர்வைத் தருவதாக அமையும்.
மேற்படி நான்கு கேள்விகளுக்கும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் மற்றும் எஸ்.ராஜரட்னம் ஆகியோரும் கலந்து கொண்டு பதிலளித்தனர். அமர்வை பி.பி.சிவபிரகாசம் நெறிப்படுத்தியிருந்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...