பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாததால் தோட்டத் தொழிலாளருக்கான சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து மாதங்களாகத் தொடர்கிறது.
எந்தவொரு தனியார் நிறுவன ஊழியர்களுக்கோ அல்லது அரசாங்க ஊழியர்களுக்கோ இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த வருடம் மார்ச் மாதம் 2013 – 2015 காலப்பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியான நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் இருதரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டு அது 2015 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் மற்றும் நலன்புரி விடயங்கள் அனைத்தும் கூட்டு ஒப்பந்தத்தினூடாகவே தீர்மானிக்கப்படுகிறது. குறித்த காலத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாததால் தொழிலாளர் சம்பள உயர்வையும் ஏனைய நலன்புரி விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 ரூபா நாட் சம்பளமாக தோட்டத்தொழிலாளருக்கு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது. ஆனால் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாதென்று பெருந்தோட்டக் கம்பனிகள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஒரு தீர்வு காணப்படாத நிலையில் இது வரையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக தோட்டத்தொழிலாளருக்கான சம்பள உயர்வையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான பயனும் இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையிலேயே கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தக் கோரிக்கை விடுத்து பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீக்குளிக்கப்போவதாகக் கூறி எரிபொருள் கலன்களுடன் சபைக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தார். அவரிடமிருந்த எரிபொருள் கலன்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதானமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அரசாங்கத்தால் 2016 ஆம் ஆண்டு முதல் தனியார்துறை ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது என தொழிலமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
தோட்டக்கம்பனிகளிடமிருந்து சம்பள உயர்வு கிடைக்காத துயரத்திலிருந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசின் மேற்படி அறிவிப்பு ஆறுதல் அளித்தது. எனவே ஓரளவு திருப்தியுடன் தோட்டத்தொழிலாளர்கள் வழமையான கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா இதுவரை வழங்கப்படவில்லையே என்று பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெருமூச்சு விடுகின்றனர். இது எப்போது கிடைக்குமென்று ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் மீண்டும் செய்து கொள்ளப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்றதொரு கேள்வியும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி ஆகியன கூட்டு ஒப்பந்தம் பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி தங்கள் பாட்டில் இருப்பதே இதற்குக் காரணமாகும். இந்தச் சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் மற்றும் சம்பள உயர்வு என்பனவற்றைப்பற்றி இப்போது பேசுவதே இல்லை.
கூட்டு ஒப்பந்தத்துக்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்ற நினைப்பில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த சங்கங்கள் தமக்குரிய பொறுப்பினை நிறைவேற்றாமல் பின்வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நம்பியிருக்கும் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.
இனிமேலும் காலங்கடத்தாமல் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன் தோட்டத்தொழிலாளருக்கு 1000 ரூபா சம்பள உயர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதேவேளை, ஏனைய தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி போன்றவையும் இவ்விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன. 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டவர்களே அதனைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொண்டிருப்பது மற்றொரு வகையில் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.
அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் மேற்படி சங்கங்களின் தலைவர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசினூடாக தோட்டக்கம்பனிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அதனை செய்வதாக தெரியவில்லை.
இவர்களை நம்பி இவர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் அப்பாவி தோட்டத்தொழிலாளர்கள்தான்! அவர்களுக்கு மீட்சியே கிடையாதா?
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...