அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நிலத்துடன் தொடர்புடைய பிராந்தியம் ஒன்றினை மலையக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க மலையக அரசியல்வாதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரிவித்தார்.
அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலமான அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளை மலையக மக்கள் எவ்வாறு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் லோரன்ஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். பன்மைக் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது. எனவே பல்லின மக்கள் அல்லது பன்மை சமூகங்கள் வாழுகின்ற இலங்கை போன்ற நாடுகளில் ஆட்சி அதிகாரங்களை உரியவாறு பகிர்ந்தளிப்பதற்கு ஒற்றையாட்சி என்பது பொருத்தமுடையதல்ல. உலகின் சில நாடுகளில் ஒற்றையாட்சி நிலவுகின்றது.
இந்நாடுகளில் அதிகாரங்களை பிரித்துக் கொடுக்கும் முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும் அதிகாரப் பகிர்வு என்று வெளிச் சொல்லப்படுகின்ற போதும் உண்மையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பிரித்துக் கொடுப்பதில் இடர்பாடுகள் உள்ளன என்பதனையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் நியாயங்களை கூறியபோதும் ஒற்றையாட்சி அதிகாரப் பகிர்விற்கு உகந்ததாக அமையாது.
எனினும் சமஷ்டி என்பது மாறுபட்ட ஒரு விடயமாகும். சமஷ்டியாட்சியின் மூலம் பிராந்தியங்களுக்கு கூடுதலான நன்மை உள்ளது. தேசிய ரீதியில் தலைவர்களை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைப்பதோடு பிராந்திய ரீதியிலும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கின்றது. அதிகாரம் என்பது ஓரிடத்தில் குவிந்து காணப்படுவதில்லை.
அதிகாரக் குவிவு ஓரிடத்தில் குவிந்து காணப்பட்டதன் விளைவுகளை நாமும் உலகமும் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். சமஷ்டியின் மூலமாக அதிகாரப் பகிர்வு சிறந்த முறையில் இடம்பெறும். சமஷ்டி ஆட்சியமைப்பின் கீழ் மத்திய அரசிடம் ஒரு தொகை அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதேவேளையில் மாகாண அல்லது பிராந்திய அரசுகளிடமும் குறிப்பிட்ட அதிகாரங்கள் காணப்படும். இது தொடர்பில் தெளிவான வலியுறுத்தல்கள் இடம்பெற்றிருக்கும்.
உலகளாவிய ரீதியில் சமஷ்டிக்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது. சுமார் 52 சதவீதமான உலக நாடுகளில் சமஷ்டி ஆட்சிமுறையே காணப்படுகின்றது என்பதனையும் நீங்கள் நன்கறிவீர்கள். உலகின் இன்னும் சில நாடுகளில் இரண்டு நாடுகள் ஒன்றாக சேர்ந்திருப்பதனைப் போன்றும் அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதனையும் கூறியாக வேண்டும். மத்திய அரசாங்கத்திற்கு சமாந்தரமாக பல அரசாங்கங்கள் இருக்கின்ற நிலைமையும் பல இடங்களில் காணப்படுகின்றது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மலையக அரசியல் தலைமைகளும் இது தொடர்பில் கூடுதலான கரிசனையுடன் செயற்படுதல் வேண்டும். மலையக மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் வரையில் இருந்து வருகின்றனர். இவர்களில் சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
பதுளை, கண்டி போன்ற இடங்களில் ஆறு இலட்சம் பேர்வரை மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் மலையக மக்களுக்குரிய அதிகாரத்தை நிலத்துடன் தொடர்புபட்ட வகையில் அம்மக்களுக்கு வழங்க முடியும். நிலத் தொடர்பு இல்லாத முறையிலும் அதிகாரத்தை வழங்கலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
ஒரு பிரதேசம் ஒரு கலாசாரம் என்ற சில வரையறைகளும் இருக்கின்றன. எனினும் இந்த வரையறைகளையும் மீறி இன்று ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது. இந்த நிலையில் மலையக மக்கள் ஏதேனும் ஒரு வகையில் தமக்கே உரிய பிராந்தியம் ஒன்றினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
இந்த நிலைமையை வெற்றிகொள்ள மலையகத் தலைமைகள் தம்மிடையே உள்ள முரண்பாடுகளையும் கருத்துபேதங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். சமுதாய நலனுக்கே இது மிகவும் வலுசேர்ப்பதாக அமையும்.
எல்லை மீள் நிர்ணயம் செய்து எல்லைகளுடன் தொடர்புடைய ஒரு பிராந்தியமே மிகப் பொருத்தமாகும் என்று நான் கருதுகின்றேன் மலையக தலைமைகள் இது தொடர்பில் அரசுக்கு உரிய அந்தஸ்தை வழங்குதல் வேண்டும் என்றார்.
நன்றி veerakesari - கொத்மலை நிருபர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...