Headlines News :
முகப்பு » , , , » வதந்திகளும், சந்தேகங்களும் (1915 கண்டி கலகம் –19) - என்.சரவணன்

வதந்திகளும், சந்தேகங்களும் (1915 கண்டி கலகம் –19) - என்.சரவணன்


கண்டி, கம்பளை பிரதேசங்களில் பதட்ட நிலை மெதுவாக வலுக்கத் தொடங்கின. பௌத்த மத ஊர்வலங்கள் மட்டுமன்றி இந்துத் திருவிழாக்களும் இந்த சர்ச்சைக்குள் சிக்கின. அவை வழக்குகளாகவும் பதிவாகின. குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அப்படிப்பட்ட ஒரு வழக்கில் (வழக்கு இலக்கம் 3649) நீதிபதி வூட்ஹவுஸ் இப்படி தெரிவிக்கிறார்.

இந்த சிக்கலின் போது போலீசார் பிரச்சினையை சுலபமாக பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால் இது முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடரும் நிலைக்கு இட்டுச் செல்லும் தேவை அவர்களுக்கு இருந்திருக்கிறது. இதுவே திட்டமிடப்பட்ட கலவரத்துக்கு காரணமாகியிருக்கிறது. பௌத்தர்கள் தரப்பில் சரச்ச்ச்சையை தவிர்ப்பதற்கான பிரக்ஞை இருந்திருக்கிற போதும், கரையோர முஸ்லிம்களிடம் (ஹம்பயா) அந்த நேர்மை இருக்கவில்லை. பௌத்தர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் பள்ளிவாசல் அருகில் திரட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த கட்டடம் ஒரு சாதாரண முஸ்லிம் பாடசாலை என்றும் பள்ளிவாசல் இல்லை என்றும் யதார்த்தமாக நம்பியே அந்த வழியில் சாதாரணமாக பெரஹர சென்றார்கள். அவர்கள் ஒரு கலவரத்துக்கு தயார் நிலையில் இருக்கவில்லை. முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்க குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் தமது தாள வாத்திய இசையையும் நிறுத்திக் கடந்து சென்று கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் தரப்பில் இதனை குழப்புவதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். எனவே பெரஹரவை நோக்கி கல் எறிந்தனர். சிலரைத் தாக்கினார்கள். பௌத்தர்கள் சிதறி ஓடினார்கள்.”
இந்த வழக்கின் போது நீதிபதி இரு தரப்பையும் புரிந்துணர்வை எட்டச் செய்வதற்கு பிரயத்தனப்பட்டிருக்கிறார். 

கண்டியைச் சேர்ந்த கங்காணி பெருமாள் தம்மை சேர்ந்தவர்களுக்கு தோற்று நோய் வரும் சந்தர்ப்பங்களில் தமது சாமிக்கு வேண்டுதல் நிமித்தம் சாமியை ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளார். இது அவர்களது வழக்கம். புனித செபஸ்தியனை வேண்டி கத்தோலிக்கர்களும் இப்படி ஊர்வலம் செல்வது வழக்கம். இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இந்த வழக்கம் அப்போது இருந்தது. பெருமாள் தமக்கு நேர்ந்ததை இப்படி விளக்கியுள்ளார். தமது மத சடங்குக்குரிய ஊர்வலத்தை நடத்தவென பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ளது. மே 2, 3 ஆகிய தினங்களில் எந்த சிக்கலுமின்றி ஊர்வலம் போக முடிந்திருக்கிறது. ஆனால் 4 ஆம் திகதி இந்த காசல் ஹில் (Castle hill street) வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை நெருங்கும்போது (அடுத்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் வெசாக் கலவரம் தொடங்கியது இந்த பள்ளிவாசலில் இருந்து தான்) காவடி தூக்கிச் சென்றவர்களை அங்கிருந்த கரையோர முஸ்லிம்களும், ஆப்கான் முஸ்லிம்களும் தாக்கியிருந்தனர். இந்த விபரங்களை ஆர்மண்ட் டி சூசா விரிவாக விளக்குகிறார்.

அந்த ஊர்வலம் வேகமாக வேறு பாதைக்கு திசை திருப்பிக் கொண்டு போன போது அங்கிருந்த இன்னொரு பள்ளிவாசலின் அருகில் இதே முஸ்லிம்கள் அங்கும் சென்று தாக்கியிருந்ததை கங்காணி பெருமாள்  பொலிஸாரிடமும் மாவட்ட செயலாளரிடமும் முறையிட்டிருக்கிறார். ஆனால் இந்த முறைப்பாடு குறித்து எந்தவித விசாரணையும் எடுக்கப்பட்டதில்லை என்று தெரியவருகிறது.

இது போன்றதொரு சம்பவம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திலிங்கம் பொன்னையா என்பவருக்கும் நேர்ந்துள்ளது. கண்டியில் வசிக்கும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்களால் வருடம் தோறும் ஒழுங்கு செய்யப்படும் திருவிழாவின் ஏற்பாட்டாளர் அவர். அந்த திருவிழாவும் காசல் ஹில் வீதியில் உள்ள முருகன் கோவிலில் நடத்தப்பட்டு வந்தது. பல வருடங்களாக தாள வாத்தியங்களோடு நடத்தப்படும் அந்த திருவிழா ஒரு போதும் முஸ்லிம்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதில்லை. ஆனால் 1914, இல் பெறப்பட்ட திருவிழா அனுமதிப்பத்திரத்திற்கும் 1915 கும் இடையில் வித்தியாசம் காணப்பட்டிருக்கிறது. 1914இல் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் சகல மத வழிபாட்டு ஸ்தலங்களிளிருந்தும் 100 யார் தொலைவுக்கு எந்தவித தாள, இசை வாத்தியங்களும் இசைக்கப்படக்கூடாது என்று இருந்தது. ஆனால் 1915ஆம் ஆண்டு அனுமதியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்து 100 யார் தூரம் என்று சிகப்பு மையில் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது. ஏன் ஏனைய மத ஸ்தலங்கள் விலக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி  இருந்தது.

இந்த வழக்குகளில் ஈடுபட்ட வழக்கறிஞர் டீ.ஈ.வீரசூரிய இப்படி தெரிவிக்கிறார். “பணபலம்பொருந்திய முஸ்லிம் வியாபாரிகள் (ஹம்ப) போலீசாரை தமது கைக்குள் போட்டுகொண்டு இந்த பெரஹரக்களுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சிங்களவர்கள் மத்தியில் உள்ளது.”

வெசாக்
இதே கண்டியில் சரியாக நூறு வருடங்களுக்கு முன்னர் 1815 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் பௌத்தத்தை பாதுகாப்பதற்கும் தமது மத திருவிழாக்களை இடையூறின்றி நடத்துவது குறித்தும் உடன்பாடு காணப்பட்டிருந்தது. அதுபோல 1883இல் கொட்டாஞ்சேனையில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து  கேணல் ஒல்கொட் இங்கிலாந்து சென்று பெற்றுவந்த உடன்பாடுகளின்படி பௌத்தர்கள் புத்தர் பிறந்த நாளான வெசாக் பௌர்ணமி தினத்தை பொது விடுமுறையாக்குவதாகவும், பௌர்ணமி பெரஹரக்கள் நடத்துவதற்கும் வழிசமைக்கப்பட்டது.

பௌத்தர்களின் பெரஹரக்கள் அப்போதெல்லாம் நள்ளிரவில் தொடங்கி பெருவெளிச்சம் தரும் விளக்குகள் ஏந்தி, அலங்காரமான மாட்டு வண்டிகளில் பக்தி கீதம் பாடும் ஆண்களையும் பெண்களையும் தாங்கிய அணிவகுப்பு, புத்தரின் வாழ்க்கை சம்பவங்களை எடுத்தியம்பும் அணிகளும் செல்வார்கள். வெசாக் பந்தல்கள், உள்ளே மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்ட வெசாக் கூடுகள் ஆங்காங்கு கட்டப்பட்டும் இருக்கும். ஊர்வலம் போகும் பாதைகளில் அழகாக சோடிக்கப்பட்டிருக்கும். அந்த ஊர்வலம் தரித்து நிற்கும் இடங்களில் பக்தர்கள் ஊர்வலத்தில் செல்பவர்களை உபசரிப்பார்கள். இது ஒரு சம்பிரதாயமாக பல ஆண்டுகாலமாக தொடர்ந்துவருகிறது. இன்று போலன்றி அப்போது வெசாக் தினத்தன்று நாடு முழுவதுமிருந்தும் கண்டியில் வெஹர விகாரை பெரஹரவுக்கு பெருமளவானோர் இரயிலில் வந்து குழுமுவது வழக்கம். பௌத்தர்களுக்கு புத்தரின் ஜனன தினமான இந்த நாளில் கொண்டாடப்படும் வெசாக் திருவிழா மிகவும் முக்கியமானது. இந்த நாட்களில் “தன்சல்” எனப்படும் இலவச உணவு, நீராகாரம், வெற்றிலை போன்றவற்றை வழங்கும் மரபும் நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது.

அப்படி பெரிதாக “தன்சல்” வழங்கும் அமைப்பு “கண்டி பௌத்த சங்கம்”. அதன் உப தலைவராக இருந்த டப்ளியு பாவுலு பெர்னாண்டோ  பின்னர் கொடுத்த வாக்குமூலமும் பதிவாகியுள்ளது. 

வருடாந்தம் வெசாக் தினத்தின் போது “தன்சல்” வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூடாரம் ஒன்றை 1915 மே மாதம் ஒழுங்கமைப்பதற்கான அனுமதி கோரி கண்டி நகர சபையிடம் விண்ணப்பித்திருக்கிறார். வழமைபோல இதன் நோக்கம் அனைத்தும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முதற் தடவையாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு மாநகரசபை அளித்த விளக்கத்தின் படி அந்த பகுதியில் முஸ்லிம்கள் வசிப்பதாகவும், அவர்கள் அங்கு கடைகள் நடத்திவருவதால் இந்த தன்சல் முறையால் அவர்களின் கடைகளில் உணவு கொள்வனவு செய்ய மாட்டார்கள் என்றும் அவர்களின் வியாபாரம் பாதிக்கும் என்பதால் இந்த அனுமதி இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நகர சபையின் இந்த அனுமதி இரத்து விவகாரமானது முஸ்லிம்களுக்கு பக்கசார்பாக நடந்துகொள்கிறார்கள் அவர்கள் என்கிற குற்றசாட்டு பௌத்தர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதேவேளை பாவுலு பெர்னாண்டோ மீண்டும் அந்த இரத்தை மீளபெற்று “தன்சல்” கூடாரத்தை அனுமதிக்குமாறு கோரி எழுதிய கடிதத்தில் அவ்வாறு அந்த கடைகளுக்கு நேரும் நஷ்டத்தை தாம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் “தன்சல்” வழங்குவதால் குழுமும் கூட்டத்தினரால் நன்மை அடையப்போவது முஸ்லிம் கடைகள் தான் என்றும் அங்கு வரும் பலரும் பலவற்றை கொள்வனவு செய்ய வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியில் அப்படி நட்டம் ஏற்பட்டால் நட்டஈடு வழங்குவதற்காக வைப்புப் பணமாக 50 ரூபாவை பெற்றுக்கொண்டு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1915 ஆம் ஆண்டு கண்டி பெரஹரவுக்கு கண்டி பொலிசாரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் “சர்வ மத ஸ்தலங்களிலிருந்தும் 100 யார் தூரத்திற்கு எந்த வித இசை ஒலியெழுப்புவதும் நிறுத்தப்படவேண்டும்” என்று மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. கண்டி போன்ற பல்லினத்தவர்கள் வாழும் ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு மத ஸ்தலத்தை அடிக்கடி கடந்து போய்க்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பௌத்த பெரஹரவை இப்படி அதிகப்படியான நிசப்தம் சாத்தியமற்றது, அர்த்தமற்றது என்று பௌத்தர்கள் தரப்பில் அதிருப்தியும், வெறுப்புணர்வும் அதிகரித்தது.

அதே அனுமதிப்பத்திரத்தில் முதல் பந்தியில் “சகல மத ஸ்தலங்களிளிருந்தும் 100 யார் தூரம்” என்று குறிப்பிட்டிருந்தும் கூட அதன் பின் வரும் பந்தியொன்றில் “முஸ்லிம் பள்ளிவாசலிலிருந்து 100 யார் தூரம்” என்று குறிப்பட்டதை பாரபட்சமான வசனம் என்று பார்க்கப்பட்டது. பெரஹர செல்லும் பாதையில் இருக்கும் கத்தோலிக்க, இந்து மத ஸ்தலங்கள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் “முஸ்லிம்” என்று பிரேத்தியமாக குறிப்பிட்டதன் உள்நோக்கம் என்ன என்று சந்தேகமுற்றனர். ஏற்கெனவே கம்பளையிலிருந்து தொடர்ந்த சர்ச்சைகளே இப்படி “முஸ்லிம்” என்று அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்டதற்கு காரணமாக இருக்கலாம்.

போலீசார், நகர சபை, நீதிமன்ற தீர்ப்புகள் என பல மட்டங்களிலும் தமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் அதிருப்தியும் சந்தேகமுமுற்றனர் பௌத்தர்கள். வெசாக் தினத்தன்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருப்பதாக அவர்கள் சந்தேகமுற்றனர். அதேவேளை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஆங்கில, கிறிஸ்தவ காலனித்துவ சக்திகளுக்கு எதிரான மனநிலையை நாடெங்கிலும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த புதிய நிலைமைகள் ஏனைய மதத்தவர்களுக்கு எதிராகவும் திரும்பிக்கொண்டிருந்தது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் முஸ்லிம் எதிர்ப்புணர்ச்சியையும் கட்டியெழுப்பிகொண்டிருந்தது.

ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடுமென்று முன்னெச்சரிக்கையாக காசல் ஹில் வீதியில் பொலிஸ் பந்தோபஸ்து வழங்கி எதுவும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுமாறு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தப்பட்டிருகிறது. அதன் பிரகாரம் கண்டி பொலிஸ் அதிகாரி குரே பாதுகாப்பளிப்பதாக உறுதிமொழியளித்துள்ளார். இப்படிப்பட்ட நிலை அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் முஸ்லிம்கள் ஆவேசத்துடனும், சண்டித்தனதுடனும் திரிகிறார்கள் என்று வதந்தி பரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற கதைகள் பரவின.

தொடரும்..


இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates