பதுளை ஊவாக்கல்லூரியில் க.பொ.த. உயர்வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப்பச்சை’ என்ற நாவலுக்கு ‘சிந்தாமணி’ ஞாயிறு வார இதழில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருந்தேன். அந்நாவலின் இயற்பண்புவாதப் போக்கினை அக்கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருந்ததாக ஒரு மங்கலான நினைவு. அது 1968 ஆம் ஆண்டாக இருக்கவேண்டும்.
எதேச்சையாக எனது கட்டுரை வெளிவந்து, ஓரிரு மாதங்களின பின் கோகிலம் சுப்பையா இந்தியாவிலிருந்து பதுளைக்கு வந்திருந்தது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. எனது ‘சிந்தாமணிக் கட்டுரையைப் பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தார். தனது ‘தூரத்துப்பச்சை’ நாவல் பற்றி வெளிவந்த முதல் விமர்சனக் கட்டுரை அதுதான் என்று அவர் கூறியது என் நினைவில் இருக்கிறது.
தொழிலாளர் துயர்
“தூரத்துப்பச்சை'' நாவலின் பிரதியைத் தமிழ்ப் புத்தகாலய கண. முத்தையாவிடம் காட்டினேன். பிரசுரிக்கலாம் என்றார். ஆனால், அதிகமாக விற்பனை ஆகாது என்றார். சிதம்பர ரகுநாதன் புத்தகத்தைப் படித்து, பிரசுரிக்குமுன் நனவை செய்தார். அந்த சமயத்தில் தோட்டத்தொழிலாளிகள் ஏழைகளாகத் துன்பப்பட்டார்கள். அவர்கள் சரிதையை எழுதவோ, சிந்திக்கவோ யாரும் நினைக்கவில்லை. சங்கத்தலைவர்கள் அவர்களின் புகழைத்தான் நினைத்தார்கள். தொழிலாளியின் துயரங்களை நினைக்க அவகாசமில்லை. நான் ஒன்றும் மகத்தான சேவை செய்யவில்லை.
ஆனால், அவர்களைப் பற்றியும் அவர்கள் எந்த நிலையில் இலங்கை வந்தார்கள் என்பது பற்றியும் உலகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. நிறைவேற்றினேன்” என்று கோகிலம் சுப்பையா அமெரிக்காவிலிருந்து 15.11. 1995 திகதியிட்டு எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறித்திருக்கிறார்.
தமிழ்ப்புத்தகாலய அதிபர் கண. முத்தையாவின் குடும்பத்துடன் கோகிலம் சுப்பையா நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
“தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண. முத்தையா மறைந்துவிட்டார். தற்போது அவரது மகளும் மருமகனுமே அதனைக் கொண்டு நடத்துகின்றனர். குழந்தைகளாக இருந்த காலத்திலிருந்தே அவர்களை நான் நன்கறிவேன். அவர்கள் எனது வீட்டில்தான் விளையாடித் திரிவார்கள். பையன் பிரபல எழுத்தாளர் அகிலனின் மகன். இரண்டு குடும்பங்களுமே எனக்கு மிகவும் நெருக்கமானவை” என்று 30.5.2002 ஆம் திகதியன்று எனக்கு அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சலில் கோகிலம் சுப்பையா கண.முத்தையா வின் குடும்பத்துடன் தான் கொண்டிருந்த நெருங்கிய நட்புணர்வினை வலியுறுத்துகிறார்.
கண. முத்தையா
கண. முத்தையா (1913 – 1997) தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் இலட்சியபூர்வமாக மேற்கொண்ட பணிகள் அக்காலகட்டத்தில் யாரும் செய்யத் துணியாத முயற்சிகளாகும். சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் முக்கிய பங்கு கொண்டு, பர்மாவில் யுத்தக்கைதியாக ஓராண்டு சிறைவாசம் அனுபவித்து, பின் விடுதலை பெற்று இந்தியா திரும்பியவர். தான் சிறையில் இருந்தபோது, ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘பொதுவுடiமைதான் என்ன?’ என்ற நூல்களை ஹிந்தியிலிருந்து மொழிபெயர்த்து, அந்த நூல்களைப் பிரசுரிப்பதற்காகவே தமிழ்ப்புத்தகாலயத்தைத் தொடங்கியவர். மாஓ சேதுங், மார்க்ஸிம் கார்க்கி, ஜுலிஸ் பூசிக், ஸ்டாலின் ஆகியோரின் நூல்களை அவர் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நாளில் பதிப்பித்திருக்கிறார் என்பது பிரமிப்பை ஊட்டுகிறது. எஸ்.வையாபுரிப்பிள்ளை, புதுமைப்பித்தன், சிதம்பர ரகுநாதன், கா.அப்பாத்துரை, கு.அழகிரிசாமி, க.நா.சு என்று அவர் பிரசுரித்த எழுத்தாளர்களின் பட்டியல் மிக நீண்டது.
கண. முத்தையா மொழிபெயர்த்த ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ நூலை அக்காலகட்டத்தில் வாசித்திராத இலக்கிய ஆர்வலர்கள் இல்லை என்றே கூறலாம்.
அந்நூல் வெளியாகி, இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட பதிப்புகளை அது பெற்றுள்ளபோதிலும் தமிழ்ப்புத்தக உலகில் அந்நூலுக்குரிய கவர்ச்சி இன்றும் மங்கிப் போய்விடவில்லை.
கண. முத்தையா போன்ற தமிழ்ப்பதிப்புலக ஆளுமைகளுடன் கோகிலம் சுப்பையா கொண்டிருந்த பரிச்சயம் அவரின் நாவலைத் தரமான விதத்தில் பதிப்பிடப் பெரிதும் துணைபுரிந்திருக்கிறது.
1964ஆம் ஆண்டில் வெளியாகி, 38 ஆண்டுகளின் பின், 2002 ஆம் ஆண்டில் ‘தூரத்துப் பச்சை’ தமிழகத்தில் மறுபிரசுரமானபோது, அது தமிழ்ப்புத்தகாலய வெளியீடாகவே வந்தமைக்கு கண. முத்தையாவின் குடும்பத்துடன் கோகிலம் சுப்பையா இறுதிவரை கொண்டிருந்த நீடித்த நல்லுறவே காரணமாகும்.
கலை இலக்கியத் துறையிலும் சமூகரீதியிலும் கோகிலம் சுப்பையா பெரும் ஆளுமைகளுடன் காத்திரமான உறவைப்பேணி வந்திருக்கிறார்.
செட்டூரின் முன்னுரை
‘தூரத்துப்பச்சை’ நாவலுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரதம காரியதரிசி . எஸ்.கே. செட்டூர் I.C.S முன்னுரை வழங்கியிருப்பது விசேஷ அம்சமாகும்.
“இந்தியாவின் நிலையைப் பற்றி இந்திய ஆசிரியரே எழுதிய ஒரு நாவலை அபூர்வமாகவே காணமுடிகிறது. இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை போன்ற ஒரு சிக்கல் நிறைந்த கஷ்டமான விஷயத்தைப் பற்றிய நாவலைக் காண்பதோ இன்னும் அரிதாக இருக்கிறது. திருமதி கோகிலம் சுப்பையா இந்தக் கஷ்டமான பணியை மேற்கொண்டு அதில் தோட்டங்களின் நிலையைப் பற்றிய தம்முடைய நெருங்கிய பரிச்சயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், இந்தப்புத்தகத்தின் சிறப்பு, இது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது என்பதைப் பொறுத்ததல்ல. இந்தியாவிலிருந்து சென்ற தோட்டத் தொழிலாளர்கள், அவர்களைச்சார்ந்து வாழ்கின்றவர்கள் ஆகியோருடைய எதிர்காலம் இப்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்ற இன்றைய நிலையின் காரணமாக இந்தப் புத்தகத்துக்குச் சந்தர்ப்பத்தைப் பொறுத்த ஒரு மதிப்பு இருக்கிறது என்பதிலும் இதன் சிறப்பு அடங்கிவிடவில்லை.
வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது என்ற பலத்திலேயே இந்தப்புத்தகம் நிலைத்து நிற்க முடியும். பாத்திரங்கள் மாமூலான பாணியில் அமையாமல் ரத்தமும் சதையும் கொண்டவையாக விளங்குகின்றன. இதன் கதாநாயகி தேயிலைத் தோட்டத்தில், வாழ்வின் மாறுதல்களையெல்லாம் மிகுந்த பொறுமையோடு தாங்கிக்கொள்ளும் ஒரு தமிழ்ப் பெண்மணி. ஐரோப்பியத் துரைமாரின் அட்டகாசங்கள் இந்த நூலில் பிரமாதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் பெண் தொழிலாளர்களைக் கங்காணி தன்னலத்துக்கு இரையாக்குவதும் நுட்பமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது தேயிலைத் தோட்டத்தின் மண்வாடையே வீசுகிறது. இதை வெற்றிகரமான முதல் நாவல் என்று பாராட்டுகின்றேன். இலங்கையில் தேயிலைச் செடிப்புதர்களின் மறைவில் குறைந்த சம்பளத்துக்குக் கூட்டம் கூட்டமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தொழிலாளிகளைக் கொண்ட எந்த ஒரு தோட்டத்திலுமே – என்ன நடக்கிறது என்பதை வாசகர்களுக்கு இப்புத்தகம் தெரியப்படுத்தும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்” என்று எஸ்.கே.செட்டூர் ஆங்கிலத்தில் எழுதிய தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
செட்டூரின் எழுத்துக்கள்
தமிழக அரசின் நிர்வாகத்துறையில் அதியுயர் பதவி வகித்த எஸ்.கே. செட்டூர் சிறந்த ஆங்கில எழுத்தாளரும் கவியுமாவார். சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியில் பயின்று, பின் ஒக்ஸ்போர்டிலும் கல்வியைத் தொடர்ந்து, 1929 இல் I.C.S. பரீட்சையில் தேறி, இந்திய நிர்வாகத்துறைக்குள் நுழைந்தவர் எஸ்.கே. செட்டூர். தனது நிர்வாக சேவையில் மேற்கொண்ட பயணங்களின்போது அவதானித்த நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு எஸ்.கே.செட்டூர் எழுதிய சிறுகதைகள் இந்தோ – ஆங்கிலச் சிறுகதை வரலாற்றில் சிறப்பிடம் வகிக்கிறது. கிராமத் தகராறுகள், ஊர்ச்சண்டைகள், பேய்கள், பாம்புகள், அபசகுனங்கள் போன்றன இவரது கதைகளின் ஆதாரசுருதியாக அமைந்துள்ளன.
Muffled Drums and other stories(1927), The cobras of Dhermashevi and other stories (1937), The spell of Aphrodite and other stories (1957), Mango seed and other stories (1974) ஆகிய இவரின் நான்கு சிறுகதைத் தொகுதிகளில் முதல் மூன்று தொகுப்புக்களும் அவரது காலத்திலேயே வெளியாகியிருந்தன. அரசியலிலும் நிர்வாகத்திலும் பிரபல்யம் மிகுந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட எஸ்.கே.செட்டூர் ஒரு மலையாளி ஆவார். இந்திய அரசின் பிரதிநிதியாக சிங்கப்பூரில் 1945 – 1947 காலப்பகுதியில் பணியாற்றியபோது, மலேயாவில் இந்தியரின் நிலைமை பற்றிய அறிவதற்காக நேருவின் சிங்கப்பூர் விஜயத்தை ஒழுங்கு செய்தவர் எஸ்.கே. செட்டூர். மவுண்பேட்டன் பிரபுவை நேரு முதல்தடவையாகச் சந்தித்தது சிங்கப்பூரில்தான். இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பின் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர் செட்டூர்.
பிரசுரம்2
நினைவுக் குறிப்புகள்
தனது நிர்வாக சேவை அனுபவங்களைக் குறித்து அவர் எழுதிய நினைவுக் குறிப்புகள் Malayan Adventure, The steel Frame and I, The Crystal years ஆகிய மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. ‘இந்தியாவில் எங்கள் அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் உருக்குச் சட்டகமாக ((Steel Frame) ஐ.சி.எஸ். திகழ்கிறது’ என்று லோய்ட் ஜோர்ஜ் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். தனது ஐ.சி.எஸ் நிர்வாக அனுபவங்களை முன்வைத்து, The steel Frame and 1 என்ற தலைப்பில், எஸ்.கே. செட்டூர் எழுதிய நூலை அக்காலத்தில் வாசிக்காத இந்திய உயர் அதிகாரிகள் இல்லை என்றே கூறலாம். The Golden Stair என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுதி அவரது எழுத்தாற்றலுக்கு சிறந்த சாட்சியமாகும்.
கடல் கடந்த இந்தியர்கள் மலேயாவில் படும் அவலங்களையும், மலேயப் பிரஜாவுரிமைச் சட்டம் என்பது இந்தியர்களை எவ்வாறு பாதித்தது என்பது பற்றியும் இந்தியாவில் அவர்களது மறுவாழ்வுக்கு எவ்வாறு வழி சமைக்கலாம் என்பது குறித்தும் நேருவுக்கு ஆலோசனைகள் வழங்கிய செட்டூர், இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் இந்தியத் தமிழர்கள் படும் அவலங்களைப்பற்றி கோகிலம் சுப்பையா எழுதிய ‘தூரத்துப்பச்சை’ நாவலில் இயல்பாகவே ஆர்வம் கொண்டிருக்கவேண்டும்.
இலங்கையில் வெளியான ‘தூரத்துப்பச்சை’யின் இரண்டாவது மறுபிரசுரத்திலும், கோகிலம் சுப்பையாவின் மொழிபெயர்ப்பில் Orient Black Swan வெளியீடாக வெளிவந்த Mirage என்ற நூலிலும் எஸ்.கே. செட்டூரின் முன்னுரை தவிர்க்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானதாகும்.
எஸ்.கே. செட்டூரின் முன்னுரையின் முக்கியத்துவத்தை வெளியீட்டாளர்கள் மட்டுமல்ல, இந்நூல் குறித்து எழுதிய விமர்சகர்களுமே கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
எனினும் எஸ்.கே. செட்டூரின் பிரிட்டிஷ் ராஜ விசுவாசத்தையும் மேட்டுக்குடி மனோபாவத்தையும் பிரதிபலிக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடுவது இங்கு பொருந்தும்.
காமராஜருக்குச் சிறை
1932 இல் எஸ்.கே.செட்டூர் சிவகாசியில் Joint 1 class Magistrate ஆக இருந்தபோது, காமராஜர் காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டு, ராஜத்துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருந்தார். காமராஜர் மீதான வழக்கு செட்டூரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அவர் காமராஜருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை வழங்கிய நிகழ்வை பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் பி. கந்தசாமி தனது The political career of K.Kamaraj என்ற நூலில் பதிவு செய்கிறார். 1964 இல் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோதுதான், தமிழக அரசின் அதியுயர் பதவியான பிரதம காரியதரிசிப் பதவியிலிருந்து எஸ்.கே. செட்டூர் ஓய்வு பெற்றார்.
செட்டூரின் மேட்டுக்குடி மனோபாவத்திற்கு மற்றுமொரு முக்கிய நிகழ்வையும் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
எஸ்.கே. செட்டூர் 1939 இல் உதவிக்கலெக்டராக இருந்தபோது, பாலக்காட்டில் நடைபெற்ற தியாகராஜர் இசைக்கச்சேரிக்கு தனது மனைவியுடனும் மற்றுமொரு நண்பருடனும் சென்றிருக்கிறார். பெருந்திரளான மக்கள் இந்த இசைக்கச்சேரியைக் கண்டு மகிழத்திரண்டிருந்தனர். இசைக்கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போது, செட்டூரும் அவரது நண்பரும் சிகரெட் புகைத்திருக்கிறார்கள்.
இதை அவதானித்த ஒரு பையன் அவர்களைப் பார்த்துக் கையெடுத்துக்கும்பிட்டு, ‘இங்குபுகைபிடிக்க வேண்டாம்’ என்று கேட்டிருக்கிறான். அந்த நண்பர் உடனே சிகரெட்டை அணைத்துவிட்டார். ஆனால், செட்டூர் தொடர்ந்தும் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்திருக்கிறார். கூட்டத்தில் இருந்தவர்களும் இந்தச் செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பின் செட்டூர் தனது மனைவி, மற்றும் நண்பருடன் கச்சேரியை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், போவதற்குமுன் அந்தப்பையன் தன்னிடம் வந்து மன்னிப்புக்கேடகவேண்டும் என்று கோரியிருக்கிறார். ஆனால், அந்தப் பையன் சப் கலெக்டரை வந்து சந்திக்க மறுத்துவிட்டான்.
செட்டூரின் கட்டளை
சப் கலெக்டர் கச்சேரியிலிருந்து இடையில் வெளியேறிச்சென்றது ஒரு அபசகுனம் என்று கருதி, மறுநாள் காலை சப் கலெக்டரிடம் முதல்நாள் நடந்த நிகழ்ச்சிக்கு மன்னிப்புக் கேட்கச்சென்ற இசை வித்வான்களால் சப் கலெக்டர் எஸ்.கே.செட்டூரைச் சந்தித்துக்கொள்ளமுடியவில்லை. ஆனால், அந்த இசைக்கச்சேரி நடந்த மடத்திற்கு முன்வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் வீதிக்குக் குறுக்கே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று அந்தப் பந்தலை அன்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக அகற்றவேண்டும் என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த உத்தரவை நீக்குமாறு சப் கலெக்டரிடம் விடப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. வேறு மண்டப ஏற்பாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதலமைச்சராகவிருந்த ராஜாஜியிடம் இந்நிகழ்ச்சிபற்றிய முறையீடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ராஜாஜிஅதற்கு என்ன பதிலளித்தார் என்பதுபற்றிய எந்தப்பதிவும் இல்லை. ஏற்கெனவே அனுமதிபெற்று இசைவிழாவிற்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்ததாயினும், பொது வீதியில் போக்குவரத்திற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பந்தலை அமைத்ததற்காக விழா ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸ் வழக்கு பதிவானது.
‘ஹிந்து’ ஆங்கில நாளிதழின் நூற்றாண்டுவிழாச் சிறப்பு மலரில், இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
எஸ். கே. சேட்டூரின் முன்னுரையுடன் தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக ‘தூரத்துப்பச்சை’ வெளிவந்தபோதும், இலங்கையில் அது விரிந்தவாசிப்பைப் பெற்றிருக்கவில்லை.
இலங்கையில் ‘தூரத்துப்பச்சை’ வாசகர் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டமைக்கு வீரகேசரியின் 2ஆவது மறுபதிப்பு துணைபுரிந்தது.
பிரசுரம்3
எச்.எம்.பி. அறிக்கை
1971 இல் தென்னிந்திய சஞ்சிகைகள், நூல்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு விதித்த கட்டுப்பாடுகள் நூல்வெளியீடுகளுக்கான உள்ளுர்த்தேவையை ஏற்படுத்தியிருந்தது. தென்னகச்சஞ்சிகைகளின் இறக்குமதி தொடர்பாக இவ்வாண்டில் எச்.எம்.பி. மொஹிதீன் வெளியிட்ட அறிக்கை 52 தென்னிந்தியப்பத்திரிகைகளை முற்றாகத்தடைசெய்யவேண்டும் என்று சிபார்சு செய்திருந்தது. ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள், மஞ்சரி, அம்புலிமாமா, கலைக்கதிர், தீபம், தாமரை, கல்கண்டு, அமுதசுரபி, வானொலி, திட்டம் ஆகிய 12 பத்திரிகைகளின் இறக்குமதியை அவற்றின் இறக்குமதிப்பிரதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதின் மூலம் ஒருவிதக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரவேண்டும் என்பதுவும் எச்.எம்.பி.மொஹிதீனின் அறிக்கையின் மற்றுமொரு சிபார்சு ஆகும்.
தென்னியச்சஞ்சிகைகள், நூல்களின் இறக்குமதி கட்டுபடுத்தப்பட்ட நிலையில், ஈழத்து வாசகர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 1973 இல் வீரகேசரியின் முதல் நூல்பிரசுரம் வெளியானது. முதல் ஐந்து ஆண்டு காலத்திலேயே ஏறத்தாழ 30 ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிட்டு, நூல் வெளியீட்டில் விரகேசரி சாதனை புரிந்தது. ஓராண்டில் பத்து நூல்களை வெளியிடுமளவிற்கு, நூல் வெளியீடுகள் வாசகர்களின் கவனிப்பிற்குள்ளாயிருந்தன. பிரபலமான எழுத்தாளர்களின் நாவல்களை மட்டுமல்ல, புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு இடம் தந்தமையும், இலங்கையின் பல்வேறுபிரதேசங்கள் சார்ந்து எழுத்துகளுக்கு முதன்மையளித்தமையும் வீரகேசரியின் நூல் வெளியீட்டின் முக்கிய அம்சங்களாகும்.
வீரகேசரியின் மறுபிரசுரம்
1971 இல் எஸ்.எம். கார்மேகம், கோவிந்தராஜ், எச்.எச்.விக்ரமசிங்க ஆகியோரின் முயற்சியில் வெளியான மலையகத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கதைக்கனிகள்’ நூலினை வீரகேசரியின் முதல் பிரசுரமாக நாம் கொள்ளலாம். ஆனால், வீரகேசரி ஸ்தாபனத்தின் நூல்பிரசுரமுயற்சிகள், நிறுவனத்தின் கொள்கை அடிப்படையில் 1972 இல்தான் ஆரம்பமாகிறது. வீரகேசரியின் நூல்வெளியீட்டு வரிசையில் 10ஆவது வெளியீடாக ‘தூரத்துப்பச்சை’ 1973 இல் மறுபிரசுரம் பெற்றது.
எஸ் பாலச்சந்திரனின் சாதனை
வீரகேசரி வெளியீடுகளாக நூற்றுக்கணக்கான நூல்களைப்பிரசுரித்ததில் வீரகேசரியின் நுர்ல்வெளியீட்டிற்குப் பொறுப்பாக இருந்த எஸ்.பாலச்சந்திரனின் பங்கு கணிசமானதாகும். அமைதியும் நிதானமும் நிர்வாகத்திறனும் கொண்ட எஸ்.பாலச்சந்திரன் வீரகேசரியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஹாட்லிக் கல்லூரியில் பயின்று, பின் கொழும்பு சென்.ஜோசப்ஸ் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற பட்டதாரியாவார்.
லேக்ஹவுஸில் எஸ்மண்ட விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் ஆய்வாளராகச் சிலகாலம் பணியாற்றியபின், வீரகேசரியில் இணைந்த பாலச்சந்திரன் 40 ஆண்டுகாலம் வீரகேசரியில் பணியாற்றிய காலம் சிறப்புமிக்க காலப்பகுதியாகும்.
‘தூரத்துப்பச்சை’ நாவலின் மறுபிரசுரம் குறித்து. கோகிலம் சுப்பையாவிடம் அனுமதிபெற்று, அதனை திரு. பாலச்சந்திரனுக்குத் தெரிவித்து, அவருடன் பல தடவைகள் பேசியிருக்கிறேன். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை அறிஞர் I.D.S வீரவர்த்தனவின் சமகாலத்தவர் . பாலச்சந்திரன். எங்கள் உரையாடல் I.D.S வீரவர்த்தனவை நோக்கி நகர்ந்தபோது, அவர்மீது பாலச்சந்திரன் கொண்டிருந்த பெரும் மரியாதையை நான் அவதானித்தேன்.
வீரகேசரிப் பிரசுரங்கள்
வீரகேசரியின் நாவல் பிரசுரங்கள் 4000 பிரதிகள்வரை அச்சிடப்பட்டு, வாசகர்கள் விலைகொடுத்து வாங்கக்கூடிய அளவில் மலிவுப்பதிப்பாக வெளியிடப்பட்டன. சாதாரண நியூஸ்பிரிண்ட் தாளில், சட்டைப்பெட்டிகளுக்கு ((Shirt box)) ப்பாவிக்கப்படும் அட்டைகளை முன் அட்டைக்குப்பாவித்து இந்நாவல்கள் வெளியாகின. பல வாசகர்கள் வீரகேசரி நாவல் வெளியீடுகளைத் தொடர்ச்சியாக வாங்கி, சேகரித்தும் வைத்திருந்தனர். அ. பாலமனோகரன் எழுதிய சிறப்புமிக்க நாவலான ‘நிலக்கிளி’ நாவலின் விலை 2 ரூபாய் 25 சதமாக இருந்தது. செங்கைஆழியான் எழுதிய ‘வாடைக்காற்று’ நாவல் ஈழத்தின் நாவல் வரலாற்றில் பெரும் சர்ச்சைக்குள்ளாகிய நாவல். இந்தச் சர்ச்சையோடு இந்நாவல் 7000 பிரதிகள்வரை விற்றுத்தீர்ந்தன என்பதெல்லாம் ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றின் சுவாரஸ்யமான பக்கங்கள்.
கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப்பச்சை’ முழுமையாக அதன் மூலவடிவத்திலிருந்து, சற்று நுனவை செய்யப்பட்டு, மறுபிரசுரம் பெற்றது. இந்நாவலின் மறுபிரசுரத்திற்கு திரு.எஸ். எம். கார்மேகமும், மாத்தளை விக்ரமசிங்கவும் பெரும் தூண்டுதலாயிருந்தனர். வீரகேசரி வெளியீட்டின் மூலம்தான் ‘தூரத்துப்பச்சை’ ஈழத்து வாசகர்களின் மத்தியில் பிரபல்யம் ஆகியது.
அட்டனில் நூல்வெளியீடு
‘தூரத்துப்பச்சை’ நூல் வெளியீடு மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஆதரவில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் 27.5.1973 இல் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பிற்கு எஸ்.எம். கார்மேகம் அவர்களின் பேருழைப்பே காரணமாகும். இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப், அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோர் உரையாற்றினர். அந்நாவல் குறித்து நானும் இந்த விழாவில் விமர்சன் உரை நிகழ்த்தினேன். அப்போது நான் ‘தினகரன்’ நாளேட்டின் துணை ஆசிரியராகவிருந்தேன். இந்த விழாவிற்கு கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று, அங்கிருந்து பேராசிரியர் சோ. சந்திரசேகரத்துடன் அட்டனுக்குச் சென்றிருந்தேன்.
தமிழ்நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமாகத்திகழ்ந்த திரு.கே. பாலதண்டாயுதம் அவர்கள் இந்த விழாவில் பங்குகொண்டு உரையாற்றினார். “தூரத்துபபச்சை என்ற இந்த நாவலின்மீது இந்த விழாவில் ஆற்றப்பட்ட விமர்சன உரைகள் மலையகத்தின் காத்திரமான விமர்சனச் சூழலைக்குறிக்கிறது” என்று கே.பாலதண்டாயுதம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இந்த விழாவில் அவர் ஆற்றிய உரைதான் அவரது இறுதி உரையாக அமைந்துபோனது. இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய பாலதண்டாயுதம் 31.5.1973 இல் சென்னையிலிருந்து இந்தியன் எயர்லைன்ஸ் போயிங் விமானத்தில் புதுடில்லி புறப்பட்டுச்சென்ற பயணத்தில், அந்த விமானம் புதுடில்லிக்கருகே தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியது. இந்தக் கொடூர விபத்தில் பலியான 48 பயணிகளில் பாலதண்டாயுதமும் ஒருவர் என்ற செய்தி எங்கள் நெஞ்சைச் சுட்ட செய்தியாகும்.
கருத்து மோதல்
இந்நாவல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட தபால், தந்தி அமைச்சர் . செல்லையா குமாரசூரியர் மலையகமக்கள் தொழிற்சங்கங்களை விட்டுவிட்டு, அரசியலில் ஈடுபடவேண்டும் என்று உரையாற்ற, ‘மலையகத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள்தான் பலத்த காப்பரணாகத் திகழ்கிறது’ என்று ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜனாப். அப்துல் அசீஸ் மறுத்து வாதிட, இக்கருத்துமோதல் மறுநாள் பத்திரிகைகளின் தலைப்புச்செய்திக்குத் தீனிபோட்டது. அக்காலத்தில் அட்டன் சந்தித்த மிகப்பெரும் விழாவாக இந்நூல் வெளியீட்டு விழா திகழ்ந்தது என்றே கூறவேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...