எழில் கொஞ்சும் மலையகம் என்று உலகத்தவர்களால் போற்றப்படும் மலையகத்தில் அடிமையெனும் கோரப்பிடியில் சிக்கித் தவித்து தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் மலையகப் பெண்களின் மனக் குமுறல்களை கேட்பதற்கு இங்கு ஒரு நாதியில்லையே.
பெண் என்பவள்தான் உலகத் தின் கடவுளாகப் போற்றப்பட வேண்டும். இம்மண்ணுக்கு எம்மை அடையாளப்படுத்திய எம் தாயும் ஒரு பெண்தான். இன்று உலகத்தில் எத்தனையோ நாடுகளில் பெண்கள் சுதந்திரப் பறவைகளாக வாழும் சூழ்நிலையில் மலையகம் எனும் மண்ணில் அடிமைப்பட்டு வாழும் பெண்களின் வாழ்வில் ஒரு விடிவுகாலம் பிறக்காதா?
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கொத்தடிமைகளாக இந்த நாட்டுக்கு வந்த மலையகப் பெண்கள் இன்னும் தம்முடைய உரிமைகளைப் பிச்சை கேட்டுக்கொண்டு அடிமைகளாகத்தான் மலையக மண்ணில் வாழ்கின்றனர். மலையக மண்ணில் ஏற்பட்டுள்ள பெண்ணிய அடிமை வாழ்க்கை மாற்றத்திற்குப் போராட ஒரு மனிதனாவது இல்லையா? அண்மைக்காலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அடக்கு முறைகளும் மலையகத்தில் பெருகிக் காணப்படுகின்றமை வேதனைக்குரியதே.
குறிப்பாக வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், பாடசாலைகளிலும், தோட்ட முகாமைத்துவத்தின் கீழும் பல்வேறுபட்ட இன்னல்களை மலையகப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
தொழில்துறையில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறுப்பட்ட சவால்களுக்கும், வன்முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் தீர்வுகாணும் முகமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையின் சட்டத்தொகுப்பில் காணப்படுகின்ற போதிலும், அவ்வாறான ஏற்பாடுகள் மலையகப் பெண்களுக்கு மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதில்லை. நீண்டகாலமாக இந்த நாட்டில் அடிமைத் தனமாகவே மலையகப் பெண்கள் நடத்தப்படுகின்றனர். ஒருபுறம் இதற்கு மதுவும் ஒரு காரணம் எனலாம். அரசியல் வாதிகள் தங்களது பை நிறைவதையே பார்கின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பெருந்தோட்டப் பெண்கள் சுதந்திர மாக வாழ இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை மேற்கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியே.
தனியார் மற்றும் அரச பெருந்தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்குரிய சட்டப் பாதுகாப்பானது பின்வருமாறு காணப்படுகின்றது.
பெண்களை இரவு நேரத்தில் வேலைக்கு அமர்த்தக் கூடாது. அவ்வாறு பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமாயின் பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை இரவு வேளைகளில் வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தப்படுவது தண்டனைக்குரிய குற்றம். இரவு பத்து மணிக்குப் பின்னர் ஒரு பெண்ணை வேலையில் ஈடுபடுத்த வேண்டுமாயின், தொழில் ஆணையாளரிடமிருந்து அதற்குரிய எழுத்திலான உத்தரவைப் பெற்றிருக்க வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வேலையில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணொருவரை இரவு பத்து மணிக்குப் பிறகு வேலையில் ஈடுபடுத்தக் கூடாது.
இரவு வேளைகளில் ஈடுபடுத்தப் படும் பெண்ணொருவருக்கான ஊதியம் சாதாரண நேரத்தில் வழங்கப்படும் ஊதியத்திலும் பார்க்க இரு மடங்கு அதிகமாக வழங்கப்பட வேண்டும்.
இரவு நேரத்தில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களின் நலனைக் கவனிப்பதற்காக பெண் மேற்பார்வையாளர் ஒருவர் அமர் த்தப்பட வேண்டும். எந்தவொரு பெண் தொழிலாளியும் ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு அதிகமாக இரவு நேரத்தில் வேலையில் ஈடுபடுத்தப்படக் கூடாது. இந்த விடயம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நடைமுறை மலையகத்தில் இன்னும் காணப்படுகின்றது. காலை 8 மணிக்கும் வேலைக்கு போகும் பெண்கள் இரவு 10மணிக்கு வீடுத் திரும்புகின்றனர். அத்துடன், அதிகாலை 2மணிக்கு போகும் பெண்கள் அடுத்தநாள் மாலை வரை வேலை பெய்கின்றனர். தற்போத இவ்வாறான வேலை நேர முறைமை இலங்கையை பொறுத்தமட்டில் மலையகத்தில் மாத்திரமே காணப்படுகிறது.
ஆடைத் தொழிற்சாலைகளில் இவ்வாறு இரவு நேரங்களில் வேலை இடம்பெற்றாலும் அங்கு அதிகூடிய பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், நியாயமான சம்பளமும் வழங்கப்படுகின்றன. இச்சம்பவம் பற்றி எந்தவொரு அரசியல்வாதியும் வாய் திறந்திருப்பார்களா? அடிமைகளாகவே மலையகப் பெண்கள் நடத்தப்படுகின்றனர்.
குடும்ப கஷ்ட நிலை காரணமாக இரவு நேர வேலைகளில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு துளிகூட மலையகத்தில் காணப்படுவதில்லை. வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தேயிலை பறிக்கும் பெண் களுக்கு அல்லது இறப்பர் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குப் பாதுகாப்பு தொடர்பில் பெருந்தோட்டத்துறையில் ஒருதுளிகூட ஏற்பாடு இல்லை என்பதே உண்மை.
மழை பெய்தாலும் தேயிலை பறிக்க வேண்டும். மழையில் இருந்து பாதுகாப்பதற்கு என்ன வழி முறையை ஏற்படுத்தியுள்ளனர்? முக்கியமாக, கர்ப்பிணித் தாய்மார்கள் எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் வேலை செய்கின்றனர். அவர்கள் மழையில் நனையாமல் வேலைசெய்ய ஒரு பாதுகாப்பு உடையோ அல்லது காலணியோ பெருந்தோட்டத்துறையில் வழங்கப்பட்டதுண்டா? இரவு 10மணிக்கு பெண்கள் இரவு வேலையை முடித்து வீடு திரும்பும் போதும், அதிகாலை இரண்டு மணிக்கு வேலைக்கு வரும் போதும் முறையானப் போதுகாப்பு இல்லை. போக்குவரத்து வசதி என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை. இவற்றை கேட்பதற்குக்கூட ஒரு அரசியல்வாதியும் மலையகத்தில் இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதை மலையகப் பெருந்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்களைத் தொழில் ரீதியாகச் சுரண்டுவதில் இருந்து பாதுகாப்வீதற்கு இலங்கைச் சட்டத்தில் ஏற்பாடுகள் காணப்பட்டபோதிலும் மலையகப் பெண்கள் மத்தியில் இச்சட்டங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வின்மையால் பெண்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய காலகட்டத்தில் மலையக படித்த சமுதாயமும் புத்திஜீவிகளும் உள்ளன. தன் நலத்தைப் பார்க்காமல் எம் மண்ணில் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ் வொருவர் மனதிலும் எழ வேண்டும்.
காலை முதல் மாலைவரை தம்முடைய வேலை நேரத்தையும் தாண்டி வேலையில் ஈடுபடும் பெண்வர்கத்தின் ஊதியமும் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை என்பது தண்டனைக்குரிய குற்றம். கர்ப்பகாலங்களில் முறையாக விடுமுறை அழிக்கப்படுவதில்லை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏனைய துறைபோல் போஷாஙக்கு உணவுகளும் வழங்கப்படுவ தில்லை. இன்னும் எத்தனைகாலம் இந்த நாட்டில் மலையகப் பெண்கள் அடிமைகளாக வாழப் போகின்றார்கள்?
தோட்டத் தொழிற்சங்கள் மூலம் 2 வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது. இதில் பெண் தொழிலாளர்களின் பிரச்சினை உள்வாங்கப்படுவதில்லை. இம்முறையாவது ஏற்படுத்தப் போகும் கூட்டு ஒப்பந்தத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு சம்பந்தமான விடயங்களும் கர்ப்பிணித் தாய்மாருக்கான கொடுப்பனவும் உள்ளடக்கப்பட வேண்டும்.
அடிமைத்தனத்திலிருந்து மீண்டு இவர்கல் வாழ்வில் ஒரு விடிவுகாலம் ஏற்பட மலையக அரசியல் தலைமைகளும், புத்தி ஜீவிகளும், படித்த இளைஞர் சமுதாயமும் ஒன்றுபடக் கூடாதா? இனிவருங்காலத்திலாவது மலையகப் பெண்களும் உரிமைகளைப் பெற்று இந்த நாட்டில் உள்ள ஏனைய பெண்கள் போல் சுதந்திரமாக வாழ வழிவகுக்க வேண்டும். இதற்கு முக்கியமாக மலையக அரசியல் தலைமைகள் முழுமூச்சுடன் செயற்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...